விரைவில் அ.தி.மு.கவின் பொதுச் செயலாளரைத் தேர்வு செய்வோம்: மதுசூதனன்
அ.தி.மு.கவின் புதிய பொதுச் செயலாளரை கட்சியின் அடிமட்டத் தொண்டர்களை வைத்துத் தேர்வுசெய்யப்போவதாக, கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாக சசிகலாவால் அறிவிக்கப்பட்ட அவைத் தலைவர் மதுசூதனன் தெரிவித்திருக்கிறார்.

பட மூலாதாரம், Getty Images
வெள்ளிக்கிழமையன்று மாலையில் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தற்காலிக பொதுச் செயலாளர் பதவி என்பது அ.தி.மு.கவில் இல்லை என்றும் கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள்தான் பொதுச் செயலாளரைத் தேர்வுசெய்ய வேண்டுமென்றும் கூறினார்.
புதிய பொதுச் செயலாளரைத் தேர்வுசெய்வதற்கான தேர்தல் விரைவில் நடத்தப்படும் என்று தெரிவித்த மதுசூதனன், ஜெயலலிதா இருந்தபோது அவரை எதிர்த்து யாரும் போட்டியிட மாட்டார்கள் என்பதால் அவர் தொடர்ந்து தேர்வுசெய்யப்பட்டு வந்ததாகக் குறிப்பிட்டார்.
விரைவில் அ.தி.மு.கவின் சொத்துப் பாதுகாப்புக் குழுவும் அமைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
"கட்சியை விட்டு சசிகலாவால் நீக்கப்பட்ட நீங்கள் எப்படி இதைச் செய்ய முடியுமென" செய்தியாளர்கள் கேள்வியெழுப்பியபோது, அதற்கு முன்பே தான் சசிகலாவை நீக்கிவிட்டதாக மதுசூதனன் தெரிவித்தார்.
ஆளும் அ.தி.மு.கவில் நிலவும் அதிகாரப் போட்டியில் முதலமைச்சர் பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக இருக்கும் மதுசூதனனை இன்று காலையில் கட்சியைவிட்டு நீக்குவதாக பொதுச்செயலாளர் வி.கே. சசிகலா அறிவித்தார். புதிய அவைச் செயலாளராக செங்கோட்டையன் நியமிக்கப்பட்டார்.
இதற்கிடையில், கட்சியின் எம்எல்ஏக்கள் கடத்தி வைக்கப்பட்டிருப்பதாக காவல்துறை தலைவரிடமும் ஆணையரிடமும் பன்னீர்செல்வம் தரப்பைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் சண்முகநாதன் புகார் அளித்துள்ளார்.
ஆனால், தனது புகாரை ஆணையர் ஜார்ஜ் பெற்றுக்கொள்ள மறுத்துவிட்டதாகவும் இணை ஆணையர் சங்கரிடம் புகாரை அளித்திருப்பதாகவும் சண்முகநாதன் செய்தியாளர்களிடம் கூறினார்.
மேலதிக செய்திகள் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்












