சசிகலாவுக்கு எதிரான வழக்கை உடனடியாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

அதிமுக பொதுச் செயலர் சசிகலா முதலமைச்சராகப் பதவியேற்கத் தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. வரும் 17-ஆம் தேதி அந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

உச்ச நீதிமன்றம்

பட மூலாதாரம், Getty Images

சட்டப் பஞ்சாயத்து என்ற தன்னார்வ அமைப்பின் சார்பில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை அவசர வழக்காக விசாரிக்க நேற்று வியாழக்கிழமை, உச்சநீதிமன்றப் பதிவாளரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், அதற்கான அவசரம் ஏற்படவில்லை என்று கூறி, அந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று காலை தலைமை நீதிபதி ஜெ.எஸ். கெஹர் தலைமையிலான அமர்வின் முன்பு, சட்டப்பஞ்சாயத்து அமைப்பின் சார்பில் வழக்கறிஞர் ஜி.எஸ். மணி கோரிக்கை வைத்தார்.

நேற்று, சசிகலாவும், பன்னீர் செல்வும் தனித்தனியாக ஆளுநரைச் சந்தித்துள்ளனர். தனக்கு ஆதரவளிக்கும் எம்.எல்.ஏ.க்கள் பட்டியலை ஆளுநரிடம் சசிகலா சமர்ப்பித்துள்ளார். அதனால், சசிகலாவுக்கு பதவியேற்பு விழா நடத்தப்படலாம் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

உரிமை கோரும் சசிகலா

பட மூலாதாரம், AIADMK

சசிகலா, எம்.எல்.ஏ கூட இல்லை. அவருக்கு பதவிப் பிரமாணம் செய்யக் கூடாது. ஏனென்றால், தேர்தலில் போட்டியிட்டால்தான் சொத்துக்கள், வழக்குகள் விவரங்களைத் தெரிவிக்க முடியும். ஆனால், இப்போது முதலமைச்சர் ஆனால், அதுபோன்ற விவரங்களை வெளியிடாமலே முதல்வராகிவிடுவார். இது, மக்களின் தகவல் அறியும் உரிமைக்கு எதிரானது என்று குறிப்பிட்டார்.

மேலும், சசிகலாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு அடுத்த வாரம் வெளியாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்தக் குறிப்பிட்ட வழக்கில் மட்டுமன்றி, இனி வரும் காலங்களிலும் பிரதமர், முதல்வர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவோர், எம்.பி, எம்.எல்.ஏ. ஆகாமல் அப் பதவிக்கு வரக்கூடாது. எனவே, இந்த வழக்கை அரசியல் சாசன அமர்வு விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.

அவசர வழக்காக வெள்ளிக்கிழமையோ அல்லது வரும் திங்கட்கிழமையோ எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை தலைமை நீதிபதி நிராகரித்தார். வரும் 17-ம் தேதி வழக்கமான வரிசையில் அந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று நீதிபதி அறிவித்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்