சசிகலாவுக்கு ஆதரவாக, குடியரசுத் தலைவருடன் சுப்ரமணியன் சுவாமி சந்திப்பு
பாரதீய ஜனதா கட்சித் தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன் சுவாமி, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியைச் சந்தித்து, தமிழக அரசியல் நிலவலம் குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
அதிமுக சட்டமன்றக் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகலா, தமிழகத்தின் அடுத்த முதலமைச்சராகப் பொறுப்பேற்க இருக்கிறார். ஆனால், அவர் ஆட்சி அமைக்க உரிமை கோரவும், பதவியேற்பு விழா நடத்துவது குறித்து முடிவெடுக்கவும் ஆளுநரைச் சந்திக்க வேண்டும்.
ஆனால், சசிகலா தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நாளில் இருந்து, தமிழகத்தின் ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகிக்கும் மகாராஷ்டிர ஆளுநர் வித்யாசாகர் ராவ், சென்னையில் இல்லை. அவர் தற்போது மும்பையில் இருக்கிறார்.
இந் நிலையில், சசிகலாவுக்கு ஆதரவாக கருத்துக்களை வெளியிட்டு வரும் சுப்ரமணியன் சுவாமி, செவ்வாய்க்கிழமை இரவு திடீரென குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்தார். தமிழக அரசியல் நிலவரம் குறித்து குடியரசுத் தலைவரிடம் விளக்கியதாக சுப்ரமணியன் சுவாமி தனது ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதே நேரத்தில், தமிழக ஆளுநர் உடனடியாக சென்னை சென்று, சசிகலா ஆட்சியமைக்க உரிமை கோரவும், பதவியேற்பு விழாவை நடத்தவும் உரிய ஒத்துழைப்பை வழங்குமாறு ஆளுநருக்கு அறிவுறுத்துமாறு குடியரசுத் தலைவரிடம் சுப்ரமணியன் சுவாமி கேட்டுக் கொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.








