மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் உள்ளது: பி. ஹெச். பாண்டியன் குற்றச்சாட்டு
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து பல மர்மங்கள் இருப்பதாகவும், அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்த விளக்கங்கள்திருப்தியளிக்கவில்லை என்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழக சட்டப்பேரவை முன்னாள்தலைவருமான பி. ஹெச். பாண்டியன் தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
கீழே தள்ளிவிடப்பட்டாரா ஜெயலலிதா?
சென்னையில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் செய்தியாளர்களை சந்தித்த பி. ஹெச். பாண்டியன் கூறுகையில், ''கடந்த செப்டம்பர் 22-ஆம் தேதியன்று, மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா உடலநலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், இது குறித்து பல ஐயங்கள் உள்ளது. அவரது போயஸ்தோட்ட வீட்டில் கைகலப்பு நடந்ததாகவும், ஜெயலலிதாவை சிலர் கீழே தள்ளிவிட்டு விட்டதாகவும் சில பத்திரிக்கைகளில் செய்தி வெளியானது'' என்று பி. ஹெச். பாண்டியன் தெரிவித்தார்.
'முதல்வரின் உடல்நிலைக்கு ஏதாவது நேர்ந்தால் அது குறித்து பழி வந்து விடுமோ என்ற அச்சத்தில்தான் ஜெயலலிதா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது என்று கூறிய பி. ஹெச். பாண்டியன் மேலும் கூறுகையில், ''ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து அறிய நான் அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றேன். மறைந்த முதல்வர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த அப்பல்லோ மருத்துவமனையின் இரண்டாவது மாடிக்கு நான் சென்றேன். ஆனால், அவரது உடல்நிலை குறித்து கருத்து கூற யாரும் இல்லை'' என்று கூறினார்.

முதல்வர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட தளத்தில் மருத்துவர்களுக்கு என்று ஒரு அறை இருந்தது. அந்த அறைக்குள் அமர்ந்து கொண்டு மருத்துவர்களிடம் சிகிச்சை விவரம் கேட்க முனைந்தேன். ஆனால், இது குறித்து விவரம் சொல்ல யாருமே இல்லை என்று பி. ஹெச். பாண்டியன் கூறினார்.
''பின்னர், ஜெயலலிதாவின் மெய்காப்பாளர்கள் என்னிடம் முதல்வர் நன்றாக இருக்கிறார் என்று கூற, நான் வீட்டுக்கு திரும்ப சென்றேன். அதன் பின் வந்த நாட்களிலும் இதே நிலை தான் தொடர்ந்தது. அங்கிருந்த அமைச்சர்களுக்கும் முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து தெரியவில்லை. ஜெயலலிதாவின் மெய்காப்பாளர்கள் அவர்களாகவே வந்து என்னிடம் முதல்வர் நன்றாக இருக்கிறார். நன்றாக உணவு உண்பதாக தெரிவித்தனர்'' என்று பி. ஹெச். பாண்டியன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
அரவக்குறிச்சி, தஞ்சை இடைத்தேர்தலுக்கு தயாரான நிர்வாகிகளிடம் நான் யாரின் உத்தரவின் பேரில் இடைத்தேர்தல் பணியாற்ற செல்கிறீர்கள் என்று கேட்டேன். அவர்களுக்கு இது குறித்து சரியான பதில் கூற தெரியவில்லை. இது கட்சி தலைமைக்கு எதிரான சதி என்று பி. ஹெச். பாண்டியன் குற்றம்சாட்டினார்.
பின்னர், டிசம்பர் 5-ஆம் தேதியன்று சாதாரண வார்டில் இருந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது என்று தெரிவித்த பி. ஹெச். பாண்டியன், ''டிசம்பர் 5-ஆம் தேதி இரவில், சசிகலா தலைமையில் அவர் குடும்பத்தினர் ஊர்வலமாக அப்பல்லோ வளாகத்தை விட்டு சென்றனர். அப்போது அவர்கள் முகத்தில் கவலை ரேகைகள் எதுவும் தெரியவில்லை'' என்று தெரிவித்தார்.
அதிமுகவில் இருந்து கடந்த 2011-ஆம் ஆண்டு நீக்கப்பட்ட பிறகு, அதிமுகவில் கட்சி பதவியோ அல்லது அரசில் ஒரு கவுன்சிலர் பதவி கூட கோர மாட்டேன் என்று மன்னிப்பு கடிதம் அளித்த சசிகலா, தற்போது ஜெயலலிதா மரணமடைந்த 20 நாட்களுக்குள் கட்சியின் பொது பதவியை ஏற்றது, தற்போது முனைவது ஏன் என பி. ஹெச். பாண்டியன் கேள்வி எழுப்பினார்.

பட மூலாதாரம், AIADMK
ஜெயலலிதாவின் சொத்துக்களை அபகரிக்க சதி?
''தஞ்சை, அரவக்குறிச்சி இடைத்தேர்தலின் போது ஜெயலலிதாவின் கைரேகையை பெற்றது போல், இவர்கள் ஜெயலலிதாவின் கைரேகையை முன்பே பெற்று அவரின் சொத்துக்களை அபகரிக்க திட்டம் வைத்திருந்தனரோஎன்ற ஐயம் ஏற்படுகிறது'' என்று பி. ஹெச். பாண்டியன் மேலும் கூறினார்.
''எல்லாரும் அவர் மரணம் குறித்து மறந்து விட்டாலும், நான் மறந்து விட மாட்டேன். உண்மையை அதிமுக தொண்டர்களுக்கு எடுத்துக் கூறவே இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தினேன்'' என்று பி. ஹெச். பாண்டியன் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
இப்பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட பி. ஹெச். பாண்டியனின் மகனும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான மனோஜ் பாண்டியன் கூறுகையில், ''அதிமுகவின் சட்டதிட்டங்களின்படி தற்காலிக பொதுச் செயலாளருக்கு கட்சி நிர்வாகிகளை நியமிக்க அதிகாரமில்லை . பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டவர்கள் மாநில முதல்வரானால் தமிழகத்தின் நிலை என்னவாக ஆகும் என்று அனைவரும் கவலைப்படுகின்றனர்'' என்று கூறினார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்












