ஐந்தாவது நாளாக தமிழகமெங்கும் தொடரும் ஜல்லிக்கட்டு போராட்டம்
ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்துவதற்கான அவசரச் சட்டத்திற்கு மத்திய அரசு அனைத்து அனுமதிகளையும் அளித்திருக்கும் நிலையில், தமிழகத்தில் போராட்டம் ஐந்தாவது நாளாக தொடர்ந்து நடந்துவருகிறது.

சென்னை மெரீனா கடற்கரை, மதுரை தமுக்கம் மைதானம், அலங்காநல்லூர், கோயம்புத்தூர் வ.உ.சி பூங்கா, திருநெல்வேலி, பெரம்பலூர், தஞ்சாவூர் என மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டங்கள் ஐந்தாவது நாளாக தொடர்ந்து நடந்து வருகின்றன.
தமிழகத்தின் சில மாவட்டங்களில் லேசாக மழைபெய்துவரும் நிலையிலும் இந்தப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
வேலூர் மாவட்டம் மேல்மனவூரில் உள்ள இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்தவர்களும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகப் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
வியாழக்கிழமை மதியம் முதல் வைகை நதி பாலத்தின் மீது நின்றுவரும் கோவை - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில் தற்போதும் போராட்டக்காரர்களால் அதே இடத்தில் நிறுத்தப்பட்டிருக்கிறது.

அலங்காநல்லூரில் இன்று போராட்டக்காரர்கள் மௌனப் போராட்டத்தை நடத்துவதாக அறிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்துவதற்கு ஏதுவாக தமிழக அரசு அவசரச் சட்டத்தை இயற்ற முடிவுசெய்திருக்கும் நிலையில், இந்தச் சட்டத்திற்கான ஒப்புதலை மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் உடனடியாக வழங்கியுள்ளன.
இந்த அவசரச் சட்டம் மாநில அமைச்சரவையினால் இன்று நிறைவேற்றப்பட்டு, தமிழக ஆளுனரின் ஒப்புதலைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக மாநில பொறுப்பு ஆளுனர் வித்யாசாகர் ராவ், மும்பையிலிருந்து இன்று மாலை சென்னை வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பட மூலாதாரம், ASHWIN_KUMAR
ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு ஆதரவாக நேற்று ரயில் மறியல் போராட்டத்தை நடத்திய தி.மு.க. இன்று சென்னையில் அக்கட்சியின் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்திவருகிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
பேஸ்புக்கில் படித்து கருத்துக்கள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்












