ரோஹித் வெமுலா தற்கொலையும், கல்விக்கூடங்களில் சாதியப் பிரச்சனையும்
- எழுதியவர், ரவிக்குமார் துரை
- பதவி, எழுத்தாளர், கவிஞர்
ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் ஆய்வு மாணவராக இருந்த ரோஹித் வெமுலா தற்கொலை செய்துகொண்டு ஓராண்டு நிறைவடைந்துவிட்டது.

பட மூலாதாரம், PTI
அவரது மரணச்செய்தி அந்தப் பல்கலைக்கழக வளாகத்தோடு முடிந்துபோய்விடவில்லை, மாறாக, இந்தியாவெங்கும் தலித் மக்களின் உரிமைகளுக்கான போராட்டங்களுக்குப் பெரும் உத்வேகமாக அமைந்தது.
இன்று இந்தியாவில் எந்தவொரு இடத்தில் தலித் போராட்டங்கள் நடந்தாலும் அங்கு அழைக்கப்படும் முக்கியமான தலைவர்களில் ஒருவராக வெமுலாவின் அம்மா இருக்கிறார்.
ரோஹித் வெமுலா அங்கம் வகித்த அம்பேத்கர் மாணவர் அமைப்புக்கும் பாஜகவின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி க்கும் இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, ஆந்திராவைச் சேர்ந்த பாஜக அமைச்சர் கொடுத்த அழுத்தம், மனிதவள மேம்பாட்டு அமைச்சராக இருந்த ஸ்மிருதி இரானியின் நிர்ப்பந்தம் ஆகியவற்றால் ரோஹித்தும் இன்னும் சில தலித் மாணவர்களும் பல்கலைக் கழகத்திலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
அவரது ஆய்வு உதவித் தொகையும் நிறுத்தப்பட்டது. அதன் பின்னரே அவர் தற்கொலை செய்துகொண்டார். மதவெறியும் சாதிவெறியும் கூட்டுசேர்ந்து அவரது உயிரைக் காவுகொண்டுவிட்டன.

கல்விக்கூடங்களில் சாதிப் பிரச்சனை
2014-15 ஆண்டில் எடுக்கப்பட்ட புள்ளிவிவரத்தின்படி இந்தியா முழுவதும் 3,32,72,722 மாணவர்கள் உயர்கல்வி பயில்கின்றனர். இதில் பிஎச்டி ஆய்வில் ஈடுபடுவோர் வெறும் அரை சதவீதம்தான். அந்த அரை சதவீதத்தில் எஸ்சி/ எஸ்டி பிரிவினர் இடம்பெறுவதென்றால் அது எவ்வளவு கடினம் என்பதை நாம் புரிந்துகொள்ளலாம். அப்படி இடம் பிடிப்போரையும் நமது பல்கலைக்கழகங்கள் தற்கொலையை நோக்கி விரட்டிக்கொண்டிருக்கின்றன.
ஆரம்பப் பள்ளி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை சாதிய பாகுபாட்டினால் தலித் மாணவர்கள் சொல்லவொண்ணா கொடுமைகளுக்கு ஆளாகின்றனர். தலித் மாணவர்களின் இடைநிற்றல் சதவிகிதம் அதிகமாக இருப்பதற்கு வகுப்பறைகளில் காட்டப்படும் சாதிய பாகுபாடே முதன்மையான காரணம்.

பட மூலாதாரம், ROHITH VEMULA'S FACEBOOK PAGE
கழிப்பறைகள் இல்லாத பள்ளிகள் உண்டு, ஆனால் சாதிய பாகுபாடு இல்லாத பள்ளிகள் இல்லை; 'காற்று நுழையாத வகுப்பறைகளில்கூட சாதி நுழைந்துவிடும்' என்று சொல்லுமளவுக்கு அந்தப் பாகுபாடு எங்கும் நிறைந்ததாயிருக்கிறது.
இதை மிகைப்படுத்தப்பட்ட கூற்று என யாரேனும் கருதினால் உங்கள் அருகாமையிலிருக்கும் பள்ளி ஒன்றுக்குச் செல்லுங்கள் ஏதேனும் ஒரு வகுப்பறையில் நுழையுங்கள் முதல் வரிசையில் அமர்ந்திருக்கும் மாணவர்கள் யாரென்று பாருங்கள்.அதில் தலித் மாணவர் இருக்கிறாரா என்று விசாரியுங்கள். எந்தவொரு பள்ளிக்கும் செல்லுங்கள் அங்கு விளையாட்டுப் போட்டிகளில் பங்குபெறும் மாணவர்களின் பட்டியலை எடுத்துப் பாருங்கள் அதில் தலித் மாணவர்கள் எத்தனைபேர் இருக்கிறார்கள் என்று கணக்கெடுங்கள். மதிய உணவு வழங்கப்படும் நேரத்தில் ஏதேனும் ஒரு பள்ளிக்குச் செல்லுங்கள் அங்கு தலித் மாணவர்கள் மற்ற மாணவர்களோடு சமமாக அமர்ந்து உணவருந்துகிறார்களா என்று கவனியுங்கள். எந்தப் பள்ளிக்கும் செல்லுங்கள் அங்கே காலையில் 'ப்ரேயரை' வழிநடத்தும் பிள்ளைகளில் எத்தனைபேர் தலித் பிள்ளைகள் இருக்கிறார்கள் என்று விசாரியுங்கள். பள்ளி ஆண்டுவிழாக்களின்போதும், மற்ற கொண்டாட்டங்களின்போதும் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பிள்ளைகளில் தலித் பிள்ளைகள் எத்தனைபேர் இருக்கிறார்கள் என்று கேளுங்கள். எந்தவொரு பள்ளிக்கும் செல்லுங்கள் அங்கே பள்ளியைப் பெருக்குவது, கழிப்பறையைக் கழுவுவது போன்ற பணிகளை எந்த மாணவர்கள் செய்கிறார்கள் என்று கேளுங்கள்.
மத்திய அரசாங்கத்தின் சர்வசிக்ஷ அபியான் அமைப்பின் சார்பிலேயே இந்தக் கேள்விகளையெல்லாம் கேட்டு அறிக்கையொன்றையும் தயாரித்திருக்கிறார்கள். 'நேஷன் சிந்தசிஸ் ரிப்போர்ட் 2012' என்ற அந்த அறிக்கையில் பள்ளிகளில் பாகுபாடு காட்டப்படுகிறது என்பதை ஒப்புக்கொண்டதோடு மட்டுமின்றி அவற்றைக் களைவதற்கான வழிமுறைகளையும் முன்வைத்திருக்கிறார்கள். சர்வசிக்ஷா அபியான் அறிக்கை மட்டுமல்ல, ப்ரோப் அறிக்கைகள் ( 1999,2009) மானபி மஜும்தார்,ஜோஸ் மூய்ஜ் (2012), பூனம் பத்ரா( 2005,2009), கீதா காந்தி கிங்டன்(2009), கார்த்திக் முரளிதரன், மைக்கேல் க்ரேமர் (2006) கீதா நம்பீஸன் ( 2006,2009) ஆகியோரின் ஆய்வுகள், ப்ராதம் அமைப்பின் ஏசர் அறிக்கைகள், ஹ்யூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பு வெளியிட்டிருக்கும் அறிக்கை (ஏப்ரல் 2014) ஆகியவையும் இந்தப் பிரச்சனை குறித்து ஆழமாக ஆராய்ந்துள்ளன.
பட்டியலிட்ட குழு அறிக்கை
மத்தியில் ஆட்சிசெய்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முன்னணி ஆட்சிக் காலத்தில் திருமதி சோனியா காந்தி அவர்களைத் தலைவராகக்கொண்டு தேசிய ஆலோசனை கவுன்சில் ( National Advisory Council - NAC ) என ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டிருந்தது. அதில் பல்வேறு துறை சார்ந்த அறிஞர்கள் உறுப்பினர்களாக இருந்தனர். அந்த தேசிய ஆலோசனை கவுன்சில் ஒரு துணைக்குழுவை அமைத்து பள்ளிகளில் நிலவும் பாகுபாடுகளைப் பற்றியும் அவற்றைக் களையும் வழிகளைப் பற்றியும் ஒரு அறிக்கையைத் தயாரித்தது.
" தலித் மாணவர்களை முன்வரிசையில் உட்கார விடாமல் தடுத்துப் பின்னால் உட்கார வைத்தல்; சாதி, மதம், பெற்றோரின் தொழிலை சொல்லித் திட்டுதல், தலித் மாணவர்களுக்கும் மற்ற மாணவர்களுக்கும் இடையில் சச்சரவுகள் உண்டாகும் போது ஆதிக்க சாதி மாணவர்களுக்கு சார்பாக தலித் மாணவர்களை உடல் ரீதியாகத் தண்டித்தல்; எல்லோரது முன்னிலையில் இழிவு படுத்துதல், நன்மதிப்பை வெளிப்படையாகக் குலைத்தல், சமமின்றி நடத்துதல், பண்பாடு மற்றும் மரபுகளை கேவலப்படுத்துதல், ( பெருமையைக் குலைத்தல்), பள்ளிச் செயல்பாடுகளிலிருந்தும் / பாடத்திட்டத்துக்கு அப்பாற்பட்ட செயல்பாடுகளிலிருந்தும் ஒதுக்கி வைத்தல்; படிப்பது வீண் என்றும் , அவர்கள் துப்புரவுத் தொழிலாளராகவும், மேசை துடைப்பவர்களாகவுமே ஆவார்கள் என்றும், இடஒதுக்கீடு இருப்பதால் அவர்களுக்கு உயர் மதிப்பெண் தேவையில்லை என்றும் கூறுதல்.
தலித் மாணவர்களுக்கு அரசு வேலை எளிதாகக் கிடைக்கும் என்று கேலிசெய்தல், இடஒதுக்கீட்டைப் பழித்தல், கற்பிக்கும், கற்கும் பொருட்களை அவர்கள் பயன்படுத்த விடாமல் தடுத்தல், இடஒதுக்கீட்டால் மற்ற குழந்தைகள் அநீதியை / பாதகத்தை எதிர்கொள்ளுகிறார்கள் என்ற கருத்தை அவர்கள் உள்ளத்தில் ஊன்றுதல், அரசாங்கம் தலித் மாணவர்களுக்குச் சலுகை காட்டி வீணடிக்கிறது என்று கூறுதல்; குடிநீர் குழாய்களைப் பயன்படுத்த அனுமதியாமை, மற்றவர்கள் குடித்து முடிக்கும்வரை காத்திருக்க வைத்தல், தலித் குழந்தைகள் தொட்ட குழாய், டம்ளர் முதலியவற்றைக் கழுவிய பிறகே மற்றவர்கள் பயன் படுத்த வைத்தல்; தலித் சமூகத்திலிருந்து வரும் குழந்தைகள் கழிப்பறைகளைப் பயன்படுத்த அனுமதி மறுத்தல், கழிப்பறைகளைப் பூட்டிப் போடுதல் " - எனப் பல்வேறுவிதமான பாகுபாடுகள் நிலவுவதாகக் கண்டறிந்து அந்த அறிக்கையில் பட்டியலிட்டிருந்தனர்.
மாதிரிப் பிரகடனம்

பட மூலாதாரம், PTI
சாதிய பாகுபாடுகளைக் களைவதற்காக ஒவ்வொரு மாநில அரசும் வெளியிடவேண்டிய சமத்துவத்துக்கான மாதிரி பிரகடனம் ஒன்றையும் அந்த அறிக்கையில் பின்னிணைப்பாகத் தந்திருந்தார்கள்.
* பாகுபாடு இல்லாத இலவசப் படிப்பு இந்திய அரசியலமைப்புச் சட்டம் உத்தரவாதம் அளித்துள்ள ஓர் உரிமை.
* எல்லா மாணவர்களையும் சமமாகவும், மரியாதையுடனும் நடத்தவேண்டும்.
* அடையாளத்தின் அடிப்படையில் மாணவர்களிடையே வேறுபடுத்திப் பார்ப்பது பொறுத்துக் கொள்ளப்படாது.
* வகுப்பறையில், விளையாட்டுத் திடலில், அல்லது எந்தவொரு செயல்பாட்டிலும், எந்தவடிவிலும் மாணவர்களை பாகுபடுத்தி நடத்துவதை ஏற்க முடியாது.
* எல்லாருக்கும் பாகுபாடு அற்ற கல்வி கிடைப்பதை உறுதி செய்வது, ஆசிரியர்கள், பெற்றோர்களின் கடமையாகும்.
என அந்தப் பிரகடனத்தில் சொல்லப்பட்டிருந்தது. ஆனால் அந்த சமத்துவப் பிரகடனத்தை மத்திய அரசும் மதிக்கவில்லை, மாநில அரசுகளும் பின்பற்றவில்லை.
இப்போது மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான அரசு 'புதிய கல்விக்கொள்கை' ஒன்றைக் கொண்டுவரப்போவதாக அறிவித்திருக்கிறது. மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் சார்பில் அதற்கென முன்வைக்கப்பட்டிருக்கும் 43 பக்க முன்மொழிவுகளில் Inclusive Education and Student Support என்ற பகுதியில் மட்டும்தான் பாகுபாடு தொடர்பான பிரச்சனை குறித்து கொஞ்சம் பேசப்பட்டிருக்கிறது. அங்கும்கூட கல்வியை எட்டுவதில் இருக்கும் பொதுவான தடைகளையே விவாதித்திருக்கிறார்கள்.
அந்த முன்மொழிவுகளில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கும் பதினைந்து அம்சங்களில் ' சமூக,பாலின,பண்பாட்டு, பிராந்திய வேறுபாடுகள் சரியானவிதத்தில் கவனத்தில்கொள்ளப்படும். பாடத்திட்டத்திலும் பாடங்களைப் போதிப்பதிலும் அதுகுறித்து கவனம் செலுத்தப்படும்' எனக் கூறப்பட்டிருக்கிறது.
'ஆதிவாசி மாணவர்கள் பிராந்திய மொழிகளில் பயில்வதில் சிரமப்படுகிறார்கள் எனவே அவர்களுக்குப் புரியும் விதத்தில் பயிற்றுவிக்க ஏற்பாடு செய்யப்படும்' என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.
'கிராமப்புற மாணவர்களுக்கு திறன்மேம்பாட்டு பயிற்சி அளிப்பதில் கவனம் செலுத்தப்படும்' எனக் குறிப்பிடும் அந்த அறிக்கை , 'பாலின பாகுபாட்டை சகித்துக்கொள்ள முடியாது. உயர்கல்வியில் பெண்கள் அதிக அளவில் இடம்பெறுவதற்குக் கூடுதல் கவனம் எடுத்துக்கொள்ள்ப்படும்' என்றும் உறுதியளித்திருக்கிறது.
புதிய கல்விக்கொள்கை தொடர்பான மனிதவள மேம்பாட்டு அமைச்சக அறிக்கையிலோ, சுப்ரமணியன் குழு அறிக்கையிலோ மறந்தும்கூட வகுப்பறையில் நிலவும் சாதிய பாகுபாடுகள் குறித்து பேசப்படவில்லை. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இயற்றப்பட்ட கல்வி உரிமைச் சட்டத்திலாவது வகுப்பறை பாகுபாடு குறித்தும் பாகுபாடில்லாத பள்ளியை உருவாக்குவதன் அவசியம் குறித்தும் ஒருசில பிரிவுகளாவது சேர்க்கப்பட்டிருந்தன. ஆனால் பாஜக அரசு கொண்டுவரத் துடிக்கும் புதிய கல்விக்கொள்கையிலோ அதைப்பற்றி எந்தவொரு அக்கறையும் காட்டப்படவில்லை.
பாகுபாடுகளைக் களைவதற்கு பாஜக அரசு அக்கறை காட்டாதது வியப்பளிக்கும் ஒன்றல்ல; ஆனால் இந்தப் புதிய கல்விக் கொள்கையை எதிர்ப்பவர்களும் அதுபற்றி அக்கறை காட்டாமல் இருப்பதுதான் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.
ரோஹித் வெமுலாவின் மரணத்தை நினைவுகூர்ந்து இப்போது நாடு முழுவதும் ஏராளமான கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றன, மாணவர் தலைவர்களும், அரசியல் தலைவர்களும் அவற்றில் கலந்துகொள்கிறார்கள். இந்தக் கூட்டங்கள் அவருக்கு அஞ்சலி செலுத்துவதோடு முடிந்துவிடக்கூடாது. கல்வி வளாகங்களில் சாதிய பாகுபாடுகளைக் களைவதற்கான இயக்கமாக அவை நீட்சிபெறவேண்டும். அதுவே ரோஹித் வெமுலாவுக்கு செலுத்தப்படும் மெய்யான அஞ்சலியாக இருக்கும்.
(கட்டுரையாளர் மணற்கேணி என்ற ஆய்விதழின் ஆசிரியர். எழுத்தாளர் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலர்)
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
பேஸ்புக்கில் படித்து கருத்துக்கள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்












