You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழகம் : ஹாஜிக்கள் முத்தலாக் பரிந்துரை சான்றிதழ் வழங்க உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை
முஸ்லிம் மதகுருக்களான ஹாஜிக்கள் தமிழகத்தில் முத்தலாக் பரிந்துரை சான்றிதழ்களை வழங்க சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
அ.தி.மு.கவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பதர் சயீத் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், இஸ்லாமிய தனி நபர் சட்டத்தின்படி திருமணமான ஆண் மூன்று முறை தலாக் என்று கூறி விவாகரத்து செய்யும் நடைமுறை உள்ளது என்றும், ஹாஜிக்கள் முத்தலாக் பரிந்துரை சான்றிதழ் வழங்கிவிட்டால் அதுவே இறுதி முடிவாக எடுத்து கொள்ளப்படுவதாகவும் அதில் கூறியிருந்தார்.
இந்த முஸ்லிம் நடைமுறையானது பெண்களுக்கு எதிரானது என்றும், ஹாஜிக்கள் வழங்கும் சான்றிதழ் வெறும் பரிந்துரையே தவிர அது இறுதி முடிவல்ல என்றும் பதர் சயீத் தெரிவித்திருந்தார்.
மேலும், 2007 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை ஹாஜிக்கள் வழங்கிய பரிந்துரை சான்றிதழ்களில் சிலவற்றை நீதிமன்றத்தில் சமர்பித்த பதர் சயீத் தரப்பு, ஹாஜிக்கள் முத்தலாக் பரிந்துரைத்து சான்றிதழ் வழங்கியது, சம்பந்தப்பட்ட பல பெண்களுக்கு தெரியாது என்றும், இந்த நடைமுறையின் போது பெண்கள் ஆஜராகவில்லை என்றாலும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இச்சூழலில், நேற்றைய தினம் (புதன்கிழமை) சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
விசாரணையின் முடிவில், ஹாஜிக்கள் வழங்கும் முத்தலாக் சான்றிதழ் பரிந்துரையே தவிர அதற்கு எவ்விதமான சட்ட அந்தஸ்தும் கிடையாது என்றும், தம்பதிகள் நீதிமன்றம் மூலமே விவாகரத்து பெற முடியும் என்றும் நீதிபதிகள் கூறினர்.
இறுதியாக, தமிழகத்தில் உள்ள ஹாஜிக்களுக்கு முத்தலாக் வழங்க இடைக்கால தடை விதித்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை அடுத்த மாதம் (பிப்ரவரி) 21 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்தனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
எங்களது செய்திகளை முகநூலில் படித்து கருத்துக்களை தெரிவிக்க : பிபிசி தமிழ் பேஸ்புக்
ட்விட்டரில் எங்களை பின்தொடர : பிபிசி தமிழ் டிவிட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யூ ட்யூபில் காண : பிபிசி தமிழ் யு டியூப்