You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழக தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் வீட்டில் வருமான வரித்துறை சோதனை
தமிழக தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் வீட்டில், இன்று (புதன்கிழமை)காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர்.
அவரது வீடு, அவரது மகனது வீடு, அலுவலகங்கள், உறவினரது வீடுகள் என சென்னை, சித்தூர், பெங்களூர் நகரங்களில் 13 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
ராம மோகன ராவ் கடந்த ஜூன் மாதம் தமிழக தலைமைச் செயலராக பதவியேற்றார்.
ராம மோகன ராவின் அண்ணாநகர் இல்லத்தில் இன்று (புதன்கிழமை) காலை 5.30 மணியளவில் இந்த சோதனைகள் துவங்கின. 20-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சில நாட்களுக்கு முன்பாக தொழிலதிபரான ஷேகர் ரெட்டி மற்றும் அவரது கூட்டாளிகளின் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடத்தியதில் அதில் 136 கோடி ரூபாய் அளவுக்குப் பணம் கைப்பற்றப்பட்டது. அதில் 34 கோடி ரூபாய் புதிய 2,000 ரூபாய் நோட்டாக கிடைத்தது. மேலும் 177 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கக் கட்டிகளும் கிடைத்தன.
இதன் தொடர்ச்சியாகவே இன்றைய சோதனைகள் நடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.
இந்த சோதனைகள் குறித்து கருத்துத் தெரிவித்திருக்கும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், வருமான வரித்துறையினர் தங்களுக்குக் கிடைத்திருக்கும் தகவல்களின் அடிப்படையில் இந்த சோதனைகளை நடத்துவதாகத் தெரிவித்தார்.
'தமிழகத்திற்கே தலைகுனிவு'
தமிழக தலைமைச் செயலரது வீட்டிலேயே வருமான வரித்துறை சோதனை நடந்திருப்பது தமிழகத்திற்கே தலைகுனிவு என தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் கூறியிருக்கிறார்.
"முதல்வரின் செயலாளராக இருந்த ராமமோகன் ராவுக்கு தலைமை செயலாளர் பதவியை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழங்கிய போதே சர்ச்சைகள் வெளிப்பட்டன. அவருக்கு தலைமைச் செயலாளர் பதவியைத் தந்ததற்குக் காரணம், அவர் ஆட்சியாளர்களின் முறைகேடான நடவடிக்கைகளுக்குத் துணையாக இருப்பதால் தான் என்பதை தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் அப்போதே சுட்டிக்காட்டியிருந்தனர்" என்றும் ஸ்டாலின் கூறியிருக்கிறார்.