குத்துச்சண்டையில் உலகை வியக்க வைக்கும் 9 வயது காஷ்மீர் `அழகி'
இந்திய நிர்வாகத்திற்கு உட்பட்ட காஷ்மீர் பகுதியில் ஒன்பது வயது சிறுமி வரலாறு படைத்துக் கொண்டிருக்கிறார்.
தாஜாமுல் இஸ்லாம் என்ற சிறுமி, நவம்பர் மாதம் இத்தாலியில் சப் ஜூனியர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார்.
கடந்த ஆண்டில் அவர் உள்ளூர் அளவில் சாம்பியன்ஷிப் பட்டங்களை வென்றார். தற்போது ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க ஆர்வத்தோடு உள்ளார்.
புகைப்பட கலைஞர் அபித் பாத், கலவரம் நிறைந்த காஷ்மீர் பகுதியில் உள்ள இந்தச் சிறுமியின் வாழ்க்கையில் முக்கிய தருணங்களை படம் பிடித்துள்ளார்.

பட மூலாதாரம், ABID BHAT
ஸ்ரீநகரில் இருந்து 65 கிலோமீட்டர் (40 மைல்) தொலைவில், பந்திபூரா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் தாஜாமுல். இவரின் தந்தை கட்டுமான நிறுவனம் ஒன்றில் ஓட்டுநராக வேலை செய்வதன் மூலம், இந்திய பணத்தில் ரூ.10,000 த்தை (146அமெரிக்க டாலர்; 117 பிரிட்டன் பவுண்டு) மாத சம்பளம் பெறுகிறார்.
இந்தச் சிறுமி தனது சிறுவயதில் இருந்தே குத்துச்சண்டை பயிற்சியைத் தொடங்கினார். கடந்த ஆண்டு ஜம்முவில் நடந்த மாநில அளவிலான சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கத்தைப் பெற்றார்.

பட மூலாதாரம், ABID BHAT
2015ல் இந்திய தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில், தாஜீமுல் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட 13 வயது போட்டியாளரைத் தோற்கடித்து தங்கப் பதக்கத்தை வென்றார்.
''என்னை எதிர்த்துப் போட்டியிடும் நபரைக் கண்டதும் நான் சிறிது பயந்தேன். ஆனால் இந்தச் சண்டையில் வயதும் உடல் அமைப்பும் ஒரு விஷயமே இல்லை என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். நான் மிகக் கவனமாக இருப்பேன். எனது சிறந்த திறனை வெளிப்படுத்துவேன் என்று எண்ணினேன்,'' என்றர் தாஜாமுல்
தாஜாமுல் 2014ல் உள்ளூரில் உள்ள ஒரு தற்காப்பு கலை பயிற்சி அகாடமியில் குத்துச்சண்டை பழகத் தொடங்கினார்.

''நான் விளையாட்டு அரங்கத்திற்கு அருகே நடந்து கொண்டிருந்தேன். பல இளவயது சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் பயிற்சி செய்து கொண்டிருந்ததைப் பார்த்தேன். அவர்கள் குஸ்தி சண்டை போடுவதை நான் பார்த்தேன். எனது தந்தையிடம் கூறி, நானும் அங்கு சேர வேண்டும் என்றேன், அவர் அனுமதித்தார்,'' என தாஜாமுல் பத்திரிகையாளரிடம் கூறினார்.
தினமும் தாஜாமுல் தனது குத்துச்சண்டை கையுறைகளை அணிந்து கொள்கிறார், மணல் மூட்டைகளைக் குத்துகிறார். தனது பயிற்சியாளர் ஃபைசல் அலியின் முன்னிலையில், பயிற்சிகளைச் செய்கிறார். சில சமயம் தாஜாமுல் ஒரு வாரத்தில் 25 மணி நேரம் பயிற்சி செய்வதாகப் பயிற்சியாளர் ஃபைசல் அலி கூறினார்.

பட மூலாதாரம், ABID BHAT
இந்த மாத முற்பகுதியில், தாஜாமுல் உலக சப் ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கபம பதக்கம் வென்றார். ஐந்து நாட்களில் ஆறு வெற்றிகளைப் பெற்றார். சுமார் 90 நாடுகள் பங்கேற்ற அந்தப் போட்டியில், அவர் சீனா, ஜப்பான், பிரான்ஸ், இத்தாலி, கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து வந்து பங்கேற்ற வீராங்கனைகளை எதிர்த்துச் சண்டையிட்டு வென்றார்.
தாஜாமுல் இத்தாலியில் இருந்து திரும்பிய பின், அவருக்கு வாழ்த்து சொல்ல, அவரது அண்டைவீடுகளில் உள்ளவர்கள் கூட்டம் கூட்டமாக வந்தனர். பலர் அவருக்கு மலர்மாலைகளை சூட்டினர், பரிசுப்பொருட்களைக் கொடுத்தனர் மற்றும் அவரைக் கிராமத்தில் ஊர்வலமாக கூடிச் சென்றனர்.

பட மூலாதாரம், ABID BHAT
தாஜாமுல் அவரது சுற்றுவட்டாரத்தில் பிரபலமானவராக மாறியுள்ளார். மக்கள் அவரை அடையாளம் கண்டுகொள்கின்றனர். அவரோடு செலஃபி எடுத்துக்கொள்கின்றனர்.
அவர் காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள இளவயதினருக்கு உத்வேகம்அளிப்பவராக, ஓர் எடுத்துக்காட்டாக மாறியுள்ளார். தாஜாமுல்லின் சகோதரர் மற்றும் அவரது இரண்டு சகோதரிகளும் குத்துச்சண்டை பழகி வருகின்றனர்.
''இது அவர்களின் மரபணுவில் உள்ளது. தாஜாமுல்லின் உடன் பிறந்தவர்கள் அனைவரும் சாம்பியன்கள் தான். ஆனால் அவர்கள் எல்லோரையும் விட பல படி முன்னே நிற்கிறார் தாஜாமுல்,'' என்று பள்ளி முதல்வர் ஷப்னம் கொன்சர் பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியா செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
தாஜாமுல் பார்ப்பதற்கு மென்மையானவராக, அழகானவராக இருந்தாலும், அவரிடம் போராடும் குணம் உள்ளது. பார்ப்பதற்குப் பாவம் போல இருந்தாலும் அதைப் பார்த்து ஏமாந்து விடாதீர்கள்,'' என்றார் அவர்.

பட மூலாதாரம், ABID BHAT
அவரது தாய் மகளின் முயற்சிகளுக்கு மிக ஆதரவாக இருக்கிறார். தாஜாமுல் அவரது இளம் சகோதரர் அத்நன் உல் இஸ்லாமுடன் மிக நெருக்கமாக உள்ளவர். அவரது அடிச்சுவடுகளை இந்தச் சகோதரரும் பின்பற்றுகிறார். அத்நனுடன் விளையாடும் போது தாஜாமுல் தோற்பது போல நடிக்கிறார்.
இந்திய ராணுவத்தால் நடத்தப்படும் பள்ளியின் மாணவியான தாஜாமுல் அடிக்கடி தனது வகுப்பில் முதல் மாணவியாக திகழ்கிறார். கூடுதல் திறன் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்.
''அவர் சிறப்பாக நடனமாடுவார். தனக்கென ஒரு குழுவை வைத்துள்ளார் அவர்களுக்கு நடனம் சொல்லிக்கொடுப்பார். தாஜாமுல் சிறந்த மாணவி. படிப்பிலும் சுட்டி,'' என கௌன்சர் தெரிவித்தார்.

பட மூலாதாரம், ABID BHAT
தாஜாமுல் எதிர்காலத்தில் மருத்துவராக வரவேண்டும் என்று விரும்புகிறார். ''மருத்துவராக இருப்பதில் பயன் உள்ளது. முதலில் எனது எதிரிகளின் எலும்புகளை முறிப்பேன். பின் மருத்துவராக அவர்களுக்குச் சிகிச்சை அளிப்பேன்,'' என நகைப்புடன் சொல்கிறாள் இந்தச் சிறுமி.












