கிறிஸ்துமஸ் தீவு அருகே படகு கவிழ்ந்தது; பெரும்பாலானோர் உயிருடன் மீட்பு

படகு மூழ்குவதற்கு முன்னால் பயணிகள் மேல் தளத்தில் கூடி நிகின்றனர்.

பட மூலாதாரம், Getty

படக்குறிப்பு, படகு மூழ்குவதற்கு முன்னால் பயணிகள் மேல் தளத்தில் கூடி நிகின்றனர்.

ஆஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவுக்கு வடக்கே கடலில் படகு ஒன்று கவிழ்ந்ததை அடுத்து அதிலிருந்து 120க்கும் அதிகமானோர் மீட்கப்பட்டுள்ளனர்.

புதன்கிழமை அதிகாலை இந்தப் படகிலிருந்து அவசர உதவிக்கான அழைப்பு வந்ததை அடுத்து அங்கு சென்ற வர்த்தகக் கப்பல்கள் தண்ணீரில் தத்தளித்துக்கொண்டிருந்த 123 பேரை உயிருடன் மீட்டுள்ளதாக ஆஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதே கடல் பகுதியில் ஒருவாரத்துக்கு முன்பும் ஒரு அகதிகள் படகு மூழ்கியிருந்தது.

சம்பவம் நடந்த இடத்துக்கு ஆஸ்திரேலியக் கடற்படையின் இரண்டு படகுகள் சென்றுள்ளன.

மூழ்கிய படகில் 123 பேர் முதல் 133 பேர் வரை இருந்ததென நம்பப்படுவதாக ஆஸ்திரேலியப் பிரதமர் ஜூலியா கில்லார்ட் தெரிவித்துள்ளர்.

இந்தப் படகு கவிழ்வதற்கு சற்று முன்னால் வர்த்தகக் கப்பல் ஒன்றிலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தைப் பார்க்கையில், இப்படகின் மேல் தளத்தில் ஆட்கள் கூட்டமாக நிற்பதைக் காணமுடிகிறது.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இந்த கிறிஸ்துமஸ் தீவுக்கு அருகே சென்ற வாரம் கவிழ்ந்த அகதிகள் படகில் 200 பேர் பயணித்ததாக நம்பப்படுகிறது.

அப்போது 110 பேர் உயிருடன் மீட்கப்பட்டிருந்தனர், 17 பேர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டனர். எஞ்சியோரை தேடும் பணிகள் கடந்த சனிக்கிழமை கைவிடப்பட்டிருந்தன.