ரஷ்ய போர்க்கைதிகளை யுக்ரேன் ராணுவம் எப்படி நடத்துகிறது? - பிபிசி சிறப்புச் செய்தி

ரஷ்ய போர்க்கைதிகள்
    • எழுதியவர், ஜேம்ஸ் வாட்டர்ஹவுஸ்
    • பதவி, பிபிசி யுக்ரேன் செய்தியாளர்

ரஷ்ய ஏவுகணைகள் வானைக் கிழித்துக் கொண்டு யுக்ரேன் மீது மீண்டும் பாய்ந்த போது மேற்கு யுக்ரேனில் உள்ள போர்க்கைதிகள் வைக்கப்பட்டிருந்த கட்டடத்தில் நுழைந்தோம்.

யுக்ரேனில் போர்க்கைதிகள் அடைக்கப்பட்டிருந்த 50 இடங்களில் இதுவும் ஒன்று. போரில் பிடிபட்ட நூற்றுக்கணக்கான ரஷ்ய வீரர்கள், கட்டாயத்தால் போரில் பங்கேற்றவர்கள், கூலிப்படையினர் ஆகியோர் இந்த மோசமான கட்டிடங்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். ரஷ்ய தாக்குதலில் இருந்து தப்பிக்க படை வீரர்கள் தஞ்சமடைந்திருந்த அடித்தளத்திற்குள் நாங்கள் அழைத்துச் செல்லப்பட்ட போது, உக்ரேனிய வான் பாதுகாப்பு தளவாடங்களின் சத்தம் தொலைவில் கேட்டது.

போர்க்கைதிகள் பரிமாற்றம் என்பது வாடிக்கையாக நடக்கும் ஒன்றாகிவிட்டது. யுக்ரேனைப் பொருத்தவரை, அவர்கள் போரைத் தொடர இது மிகவும் இன்றியமையாத ஒன்று. போர்க்கைதிகள் பரிமாற்றத்தின் மூலம் இந்த மாதம் மட்டும் 1,762 ஆண்களும், பெண்களும் திரும்பக் கிடைத்திருப்பதாக யுக்ரேன் கூறியுள்ளது. இது மிகவும் சிக்கலான வேலை, சில வேளைகளில் இதனை ஏற்பாடு செய்ய மாதக்கணக்கில் நேரத்தை செலவிட வேண்டியிருக்கும்.

ஜெனிவா ஒப்பந்தப்படி, போர்க்கைதிகள் அணிவகுப்போ, பொதுமக்களுக்கு அவர்களை காட்டவோ கூடாது. நாங்கள் விரும்பிய நபரை அணுகி அவர்களின் ஒப்புதலைப் பெற நாங்கள் அனுமதிக்கப்பட்டோம். ஆனால், நாங்கள் செல்லுமிடமெல்லாம் காவலர்களும் உடன் வந்ததால் அங்கிருந்த போர்க்கைதிகளால் சுதந்திரமாக பேச முடியவில்லை. பலரும் அடையாளத்தை மறைக்க தங்களது முகத்தை மூடிக் கொண்டனர்.

ரஷ்யா - யுக்ரேன் ஆகிய இரு தரப்புமே மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டிருப்பதாக ஐ.நா. மனித உரிமை அமைப்பு கடந்த நவம்பர் மாதம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. போர்க்கைதிகளுடனான உரையாடலின் போது தாங்கள் மோசமாக நடத்தப்பட்டதையும், சித்ரவதை செய்யப்பட்டதையும் வெளிப்படுத்தியதன் அடிப்படையில் அந்த அறிக்கை தயாரிக்கப்பட்டிருந்தது.

இங்கே, போர்க்கைதிகளை நாங்கள் நன்றாக நடத்துகிறோம் என்று காட்ட காவலர்கள் விரும்பியது போல் தோன்றியது. போர்க்கைதிகளுள் ஒருவர், தாம் கூலிப்படை ஒன்றில் பணிபுரிந்தாக கூறினார். யுக்ரேனிடம் இருந்து ரஷ்யா கடந்த மாதம் கைப்பற்றிய சோலேடார் நகரில் பிடிபட்ட அவர், 3 நாட்களுக்கு முன்பு தான் இங்கே கைதியாக கொண்டு வரப்பட்டுள்ளார்.

விரல் விட்டு எண்ணக்கூடிய சிலர் எதிர்ப்பு காட்டும் வகையில் எங்களை உற்று நோக்கினர். லுஹான்ஸ்க் பிராந்தியத்தில் கடந்த டிசம்பர் 29-ம் தேதி பிடிபட்டதாக ஒரு போர்க்கைதி கூறினார்.

போர்க்கைதிகள்

"போர்க்கைதிகள் பரிமாற்றத்தில் நானும் இடம்பெறுவேன் என்று நம்புகிறேன். ஆனால், மீண்டும் ராணுவத்தில் சேர மாட்டேன்" என்றார் அவர்.

"உனக்கு வேறு வாய்ப்பே தரப்படாவிட்டால் என்ன செய்வாய்?" என்று நான் கேட்டேன்.

ஒரு விநாடி தாமதித்த அவர், "என்னிடம் சில யோசனைகள் உள்ளன. நானாகவே சரணடைந்து மீண்டும் இங்கே வருவேன்" என்று அவர் பதிலளித்தார்.

கட்டடத்தை விட்டு வெளியே வரும் போது, அங்கிருந்த போர்க்கைதிகளுள் பாதி பேர் காயமடைந்திருந்தனர் என்பதை உறுதிப்படுத்த முடிந்தது. சிலரது கைகள் அல்லது காலில் பேண்டேஜ்கள் இருந்ததை காண முடிந்தது. மற்றவர்கள் தளர்ச்சியடைந்திருந்தனர் என்பதும் தெரிந்தது.

கையெறி குண்டுவீச்சில் எவ்வாறு காலை இழந்தேன் என்று விவரிக்கும் போது ஒரு இளைஞர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டார். ஒரு கம்ப்ரஷன் இயந்திரத்தின் சத்தத்தை நெருங்கிய போது, ஒரு சிறிய உற்பத்தி கேந்திரம் பார்வையில் பட்டது. அங்கே, போர்க்கைதிகள் மரச்சாமான்களை ஒருங்கிணைத்துக் கொண்டிருந்தனர். எங்களைப் பார்த்ததும் மீண்டும் தலை கவிழ்ந்தபடி வேலையைத் தொடர்ந்தனர்.

உள்ளூர் நிறுவனம் ஒன்று இதற்காக ஒப்பந்தம் செய்து கொண்டிருப்பதாக எங்களிடம் தெரிவிக்கப்பட்டது. இதன் மூலம் சிகரெட், இனிப்புகளுக்கு செலவழிப்பதற்காக சிறிது பணத்தை போர்க்கைதிகள் ஈட்ட முடியும்.

பெரும்பாலான போர்க்கைதிகள் இத்தகைய வேலைகளை செய்ய நிர்பந்திக்கப்பட்டிருந்தனர். ரஷ்யப் படை அதிகாரிகள் மட்டுமே தெரிவு செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

மதிய உணவு இடைவேளையின் போது, கட்டடத்தின் மேல் தளத்தில் இருந்த தற்காலிக உணவகத்திற்கு போர்க்கைதிகள் அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கிருந்த சன்னல் வழியே, வெளியில் நடுங்கச் செய்யும் குளிர் காற்றில் யுக்ரேன் தேசியக் கொடி பறந்ததை பார்க்க முடிந்தது.

அவர்கள் அமைதியாக, துரிதமாக சாப்பிட்டனர். அவர்கள் சாப்பிடும் சத்தத்தை கேட்க முடிந்தது. பின்னர், ஒவ்வொரு மேசையாக போர்க்கைதிகள் ஒன்றாக நின்று, "மதிய உணவுக்கு நன்றி" என்று யுக்ரேனிய மொழியில் உரக்கக் கூறினர்.

உணவு

போர்க்கைதிகள் யுக்ரேனிய மொழியிலான தொலைக்காட்சிகளை பார்க்க அனுமதிக்கப்பட்டனர். யுக்ரேன் மற்றும் ரஷ்யப் படையெடுப்பால் தரைமட்டமாகிப் போன மரியுபோல் நகரத்தின் வரலாற்றைக் கூறும் ஆவணப் படங்கள் காட்டப்பட்டன.

மரியுபோல் நகரை காத்து நின்ற சில யுக்ரேனிய படை வீரர்களும் கடந்த போர்க்கைதிகள் பரிமாற்றத்தில் இடம் பெற்றிருந்தனர்.

அங்கிருந்த ஒருவரிடம் நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பதை உங்களால் புரிந்து கொள்ள முடிகிறதா என்று கேட்டோம். "ஓரளவு. இது கற்றுக் கொடுப்பதாக இருக்கிறது" என்று அவர் கூறினார்.

அங்கிருந்த சில ரஷ்ய போர்க்கைதிகளால் அவர்கள் பார்த்துக் கொண்டிருப்பதை புரிந்து கொள்ள முடியாமல் இருக்கவும், சிலர் அதனைப் பார்க்காமல் இருக்க விரும்பவும் வாய்ப்புள்ளது.

போர்க்கைதிகள் 2 வாரங்களுக்கு ஒருமுறை போனில் பேச அனுமதிக்கப்படுவதாக காவலர்கள் கூறினார்கள். அவர்கள் போர்க்கைதிகளாக பிடிபட்டிருப்பதை ரஷ்யாவில் இருக்கும் அவர்களது குடும்பத்தினர் தெரிந்து கொள்வதற்கான முதல் வாய்ப்பாக இந்த மொபைல் அழைப்பு பல முறை இருந்திருக்கிறது.

"நீ எங்கே இருக்கிறாய்? ஊரில் உள்ள பாதி பேரிடம் உன்னைப் பற்றி நான் விசாரித்துவிட்டேன்" என்று ஒரு இளைஞரிடம் போனில் பேசிய அவரது தாய் கூறியதை கேட்க முடிந்தது.

"அம்மா, பொறுங்கள். நான் பிடிபட்டிருக்கிறேன். என்னால் கூடுதலாக எதுவும் கூற முடியாது," என்று அந்த இளைஞர் கூறினார்.

"அந்த யுக்ரேனியர்களிடமா?," என்று கூறி விட்டு அந்த தாய் உடைந்து அழுவது கேட்டது.

காவலர் அருகில் வந்ததும், "அவ்வளவுதான் அம்மா. நான் முடிக்கிறேன்" என்று தாயிடம் அந்த இளைஞர் கூறினார். "நான் ஆரோக்கியத்தோடு உயிருடன் இருக்கிறேன் என்பதே முக்கியம்" என்று கடைசியாக அந்த இளைஞர் குறிப்பிட்டார்.

சில போர்க்கைதிகளின் தொலைபேசி அழைப்புகள் எதிர் முனையில் ஏற்கப்படவே இல்லை. அடுத்த அழைப்பில் பேசலாம், எதிர்கால போர்க்கைதிகள் பரிமாற்றத்தில் நாமும் இடம் பெறுவோம் என்ற நம்பிக்கையுடன் அவர்கள் காத்திருக்கின்றனர்.

பிபிசி விளையாட்டு வீராங்கனை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: