குழந்தை ஒன்று 7.3 கிலோ எடையுடன் பிரேசிலில் பிறந்துள்ளது – இவ்வளவு எடையில் குழந்தை பிறப்பது ஏன்?

பட மூலாதாரம், DIVULGACIÓN/ SES-AM
பிரேசிலில் சில நாட்களுக்கு முன்பு பெண் ஒருவர் 7.3 கிலோ எடையுள்ள குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார்.
ஆன்கர்சன் சான்டோஸ் என்று பெயரிடப்பட்டுள்ள அந்த ஆண் குழந்தை அறுவை சிகிச்சை மூலம் பாரிண்டின்ஸ் என்ற பகுதியில் உள்ள பார்ட்ரே கொலம்போ என்னும் மருத்துவமனையில் பிறந்துள்ளது.
இதற்கு முன்பு இத்தாலியில் 1955ஆம் ஆண்டு 10.2கிலோ எடையில் பிறந்த குழந்தையே உலகின் அதிக எடையுடன் பிறந்த குழந்தை.
பொதுவாக ஆண் குழந்தையின் சராசரி எடை 3.3கிலோ பெண் குழந்தையின் சராசரி எடை 3.2 கிலோ ஆக உள்ளது.
இம்மாதிரியாக அதீத எடையில் பிறக்கும் குழந்தைகளை 'மாக்ரோசோமியா' என்கின்றனர். அதாவது கிரேக்கத்தில் "பெரிய குழந்தை" என்று அர்த்தம்.
உலகளவில் 12 சதவீத அளவில் இம்மாதிரியான மாக்ரோசோமிக் குழந்தைகள் பிறக்கின்றனர்.
கர்ப்பக் காலத்தில் ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும் தாய்மார்களுக்கு 15 முதல் 45 சதவீத அளவில் இம்மாதிரியான குழந்தைகள் பிறப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.
இதற்கான காரணம் என்ன?
இதற்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன. முதல் காரணம் உடல் பருமன். அதீத எடையுள்ள தாய்மார்கள் மாக்ரோசோமிக் குழந்தைகளைப் பெறுவதற்கான வாய்ப்பு இரட்டிப்பாக உள்ளது.
அதேபோல கர்ப்பக் காலத்தின்போது எடை கூடினாலும் இம்மாதிரியான குழந்தைகள் பிறப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.
'ஜெஸ்டேஷனல் டயபிட்டிஸ்' எனப்படும் கர்ப்பக் காலத்தில் சர்க்கரை அதிகரிக்கும் நிலையும் இதற்கு ஒரு காரணம். ஆன்கர்சனுடைய தாயின் ரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருந்தது என பாட்ரே கொலம்போ மருத்துவமனையின் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

பட மூலாதாரம், Getty Images
அதேபோல தாயின் இன்சுலின் எதிர்ப்பு தன்மை அதிகமாக இருந்தால் தொப்புள் கொடி வழியாக குழந்தைக்கு அதிக க்ளூகோஸ் சென்றடையும். இதனால் குழந்தைகள் அதிகமாக வளரும்.
இந்த நிலையில் லிபிட்ஸ் எனப்படும் கொழுப்பும் அதிக அளவில் குழந்தையைச் சென்றடையும். இதனாலும் குழந்தைகள் அதீத வளர்ச்சியடையும்.
மற்றொரு காரணம் தாமதமான கர்ப்பம். அதாவது 35 வயதுக்கு மேற்பட்ட தாய்மார்கள் கர்ப்பமாகும்போது இந்த ஆபத்து 20 சதவீதம் உள்ளது.
அதேபோல தந்தையின் வயது 35க்கும் மேல் இருந்தாலும் 10 சதவீத அளவில் ஆபத்து அதிகமாகிறது
அடுத்தடுத்த கர்ப்பங்களில் குழந்தையின் எடை அதிகரிக்கும் வாய்ப்பும் உள்ளது.
அதிக கால கர்ப்பமும் இதற்கு ஒரு காரணம். பொதுவாக 40 அல்லது 42 வாரங்களுக்குப் பிறகும் கர்ப்பம் நீடித்தால் குழந்தை அதிக எடையில் பிறப்பதற்கான வாய்ப்பு அதிகம்.
பொதுவாக, ஆண் குழந்தைகள் மாக்ரோசோமிக்காக இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். அதாவது பெண் குழந்தைகளைக் காட்டிலும் ஆண் குழந்தைகளுக்கு இந்த ஆபத்து மூன்று மடங்கு அதிகம்.

பட மூலாதாரம், Getty Images
பிறப்பின் போதுள்ள அபாயங்கள்
இம்மாதிரியாக அதிக எடையுள்ள குழந்தை தாயின் கர்ப்பப் பையிலிருந்து வெளியே வருவதற்குப் பல சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
எடுத்துக்காட்டாக அதிக எடையால் குழந்தையின் தோள்பட்டை தாயின் ப்யூபிக் எலும்புக்குப் பின்னால் சிக்கிக் கொள்ளும். இதற்கு மருத்துவ ரீதியில் 'ஷோல்டர் டிஸ்டோசியா' என்று பெயர்.
குழந்தை சிக்கிக் கொண்டால் அதனால் மூச்சுவிட முடியாது. தொப்புள் கொடி அழுத்தப்படும்.
இதனால் குழந்தையின் காலர் எலும்புகளும் உடைந்து விடக்கூடும். அல்லது தோள்பட்டை பகுதியில் உள்ள ப்ராசியல் ப்ளேக்ஸஸ் நரம்புகள் சேதமடைந்துவிடும். இதுதான் முன்னங்கைக்கு சமிஞ்சைகளைக் கடத்துகிறது. பல நேரங்களில் இந்தச் சேதம் நிரந்தரமானதாக மாறிவிடும்.
ஷோல்டர் டிஸ்டோசியா பொதுவாக 0.7 சதவீத அளவில் அனைத்துவித குழந்தைகளுக்கும் ஏற்படும். ஆனால் மாக்ரோசோமிக் குழந்தைகளில் அது 25 சதவீத அளவில் ஏற்படும்.
அதேபோல குழந்தை பிறப்பின்போது தாயின் பிறப்புறப்பு கிழியும் நிலை ஏற்படும். இது ரத்தப்போக்கு அபாயத்தை உருவாக்கும்.
இந்த ரத்தப்போக்கே உலகளவில் குழந்தைப்பேற்றின்போது பெண்கள் இறப்பதற்கு அதிகம் காரணமாக உள்ளது. எனவே குழந்தையின் எடை அதிகரிக்க அதிகரிக்க சுகப்பிரசவத்தின்போது காயமடைவதற்கான ஆபத்தும் அதிகமாக இருக்கும்.
மேலும், தாயின் கர்ப்ப வலியும் அதிகமாகிறது. கர்ப்பப் பையின் கீழ்புறம் விரிவடைந்து குழந்தையின் தலை வெளி வருவதற்காகத் திரும்புவதற்கான நேரம் அதிகமாகிறது.
இதனால் தாய்க்கு தொற்று, ரத்தப்போக்கு, சிறுநீரக தேக்கம் ஆகியவை ஏற்பட வாய்ப்புள்ளது.
ஆனால் இம்மாதிரியான அதிக எடை கொண்ட குழந்தைகள் குறித்து நமக்குத் தெரியாத ஒரு விஷயம், அவை வளரும்போதும் அதிக எடையில் இருக்குமா என்பதுதான்.
நம்மிடம் இருக்கும் சிறிய தரவுகளைக் கொண்டு பார்த்தால் ஏழு வயதை எய்தும்போது இவர்கள் அதிக எடையுடன் இருப்பார்கள் என்று தெரிகிறது. மேலும் அவர்களுக்கு டைப் 2 நீரிழிவு வரவும் வாய்ப்புள்ளது
தற்போதைய சூழலில் உடல் பருமன் பிரச்னை என்பது பொதுவான பிரச்னையாக இருக்கும் பட்சத்தில் இம்மாதிரியான அதீத எடை கொண்ட குழந்தைகள் பிறப்பதும் அதிகாகிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:













