உடல் உறுப்பு தானம் செய்த 6 வயது குழந்தை - இந்தியாவுக்கே முன்னுதாரணம் ஆன ரோலி பிரஜபதி

ரோலி பிரஜபதி, உடல் உறுப்பு தானம், இந்தியா

பட மூலாதாரம், FAMILYHANDOUT

படக்குறிப்பு, ரோலி பிரஜபதி

உலக மக்கள் தொகை எண்ணிக்கையில் சீனாவிற்கு அடுத்த இடத்தில் தொடர்ந்து வரும் இந்தியா, உடல் உறுப்பு தானத்தில் உலகளவில் 62வது இடத்தில் இருக்கிறது.

இந்தியாவில் கடந்த ஆண்டு வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த சிறுமி ஒருவர் மர்மமான முறையில் துப்பாக்கி குண்டுகள் துளைக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

அந்த வேதனையான தருணத்திலும் அந்தச் சிறுமியின் பெற்றோர் அவளது உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர். ஆனால் இதுபோன்ற முடிவுகள் இந்தியாவின் பெரும்பாலான குடும்பங்களில் எடுக்கப்படுவதில்லை என்பதுதான் உண்மை நிலவரம் 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் டெல்லியின் புறநகர் பகுதியான நொய்டாவில் இருந்த தங்களது சிறிய வீட்டில் தனது ஐந்து சகோதர சகோதரிகளுடன் ‘ரோலி பிரஜாபதி` என்னும் 6 வயது சிறுமி உறங்கி கொண்டிருந்தாள்.

அவளது பெற்றோர் சமையலறையில் இரவு உணவு தயாரித்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென ஒரு பலத்த தாக்குதல் சத்தத்துடன் தங்களது மகளின் அலறல் சத்தமும் அவர்களுக்குக் கேட்டது. பெற்றோர் பதறியடித்து வெளியே வந்து பார்த்தபோது அழுதுகொண்டு நின்ற அவள் தரையில் சரிந்து விழுந்தார். அவளது வலது காதில் ரத்தம் வந்துகொண்டிருந்தது. அந்தச் சிறுமியின் தலையை துப்பாக்கித் தோட்டா துளைத்திருந்தது.

ஏதோ அசம்பாவிதம் நடந்துவிட்டது என்பதை உணர்ந்த அவர்கள் சிறுமியை அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிறுமிக்கு மூளைச்சாவு ஏற்பட்டுவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து அப்போது பிபிசியிடம் பேசிய நொய்டாவை சேர்ந்த காவல்த்துறையினர், `இது குறித்து தெளிவான எந்தவொரு தடயமும் இதுவரை எங்களுக்குக் கிடைக்கவில்லை. தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம்` என்று மட்டுமே தெரிவித்தனர்.

தங்களது மகளை இழந்த மிகவும் துயரமான தருணத்திலும், ரோலியின் பெற்றோர் அவளது உடல் உறுப்புகளை தானம் செய்வதற்கு முடிவெடுத்தனர். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் வரலாற்றில் மிகவும் இளம் வயதில் உடல் உறுப்புகள் தானம் செய்தவர் என்ற பெருமை ரோலியை வந்தடைந்தது.

இந்தியாவில் உடல் உறுப்புகள் தானம் செய்வதில் இன்றளவும் பலர் மிகுந்த தயக்கம் காட்டி வரும் சூழலில் ரோலியின் பெற்றோர் எடுத்த இந்த முடிவு மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

சிறுமியின் தந்தை ஹர்னராயன் பிரஜபதி தனது குழந்தையின் உடல் உறுப்புகளை தானம் செய்ய தாங்கள் எடுத்த முடிவு குறித்துப் பேசும்போது, `எங்களுக்கு என்ன செய்வதெனத் தெரியவில்லை. இரவு முழுவதும் யோசித்துக்கொண்டே இருந்தோம்.

இதுகுறித்து முடிவெடுக்க எங்களுக்கு இன்னும் அதிக நேரம் தேவைப்படும் என்று தோன்றியது. ஆனால் ஒரு கட்டத்தில் எங்களது குழந்தையால் பலரது உயிர்கள் காப்பாற்றப்படும் என்ற உண்மையை நாங்கள் உணர்ந்தபோது அவளது உடல் உறுப்புகளை தானம் செய்ய எங்களது சம்மதத்தைத் தெரிவித்தோம்` என்று கூறுகிறார்.

`பலரது உடல்களில் எங்களது மகள் இன்று உயிருடன் இருப்பதாக நாங்கள் உணர்கிறோம்` என்றும் ஹர்னராயன் பிரஜபதி குறிப்பிடுகிறார்.

ரோலி பிரஜபதி, உடல் உறுப்பு தானம், இந்தியா

பட மூலாதாரம், KAMLESHUPATHYAYA

படக்குறிப்பு, தேவ் உபத்யய்யா

ரோலியின் இரண்டு சிறுநீரகங்களும் தேவ் உபத்யய்யா என்ற 14 வயது சிறுவனுக்கு வழங்கப்பட்டது. இதுகுறித்து அந்தச் சிறுவனின் பெற்றோர் கூறும்போது, `எங்கள் மகனுக்கு மாற்று சிறுநீரகம் பொறுத்துவதற்காக நாங்கள் 4 ஆண்டுகளாகக் காத்திருந்தோம்.

அவனுக்கு சிறுநீரகங்கள் கிடைத்துவிட்டது என்று அறிந்தபோது அதிசயம் நிகழ்ந்துவிட்டதாக நாங்கள் கருதினோம். இன்று எங்களது வாழ்வே மாறிவிட்டது` என்று தெரிவித்தனர்.

அதேபோல் ரோலியின் கல்லீரல் 6 வயது சிறுவனக்கும் இதய வால்வுகள் ஒரு வயது குழந்தைக்கும் 4 வயது சிறுவனுக்கும் பொறுத்தப்பட்டது. அவளது கருவிழிகள் 34 வயது நிரம்பிய ஒருவருக்கும் 71 வயது நிரம்பிய ஒருவருக்கும் வழங்கப்பட்டது.

இந்தியாவில் ரோலி பிரஜபதியின் கதையும் இத்தாலியைச் சேர்ந்த நிக்கோலஸ் கிரீன் என்னும் சிறுவனின் கதையும் ஒரே நேர்க்கோட்டில் பயணிக்கிறது என்றால் உங்களால் நம்பமுடிகிறதா?

ரோலி பிரஜபதி, உடல் உறுப்பு தானம், இந்தியா

பட மூலாதாரம், REG GREEN

படக்குறிப்பு, நிக்கோலஸ் கிரீன்

இந்தியாவின் ரோலியும், இத்தாலியின் நிக்கோலஸும்

ஆம் முப்பது ஆண்டுகளுக்கு முன்னாள் ரோமில் இதேபோல் துப்பாக்கியால் தாக்கப்பட்டு ஒரு சிறுவன் உயிரிழந்தான். அப்போது அவனது உடல் உறுப்புகளை தானம் செய்ய அவனது பெற்றோர்கள் முடிவு செய்தனர்.

அன்றைய காலத்தில் உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு உலகம் முழுக்க ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக அந்தச் சம்பவம் அமைந்தது. அத்தகைய நிகழ்விற்குப் பிறகு தற்போது வரை உடல் உறுப்பு தானத்தில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றம் குறித்து அறிந்து கொள்வதற்காக பிபிசி செய்திகள் ரோமிற்கு பயணம் மேற்கொண்டது.

1994ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம், 7 வயதான நிக்கோலஸ் கிரீன் தனது விடுமுறை காலத்தைக் கொண்டாடுவதற்காக தனது குடும்பத்துடன் காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது சில மர்ம நபர்களால் தவறுதலாக அடையாளம் காணப்பட்டு அவர்கள் சென்றுகொண்டிருந்த கார் சுடப்பட்டது. அதில் நிக்கோலஸ் கிரீன் உயிரிழந்தார். 

அப்போது நிக்கோலஸின் பெற்றோர்களான மேகி, ரெக் தம்பதி தனது மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முடிவெடுத்தனர். அதன் பின் உடல் உறுப்புகள் தானம் செய்வதை ஊக்குவிப்பதிலும், அதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுவதிலும் தன் வாழ்நாளின் பெரும்பாலான பகுதியை செலவழித்தார் நிக்கோலஸின் தந்தை ரெக்.

நிக்கோலஸ் உயிரழப்பதற்கு முந்தைய ஆண்டான 1993ஆம் ஆண்டு வரை இத்தாலியின் உடல் உறுப்புகள் தானம் செய்தவர்களின் எண்ணிக்கை 6.2 மில்லியனாக இருந்தது. அதுவே 2006ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 20 மில்லியனாக உயர்ந்தது. 

இத்தாலியில் சில ஆண்டுகளிலேயே காணப்பட்ட இந்த அதிவேக மாற்றத்திற்கு `நிக்கோலஸ் கிரீன்` ஒரு முக்கிய காரணமாக அமைந்தார். நிக்கோலஸின் உடல் உறுப்புகளை தானம் செய்வதற்கு அவரது பெற்றோர்கள் எடுத்த முடிவு இந்த மாற்றத்திற்கு ஆதாரமாகப் பார்க்கப்படுகிறது. 

தற்போது இந்தியாவில் ரோலி பிரஜபதியின் பெற்றோர்கள் எடுத்த முடிவும் மக்கள் மத்தியில் அதேபோன்ற ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ரோலி பிரஜபதி, உடல் உறுப்பு தானம், இந்தியா

பட மூலாதாரம், ANKIT SRINIVAS/BBC

படக்குறிப்பு, ஹர்னராயன் பிரஜாபதி

ரோலியின் உடல் உறுப்புகளை தானம் செய்வது குறித்து குப்தா என்னும் மருத்துவர்தான் முதன்முதலில் அவளது பெற்றோரிடம் பேசியிருக்கிறார். 

`இந்தியாவில் பலருக்கு உடல் உறுப்பு தானம் குறித்து எதுவும் தெரியாது. அப்படியான நிலையில்தான் ரோலியின் பெற்றோர்களும் இருந்தனர். அப்போதுதான் இத்தாலியின் நிக்கோலஸ் கிரீன் கதையை அவர்களிடம் எடுத்துக் கூறினேன்.

அந்தக் கதை அவர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியதை நான் உணர்ந்தேன். அதன் பின்னர் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவர்கள் சம்மதம் தெரிவித்தனர்` என்கிறார் மருத்துவர் குப்தா.

`லான்செட் நரம்பியல் ஆணையத்தின்(Lancet Neurology Commission) தரவுகளின்படி இந்தியாவில் ஒவ்வொரு மூன்று நிமிடத்திற்கும் ஒருவர் தலையில் ஏற்படும் பலத்த காயங்களின் காரணமாக உயிரிழக்கிறார். எனவே உடல் உறுப்புகளை தானமாக பெறுவதற்கான சாத்தியங்கள் இங்கே அதிகமாக இருக்கிறது` என்கிறார் குப்தா.

100 கோடிக்கும் அதிகமாக மக்கள் தொகை இருக்கும் இந்தியா போன்ற நாட்டில் 2000ஆம் ஆண்டிலிருந்து எடுத்த கணக்கெடுப்பின்படி ஓர் ஆண்டிற்கு 700 முதல் 800 பேர் வரை மட்டுமே உடல் உறுப்பு தானம் செய்திருக்கின்றனர்.

ரோலி பிரஜபதி, உடல் உறுப்பு தானம், இந்தியா
படக்குறிப்பு, மருத்துவர் குப்தா

மதம் சார்ந்த சில நம்பிக்கைகளும் பழைமைவாத பழக்கங்களும்தான் பெரும்பாலான இந்திய குடும்பங்களை உடல் உறுப்பு தானம் செய்வதிலிருந்து தடுக்கிறது என்கிறார் மருத்துவர் குப்தா. 

ஆனால் கடந்தாண்டு ஏப்ரலில் நடைபெற்ற ரோலியின் உடல் உறுப்பு தானத்தின் நிகழ்விற்குப் பிறகு டெல்லியின் எய்ம்ஸ் மருத்துவமனையில் அதிகளவிலான உடல் உறுப்புகள் தானங்கள் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. இது இதற்கு முந்தைய ஐந்து ஆண்டுகளில் நடைபெற்ற உடல் உறுப்பு தானங்களின் எண்ணிக்கைகளோடு ஒப்பிட்டு கூறப்படுகிறது.

அதேபோல் கடந்த 2022ஆம் ஆண்டு மட்டும் 846 உடல் உறுப்பு தானங்கள் நடைபெற்றுள்ளன. இதற்கு முந்தைய ஆண்டுகளில் ஒரே ஆண்டில் இத்தனை பெரிய எண்ணிக்கையில் உடல் உறுப்பு தானங்கள் நடைபெற்றது இல்லை என தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பின் தரவுகள் தெரிவிக்கின்றன என்றும் இதுவொரு முக்கியமான திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது என்றும் மருத்துவர் குப்தா குறிப்பிடுகிறார்.

94 வயதிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் ரெக்

`நான் ஒரு நரம்பியல் மருத்துவர். உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் நான் ஒரு சிறு துளியாக மட்டுமே இருப்பதாக உணர்கிறேன். மனிதர்களாகப் பிறந்த நாம் அனைவரும் மாற்றங்களை உருவாக்கப் பிறந்தவர்கள்தான்` என்று கூறுகிறார் 30 ஆண்டுகளுக்கும் முன்னாள் தனது மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முடிவெடுத்த நிக்கோலஸின் தந்தை ரெக். 

தற்போது 94 வயதாகும் ரெக், தனது சொந்த ஊரான லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து ஒவ்வொரு முறை இத்தாலிக்கு பயணம் மேற்கொள்ளும்போதும் தனது மகனின் உறுப்புகளை தானமாகப் பெற்ற மனிதர்களைச் சந்தித்துவிடுகிறார்.

அதேபோல் இவரது விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈர்க்கப்பட்ட பலரும் தற்போது ரெக்குடன் நல்ல நட்புறவில் தொடர்கிறார்கள். அவரை தங்களது முன்னுதாரணமாக எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். தங்களது குடும்ப உறுப்பினர்கள் யாரேனும் மரணித்தால் உடல் உறுப்பு தானம் செய்வது குறித்த முடிவை அவர்கள் முழு மனதாக எடுக்கிறார்கள்.

ரோலி பிரஜபதி, உடல் உறுப்பு தானம், இந்தியா
படக்குறிப்பு, ரெக் கிரீன்

இதுகுறித்து பிபிசியிடம் பேசிய ரெக், `எனக்கு இப்போது 94 வயது ஆனாலும் உடல் உறுப்பு தானம் குறித்து பிராசாரங்களில் ஈடுபடுவதில் நான் ஆர்வமாக இருக்கிறேன்.

எனக்கு தொண்டையில் டான்சில்ஸ் பிரச்னை இருக்கிறது. அதனால் பேசுவதற்கு மிகவும் சிரமபட்டு வருகிறேன். ஆனாலும் நான் பிரசாரம் செய்து பேசுவதால் பலரது உயிர்கள் காக்கப்படுகிறது என்பதை உணரும்போது நான் உத்வேகமடைகிறேன். இந்தப் பணியில் முழுமனதாக ஈடுபட்டு வருகிறேன்` என்று தெரிவித்தார்

உடல் உறுப்பு தானம் குறித்த புள்ளிவிவரங்கள்

பல ஆண்டுகளாக உடல் உறுப்பு தானம் செய்வதில் முன்னனியில் இருக்கும் நாடு ஸ்பெயின்தான். அந்த நாட்டின் மிகப்பெரும் மருத்துவமனைகளில் பணியாற்றும் பெரும்பாலான மருத்துவர்கள் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்வதில் தேர்ந்த பயிற்சி பெற்றிருப்பதே இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது. 

அதேபோல் `உடல் உறுப்பு தானம் செய்வதில் நாட்டின் மக்கள் தொகையும் முக்கியப் பங்கு வகித்து வருகிறது` என்று கூறுகிறார் மாட்ரிட்டில் உள்ள மருத்துவ பல்கலைக்கழகத்தின் மருத்துவர் கிரிகோரிய மேரனான்.

ஆனால் கடந்த இருபது ஆண்டுகளில் முதன்முறையாக, கடந்த 2021ஆம் ஆண்டு உடல் உறுப்பு தானம் செய்வதில் ஸ்பெயினை பின்னுக்குத் தள்ளி அமெரிக்கா முன்னிலையில் உள்ளது.

அமெரிக்காவில் ஒப்பியாய்டு ( opioid epidemic) என்னும் தொற்று நோயால் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு மரணித்ததே இதற்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது. அமெரிக்காவில் அதிகமாகக் காணப்படும் போதை பொருள்களின் பயன்பாடே இந்த் தொற்று நோய்க்குக் காரணமாகக் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

உடல் உறுப்பு தானம்

உடல் உறுப்பு தானம் மற்றும் உறுப்பு மாற்றம் அறுவை சிகிச்சை மேற்கொள்வதில் உலக நாடுகளின் நிலை குறித்து ‘Global observatory on donation and transplantation’ 2021ஆம் ஆண்டு மேற்கொண்ட ஆய்வில் இந்த விவரங்கள் தெரியவந்துள்ளன. 

அந்த ஆய்வின்படி இத்தாலி 9வது இடத்திலும், ஐரோப்பிய நாடுகள் 13வது இடத்திலும் இருக்கின்றன. 

2020ஆம் ஆண்டு பிரிட்டனில் இதுகுறித்து மேற்கொள்ளப்பட்ட சில சட்ட நடவடிக்கைகளால் opt-out எனப்படும் அமைப்புமுறை அமலுக்கு வந்தது. இதன்படி 18வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தானாகவே உறுப்பு தானம் செய்தவர்களின் பட்டியல்களில் சேர்க்கப்படுகின்றனர்.

முன்னதாக இதேபோன்ற opt-out நடைமுறையை 2015ஆம் ஆண்டு வேல்ஸ் அரசாங்கமும் மேற்கொண்டது.

மற்ற நாடுகளோடு ஒப்பிடும்போது இந்தியா உடல் உறுப்பு தானம் செய்வதில் துவக்க நிலையிலேயே இருக்கிறது. அதன் எண்ணிக்கைகள் மிகவும் குறைந்த அளவிலேயே காணப்பட்டு வருவது குறிப்பிடதக்கது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: