You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தென்கொரியா இடாவூன் கூட்ட நெரிசல்: "பாதிக்கப்பட்டோரின் நாடித்துடிப்பை, மூச்சை மீட்டெடுக்க முடியவில்லை"
- எழுதியவர், லாரன்ஸ் பீட்டர்
- பதவி, பிபிசி நியூஸ்
சோலின் புகழ்பெற்ற இடாவூன் நைட்லைஃப் மாவட்டம் மக்கள் கூட்டத்தால் திணறியபோது நெரிசல் காரணமாக மக்களுக்கு மூச்சு திணறல் நேரிட்டது. குறுகிய தெருக்களில் முற்றிலும் குழப்பான சூழலை கொண்ட காட்சிகளை கண்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர்.
தென்கொரியத் தலைநகர் சோலில் சனிக்கிழமை ஏற்பட்ட ஹாலோவீன் திருவிழாக் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 153 ஆக உயர்ந்துள்ளது. இந்த சம்பவத்தில் மேலும் 82 பேர் காயமடைந்துள்ளர்.
உயிரிழந்தோர் எண்ணிக்கை 153 என்பதை அரசாங்கம் கூறியிருக்கிறது.
ரபேல் ரஷீத் என்ற சுயாதீன பத்திரிகையாளர், பிபிசியிடம் கூறுகையில், பெரும்பாலும் இதற்கு முன்பு நான் பார்த்திராத வகையில் ஆயிரக்கணக்கானோர் அங்கே குவி்ந்திருந்தனர். ஒரு நடைபாதையில் நாங்கள் நசுக்கப்பட்டோம்," என்றார்.
ஆயிரக்கணக்கான பதின்மவயதினர், 20களை தொட்ட இளைஞர்கள் ஹாலோவீன் உடைகளில் நெருக்கியடித்து நகர்ந்தனர். தென்கொரியாவில் கொரோனா தொற்று கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இறுதியாக விருந்தில் திளைத்திருக்கும் மகிழ்ச்சியில் அவர்கள் இருந்தனர்.
ஆனால், பேரிடரின் காட்சிகளைக் கொண்ட வீடியோ நிஜவாழ்வின் திகிலை விவரிக்கிறது. சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர், இந்த பேரிடர் ஒரு போர் தொடர்பான திரைப்படத்தைப் போல இருந்ததாக ஒப்பிடுகிறார். இந்த நிகழ்வில் 150-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். 80க்கும் மேற்பட்டோர் காயமுற்றுள்ளனர்.
கூட்டத்தினர் மிகவும் நெருக்கமாக நின்றிருந்ததையும், கூட்டத்தில் சிக்கியவர்கள் மிகவும் சிரமத்துடன் நகர்ந்து கொண்டிருந்ததையும் வீடியோ காட்சிகளில் பார்க்கமுடிந்தது. ஒரு சிலர் மட்டுமே பாதுகாப்பாக நகர்ந்து வெளியே வந்தனர். பாதிக்கப்பட்டவர்களின் இதயத் துடிப்பை மீண்டும் மீட்டெடுக்க, மருத்துவ உதவியாளர்கள் சிபிஆர் மேற்கொள்வதற்கு பார்வையாளர்கள் உதவி செய்தனர். நடைபாதையில் பாதிக்கப்பட்டோரின் உடல்கள் அடங்கிய பைகள் நீண்ட வரிசையில் வைக்கப்பட்டிருந்தன.
தெருவின் செங்குத்தான சாய்வான பாதைதான், ஆபத்தான மரணத்துக்கு இட்டுச்சென்றிருக்கிறது. கூட்டத்தினர் முன்னோக்கி செல்கின்றனர். முன்னால் இருபவர்கள் கீழே விழுந்து பின்னால் இருந்தவர்களால் மிதிக்கப்படுகின்றனர் என்பது தெளிவாகத்தெரிகிறது.
ட்விட்டரில் உள்ள சில வீடியோ காட்சிகளில், இறுக்கமான நெரிசலில் இருந்து மக்களை பிரித்தெடுக்க மீட்புப் பணியாளர்கள் அவர்களை இழுப்பதை காணமுடிகிறது.
"என்னைப் போன்ற சிறிய நபர் சுவாசிக்கக் கூட முடியவில்லை," என ஒரு பெண் பார்வையாளர் சொன்னதாக ஏஎஃப்பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. தெருவின் விளிம்பில் இருந்ததால் தன்னால் உயிர் பிழைக்க முடிந்ததாகவும், கூட்டத்தின் நடுவில் இருந்தவர்கள் பெரும்பாலும் பாதிக்கப்பட்டனர் என்றும் அந்த பெண் கூறியுள்ளார்.
"என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று யாருக்கும் உண்மையில் எதுவும் தெரியவில்லை. சில போலீசார் தங்களின் காவல் வாகனங்களின் மேல் நின்று கொண்டு எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் இந்த இடத்தில் இருந்து செல்லுங்கள் என்று கூட்டத்தினரிடம் தீவிரமாக சொல்ல முயற்சித்துக்கொண்டிருந்தனர்.
ஒய்டிஎன் என்ற உள்ளூர் ஒளிபரப்பாளரிடம் பேசிய சம்பவ இடத்தில் இருந்த மருத்துவர் டாக்டர் லீ பீம்-சுக், பாதிக்கப்பட்ட சிலரின் இதயத்துடிப்பை மீட்டெடுக்க முயற்சி செய்ததாக கூறினார். ஆனால், சம்பவ இடத்தில் உடனடி முயற்சியில் இதயம் தூண்டப்பட்டு உயிர்பிழைத்தவர்களை விடவும். இதயம் மீட்டெடுக்கப்படாமல் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. பார்வையாளர்களில் பலர் இதயத்தை மீட்டெடுக்கும் முயற்சிக்கு உதவ முன் வந்தனர்," என்றார்.
"பாதிக்கப்பட்ட பலரது முகங்கள் வெளிறி இருந்தன. அவர்களின் நாடித்துடிப்பை அல்லது மூச்சை கண்டறிந்து மீட்க முடியவில்லை. அவர்களில் பலருக்கு மூக்கில் இருந்து ரத்தம் வந்திருந்தது," என்றார்.
ராய்டர் செய்தி நிறுவனத்திடம் பேசிய 21 வயதான பார்க் ஜங்-ஹூன், "அங்கிருந்த சூழல் மிகவும் கட்டுபாட்டை மீறி சென்று விட்டது," என்றார்.
மூன் ஜூ-யங் என்ற இன்னொரு 21 வயது நபர், அந்த வழியில் அதிக மக்கள் இருந்தனர். அந்த இடம் மிகவும் கூட்டமாக இருந்தது," என்றார்.
"போலீசார், மீட்பு பணியாளர்கள் மிகவும் கடுமையாக உழைத்தனர். எனினும் முன்னேற்பாடுகளில் கவனக்குறைவு இருந்தது என்று என்னால் கூற முடியும்," என்றார்.
ராய்ட்டர் செய்தி நிறுவனத்திடம் பேசிய இடாவூன் குடியிருப்பு வாசியான 53 வயதாகும் லீ சு-மி, "கோவிட் தலைமுறை என்று அழைக்கப்பட்ட இந்த இளைஞர்கள், இறுதியாக தங்களது முதல் விழாவாக ஹாலோவீனை அவர்கள் கொண்டாடினர்," என்றார்.
"இந்த விழா ஒரு பேரிடராக முடியும் என்று யார் ஒருவராலும் கணிக்க முடியவில்லை."
சனிக்கிழமைநெரிசல் நடந்தவுடன், முதலில் டஜன் கணக்கானோருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகின. பிறகுதான், உயிரிழந்தோர் எண்ணிக்கை கிடுகிடுவென உயரத் தொடங்கியது.
இறந்தவர்களில் பெரும்பாலோர் இளைஞர்கள், 19 பேர் வெளிநாட்டவர். எதனால், இந்த நெரிசல் ஏற்பட்டது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்