You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஜிம்பாப்வே இறந்தவர்களின் மண்டை ஓடுகளைத் தேடுவது ஏன்? அதற்கும் காலனி ஆட்சிக்கும் என்ன தொடர்பு?
- எழுதியவர், டாமியன் ஜேன்
- பதவி, பிபிசி நியூஸ்
காலனிய ஆட்சிகாலத்தின் போது எடுத்து வரப்பட்ட மனித எச்சங்களை திருப்பி அளிப்பது குறித்து ஜிம்பாப்வேவுக்கு ஒத்துழைப்பு நல்குவதாக லண்டனில் உள்ள இயற்கை வரலாறு அருங்காட்சியகம், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் ஆகியவை, தெரிவித்துள்ளன.
ஜிம்பாப்வேவில் இருந்து வந்திருந்த குழுவினரிடம் இரண்டு மையங்களின் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் காலனிய ஆட்சிகாலத்துக்கு எதிராக போராடிய நாயகர்களின் மண்டை ஓடுகளை ஜிம்பாப்வே தேடி வருகிறது. அது பிரிட்டிஷிடம் இருக்கலாம் என்றும் அவர்கள் நம்புகின்றனர்.
ஆனால், அவை இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை
முதலாவது சிமுரெங்கா என்று அழைக்கப்படும் 1890ஆம் ஆண்டின் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சியில் ஈடுபட்ட சில தலைவர்களின் எச்சங்கள், போரின் வெற்றி கோப்பையாக பிரிட்டனால் எடுத்துச் செல்லப்பட்டிருக்கலாம் என ஜிம்பாப்வே அதிகாரிகள் நீண்டகாலமாகவே சந்தேகம் தெரிவித்து வருகின்றனர்.
உயிரிழந்தவர்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவராக எம்புயா நெஹண்டா என்ற பெண் அறியப்படுகிறார். இப்போது தலைநகராக இருக்கும் ஹராரேயில் அவர் தூக்கிலிடப்பட்டார். தேசத்தின் கதாநாயகியாக அவர் உயர்வாக கருதப்படுகிறார்.
இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தின் காப்பகத்தில் ஜிம்பாப்வேயில் இருந்து எடுத்து வரப்பட்டதாக தோற்றமளிக்கும் 11 எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால், அது தொடர்பான ஆவணங்களில் நெஹண்டாவை தொடர்புபடுத்தும் குறிப்புகள் இல்லை. ஜிம்பாப்வேயின் இரண்டாவது நகரமான புலவாயோவில் இருந்து 1893ஆம் ஆண்டில் எடுத்துவரப்பட்ட மூன்று மண்டை ஓடுகளும் 11 எச்சங்களில் உள்ளவையாகும். அதே போல, சுரங்கப்பாதைகள் மற்றும் தொல்பொருள் அகழ்வாராய்ச்சிகளில் கண்டறியப்பட்ட எச்சங்கள் பின்னர் நன்கொடையாக வழங்கப்பட்டன.
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் டக்வொர்த் ஆய்வகம், குறிப்பாக எதையும் கொண்டிருக்கவில்லை. ஜிம்பாப்வேயில் இருந்து கிடைத்த குறைந்த எண்ணிக்கையிலான மனித எச்சங்களைக் கொண்டிருப்பதாக கூறுகிறது. பிபிசிக்கு அது அனுப்பிய அறிக்கையில், இவை ஏதேனும் முதலாவது சிமுரெங்காவில் தொடர்புடையவர்களின் உருவங்களா என்று அடையாளம் காணப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
தேசிய வரலாறு அருங்காட்சியகத்தில் மனிதர்களின் 25,000 எச்சங்கள் உள்ளன. டக்வொர்த் ஆய்வகத்தில் 18000 எச்சங்கள் உள்ளன. உலகில் இது போன்ற மிகப் பெரிய காப்பகங்கள் சில உள்ளன.
தொன்மையான இடங்களில் நடைபெற்ற தொல்லியல் அகழாய்வு உள்ளிட்ட பல்வேறு மூலாதாரங்களில் இருந்து இவை கிடைக்கப்பெற்றிருக்கின்றன. ஆனால்,அவற்றில் பலவற்றின் உண்மையான பூர்வீகம் காலத்தால் மறைக்கப்பட்டது.
காலனிய ஆட்சி காலத்தின்போது கோப்பைகளுக்காவோ அல்லது இப்போது மதிப்பிழந்துவிட்ட அறிவியல் துறையில் ஆராய்ச்சி என்ற பெயரிலோ. போர் பகுதிகளில் சில நேரங்களில் உயிரிழந்தவர்களின் உடலில் இருந்து பாகங்கள் நீக்கப்பட்டன அல்லது சவக்குழிகளில் இருந்து தோண்டி எடுக்கபட்டன.
19ஆம் நூற்றாண்டில் மனிதர்களின் மண்டை ஓட்டின் வடிவம் மனிதர்களின் குணாதியங்களை தீர்மானிப்பதாக இருக்கலாம் என்பதற்கான ஃபிரெனாலஜி என்ற அழைக்கப்பட்ட ஆய்வு முறை பிரிட்டனிலும் ஐரோப்பாவின் பிறபகுதிகளிலும் பிரபலமாக இருந்தது. ஃபிரெனாலஜிக்கல் சமூகங்கள் இந்த முறை முன்னெடுக்கப்படுவதற்கு உதவுவதற்காக மண்டை ஓடுகளை சேகரித்தன. இது ஓரளவிற்கு இன வகைப்பாடு வரை சென்றது.
உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள் இயல்பிலேயே மரபு ரீதியாகத் பின்தங்கியவர்களாக இருந்தனர் என்பதை மண்டை ஓட்டின் வடிவங்கள் சுட்டிக்காட்டின என்று சில ஆராய்ச்சியாளர்கள் தெளிவாக எடுத்துக் கூறினர்.
சில காப்பகங்கள் இப்போது பிரிட்டனில் தொகுப்புகளாக செயலிழந்த ஃபிரெனாலஜிக்கல் சமூகங்களால் திரட்டப்பட்டவையாக அதே போல தனிநபர்களின் தொகுப்புகளாக உள்ளன.
எது எப்படியோ, நாட்டின் போர் கதாநாயகர்களின் மண்டை ஓடுகள் பிரிட்டன் அருங்காட்சிகத்தின் காப்பகங்களில் இருப்பதாக ஜிம்பாப்வே அரசு நம்புகிறது.
அவர்களில் முக்கியமானவர்கள் சார்வே நயாகசிகானா உட்பட ஆன்மீகத் தலைவர்கள், அவர் மரியாதைக்குரிய ம்புயா (பாட்டி) நெஹண்டா என்று அறியப்பட்ட மூதாதையரின் ஆவியான நெஹண்டாவின் ஊடகமாக இருந்தார். இவர், பிரிட்டிஷ் அதிகாரியை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்.
நெஹண்டா பின்னர் தூக்கிலிடப்பட்டார். அவரது உடலில் இருந்து தலை துண்டிக்கப்பட்டது. அதன் பின்னர் என்ன நடந்தது என்று தெரியவில்லை. ஆனால், அது பிரிட்டனின் இயற்கை வரலாறு அருங்காட்சியகத்தில் இருக்கும் என்று அண்மைகாலங்களாக ஜிம்பாப்வே அதிகாரிகள் கூறி வருகின்றனர்.
மரணத்தின்பிடியில், "என்னுடைய எலும்புகள் நிச்சயமாக உயிர்பெற்று எழும்" என்று கூறிய நெஹண்டா, 1960-ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் ரோடீசியா என்றழைக்கப்பட்ட பகுதியை சிறுபான்மை வெள்ளையர்கள் ஆட்சி செய்தபோது அதற்கு எதிராக போரிட்டவர்களில் அதிக அளவுக்கு வலிமையான சின்னமாக மாறினார்.
ஜிம்பாப்வே கடந்த 1980ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்தது
ஹராரே நகரின் மையப்பகுதியில் உள்ள முக்கியமான சாலையில் மூன்று மீட்டர் உயர நெஹண்டா சிலை நிற்கிறது. 2021ஆம் ஆண்டு இந்த சிலையை திறந்தபோது பேசிய குடியரசு தலைவர் எம்மர்சன் மங்காக்வா, இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் இருந்து நெஹண்டாவின் மண்டை ஓடு மற்றும் பிறரின் எச்சங்களை திரும்பப்பெற தொடர்ந்து வலியுறுத்தப்படும் என உறுதி தெரிவித்தார்.
ஜிம்பாப்வேவியர்களை பொறுத்தவரை, உடலில் இருந்து தலையை எடுப்பது, கல்லறைக்கு அப்பால் உள்ள நபரை நீங்கள் உண்மையில் தண்டித்துவிட்டீர்கள் என்று அர்த்தம் என்று 2020 ஆம் ஆண்டில் குழுவின் வருகை திட்டமிடப்பட்டபோது, பிரிட்டன் தூதுக்குழுவை வழிநடத்திய காட்ஃப்ரே மஹாச்சி பிபிசியிடம் கூறினார்.
"தலை பிரிக்கப்பட்டால், அந்த நபரின் ஆன்மா என்றென்றும் நிலைத்திருக்கும், ஒருபோதும் முடிவு பெறாது."
ஜிம்பாப்வே குழு எதைத் தேடி வந்ததோ அது கண்டுபிடிக்கப்படாத நிலையில் இயற்கை வரலாறு அருங்காட்சியகம், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் இரண்டும், கண்டுபிடிக்கப்பட்டதை அந்த நாட்டுக்கு திருப்பி அனுப்ப ஜிம்பாப்வே அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற உள்ளதாக உறுதி தெரிவித்தனர்.
சொந்தநாட்டுக்கு திருப்பி அனுப்பும் கொள்கையின் ஒரு பகுதியாக இந்த ஆண்டின் தொடக்கத்தில், இயற்கை வரலாறு அருங்காட்சியகம், மோரியோரி மற்றும் மாவோரி எனும் பழங்குடி மூதாதையர் எச்சங்களை திருப்பி அனுப்பியது.
அண்மையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தைத் தொடர்ந்து வெளியான பத்திரிகை செய்தியில், பிரிட்டன் சென்ற தனது நாட்டின் குழு ஜிம்பாப்வே வம்சாவளியைச் சேர்ந்த மனித எச்சங்கள் பிரிட்டனில் உள்ளன என திருப்தி தெரிவித்ததாக கூறப்பட்டிருக்கிறது.
"அரசானது, நமது மூதாதையர்களின் எச்சங்களை திரும்பப் பெறுவதை உறுதி செய்வதில் அரசு எந்த முயற்சியையும் கைவிடாது," என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
தவிர ஜிம்பாப்வே குழு, பிரிட்டிஷ் அருங்காட்சியகம், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் பிட் நதிகள் அருங்காட்சியகம், மான்செஸ்டர் பல்கலைக்கழக அருங்காட்சியகம் மற்றும் பிரிட்டனின் தேசிய காப்பகங்களுடனும் பேசியது. அப்போது என்ன விவாதிக்கப்பட்டது என்ற விவரங்கள் வெளியாகவில்லை.
ஜிம்பாப்வேயின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நெஹண்டா மற்றும் பிறரின் எச்சங்களை பெற பிரிட்டன் சென்ற இந்த பயணம் போதுமான வெற்றி பெறவில்லை எனினும். இதற்கான தேடல் தொடரும் என்பதே இதன் பொருள்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்