You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தைமூர் லங்கின் படையினர் துண்டிக்கப்பட்ட தலைகளைக் கொண்டு டெல்லியில் ஒரு கோபுரம் அமைத்த வரலாறு
- எழுதியவர், ரெஹான் ஃபசல்
- பதவி, பிபிசி செய்தியாளர்
(உலக நாடுகளில் பதிவான பழங்காலச் சுவடுகள், முக்கிய சம்பவங்கள் மற்றும் வரலாற்றில் அதிகம் அறியப்படாத நபர்கள் பற்றிய தகவல்களை 'வரலாற்றுப் பதிவுகள்' என்கிற பெயரில் ஞாயிறுதோறும் வெளியிட்டு வருகிறது பிபிசி தமிழ். அந்த வரிசையில் 59ஆவது கட்டுரை இது.)
டெல்லியை கைப்பற்றுவதற்காக, தைமூர் லங்கின் 90,000 வீரர்கள் சமர்கண்டில் அணிதிரண்டபோது, ஒரே இடத்தில் இத்தனை பேர் திரண்டதால் நகரம் முழுவதும் புழுதி பரவியது. சமர்கண்டின் தென்கிழக்கே சுமார் 1,000 மைல் தொலைவில் டெல்லி இருந்தது.
டெல்லியை அடையும் பாதை உலகின் மிகவும் கடினமான பாதையாக இருந்தது. இந்துகுஷ் மலைகளின் மீது ஏறி இறங்கி இந்தப்பாதை சென்றது. மகா அலெக்சாண்டர்கூட வீழ்த்த முடியாத மக்கள் அந்தப்பகுதியில் வாழ்ந்துவந்தனர்.
வழியில் பல ஆறுகள், பாறைகள் நிறைந்த சாலைகள் மற்றும் பாலைவனங்கள் இருந்தன. அவை டெல்லியை அடைவதற்கான வழியை மிகவும் அணுக முடியாததாக ஆக்கின. அவற்றை தாண்ட முடிந்தாலும்கூட தைமூரின் படை இதுவரை தாங்கள் கண்டிராத வலிமைமிக்க யானைகளை எதிர்கொண்டாக வேண்டும். இந்த யானைகள் வீடுகளையும் மரங்களையும் வேரோடு சாய்ப்பது மட்டுமின்றி எதிரே உள்ளவர்களை சுழற்றியடித்து மிதித்துக் கொண்டே செல்லும் கதைகளை அவர்கள் கேள்விப்பட்டிருந்தனர். அவற்றின் தும்பிக்கை மிக வலுவானதாக இருந்தது. எந்தப் படைவீரனையும் துதிக்கையால் வளைத்து கீழே தூக்கி எறிந்து தன் கால்களால் நசுக்கிவிடும்.
தைமூரை அழைத்த டெல்லியின் அமைதியின்மை
அப்போது டெல்லியின் நிலையும் சரியாக இருக்கவில்லை. 1338 ஆம் ஆண்டு ஃபெரோஸ் ஷா துக்ளக்கின் மரணத்திற்குப் பிறகு இந்தியா, வங்காளம், காஷ்மீர் மற்றும் தக்காணம் என பிரிந்துகிடந்தது.
பிரபல வரலாற்றாசிரியர் சர் ஜார்ஜ் டன்பர் தனது 'தி ஹிஸ்டரி ஆஃப் இந்தியா' புத்தகத்தில், "ஃபெரோஸ் இறந்த பத்து ஆண்டுகளுக்குள் டெல்லியை அவரது பேரன்கள் மற்றும் அவருடைய இளைய மகன் என்று ஒன்றன் பின் ஒன்றாக ஐந்து மன்னர்கள் ஆண்டனர். எந்த ஒரு வெளி ஆக்கிரமிப்பாளருக்கும் அழைப்பு கொடுக்கும்விதமாக டெல்லியின் உள் விவகாரம் இருந்தது," என்று எழுதியுள்ளார்.
சமர்கண்டிலிருந்து கிளம்பிய உடனேயே தைமூருக்கு மிகப் பெரிய சவால் ஏற்பட்டது. 90,000 வீரர்களையும், இரு மடங்கு குதிரைகளையும் இந்துகுகுஷ் மலைகளை தாண்டி எப்படி அழைத்துச்செல்வது என்பதே அது.
ஜஸ்டின் மரோஃஸி தனது ' Tamerlane, Sword of Islam, Conqueror of the world,' என்ற புத்தகத்தில், "தைமூரின் படை மாறுபட்ட வானிலை கொண்ட பல்வேறு பகுதிகளை கடக்க வேண்டியிருந்தது. தைமூரை விட குறைவான தலைமைப் பண்பு கொண்ட எந்தவொரு நபரையும் அழிக்க இது போதுமானதாக இருந்தது,"என்று எழுதுகிறார்.
"சமர்கண்டிற்கும் டெல்லிக்கும் இடையே பனி படர்ந்த மலைகள், சுட்டெரிக்கும் பாலைவனங்கள் மற்றும் தரிசு நிலங்கள் நிறைந்த பரந்த நிலப்பரப்பு இருந்தது. அங்கு வீரர்கள் சாப்பிடுவதற்கு ஒரு பிடி தானியத்தை கூட விளைவிக்க முடியாது."
"தைமூரின் வீரர்களுக்குத்தேவையான பொருட்கள், சுமார் 1.5 லட்சம் குதிரைகளின் முதுகில் கொண்டு செல்லப்பட்டன. இது நடந்து 600 ஆண்டுகளுக்குப் பிறகும், இந்த பகுதி வழியாக செல்லும் டாக்சி ஓட்டுநர்கள் பனிபடர்ந்த இந்தப்பாதையின் மோசமான நிலை பற்றி புகார் செய்யாமல் இருப்பதில்லை."
லோனிக்கு அருகில் முகாம் அமைத்த தைமூர்
தைமூரின் வீரர்கள் பல பெரிய போர்களில் பங்கேற்றவர்கள்தான். ஆனால் இந்த சூழல் பற்றிய முன் அனுபவம் அவர்களுக்கு இல்லை. சாலை மிகவும் ஆபத்தானதாக இருந்தது. பல குதிரைகள் வழுக்கி விழுந்து மாண்டன. பல போர்களில் வெற்றி பெற்றுள்ள தைமூர், குதிரையின் முதுகில் இருந்து இறங்கி சாதாரண சிப்பாய் போல் நடக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டது.
இதைப்பார்த்த அவருடைய வீரர்களும் நடக்கத் தொடங்கினர். ஆகஸ்ட் மாதத்திற்குள், தைமூரின் படை காபூலை அடைந்தது. தைமூர் அக்டோபரில் சட்லெஜ் ஆற்றை அடைந்தார். அங்கு சாரங் கான் அவரது வழியை மறித்தார். ஆனால் தைமூர் அவரை வென்றார்.
தைமூர் டெல்லியை அடைவதற்கு முன்பு வழியில் சுமார் ஒரு லட்சம் இந்துக்களை சிறைபிடித்தார். டெல்லிக்கு அருகே லோனியில் தனது முகாமை அமைத்து, யமுனை ஆற்றின் அருகே ஒரு குன்று மீது நின்று நிலைமையை ஆய்வு செய்தார்.
அதற்குள் பரஸ்பர சண்டையால் டெல்லியின் பலம் வெகுவாகக் குறைந்திருந்தது. ஆயினும் அதன் எல்லைச் சுவருக்குள் தைமூரின் படையை எதிர்கொள்ள பத்தாயிரம் குதிரை வீரர்கள், 25 முதல் 40 ஆயிரம் வீரர்கள் மற்றும் 120 யானைகள் தயாராக இருந்தன.
"700 வீரர்கள் கொண்ட தைமூரின் முன்னரங்கப் படையை மல்லு கானின் படைகள் தாக்கியபோது தைமூருக்கும் டெல்லி வீரர்களுக்கும் இடையே முதல் மோதல் ஏற்பட்டது. அந்த நேரத்தில் டெல்லி, சுல்தான் முகமது ஷாவால் ஆளப்பட்டது. ஆனால் உண்மையான நிர்வாகம் மல்லு கானின் கட்டுபாட்டின் கீழ் இருந்தது," என்று ஜஸ்டின் மரோஃஸி எழுதுகிறார்.
ஒரு லட்சம் கைதிகளைக் கொல்ல உத்தரவு
மல்லு கானின் வீரர்கள் தன்னைத் தாக்கினால், உடன் வரும் ஒரு லட்சம் இந்து கைதிகள் மல்லு கானை ஊக்குவித்து அவருக்கு ஆதரவாக செயல்படுவார்கள் என்று தைமூர் அஞ்சினார்.
" தனது படைக்குப்பின்னால் வந்துகொண்டிருந்த கைதிகள் கிளர்ச்சி செய்யக்கூடும் என்ற பயத்தில் தைமூர், அந்தக்கைதிகளை அதே இடத்தில் கொல்லுமாறு உத்தரவிட்டார். இந்த கைதிகளை தங்கள் கைகளால் கொல்லுமாறு தன்னுடன் வந்த மத குருமார்களுக்கும் தைமூர் உத்தரவு பிறப்பித்தார்," என்று ஜஸ்டின் மரோஃஸி எழுதுகிறார்.
"மனிதகுல வரலாற்றில் இதுபோன்ற கொடுமைக்கு வேறு எந்த உதாரணமும் இல்லை" என்று சர் டேவிட் பிரைஸ், 'Memoirs of the principal events of Mohammadan history,' என்ற தனது புத்தகத்தில் எழுதியுள்ளார்.
அந்த நேரத்தில் மற்றொரு கவலையும் தைமூரை ஆட்டிப்படைத்தது. அவர் தனது சுயசரிதையான 'முல்ஃபிசத் திமூரி'யில் ,"என் மிகப்பெரிய கவலை வலிமைமிக்க இந்திய யானைகள். சமர்கண்டில் அவற்றைப் பற்றிய கதைகளை நாங்கள் கேள்விப்பட்டுள்ளோம். முதல் மோதலில் அவற்றின் திறனை நாங்கள் பார்த்தோம். அவற்றுக்கு நாலாபக்கமும் இரும்பு கவசம் அணிவிக்கப்பட்டிருந்தது. யானைகளின் மேல் தீப்பந்தங்களை வீசுபவர்கள், வில்லாளர்கள் மற்றும் யானை பாகன் அமர்ந்திருப்பார்கள். யானையின் தந்தங்களில் விஷம் தடவப்பட்டிருப்பதாக வதந்தி பரவியது. யானைகள் தனது தந்தங்களை எதிராளியின் வயிற்றுக்குள் குத்தின. அவற்றின் மீது அம்புகள் மற்றும் ஈட்டிகள் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை," என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய தைமூரின் வீரர்கள்
இந்திய யானைகளை சமாளிக்க ஒரு துல்லியமான திட்டம் தேவையாக இருந்தது. தங்களுக்கு முன்னால் ஒரு ஆழமான குழி தோண்ட தைமூர் தனது வீரர்களுக்கு உத்தரவிட்டார். அந்தக் குழிகளுக்கு முன்னால் எருதுகளின் கழுத்து மற்றும் கால்களில் தோல் பட்டைகள் கட்டி நிற்க வைத்தனர். பின்னர் ஒட்டகங்களின் முதுகில் மரத்தையும், காய்ந்த புல்லையும் ஏற்றி அவற்றையும் ஒன்றாகக் கட்டினர். யானை பாகர்களை முதலில் குறிவைத்து தாக்குமாறு, வில் வீரர்களுக்கு உத்தரவிடப்பட்டது.
1398 டிசம்பர் 17 ஆம் தேதி, மல்லு கான் மற்றும் சுல்தான் மெஹ்மூதின் படை, தைமூரின் படையுடன் போரிட டெல்லி வாயிலுக்கு வெளியே வந்தது. அவர்கள் யானைகளை நடுவில் வைத்தனர். ஆயுதம் ஏந்திய வீரர்கள் அவற்றின் மீது அமர்ந்திருந்தனர். தைமூர் ஒரு உயரமான மேட்டின் மீது நின்றுகொண்டிருந்ததால் சண்டையின் முழு காட்சியையும் அவரால் பார்க்க முடிந்தது. போர் தொடங்குவதற்கு சற்று முன்பு, தைமூர் குதிரையிலிருந்து இறங்கி தரையில் விழுந்து வணங்கி வெற்றிக்காக தொழுகை செய்தார். போர் தொடங்கியவுடன், தைமூரின் வில்லாளர்கள் மல்லு கானின் படையின் வலது பக்கத்தை குறிவைத்தனர்.
இதற்கு பதிலடியாக மல்லு கான், தைமூரின் வலது புறத்தில் உள்ள வீரர்கள் மீது தனது இடது புறம் உள்ள வீரர்கள் மூலம் தாக்கத்தொடங்கினார். ஆனால் தைமூரின் வீரர்கள் மல்லு கானின் படையில் ஓரங்களில் இருந்த வீரர்களைத் தாக்கி அழிக்கத் தொடங்கினர்.
ஒட்டகங்களின் முதுகில் வைக்கப்பட்டிருந்த காய்ந்த புல்லுக்கு தீ
யானைகளால் தனது வீரர்களிடையே சிறிது சலசலப்பு ஏற்பட்டிருப்பதை தைமூர் கண்டார். அதற்கு அவர் ஏற்கனவே திட்டமிட்டிருந்தார். இப்போது அதை செயல்படுத்த வேண்டிய நேரம் வந்தது. காய்ந்த புல்லையும் மரக்கட்டைகளையும் சுமந்து நின்ற ஒட்டகங்களை முன்பக்கம் கொண்டுசெல்லுமாறு தைமூர் தனது வீரர்களை கேட்டுக் கொண்டார். யானைகள் எதிரே வந்தவுடன் ஒட்டகங்களின் முதுகில் வைத்திருந்த காய்ந்தபுல் மற்றும் மரங்களுக்கு தீவைக்கப்பட்டது.
"திடீரென முதுகில் எரியும் நெருப்புடன் யானைகளின் முன்னால் ஒட்டகங்கள் வந்தன. யானைகள் பயந்து தனது வீரர்களை நோக்கித் திரும்பி, அவர்களை நசுக்கத் தொடங்கின. இதன் காரணமாக மல்லு கானின் வீரர்களுக்கு இடையே குழப்பம் ஏற்பட்டது," என்று ஜஸ்டின் மரோஃஸி எழுதுகிறார்.
" மரங்களில் இருந்து உதிரும் தேங்காய்கள் போல் இந்திய வீரர்களின் தலைகள் போர்க்களத்தில் குவியத்தொடங்கின," என்று வரலாற்றாசிரியர் குவான் தாமிர்,' ஹபீப்- அல்-சியார்' என்ற தனது புத்தகத்தில் எழுதியுள்ளார்.
"வலது முனையிலிருந்து தைமூரின் படைதளபதி பீர் முகமது வீரர்களை துரத்திச்சென்று டெல்லிலியின் சுவர்களுக்குள் அவர்களை அழித்தார். இதற்கிடையில், தைமூரின் 15 வயது பேரன் கலீல் ஒரு யானையை அதன் மீது அமர்ந்திருந்த வீரர்களுடன் பிடித்து தனது தாத்தாவின் முன்னால் நிறுத்தினான்."
தைமூரின் கை, கால்களில் காயம் ஏற்பட்டது
குர்ரா கானுக்கு போரின் தலைமை பொறுப்பை வழங்கிய தைமூர், தானும் போரில் குதித்தார். "நான் ஒரு கையில் வாளையும் மறு கையில் கோடரியையும் எடுத்துக்கொண்டேன். இடது மற்றும் வலதுபுறத்தில் வாள் மற்றும் கோடரியை சுழற்றியவாறு நான் நடந்து கொண்டிருந்தேன். இரண்டு முறை நான் யானைகளின் தும்பிக்கையை வெட்டி சாய்த்தேன். நான் தும்பிக்கையை வெட்டிய யானைகள் காலை மடித்து தரையில் சாய்ந்தன. அம்பாரியில் அமர்ந்திருந்த வீரர்கள் கீழே விழுந்தனர். அப்போது நகரத்திலிருந்து வெளியே வந்த பெரிய மீசை வைத்திருந்த இந்திய வீரர்கள் என் வழியைத் தடுக்க முயன்றனர்," என்று தைமூர் தனது சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார்.
"எனது இரண்டு கைகளால் மிக வேகமாக நான் சண்டையிட்டேன். எனது பலத்தையும் வேகத்தையும் கண்டு நானே ஆச்சரியப்பட்டேன். பெரிய மீசையுடன் கூடிய வீரர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். நாங்கள் மெதுவாக நகர வாயிலை நெருங்கிக்கொண்டிருந்தோம்."
இதற்கிடையில் தைமூர் மீண்டும் குதிரையில் ஏறிக்கொண்டார். ஒரு காலியான இடத்தை அடைந்தபோது குதிரையின் கடிவாளம் அவரது கையிலிருந்து நழுவி கீழே விழுந்தார்.
"நான் திடுக்கிட்டு தீப்பந்த வெளிச்சத்தில் என் கையை பார்த்தேன். என் சொந்த ரத்தத்தால் என் கை நனைந்திருந்தது. என் உடைகள் ரத்தத்தில் நனைந்திருந்தன. ரத்த ஆற்றில் இருந்து வெளியே வந்ததைப்போல உணர்ந்தேன். நான் என் உடலைக் கூர்ந்து கவனித்தபோது, எனது இரண்டு மணிக்கட்டுகளிலும் காயம் இருப்பதையும், எனது இரண்டு கால்களில் ஐந்து காயங்கள் இருப்பதையும் கண்டேன்,"என்று தைமூர் தனது சுயசரிதையில் எழுதியுள்ளார்.
மண்டியிட்ட யானைகள்
ஆனால் அதற்குள் தைமூரின் வீரர்கள் டெல்லிக்குள் நுழைந்துவிட்டனர். மறு நாள், தைமூர் ஒரு வெற்றியாளராக டெல்லிக்குள் நுழைந்தார். டெல்லியின் சுவர்களுக்குள் கூடாரம் அமைத்து அவசர அவசரமாக தைமூரின் அரசவை கூட்டப்பட்டது. சுல்தான் மெஹ்மூத்தின் அரசவையை சேர்ந்தவர்களும், டெல்லியின் உயரடுக்கு மக்களும் அவரிடம் அழைத்துச் செல்லப்பட்டனர். டெல்லியின் முழுக் கட்டுப்பாடும் தைமூர் லங்கிடம் வந்துவிட்டதன் அடையாளமாக இது இருந்தது.
படையெடுப்பாளரின் தயவில் தங்கள் மக்களை விட்டுவிட்டு, டெல்லி சுல்தான் மெஹ்மூத் மற்றும் மல்லு கான் ஆகியோர் போர்களத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டனர். "மீதமுள்ள சுமார் 100 யானைகள் ஒவ்வொன்றாக தைமூரின் முன்னால் கொண்டு வரப்பட்டன. அவை மண்டியிட்டு தும்பிக்கையை உயர்த்தி டெல்லியின் புதிய ஆட்சியாளரான தைமூருக்கு வணக்கம் செலுத்தின. தப்ரீஃஸ், ஷிராஸ், அர்ஜின்ஜான் மற்றும் ஷிர்வானின் இளவரசர்களுக்கு அவற்றை பரிசளிக்க தைமூர் முடிவு செய்தார். யானைகளுடன் தூதர்களையும் அனுப்பி, டெல்லியை தைமூர் கைப்பற்றிவிட்டதாக ஆசியா முழுவதும் செய்தியை பரப்பினார்." என்று ஜஸ்டின் மரோஃஸி எழுதுகிறார்.
டெல்லியில் தைமூரின் வீரர்கள் நிகழ்த்திய படுகொலைகள்
போர் முடிந்தபிறகு தைமூர், டெல்லியை எதற்காக தாக்கினாரோ அந்த விஷயத்தில் கவனம் செலுத்தினார். டெல்லியின் கருவூலம் எவ்வளவு பெரியது, இங்கிருந்து எதை எடுத்துச் செல்ல முடியும் என்று திட்டமிடத் தொடங்கினார். அவருடைய வீரர்கள் வீடு வீடாகச் சென்று எவ்வளவு காணிக்கை கொடுக்க வேண்டும் என்று சொல்ல ஆரம்பித்தார்கள்.
சில வீரர்கள் தங்கள் தோழர்களுக்காக நகரத்தில் தானியங்களைக் கொள்ளையடிக்கத் தொடங்கினர். அந்த நேரத்தில் தைமூர் லங்கின் 15,000 வீரர்கள் டெல்லி நகர எல்லைக்குள் வந்தடைந்ததாக ஷராபுதீன் அலி யாஸ்டி கருதுகிறார். அப்போது தைமூரின் வீரர்களுக்கும் டெல்லி மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
முகமது காசிம் ஃபெரிஷ்டா தனது ' ஹிஸ்டரி ஆஃப் தி ரைஸ் ஆஃப் மொஹமடன் பவர் இன் இண்டியா' என்ற புத்தகத்தில் " தங்கள் வீட்டுப்பெண்கள் இழிவுபடுத்தப்படுவதையும், சொத்துக்கள் சூறையாடப்படுவதையும் இந்துக்கள் கண்டனர். அவர்கள் தங்கள் வீட்டின் கதவுகளை மூடிக்கொண்டு, வீட்டிற்கு தீவைத்துக்கொண்டனர். இது மட்டுமல்ல. தங்கள் மனைவி மக்களைக்கொன்றுவிட்டு தைமூரின் வீரர்களை எதிர்த்தனர். டெல்லியின் தெருக்களில் சடலங்கள் குவிக்கப்பட்டன. தைமூரின் முழுப் படையும் டெல்லிக்குள் வந்தது. சிறிது நேரத்தில் டெல்லி மக்கள் ஆயுதங்களை கைவிட்டனர்," என்று எழுதியுள்ளார்.
டெல்லியின் படுகொலைகள்
மங்கோலியர்கள் டெல்லிவாசிகளை பழைய டெல்லிக்கு விரட்டியடித்தனர். அங்கு அவர்கள் ஒரு மசூதி வளாகத்தில் தஞ்சம் புகுந்தனர். "தைமூரின் 500 வீரர்களும் இரண்டு பிரபுக்களும் மசூதியைத் தாக்கி, அங்கு தஞ்சம் புகுந்த ஒவ்வொருவரையும் கொன்றனர். துண்டிக்கப்பட்ட தலைகளையும் துண்டிக்கப்பட்ட உடல்களையும் கொண்டு ஒரு கோபுரத்தை உருவாக்கினர். கழுகுகளுக்கும் காகங்களுக்கும் உணவாக அதை விட்டுச் சென்றனர். இந்தப் படுகொலைகள் மூன்று நாட்கள் தொடர்ந்தன," என்று ஜஸ்டின் மரோஃஸி குறிப்பிட்டுள்ளார்.
கியாத் ஆதின் அலி, தனது 'டைரி ஆஃப் தைமூர்ஸ் கேம்பெயின் இன் இந்தியா' என்ற புத்தகத்தில், அக்கால நிகழ்வுகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார். "ஆட்டுக் கூட்டத்தைத் தாக்கும் பசியுள்ள ஓநாய்களின் கூட்டம் போல, டெல்லிவாசிகளை தைமூரின் வீரர்கள் தாக்கினர்," என்று அவர் எழுதுகிறார். இதன் விளைவாக, செல்வம், நகைகள் மற்றும் வாசனை திரவியங்களுக்கு பெயர் பெற்ற டெல்லி, எரியும் நரகமாக மாறியது. அதன் ஒவ்வொரு மூலையிலிருந்தும் அழுகிய பிணங்களின் வாடை வீசியது.
முகாமில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த தைமூர் லங்கிற்கு டெல்லியில் நடக்கும் படுகொலைகள் பற்றி எதுவும் தெரியாது. தைமூரின் தளபதிகள் டெல்லி மக்களை ஒடுக்கி அவர்களைக் கட்டுப்படுத்த முயன்றனர். ஆனால் இதைப் பற்றி தைமூருக்கு தெரிவிக்க வீரர்களுக்கு தைரியம் வரவில்லை. தைமூருக்கு இந்த படுகொலைகள் பற்றித்தெரியாது என்று சில வரலாற்றாசிரியர்கள் கூறுகிறார்கள். ஆனால் தைமூரின் படை கட்டுப்பாட்டுக்குப் பெயர் பெற்றது. மேலிடத்தின் உத்தரவு இல்லாமல் இது போன்ற கொள்ளை மற்றும் படுகொலைகள் நடந்திருக்க வாய்ப்பில்லை.
தைமூர் ஆட்சியில் ஆர்வம் காட்டவில்லை
கொள்ளையடிக்க தைமூரின் உத்தரவு இருந்ததோ இல்லையோ, தைமூரின் வீரர்கள் டெல்லியின் செழிப்பைக் கண்டு திகைத்தனர். நாலாபுறமும் தங்கம், வெள்ளி, நகைகள், முத்துக்கள், விலையுயர்ந்த ரத்தினக் கற்கள், நாணயங்கள் மற்றும் விலையுயர்ந்த ஆடைகள் இருந்தன என்று யாஸ்டி கூறுகிறார். எல்லாவற்றிற்கும் மேலாக தைமூரின் வீரர்கள், டெல்லியின் சாமானிய குடிமக்களை தங்கள் விருப்பப்படி வேலை செய்ய வைத்தனர். தைமூரின் வீரர்கள் டெல்லியிலிருந்து திரும்பிச் செல்லும்போது, ஒவ்வொரு சிப்பாயின் பின்னாலும் சராசரியாக 150 சாதாரண குடிமக்கள் நடந்து கொண்டிருந்தனர்.
தைமூர் இரண்டு வாரங்கள் மட்டுமே டெல்லியில் தங்கியிருந்தார். இதற்கிடையில் அவர் உள்ளூர் இளவரசர்களின் சரணடைதலையும் காணிக்கையையும் ஏற்றுக்கொண்டார். டெல்லியின் பல கைவினைக் கலைஞர்களை கையில் விலங்கு பூட்டி சமர்கண்டிற்கு அழைத்துச் சென்றார். புறப்படுவதற்கு முன் தைமூர் லங், கிஸ்ரு கானை, இன்றைய பஞ்சாப் மற்றும் வட சிந்தின் ஆளுநராக நியமித்தார். அவர் வேண்டுமென்றே டெல்லியில் எந்த ஆட்சியாளரையும் நியமிக்கவில்லை. அங்கு ஆட்சியமைக்க எஞ்சியிருந்த இளவரசர்களுக்கிடையில் பல ஆண்டுகள் போராட்டம் நீடித்தது.
சிறிது காலம் கழித்து மல்லு கான் மற்றும் சுல்தான் ஷா திரும்பி வந்து இந்த இழுபறி போராட்டத்தில் பங்கு கொண்டனர். தைமூருக்கு எப்போதுமே ஆட்சியில் ஆர்வம் இல்லை. ராஜ்ஜியங்களை வெற்றிகொள்வதில் மட்டுமே அவர் ஆர்வமாக இருந்தார். இதற்காக அவர் பல வரலாற்றாசிரியர்களால் விமர்சிக்கப்பட்டார்.
டெல்லியில் கொள்ளையடித்த பொக்கிஷத்துடன் தைமூரின் படை தங்கள் நாட்டிற்குத் திரும்பத் தொடங்கியது. ஒரு நாளைக்கு நான்கு மைல்கள் வரை மட்டுமே பயணிக்கக்கூடிய அளவுக்கு அவர்கள் பொருட்களை வைத்திருந்தனர். திரும்பிச் செல்லும்போது கூட தைமூர் வழியில் சுமார் 20 சிறிய போர்களில் ஈடுபட்டார். வாய்ப்புக் கிடைத்த இடமெல்லாம் மேலும் கொள்ளையடிக்கப்பட்டது.
தாக்குதலின் விளைவுகளில் இருந்து மீள டெல்லிக்கு 100 ஆண்டுகள் ஆனது
தைமூர் காஷ்மீரை அடைந்தபோது அவரது கையில் ஒரு கொப்புளம் தோன்றியது. அவர் காபூலைக் கடந்தபோது, அவரது கைகள் மற்றும் கால்களில் கொப்புளங்கள் வந்தன. குதிரையின் முதுகில் உட்காரக்கூட முடியாத அளவுக்கு அவரது உடல் நிலை மோசமானது.
அவர் ஒரு குதிரை குட்டியின் முதுகில் அமர்ந்து இந்துகுஷ் மலைகளில் பயணம் செய்தார். ஓர் ஆற்றை 48 முறை கடக்க வேண்டிய அளவுக்கு சுற்றி வளைந்த பாதையில் செல்லவேண்டியிருந்தது.
சமர்கண்டிற்குள் நுழைவதற்கு முன் தைமூர் தனது தந்தையின் கல்லறையில் தலை வணங்கினார். மறுபுறம், சமர்கண்டில் இருந்து 1000 மைல் தொலைவில் இருந்த டெல்லி சிதிலமடைந்த நகரமாக மாறியது.
பல தலைமுறை இந்திய சுல்தான்கள் குவித்த அளவிட முடியாத செல்வம் சில நாட்களிலேயே கைவிட்டுப்போனது. இதுமட்டுமின்றி சுல்தானகத்தின் தானிய இருப்புகளும், விளைந்த பயிர்களும் நாசமாயின. டெல்லி முற்றிலுமாக அழியும் நிலைக்கு வந்தது. அங்கு உயிர் பிழைத்த மக்கள் பட்டினியால் சாக ஆரம்பித்தனர். இந்த நிலையில் இருந்து மீண்டு வர டெல்லிக்கு 100 ஆண்டுகள் ஆனது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்