You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
லிஸ் டிரஸ்: ரிஷி சூனக், போரிஸ் ஜான்சன் - அடுத்த பிரிட்டன் பிரதமர் யார்?
பிரிட்டனின் பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக நேற்று அறிவித்தார் லிஸ் டிரஸ். இதன் பொருள் கன்சர்வேட்டிவ் கட்சிக்கான அடுத்த தலைவரையும் பிரதமரையும் மீண்டும் தேர்ந்தெடுக்க வேண்டும்.
இந்த தேர்வுக்கான போட்டி அடுத்த வாரத்தின் முடிவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு போட்டியிட கன்செர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறைந்தது 100 பேர் அவர்களின் பெயரை பரிந்துரை செய்ய வேண்டும்.
கன்சர்வேட்டிவ் கட்சியில் மொத்தம் 357 எம்பிக்களே உள்ளனர். எனவே மூன்று பேர் மட்டுமே போட்டியிட முடியும்.
போட்டியிடப் போவது யார் என்பது இதுவரை தெரியவில்லை. ஆனால் அடுத்த பிரதமர் யார் என்ற பட்டியலில் சிலரின் பெயர்கள் இடம்பிடித்துள்ளன.
ரிஷி சூனக்
முன்னதாக போரிஸ் ஜான்சன் பிரதமர் பதவியிலிருந்து விலகியபோது ரிஷி சூனக்கின் பெயர் பெரிதும் பேசப்பட்டது. அவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்பதால் இந்தியாவிலும் அது குறித்து விவாதிக்கப்பட்டது. கடந்த பிரதமர் போட்டியில் இறுதிச் சுற்று வரை வந்திருந்தாலும் அதில் வெல்ல முடியவில்லை. அதிக உறுப்பினர்களின் ஆதரவை பெற்று லிஸ் டிரஸ் பிரதமராக தேர்வானார்.
தனது தேர்தல் பிரசாரத்தின்போது தனது போட்டியாளரின் வரித் திட்டங்கள் பொருளாதாரத்தை குலைத்துவிடும் என எச்சரித்தார். ஆனால் இது கட்சி உறுப்பினர்கள் மத்தியில் எடுபடவில்லை. 21 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார்.
ரிச் மோண்டில் உள்ள நார்த் யோஷைர் தொகுதியின் எம்பியாக 2015ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார் ரிஷி சூனக்.
வெஸ்ட் மினிஸ்டருக்கு வெளியே ஒருசில பேர் அவர் குறித்து கேள்விப்பட்டிருந்தனர். ஆனால் 2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நிதி அமைச்சரானார் ரிஷி சூனக்.
பதவியேற்றதும் கொரோனா சிக்கல் தொடங்கியது. ஆனால் லாக் டவுனின் போது நாட்டின் பொருளாதாரத்தை உயிர்ப்புடன் வைக்க அதிக அளவிலான பணத்தை செலவிட வேண்டியிருந்தது.
இது குறைந்த வரி மற்றும் செலவு என்ற கொள்கையை கொண்ட ரிஷி சூனக்கிற்கு கடினமாக இருந்தாலும் அவருக்கு புகழையும் தேடி தந்தது.
இருப்பினும் ரிஷி சூனக்கின் மனைவி வரி விவகாரத்தில் சிக்கிய பின்பு அவரின் புகழ் வெகுவாக குறைந்தது. அதேபோல லாக்டவுன் சமயத்தில் விதிகளை மீறியதகற்கான அபராதமும் ரிஷி சூனக்கிற்கு விதிக்கப்பட்டது.
பென்னி மார்டண்ட்
இந்த வார தொடக்கத்தில் லிஸ் டிரஸிற்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் கேள்விகளை எதிர்கொண்டார் பென்னி மார்டண்ட். அப்போது அவரின் மன உறுதிக்காக பாராட்டுகளை பெற்றார்.
போரிஸ் ஜான்சன் பதவி விலகியபோது. இவர் போட்டியிட்டார், எம்பிக்களின் வலுவான ஆதரவையும் பெற்றார் ஆனால் இறுதிச் சுற்றுக்கு அவர் முன்னேற முடியவில்லை.
பிரிட்டன் நாடாளுமன்ற கீழவையின் தலைவராகவும் பென்னி மார்டண்ட் நியமிக்கப்பட்டார். மேலும் பிரிட்டனின் ஆலோசனை குழுவின் தலைவராகவும் உள்ளார். அதுமட்டுமல்லாமல் புதிய அரசரின் பதியேற்பை கவனித்து கொள்ளும் குழுவின் தலைவராகவும் இருந்தார் பென்னி மார்டண்ட்.
2019ஆம் ஆண்டு பென்னி பிரிட்டனின் முதல் பாதுகாப்பு செயலராக நியமிக்கப்பட்டார்.
போரிஸ் ஜான்சன்
சில தினங்களுக்கு முன்பு பிரிட்டன் பிரதமர் பதவியிலிருந்து விலகிய போரிஸ் ஜான்சனும் தற்போது பிரதமருக்கான போட்டியில் உள்ளார். அமைச்சர்கள் மற்றும் எம்பிக்களின் வலுவான எதிர்ப்பால் போரிஸ் ஜான்சன் பதவி விலக வேண்டிய சூழல் ஏற்பட்டது.
பதவி விலகுவதற்கு முன்னதாக லாக்டவுன் சமயத்தில் பிரதமர் அலுவலகத்தில் பார்ட்டிகளில் கலந்து கொண்டது, நாடாளுமன்ற உறுப்பினர் கிறிஸ் பிஞ்சரின் நடத்தை குறித்து அதிகாரப்பூர்வ புகார் இருந்தும் அவரை துணை தலைமை கொறடாவாக நியமித்தது ஆகிய சர்ச்சைகளில் சிக்கியிருந்தார் போரிஸ் ஜான்சன்.
கொரோனா லாக்டவுன் விதிகளை மீறியதற்காக போரிஸ் ஜான்சனுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.
இத்தனை சர்ச்சைகளுக்கு மத்தியில் போரிஸ் ஜான்சன் பதவி விலகியிருந்தாலும் அவருக்கு எம்பிக்கள் மத்தியிலும் கட்சி உறுப்பினர்கள் மத்தியிலும் ஆதரவு உள்ளது.
பென் வோலிஸ்
கன்சர்வேட்டிவ் கட்சிக்குள் யாருக்கு ஆதரவு என்பதுகுறித்து பல தரப்பட்ட கருத்துக்கள் நிலவினாலும், பென் வோலிஸை அவர்கள் எந்த சிக்கலும் இல்லாத ஒரு தேர்வாகவே பார்க்கிறார்கள்.
யுக்ரேன் மீது ரஷ்ய படையெடுப்பு தொடங்கிய காலத்திலிருந்து பென் வோலிஸ் கவனிக்கப்பெற்றார். யுக்ரேனுக்கு ஆயுதங்களையும், அதன் ராணுவத்திற்கு பயிற்சியையும் அளிக்க வேண்டும் என படையெடுப்பு தொடங்கிய சில தினங்களில் பிரிட்டன் முடிவு செய்தது.
பிரெக்ஸிட் எதிர்பாளராக கருதப்பட்டாலும் பென் வோலிஸிற்கு 2019ஆம் ஆண்டு போரிஸ் ஜான்சன் பிரதமராக இருந்த காலத்தில் அமைச்சரவை பொறுப்பு வழங்கப்பட்டது.
அரசியல்வாதியாக மாறிய பின்பு ஜெர்மனி, சிப்ரஸ், பெலிஸ் மற்றும் வடக்கு ஐயர்லாந்தில் சிப்பாயாக பணிபுரிந்தவர். ஐயர்லாந்து குடியரசு ராணுவம் பிரிட்டன் சிப்பாய்கள் மீது திட்டமிட்ட வெடிகுண்டு தாக்குதலை முறியடித்தவர்.
போரிஸ் ஜான்சனுக்கு பிறகு வோலிஸ் பிரதமராக வேண்டும் என பரிந்துரைகள் எழுந்தபோதும் வோலிஸ் டிரஸுக்கு ஆதரவு வழங்கினார்
கெம்மி பேடேநாக்
பிரதமர் போட்டியில் கெம்மி ஒரு ஆச்சரியமான வேட்பாளராக உள்ளார். அவர் பிரதமர் போட்டியில் வெல்லவில்லை என்றாலும், அது அவருக்கு பெரும் புகழை பெற்று தந்தது.
விம்பிள்டனில் பிறந்த இவர், அமெரிக்கா மற்றும் நைஜீரியாவில் வளர்ந்தார். இவரின் தாய் மனோத்தத்துவ பேராசிரியர்.
நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பு தனியார் வங்கியான கெளட்ஸ் மற்றும் தி ஸ்பெக்டேடர் பத்திரிகையிலும் பணிபுரிந்துள்ளார்.
சர்வதேச வர்த்தக துறையின் தலைவராக இருந்ததே கெம்மி இதுவரை வகித்த உயரிய பதவி.
சுயெல்லா ப்ரேவர்மேன்
முன்னாள் உள்துறை அமைச்சரமான சுயேலா ப்ரேவர்மேன் பதவியிலிருந்து விலகியபோது பிரதமராக இருந்த லிஸ் டிரஸிற்கு அழுத்தம் கூடியது. அவர் பதவி விலகிய 24 மணி நேரத்திற்குள் பிரதமர் பதவியிலிருந்து விலகி விட்டார்.
தகவல் கசிவு விவகாரம் தொடர்பாக ப்ரேவர்மேன் பதவியிலிருந்து விலகியிருந்தாலும் குடியேறிகள் கொள்கை தொடர்பாக அதிருப்தியில் உள்ளார் என்பது அவரின் கோபமான ராஜிநாமா கடிதம் மூலம் தெரிந்தது.
பிரெக்ஸிட் ஆதரவாளராக இருந்த இவர், போரிஸ் ஜான்சன் அரசில் அட்டர்னி ஜெனரலாகவும் இருந்தார். கடந்த பிரதமர் போட்டியில் பங்கேற்றவர் இரண்டாவதுச் சுற்றில் வெளியேறினார்.
ப்ரேவேர்மேன் மகப்பேறு விடுப்பு எடுத்த முதல் அமைச்சராக திகழ்கிறார். அதாவது அமைச்சர்களும் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுமுறை எடுக்கலாம் என்று விதிகள் இயற்றப்பட்ட பிறகு ப்ரேவர்மேன் இந்த முடிவை எடுத்தார். அதற்கு முன்பு வரை அமைச்சர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்றே விதிகள் இருந்தன.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்