You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நிர்வாணப் படங்களை விற்பனை செய்யும் ரகசிய உலகம் – பிபிசி புலனாய்வில் வெளியான தகவல்கள்
- எழுதியவர், மோனிகா பிளாஹா & பனோரமா குழு
- பதவி, பிபிசி நியூஸ்
சமூக ஊடக தளமான ரெடிட்டில் (Reddit) பெண்களின் தனிப்பட்ட விவரங்கள், அந்தரங்க ஒளிப்படங்கள், காணொளிகள் பகிரப்பட்டன. அப்படி தங்கள் அந்தரங்க படங்கள் பகிரப்பட்டதைத் தொடர்ந்து, அந்தப் பெண்கள் அநாமதேய கும்பலிடமிருந்து மிரட்டல்களையும் அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்கின்றனர். பிபிசி, ஒரு பழைய சிகரெட் லைட்டரின் உதவியால், அத்தகைய ஒரு குழுவின் பின்னணியில் இருந்த ஒரு நபரின் முகமூடியை அவிழ்த்துள்ளது.
"இவளுடைய நிர்வாணப் படங்களுக்கு 5 யூரோ. தனிப்பட்ட முறையில் மெசேஜ் செய்யவும்."
"இவளுடைய சில வீடியோக்களை நான் விற்க விரும்புகிறேன்."
"இவளுக்கு என்ன செய்யப் போகிறோம்?"
ஆன்லைனில் இருந்த அந்தரங்கப் படங்கள் மற்றும் அதிலிருந்த கமெண்ட்ஸ்களை ஸ்க்ரோல் செய்யும்போது மிகவும் மோசமாக உணர்ந்தேன்.
ஆயிரக்கணக்கான அந்தரங்க ஒளிப்படங்கள் இருந்தன. நிர்வாணமாக, ஓரளவு உடையணிந்த பெண்கள் என்று ஒரு முடிவில்லாத நீரோடையைப் போல் அது நீண்டது. அவற்றின் கீழே, பாலியல் வன்கொடுமைக்கான அச்சுறுத்தல்கள் உட்பட, பெண்களைப் பற்றிய மோசமான வர்ணனைகளை ஆண்கள் பதிவிட்டிருந்தனர். நான் பார்த்தவற்றில் பெரும்பாலானவை இங்கே பகிர முடியாத அளவுக்கு மோசமாக இருந்தன.
ஒரு நண்பர் கொடுத்த தகவல் என் கவனத்தை இந்தப் படங்களின் பக்கமாகத் திருப்பியது. அவருடைய ஒளிப்படம் ஒன்று இன்ஸ்டாகிராமில் இருந்து எடுக்கப்பட்டு, ரெடிட்டில் வெளியிடப்பட்டிருந்தது. அது நிர்வாணப் படம் இல்லை. ஆனாலும் அது பாலியல்ரீதியில் இழிவான வார்த்தைகளைக் கொண்ட ஒரு குறிப்போடு இருந்தது. அவர் தன்னைப் பற்றியும் அப்படி வெளியிடப்பட்டிருந்த படங்களில் இருந்த மற்ற பெண்களைப் பற்றியும் கவலைப்பட்டார்.
அதுவொரு சந்தை. நூற்றுக்கணக்கான அடையாளத்தை வெளிப்படுத்தாத கணக்குகள், இத்தகைய ஒளிப்படங்களைப் பகிர்வதற்கும் வர்த்தகம் செய்வதற்கும் விற்பனை செய்வதற்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளன. இவையனைத்தும் அவற்றில் பகிரப்படும் ஒளிப்படங்களிலுள்ள பெண்களின் அனுமதியின்றியே பகிரப்படுகின்றன.
இது பழிவாங்கல் ஆபாசத்தின் (Revenge porn) புதிய பரிணாமத்தைப் போல் தோன்றியது. அங்கு தனிப்பட்ட பாலியல் உள்ளடக்கங்கள், பெரும்பாலும் முன்பு ஒரு பெண்ணுடன் உறவில் இருந்தவர்களால், சம்பந்தப்பட்டவர்களின் அனுமதியின்றியே வெளியிடப்படுகிறது.
இந்த அந்தரங்கப் படங்கள் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் பார்க்கும் வகையில் பகிரப்பட்டது மட்டுமின்றி, பெயர் தெரியாத முகமூடியின் பின்னால் ஒளிந்திருக்கும் ஆண்கள், இந்தப் பெண்களின் நிஜ வாழ்க்கை அடையாளங்களை வெளிப்படுத்துவதற்காக அணி சேர்ந்தார்கள். இது டாக்ஸிங் (doxing) என்று அறியப்படுகிறது.
முகவரிகள், கைபேசி எண்கள் மற்றும் சமூக ஊடக கணக்குகள் ஆன்லைனில் பகிரப்பட்டன. பிறகு அந்தப் பெண்கள் மோசமான பாலியல் கருத்துகள், அச்சுறுத்தல்கள், மிரட்டல்கள் எனக் குறி வைக்கப்படுகிறார்கள்.
இணையத்தின் மிகவும் இருண்ட மூலையில் நான் சிக்கியதைப் போல் உணர்ந்தேன். ஆனால், இவையனைத்தும் ஒரு பெரிய சமூக ஊடக தளத்தில் நடக்கிறது.
ரெடிட் தன்னை, "இணையத்தின் முதல் பக்கம்" என்று தனக்கு முத்திரை குத்திக் கொள்கிறது. அனைத்து வகையான நலன்களுக்காகவும் அர்ப்பணிக்கப்பட்ட "சப்ரெடிட்கள்" எனப்படும் குழுக்களை அமைத்து நடத்த மக்களை அனுமதிப்பதன் மூலம் சுமார் 5 கோடி தினசரி பயனர்களை (பிரிட்டனில் சுமார் 40 லட்சம்) உருவாக்கியுள்ளது. பெரும்பாலான சப்ரெடிட்கள் பாதிப்பில்லாதவை. ஆனால், ரெடிட் தளம், அதில் சர்ச்சைக்குரிய பாலியல் உள்ளடக்கங்கள் தொகுத்தளிக்கப்பட்ட வரலாற்றைக் கொண்டுள்ளது.
2014ஆம் ஆண்டில், பிரபலங்களின் பெரியளவிலான தனிப்பட்ட படங்கள் பகிரப்பட்டன. மேலும் அதிலிருந்து நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ரெடிட் "டீப்ஃபேக் (deepfake)" தொழில்நுட்பத்தைப் (ஆபாசக் காணொளிகளில் பிரபலங்களின் தோற்றத்தை உருவாக்கக்கூடிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்) பயன்படுத்தும் ஒரு குழுவைத் தடை செய்தது.
இந்த சர்ச்சைகளுக்குப் பதிலளிக்கும் விதமாக, அமெரிக்காவை தளமாகக் கொண்ட இந்த நிறுவனம் கடுமையான விதிகளை அறிமுகப்படுத்தியது. அதோடு, அவர்களுடைய அனுமதியின்றி அந்தரங்கமான அல்லது பாலியல்ரீதியிலான பதிவுகளை இடுவதற்கு அல்லது அச்சுறுத்துவதற்கான தடையை வலுப்படுத்தியது.
பெண்களின் அந்தரங்கப் படங்கள் இன்னும் ரெடிட்டில் எப்படிப் பகிரப்படுகின்றன என்பதையும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அது எப்படியிருந்தது என்பதையும் புரிந்துகொள்ள விரும்பினேன். அதோடு, இதற்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதைக் கண்டுபிடிக்க விரும்பினேன்.
ரெடிட்டின் தடை வேலை செய்யவில்லை என்பதை என்னால் பார்க்க முடிந்தது.
பிரிட்டன் முழுவதும் இருந்து பெண்களின் அந்தரங்க படங்களைப் பகிர்வதற்காக அர்ப்பணிக்கப்பட்ட பல சப்ரெடிட்களை கண்டறிந்தோம்.
நான் முதலில் பார்த்த சப்ரெடிட் குழு, தெற்காசிய பெண்களை மையமாகக் கொண்டது. அதில் 20000-க்கும் மேற்பட்ட பயனர்கள் இருந்தனர். அவர்களில் பெரும்பாலோர் ஆங்கிலம், இந்தி, உருது மற்றும் பஞ்சாபி மொழிகளில் கருத்துகளைப் பதிவிட்டிருந்தனர். சில பெண்களை நான் அடையாளம் கண்டேன். ஏனெனில், அவர்களுக்கு சமூக ஊடக பின்தொடர்பாளர்கள் அதிகம். எனக்குத் தனிப்பட்ட முறையில் தெரிந்த சிலரின் படங்களும் அவற்றில் இருந்தன.
அதில், 15,000-க்கும் மேற்பட்ட படங்கள் இருந்தன. அதில் ஒரு ஆயிரம் படங்களைப் பார்த்தோம். 150 வெவ்வேறு பெண்களின் வெளிப்படையான பாலியல்ரீதியிலான படங்களைக் கண்டறிந்தோம். அவற்றுக்குக் கீழே இருந்த கருத்துகள் அனைத்தும் பாலியல் பொருள் கொண்டவை, மனிதாபிமானமற்றவை. இந்தக் குழுவில் தங்கள் படங்கள் பகிரப்படுவதற்கு பெண்கள் யாரும் சம்மதித்திருக்க மாட்டார்கள் என்று நான் உறுதியாக நினைத்தேன்.
என் நண்பர் தன்னைப் பற்றிக் கண்டுபிடித்ததைப் போலவே, சில பெண்களின் படங்கள் சமூக ஊடகங்களில் இருந்து எடுக்கப்பட்டவை. அவை அந்தரங்கமானவை அல்ல. ஆனால், அவதூறான கருத்துகளோடு அவை பகிரப்பட்டன. சில நேரங்களில் பாதிக்கப்பட்டவர்களின் கைபேசிகள் மற்றும் கணினிகளை அவர்களின் நிர்வாணத்திற்காக ஹேக் செய்ய வேண்டுமென்ற கோரிக்கைகளும் அவற்றில் இருந்தன.
நாங்கள் தொடர்புகொண்ட ஒரு பெண், கிராப் டான் அணிந்த தனது இன்ஸ்டாகிராம் படம் வெளியிடப்பட்டதில் இருந்து "ஒவ்வொரு நாளும்" சமூக ஊடகங்களில் தன்னை பாலியல் வன்கொடுமை செய்வதாக வரும் அச்சுறுத்தல் கருத்துகள் உட்படப் பல பாலியல் ரீதியிலான செய்திகளைப் பெறுவதாகக் கூறுகிறார்.
சப்ரெடிட்டில் உள்ள ஆண்கள், பெண்களின் நிர்வாணப் படங்களைப் பகிர்வதோடு, அவற்றை விற்பனையும் செய்தனர். இந்தப் படங்கள் உறவில் இருக்கும் இருவருக்கிடையே பகிரப்பட்ட செல்ஃபிகளை போலத் தெரிகின்றன. அவை பொதுவில் விற்பதற்கானவை அல்ல.
இன்னும் இவற்றில் மோசமான வீடியோக்களும் இருந்தன. அவை, பெண்கள் உடலுறவில் இருந்தபோது ரகசியமாகப் படம்பிடிக்கப்பட்டதைப் போல் இருந்தன.
"நான் உன்னைக் கண்டுபிடிப்பேன்"
ஒரு பதிவின் நீட்சியில், நிர்வாணப் பெண் ஒருவர் வாய்வழி உடலுறவு கொள்ளும் படங்கள் இடம் பெற்றிருந்தன.
அடையாளம் வெளிப்படுத்தாத பயனர் ஒருவர், அந்தப் பெண்ணை இழிவான பெயரில் குறிப்பிட்டு, "யாரிடமாவது இவரின் வீடியோ இருக்குமா?" என்று கேட்டுள்ளார்.
"என்னிடம் அவளுடைய முழு வீடியோக்களும் உள்ளன. 5 யூரோவுக்குக் கிடைக்கும். என் உள்பெட்டிக்கு வா" என்று மற்றொருவர் கூறியுள்ளார்.
"அவளுடைய சமூக ஊடகக் கணக்கு என்ன" என்று மூன்றாவது நபர் கேட்கிறார்.
ஆயிஷா(பெயர் மாற்றப்பட்டுள்ளது), அவருடைய வீடியோக்கள் கடந்த ஆண்டு சப்ரெடிட்டில் பகிரப்பட்டிருந்ததைக் கண்டுபிடித்தார். அவரோடு முன்பு உறவிலிருந்த ஒருவரால் தான் ரகசியமாகப் படமெடுக்கப்பட்டதாக அவர் நினைக்கிறார்.
அவர் வைத்திருந்த நம்பிக்கையை மீறுவதை மட்டுமே அவர் சமாளிக்க வேண்டியிருக்கவில்லை. அவருடைய தனிப்பட்ட விவரங்கள் அந்த சப்ரெடிட் குழுவில் வெளியிடப்பட்டபோது, தனது சமூக ஊடகக் கணக்குகளில் தொல்லைகளையும் அச்சுறுத்தல்களையும் எதிர்கொண்டார்.
"நீ என்னோடு உடலுறவு கொள்ளவில்லை என்றால், நான் அதை உன் பெற்றோருக்கு அனுப்புவேன். நான் வந்து உன்னைக் கண்டுபிடிப்பேன். நீ என்னுடன் உடலுறவு கொள்ளச் சம்மதிக்கவில்லை என்றால், நான் உன்னை பாலியல் வன்கொடுமை செய்வேன்." இப்படியாக, அவரைத் துன்புறுத்தியவர்கள் மேலும் படங்களைக் கேட்டு அவரை மிரட்டவும் முயன்றனர்.
"பாகிஸ்தானிய பெண்ணாக இருப்பதால், திருமணத்திற்கு முன் உடலுறவு அல்லது அதைப் போன்ற விஷயங்களைச் செய்வது எங்கள் சமூகத்தில் சரியானதல்ல. அது ஏற்றுக்கொள்ள முடியாதது," என்று அவர் கூறுகிறார்.
ஆயிஷா வெளியுலகோடு பழகுவதை, வீட்டை விட்டு வெளியே செல்வதை நிறுத்திக் கொண்டார். இறுதியில் தனது உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றார். தற்கொலை முயற்சிக்குப் பிறகு, நடந்ததைப் பெற்றோரிடம் சொல்லியாக வேண்டியிருந்தது. அவருடைய பெற்றோர் இருவரும் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாயினர் என்கிறார் ஆயிஷா.
"நடக்கும் அனைத்தையும் நினைத்து, அவர்களை இந்தச் சூழ்நிலையில் நான் வைத்துவிட்டேன் என்பதை நினைத்து மிகவும் வெட்கப்படுகிறேன்."
ஆயிஷா ரெடிட்டை பலமுறை தொடர்பு கொண்டார். ஒரு சந்தர்ப்பத்தில், ஒரு காணொளி உடனடியாக நீக்கப்பட்டது. ஆனால், மற்றொன்றை அகற்ற நான்கு மாதங்கள் ஆனது. அது அங்கேயே முடிந்துவிடவில்லை. நீக்கப்பட்ட உள்ளடக்கம் ஏற்கெனவே பிற சமூக ஊடக தளங்களில் பகிரப்பட்டு, இறுதியில் ஒரு மாதம் கழித்து மீண்டும் அதன் பகிரல் தொடங்கிய சப்ரெடிட் குழுவிலேயே பகிரப்பட்டது.
ஆயிஷாவை அவமானப்படுத்திய, துன்புறுத்திய சப்ரெடிட் குழு, ஸிப்போமேட் (Zippomad) என்ற பயனரால் அமைக்கப்பட்டு நிர்வகிக்கப்பட்டது. இந்தப் பெயர் இறுதியில் அவரைக் கண்டுபிடிப்பதற்கான துப்பு ஒன்றை வழங்கியது.
நிர்வகிப்பவராக, ஸிப்போமேட் தனது சப்ரெடிட் குழு ரெடிட்டின் விதிகளைப் பின்பற்றுவதை உறுதி செய்யவேண்டும். ஆனால், அவர் அதற்கு நேர்மாறாகச் செய்தார்.
அவருடைய சப்ரெடிட் குழுவைக் கண்காணித்ததில் இருந்து, முந்தைய குழுக்கள் ஒவ்வொன்றும், புகார்கள் காரணமாக ரெடிட்டால் தடை செய்யப்பட்ட பிறகு, அவர் அந்தக் குழுவின் மூன்று புதிய பதிப்புகளை உருவாக்கியிருந்ததைப் பார்த்தேன். ஒவ்வொரு புதிய குழுவும் அதே பெயரை சிறு மாறுபாட்டுடன் பயன்படுத்துகிறது. ஒவ்வொன்றும் ஒரே விஷயத்தால் நிரப்பப்பட்டன. ஒவ்வொன்றும் ஆயிரக்கணக்கான பயனர்களைக் கொண்டிருந்தன.
கலெக்டர் கலாசாரம் (collector culture) என்று ஆன்லைன் துஷ்பிரயோக வல்லுநர்கள் இதற்கு ஒரு பெயரைக் கொடுக்கும் அளவுக்கு இந்த நிர்வாணப் பட வர்த்தகம் பரவலாகிவிட்டது.
இந்த வகையான ஆன்லைன் துஷ்பிரயோகங்களில் நிபுணரான டர்ஹாம் பல்கலைக்கழகத்தின் சட்டப் பேராசிரியர் கிளே மெக்ளின், "இது வக்கிரமானவர்கள் அல்லது விசித்திரமானவர்களைக் கொண்ட நிகழ்வு மட்டுமே அல்ல. அதில் பல்லாயிரக்கணக்கான ஆண்கள் உள்ளனர்," என்றார்.
மெசேஜிங் செயலிகளில் உள்ள தனிப்பட்ட சிறு சாட் குழுக்களில் இந்த படங்களின் வர்த்தகம் நடைபெறுகின்றன என்கிறார் பேராசிரியர் மெக்ளின்.
அனுமதி பெறப்படாத படங்களின் பெரிய தொகுப்புகளைச் சேகரிப்பதன் மூலம் இதில் சம்பந்தப்பட்ட ஆண்களில் பலர் இந்தக் குழுக்களில் தங்கள் அந்தஸ்தை பெறுகிறார்கள் என்று அவர் கூறுகிறார். இந்த வெறித்தனமான செயல்பாடுகள், அவற்றுக்கு முடிவு கட்டுவதைக் கடினமாக்குகிறது. ஏனெனில், நீக்கப்பட்ட காணொளிகள் மற்ற தொகுப்புகளில் இருந்து மீண்டும் பகிரப்பட்டதை ஆயிஷா கண்டுபிடித்தார்.
ரெடிட்டில் இருந்து தங்கள் படங்களை அகற்ற முயன்ற ஏழு பெண்கள், நிறுவனம் போதுமான உதவியைச் செய்வதாகத் தாங்கள் உணரவில்லை என்று என்னிடம் கூறினார்கள். ரெடிட் மூலம் ஒரு பதிவு அகற்றப்படவே இல்லை என்று நான்கு பேரும் உள்ளடக்கத்தை நீக்குவதற்கு 8 மாதங்கள் காத்திருக்க வேண்டுமென்று சிலரும் கூறினர்.
கடந்த ஆண்டு 88,000 சம்மதமின்றி வெளியிடப்பட்ட பாலியல்ரீதியிலான படங்களை அகற்றியதாகவும் இந்தப் பிரச்னையை "மிகவும் தீவிரமாகக்" கவனிப்பதாகவும் எங்களிடம் ரெடிட் கூறியது.
தானியங்கு கருவிகளைப் பயன்படுத்துவதாகவும் அனுமதியின்றி வெளியிடப்பட்ட நெருக்கமான படங்களைக் கண்டறிந்து அகற்றுவதற்கு ஒரு பணியாளர் குழுவைக் கொண்டிருப்பதாகவும் ரெடிட் கூறுகிறது. இந்தக் குழுக்களைத் தடை செய்வது உட்பட தொடர்ந்து நடவடிக்கை எடுப்பதாகவும் கூறியது.
"இந்த உள்ளடக்கங்களை இன்னும் விரைவாகவும் துல்லியமாகவும் தடுக்க, கண்டறிய, செயல்பட நாங்கள் செய்ய வேண்டிய வேலைகள் இன்னும் அதிகம் உள்ளன என்பதை நாங்கள் அறிவோம். மேலும் இந்த இலக்கை அடைவதற்கு எங்கள் குழுக்கள், கருவிகள் மற்றும் செயல்முறைகளில் இப்போது முதலீடு செய்கிறோம்," என்று ரெடிட் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
தொழில்நுட்ப நிறுவனங்களைப் போலவே, பிரிட்டன் சட்டமும் பெண்களின் தனிப்பட்ட படங்கள் இணையத்தில் பகிரப்படுவதைத் தடுக்கப் போராடுகிறது.
ஜார்ஜியை ஓர் அந்நியர் தொடர்புகொண்டு, அவரின் அந்தரங்க படங்கள் இணையத்தில் பகிரப்படுவதாகக் கூறியபோது, அவர் காவல்துறைக்குச் சென்றார். அவருடைய அந்தரங்கப் படங்களை அணுகும் வாய்ப்பு ஒருவருக்கு மட்டுமே இருப்பது அவருக்குத் தெரியும்.
"ஏற்கெனவே எத்தனை பேர் அவற்றைப் பார்த்திருப்பார்கள் என்பதை என்னால் கணக்கிட முடியவில்லை. மேலும் பலர் அவற்றைப் பார்ப்பதைத் தடுக்க எந்த வழியும் இல்லை. இப்போதும் பலர் அவற்றைப் பார்த்துக் கொண்டிருக்கலாம்," என்று அவர் கூறுகிறார்.
தனது படங்களைப் பகிர்ந்து கொண்டதாக ஒப்புக்கொள்ளும்படி அவருடைய முன்னாள் காதலர் அவரிடம் தெரிவித்துள்ளார். ஆனால் அவர், "என்னைக் காயப்படுத்தவோ சங்கடப்படுத்தவோ நினைக்கவில்லை" என்று தன்னிடம் கூறியதாக அவர் கூறுகிறார்.
அவருடைய வாக்குமூலத்தின் அந்தப் பகுதி சட்டத்திடமிருந்து அவர் தப்பிப்பதற்கான ஓர் ஓட்டையாக மாறியது. பிரிட்டன் முழுவதும் பழிவாங்கல் ஆபாசத்திற்கு எதிராக இருக்கும் சட்டத்தில், அனுமதியின்றி படங்களைப் பகிர்பவர் பாதிக்கப்பட்டவருக்குத் துன்பத்தை ஏற்படுத்துவதற்காகச் செய்கிறார் என்பதற்கான ஆதாரம் தேவை. அரசாங்கத்தின் சுயாதீன ஆலோசனை அமைப்பான சட்ட ஆணையம், தீங்கு விளைவிக்கும் நோக்கத்தை நிரூபிக்கும் தேவையை நீக்குமாறு பரிந்துரைத்துள்ளது. ஆனால், தற்போது நாடாளுமன்றத்தில் அங்கீகாரத்திற்கான செயல்முறையில் இருக்கும் ஆன்லைன் பாதுகாப்பு மசோதாவில் அந்த மாற்றம் இல்லை.
ஆயிஷா உட்பட தெற்காசிய பெண்களைக் குறிவைத்து சப்ரெடிட் குழுவை உருவாக்கிய ரெடிட் பயனரான ஸிப்போமேட்டை கண்டுபிடிக்க விரும்பினேன். சமூக ஊடகத்தில் அவருடைய கருத்துகளின் வரலாற்றை நான் பார்த்தபோது, உண்மையான பெயர், மின்னஞ்சல் முகவரி, படங்கள் என்று எதுவும் கிடைக்கவில்லை. அவருடைய பயனர் பெயர் மட்டுமே அவர் யார் என்பதற்கான துப்பு ஒன்றை வழங்கியது. அவர் ஸிப்போ லைட்டர்களை சேகரித்து விற்பனைக்கு வைத்திருந்தார். எனவே நான் ஒரு போலி கணக்கை பயன்படுத்தி தொடர்புகொண்டு அதை வாங்க முன்வந்தேன்.
அவர் ஒரு சந்திப்பை அமைக்க ஒப்புக்கொண்டார். மேலும் பல பெண்களின் தனியுரிமை மீறப்பட்ட குழுவை உருவாக்கிய நபருடன் எங்கள் ரகசிய நிருபர் இறுதியாக நேருக்கு நேர் சந்தித்தார்.
அவர் பெயர் ஹிமேஷ் ஷிங்காடியா. அவர் பல்கலைக்கழகத்தில் படித்தவர். ஒரு பெரிய நிறுவனத்தில் மேலாளராகப் பணிபுரிகிறார். அந்த இடத்தில் அப்படியொரு நபரை நான் எதிர்பார்க்கவில்லை.
பனோரமா அவரைத் தொடர்புகொண்ட பிறகு, ஷிங்காடியா தனது சப்ரெடிட்டை நீக்கிவிட்டார். ஓர் அறிக்கையில், அந்தக் குழு "தெற்காசிய பெண்களைப் பாராட்டும்" நோக்கம் கொண்டது என்று அவர் கூறுகிறார். அதிக எண்ணிக்கையிலான பயனர்கள் இருப்பதால், குழுவை நிர்வகிப்பது சாத்தியமில்லை என்று அவர் கூறுகிறார்.
அவர் யாருடைய தனிப்பட்ட விவரங்களையும் பகிர்ந்து கொள்ளவில்லை, தான் படங்களை வர்த்தகம் செய்யவில்லை என்றும் பெண்கள் கேட்கும்போது சில அந்தரங்க பாலியல் விஷயங்களை அகற்ற உதவுவதாகவும் கூறுகிறார்.
"ஸிப்போமேட் தனது செயல்களால் மிகவும் வெட்கப்படுகிறார். இது அவருடைய உண்மையான ஆளுமையைப் பிரதிபலிக்கவில்லை," என்று அந்த அறிக்கை கூறுகிறது.
ரெடிட் நிறுவனம், நாங்கள் குறிப்பிட்ட மற்ற இதுபோன்ற குழுக்களையும் நீக்கியுள்ளது.
இறுதியில் சுமார் ஆயிரம் பெண்களின் படங்கள் அகற்றப்பட்டுள்ளன என்பதை இது காட்டுகிறது. ஆனால், தேவையற்ற வகையில் தான் வெளிப்படுத்தப்படுவதன் வலிக்குப் பிறகு இது சிறிதளவு ஆறுதல் தான்.
இந்த வர்த்தகத்தால் அதிகமான பெண்கள் சுரண்டப்படுவதைத் தடுக்க தொழில்நுட்ப நிறுவனங்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் மாற்றங்களைச் செய்ய வேண்டும்.
ஜார்ஜி தனது படங்களைப் பகிர்ந்த முன்னாள் காதலரைப் பற்றி, "நான் அவரைத் தண்டிக்க விரும்பவில்லை. அவர் இனி ஒருபோதும் இதைச் செய்யக்கூடாது என்று விரும்புகிறேன்," என்று கூறுகிறார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்