You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பாலியல் உடல்நலம்: கன்னித்திரை பற்றிய உண்மையும் கட்டுக்கதைகளும்
- எழுதியவர், சோஃபியா ஸ்மித் காலேர்
- பதவி, பத்திரிகையாளர்
கன்னித்தன்மை மற்றும் கன்னித்திரை என்று பலரும் குறிப்பிடும் அம்சம் பல நூற்றாண்டுகளாக கவலையின் மையமாக இருந்து வருகிறது. அதைச் சுற்றியுள்ள கட்டுக்கதைகள் ஏராளம்.
கன்னித்திரை என்று குறிப்பிடப்படுவது பெண்ணின் பிறப்புறுப்பில் இருக்கும் ஒரு சிறிய சவ்வு. இந்தச் சவ்வு எதற்காக இருக்கிறது என்பது குறித்து அறிவியல் உலகில் இன்றும் விவாதங்கள் உள்ளன.
நமது வரலாற்றுக்கு முந்தைய பாலூட்டிகளின் வடிவங்கள் தண்ணீரிலிருந்து நிலத்திற்கு வந்தபோது ஏற்பட்ட பரிமாண மாற்றத்தில் இருந்து எஞ்சியதா? குழந்தை பருவத்தில் மலத்தில் இருந்து பாக்டீரியாக்கள் பிறப்புறுப்புக்குள் நுழையாமல் இருக்க இது உதவுகிறதா? உண்மையில் இதுபற்றி யாருக்கும் உறுதியாகத் தெரியாது. ஆனால் வெவ்வேறு உயிரினங்களில் வெவ்வேறு காரணங்களுக்காக இது இருக்கிறது என்பது மட்டும் உண்மை.
பெண்களின் பிறப்புறுப்புக்கு மேல் இந்தச் சவ்வு மூடியிருக்கும் என்று பலர் தவறாக நம்புகிறார்கள். அப்படியிருந்தால் மாதவிடாய் வராது என்பதைக்கூட அவர்கள் உணர்ந்திருக்கவில்லை. உண்மையில் இந்தச் சவ்வு பிறை-சந்திரன் வடிவத்தைக் கொண்டுள்ளது. அது பலருக்கும் வெவ்வேறு தடிமன்களைக் கொண்டிருக்கலாம்.
வயதுக்கு ஏற்றபடி இது மாறக்கூடும். சிலருக்கு பிறக்கும்போதே இது இருக்காது. பாலியல் முதிர்ச்சி அடையும் நேரத்தில் பலருக்கு அது காணாமல் போய்விடும். உடற்பயிற்சி செய்யும்போதோ, முதல் சுய இன்பத்தின்போதோ அது கிழிந்துவிடக்கூடும். சில நேரங்களில் முதல் உடலுறவு வரை நீடித்திருக்கலாம். சிலருக்கு அதன்பிறகும்கூட இருக்கும்.
ஆனால் கன்னித்தன்மை பரிசோதனை என்று அழைக்கப்படும் இந்தச் சவ்வை ஆய்வு செய்வதன் மூலம் ஒரு பெண்ணின் உடலுறவு, சுய இன்பம் உள்ளிட்ட பாலியல் நடவடிக்கைகளைக் கண்டறியலாம் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது.
எடுத்துக்காட்டாக, 2004 இல் வெளியிடப்பட்ட 36 பதின்ம வயதுக் கர்ப்பிணிகளைக் கொண்ட ஒரு சிறிய ஆய்வின் முடிவில் இரண்டு பேரிடம் மட்டுமே "உடலுறவு" நடந்திருப்பதை உறுதி செய்ய முடிந்தது. ஆனால் அவர்களும் கரப்பிணிகள் என்பது முரணாக இருந்தது.
2004-இல் நடத்தப்பட்ட மற்றொரு ஆய்வில், வழக்கமாக பாலுறவு நடவடிக்கைகளில் ஈடுபடும் 52% இளம்பெண்களுக்கு 'கன்னித்திரை' அப்படியே இருந்தது. அதனால் பாலுறவு கொண்டால் இந்தச் சவ்வு காணாமல் போகும் என்றோ, பாலுறவு கொள்ளாதவர்களுக்கு இந்தச் சவ்வு இருக்கும் என்றோ கூறுவது தவறானது.
படுக்கையில் ரத்தம் காணப்படுவது ஒருவர் கன்னித்தன்மையை இழப்பதற்கான அறிகுறி என்று ஒரு நம்பிக்கை இருக்கிறது. ஆனால் ஓர் ஆய்வில், 10-இல் ஆறு பேருக்கு இது ஏற்படாது என்று தெரியவந்திருக்கிறது. அதனால் ரத்தம் வருவது இந்தச் சவ்வு கிழிவதால் வரும் என்பது உறுதியானது அல்ல. வன்புணர்வு அல்லது உயவுத் தன்மை இல்லாததன் காரணமாக ரத்தம் வரக்கூடும்.
முதல் முறை உடலுறவு கொள்ளும்போது பெண்ணுறுப்பில் இருந்து ரத்தப்போக்கு ஏற்படலாம், அல்லது வராமல் போகலாம். கன்னித்திரை என்று அழைக்கப்படும் சவ்வு மட்டுமே ரத்தப்போக்கு ஏற்படுவதற்குக் காரணமல்ல. பதற்றம், முழுமையாக பாலுணர்வு தூண்டப்படாமல் இருப்பது, நோய்த்தொற்று போன்றவையும் இதற்குக் காரணமாகும். ஒரு மகப்பேறு மருத்துவர் தனது சக ஊழியர்களில் 41 பேரை ஆய்வு செய்தபோது, அவர்களில் 63% பேர் தாங்கள் முதல்முறை உடலுறவு கொண்டபோது ரத்தம் வரவில்லை என்று கூறியுள்ளனர்.
ஆனால் கன்னித்தன்மை குறித்து பண்பாட்டில் அதிக மதிப்பு வைத்திருக்கும் நாடுகளில் படித்தவர்களிடம்கூட இந்த அறிவியல் உண்மை குறித்த புரிதல் இல்லை. 2011-ஆம் ஆண்டு துருக்கியில் உள்ள டிக்கில் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், 72.1% மாணவிகளும் 74.2% மாணவர்களும் இந்தச் சவ்வு கன்னித்தன்மையின் அடையாளம் என்று நம்புவதாகத் தெரிவித்தனர். "ரத்தக் கறை படிந்த படுக்கை விரிப்பை" திருமணத்துக்கு மறுநாள் காலை குடும்பத்தினருக்குக் காட்ட வேண்டும் என்று 30.1% ஆண்கள் கூறியுள்ளனர்.
இது பெண்கள் பாலியல் ஆரோக்கியத்தைப் பெறுவதற்குத் தடையாக அமைகிறது. அவர்களின் பாலியல் அடையாளத்தை ஆராய்வதைத் தடுக்கிறது. அவர்களின் உடலுறவைப் பற்றிய கவலையை ஏற்படுத்துகிறது.
எகிப்தில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் கன்னித்தன்மை பற்றிய கருத்துக்கள் காரணமாக பெரும்பாலான பெண்கள் தங்கள் திருமண இரவுக்கு முன் அச்சத்தில் இருந்ததாகக் கூறினர். 2013 ஆம் ஆண்டு லெபனானில் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பில், கிட்டத்தட்ட 43% பெண்கள் தங்கள் திருமண இரவில் ரத்தப்போக்கு ஏற்படாது என்ற பயத்தின் காரணமாக திருமணத்திற்கு முன் உடலுறவு கொள்ளப்போவதில்லை என்று கூறியுள்ளனர். மற்றொரு ஆய்வில் 40% பேர் கன்னித் தன்மையைப் பாதுகாக்க வாய்வழி உடலுறவு கொண்டதாக தெரிவித்தனர்.
கன்னித்திரை என்ற கட்டுக்கதை பெண்களின் பாலியல் நலனையும் சமத்துவத்தையும் மட்டுமல்லாமல் நீதி பெறுவதையும் பாதிக்கிறது. நீதிமன்ற வழக்குகளில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டவர்களுக்கான கன்னித்தன்மை சோதனைகளை பாகிஸ்தான் சமீபத்தில் தடை செய்துள்ளது. பல நாடுகள், குறிப்பாக ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் வடக்கு மற்றும் தென் ஆப்பிரிக்காவில், இன்னும் அவற்றைச் செய்து கொண்டுதான் இருக்கின்றன..
இந்தியாவில் கன்னித்திரை பரிசோதனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 2014ஆம் ஆண்டு ஹரியாணா மாநிலத்தில் நடந்த ஒரு சம்பவம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் இந்திய உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கியது. அதில், 'இரு விரல் பரிசோதனை' எனப்படும் இந்தப் பரிசோதனை பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களின் தனியுரிமை, உடல், மன ஒருமைப்பாடு மற்றும் கண்ணியத்திற்கான உரிமையை மீறுவதாக உள்ளது," என்று கூறப்பட்டுள்ளது.
'இரண்டு விரல் பரிசோதனை' மற்றும் கன்னித்தன்மை பரிசோதனைகள் மூலம் வன்முறையின்றி உறவு கொண்டார்கள் என்பதை உறுதிபட குறிப்பிட முடியாது என ஆராய்ச்சியாளர்களும் மருத்துவ நிபுணர்களும் ஒருமித்த கருத்தை கொண்டுள்ளனர். கன்னித்திரை கிழிந்தோ சேர்ந்தோ இருப்பதை மட்டும் வைத்து இதில் முடிவெடுக்க முடியாது. அதற்கும் பாலியல் வன்முறை அல்லது துஷ்பிரயோகம் தொடர்பான விசாரணைக்கும் தொடர்பு இல்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
ஆயினும் உலகெங்கிலும் உள்ள பல மருத்துவர்கள், திருமணத்திற்கு முன் உடலுறவு கொண்ட பெண்களுக்கு 'கன்னித் திரை' பழுதுபார்ப்பதை ஓர் அறுவைச் சிகிச்சையாக வழங்குகிறார்கள். இதைச் செய்யும் மருத்துவர்கள் பிரிட்டனிலும் இருக்கிறார்கள். ஆன்லைனிலும் இந்தச் சவ்வை சரி செய்வதற்கான விளம்பரங்களும் பரப்புரைகளும் காணக்கிடக்கின்றன.
கன்னித்திரை பற்றிய கருத்துக்கள் பல தலைமுறைகளாகப் புகுத்தப்பட்டிருக்கின்றன. இந்த நிலையை மாற்றுவதற்கு மேற்சொன்ன ஆராய்ச்சிகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பது முதல்படியாக இருக்கும். கன்னித்தன்மை சோதனைகள், அறுவைச் சிகிச்சைகள் செய்யும் மருத்துவர்களைத் தடுப்பதும் அவசியம்.
(இந்தக் கட்டுரை Losing It: Sex Education for the 21st Century என்ற புத்தகத்தை தழுவி எழுதப்பட்டது)
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்