அமெரிக்காவை ஏமாற்றி தாலிபன்களிடம் ஹெலிகாப்டரை ஒப்படைத்த ஆப்கன் பைலட்

முகமது எட்ரிஸ் மொமண்ட் தனது ஹெலிகாப்டரை ஆப்கானிஸ்தான் பரப்புக்கு மேலே பறக்கிறார்

பட மூலாதாரம், Mohammad Edris Momand

    • எழுதியவர், இனாயதுல்லா யாசினி மற்றும் சுவாமிநாதன் நடராஜன்
    • பதவி, பிபிசி உலக சேவை

"சிலர் என்னுடன் மகிழ்ச்சி கொள்ளாமல் இருக்கலாம். கருத்துக்கள் வேறுபடலாம். ஆனால் நான் அவர்களுக்கு இதை சொல்லிக் கொள்கிறேன். நாடு ஒரு தாயைப் போன்றது. அதற்கு யாரும் துரோகம் செய்யக்கூடாது," என்கிறார் முகமது எட்ரிஸ் மொமண்ட்.

அமெரிக்காவில் விரிவான பயிற்சி பெற்ற ஆப்கானிய ராணுவ விமானிகளில் மொமண்ட் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் தாலிபன்கள் அந்த நாட்டைக் கைப்பற்றியபோது, ​​அவர் தனது அமெரிக்க கூட்டாளி படைக்கு எதிரான நிலையை எடுத்தார். அதுநாள்வரை தான் இயக்கி வந்த ஹெலிகாப்டரை தனது முன்னாள் எதிரிகளான தாலிபன்களிடம் ஒப்படைக்க தனது சொந்த கிராமத்துக்கு ஹெலிகாப்டரில் பறந்தார்.

"ஆப்கானிஸ்தானுக்குச் சொந்தமான ஒரு சொத்தைப் பாதுகாப்பதே எனது நோக்கம்" என்று அவர் பிபிசியிடம் கூறினார்.

இது நடந்த ஒரு வருடம் கழித்து, அவர் தனது முடிவு குறித்து விளக்கினார்.

ஆப்கானிஸ்தான்

பட மூலாதாரம், Mohammad Edris Momand

படக்குறிப்பு, அமெரிக்காவால் பயிற்சி பெற்ற தேர்ந்தெடுக்கப்பட்ட விமானிகளில் ஒருவராக மொமண்ட் இருந்தார்.

மொமண்ட் 2009இல் ஆப்கானிஸ்தான் ராணுவத்தில் சேர்ந்தார். வெஸ்ட் பாயின்ட் எனப்படும் அமெரிக்க ராணுவ பயிற்சி மையத்தில் நான்கு ஆண்டுகள் நடந்த கடுமையான பயிற்சித் திட்டத்தில் ஈடுபடுவதற்காக அவர் அமெரிக்கா சென்றார்.

ஆரம்பத்தில், அவர் மேற்கு ஆப்கானிஸ்தானில் உள்ள ஹெராட்டுக்கு அனுப்பப்பட்டார், அங்கு அவர் ரஷ்யா உருவாக்கிய எம்ஐ-17 ரக ஹெலிகாப்டர்களை இயக்கினார். சில ஆண்டுகளுக்குப் பிறகு அவருக்கு மீண்டும் ஒரு இடைவெளி கிடைத்தது.

"2018ஆம் ஆண்டின் இறுதியில், பிளாக் ஹாக் ரக ஹெலிகாப்டர்களை இயக்குவதற்கு சமீபத்திய விமானப்படை தொழில்நுட்பத்தைப் படித்த இளம் விமானிகளின் ஒரு சிறிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. அதிலிருந்து நான் பிளாக் ஹாக்ஸில் பறக்கத் தொடங்கினேன்," என்கிறார் மொமண்ட்.

பிளாக் ஹாக்ஸ் ஹெலிகாப்டர், சரக்கு மற்றும் படையினர் போக்குவரத்து தேவைக்காக பயன்படுத்தப்பட்டது.

படை விலக்கலை அறிவித்த பைடன்

2021 ஆம் ஆண்டில், செப்டம்பர் 11ஆம் தேதி அமெரிக்கா மீதான தாக்குதல்களின் இருபதாம் ஆண்டு நிறைவிற்கு முன்னர், ஆப்கானிஸ்தானில் இருந்த அனைத்து அமெரிக்க துருப்புக்களையும் தாயகத்துக்கு அழைத்துக் கொள்ளும் தனது விருப்பத்தை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்தார். அப்போது மொமணம்ட், மசார்-இ-ஷரீப்பில் இருந்தார்.

அதே ஆண்டு ஜூலையில் படையினர் ஆப்கனில் இருந்து வெளியேறும் தேதி ஆகஸ்ட் 31 என அறிவிக்கப்பட்டது.

தாலிபன்கள் நாட்டை விட்டு வெளியேறியவுடன் அவர்கள் மீண்டும் வருவதை முழுமையாக தடுத்து விட முடியும் என்ற நம்பிக்கையில் அமெரிக்காவும் அதன் கூட்டணி நாடுகளும் பல பில்லியன் டாலர்களை ஆப்கானிய ராணுவத்தின் பயிற்சிக்காகவும் அவர்களுக்கு ஆயுதங்களை வழங்கவும் செலவிட்டன.

ஆப்கானிஸ்தான்

பட மூலாதாரம், Mohammad Edris Momand.

படக்குறிப்பு, எப்போதும் சரக்கு ஹெலிகளை இயக்கியதாகவும் போர் விமானங்களை இயக்கியதில்லை என்றும் கூறுகிறார் மொமண்ட்.

அந்த நம்பிக்கை ஒரு கனவாக மாறியது.

ஆப்கானிஸ்தான் ராணுவம் அசுர வேகத்தில் தாலிபன்களிடம் நாட்டின் கட்டுப்பாட்டை இழந்தது.

தாலிபன் போராளிகள் ஜூலை மாதம் ஆப்கனின் பெரும்பாலான கிராமப்புறங்களைச் சூழ்ந்தனர். ஆகஸ்ட் 6ஆம் தேதி முதல் மாகாண தலைநகரம் தாலிபன் வசம் வந்தது.

பெரும்பாலான மாகாணங்களைப் பாதுகாத்த பிறகு, ஆகஸ்ட் 15ஆம் தேதி தாலிபன்கள் எவ்வித தடையின்றி காபூலை கைப்பற்றினர்.

இஸ்லாமியவாத போராளிகள் குழு, செப்டம்பர் 7ஆம் தேதி தலைநகரின் வடக்கே பஞ்ச்ஷிர் பள்ளத்தாக்கில் எஞ்சியிருந்த எதிர்ப்பின் கடைசி பகுதிகளை முறியடித்தது.

தாலிபன்கள்

வெளியேற உத்தரவு

அந்த சமயத்தில் நாடு குழப்பத்தில் மூழ்கிய நிலையில், மசார்-இ-ஷரீப்பில் மொமண்டின் ஆறு மாத கால பணி ஜூலையில் முடிவடைந்தது. அவர் ஆகஸ்ட் 14ஆம் தேதி காபூல் விமானப்படை தளத்திற்குத் திரும்பினார்.

உயர்மட்ட அரசியல் மற்றும் ராணுவ தலைவர்கள் ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பிச் செல்வதாக வதந்திகள் பரவின. இதனால் நிலைமை பதற்றமாக இருந்தது.

தாலிபன்கள் காபூலின் நுழைவாயிலுக்கு வெளியே காத்திருந்தனர். அங்குள்ள விமான நிலையம் அமெரிக்க ராணுவ கட்டுப்பாட்டில் இருந்தது. ஆனால் அது எவ்வளவு காலம் பாதுகாப்பாக இருக்கும் என்பது சந்தேகமாக இருந்தது.

"எங்கள் விமானப் படை தளபதி அனைத்து விமானிகளையும் அவரவர் விமானங்கள், ஹெலிகாப்டர்களுடன் நாட்டை விட்டு வெளியே பறக்க உத்தரவிட்டார். உஸ்பெகிஸ்தானுக்குச் செல்லும்படி அவர் கூறினார்" என்று மொமண்ட் பழைய சம்பவத்தை நினைவு கூர்ந்தார்.

ஆப்கானிஸ்தான்

பட மூலாதாரம், Mohammad Edris Momand.

படக்குறிப்பு, ஆப்கானிஸ்தான் விமானப்படையில் மொமண்ட் பல்வேறு ஹெலிகாப்டர்களை இயக்கியுள்ளார்.

அந்த உத்தரவால் மொமண்ட் கோபமடைந்தார். அதற்குக் கீழ்ப்படிய வேண்டாம் என்று முடிவு செய்தார்.

"என் நாட்டுக்கு துரோகம் செய்யும்படி என் தளபதி என்னை வற்புறுத்தினார், நான் ஏன் அத்தகைய கட்டளைக்கு கீழ்படிய வேண்டும்? தாய்நாட்டைக் காட்டிக் கொடுப்பது மிக மோசமான குற்றம். அதனால்தான் நான் அந்த உத்தரவுக்கு கீழ்படியவில்லை," என்று மொமண்ட் விளக்குகிறார்.

அவர் தனது குடும்பத்தினரிடம் ஆலோசனை கேட்டார். குறிப்பாக அவரது அப்பா வலிமையானவர்.

"நான் தாய்நாட்டை விட்டு வெளியேறினால் என்னை மன்னிக்க மாட்டேன் என்று எனது அப்பா எச்சரித்தார்."

"இந்த ஹெலிகாப்டர் ஆப்கானிஸ்தானுக்கு சொந்தமானது. அது நாட்டை விட்டு போகக்கூடாது," என்று தன் அப்பா கூறியதாக மொமண்ட் தெரிவித்தார்.

படைக்குழுவை ஏமாற்றிய செயல்

அந்த நேரத்தில் மொமண்டின் மாகாணம் ஏற்கெனவே தலிபான் வசம் வந்திருந்தது. அவரது அப்பா உள்ளூர் ஆளுநரிடம் பேசினார். ஹெலிகாப்டரை அங்கு பறக்க அனுமதித்தால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று அவர் உறுதியளித்தார்.

Momand in front of his helicopter

பட மூலாதாரம், Mohammad Edris Momand

படக்குறிப்பு, ஆப்கானிஸ்தானில் ஏழு பிளாக் ஹாக் ரக ஹெலிகாப்டர்கள் மட்டுமே செயல்படுவதாக மொமண்ட் கூறுகிறார்

மொமண்ட் ஒரு தப்பிக்கும் திட்டத்தை தயாரித்தார். ஆனால் அதற்கு முதலில் அவர் ஹெலிகாப்டர் பயணம் செய்யும் பாதையில் ஏற்படும் ஒரு பெரிய தடங்கலைச் சமாளிக்க வேண்டியிருந்தது.

"ஒவ்வொரு பிளாக் ஹாக்கிலும் நான்கு பேர் கொண்ட குழுவினர் உள்ளனர். எனது திட்டத்தால் அவர்களை நம்ப வைக்க முடியாது என்று எனக்குத் தெரியும்."

"அவர்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள் என்று உறுதியாக நம்பினேன். அவர்கள் என் உயிருக்கு ஆபத்தாகவும் ஹெலிகாப்டரின் அழிவுக்கு கூட காரணமாக இருப்பார்கள் என கருதினேன்," என்று மொமண்ட் கூறினார்.

எனவே உடன் பணியாற்றிய படையினரை ஏமாற்ற மொமண்ட் ஒரு தந்திரம் செய்தார்.

"ஹெலிகாப்டரில் தொழில்நுட்பக் கோளாறு உள்ளது. என்னால் புறப்பட முடியவில்லை என்று விமானப்படை தளபதியிடம் கூறி விட்டேன் என்று அவர்களிடம் சொன்னேன். அதைக் கேட்ட மூன்று படையினரும் உஸ்பெகிஸ்தானுக்கு புறப்பட தயாராக இருந்த மற்றொரு ஹெலிகாப்டரில் ஏறினர்."

ஆப்கானிஸ்தான்

பட மூலாதாரம், Mohammad Edris Momand.

படக்குறிப்பு, தனது கிராமத்திற்கு பறந்த பிறகு ஹெலிகாப்டரை தலிபான்களிடம் மொமண்ட் ஒப்படைத்தார்.

குனாருக்கு தப்பிய நிமிடங்கள்

மற்ற அனைத்து ஹெலிகாப்டர்கள் புறப்பட்ட பிறகு, 30 நிமிட பயணத்தில் குனாருக்கு தனியாக தனது ஹெலிகாப்டரை இயக்கினார் மொமண்ட்.

"அந்த நேரத்தில் அமெரிக்கர்கள் விமான போக்குவரத்தை கட்டுப்படுத்திக் கொண்டிருந்தனர். அதனால், நான் உஸ்பெகிஸ்தானுக்குப் புறப்படுகிறேன் என்று ரேடியோவில் சொன்னேன். விமான நிலையத்தை விட்டு வெளியேறிய பிறகு நான் எனது ரேடார் சாதனத்தை அணைத்து விட்டு நேராக குனாருக்குச் சென்றேன்."

"நான் எனது வீட்டுக்கு அருகிலுள்ள எனது கிராமத்தில் தரையிறங்கினேன். தாலிபன்களிடமிருந்து உத்தரவாதம் கிடைத்ததும், கடந்த காலங்களில் ஹெலிகாப்டர்களுக்கு எரிபொருள் நிரப்ப தரையிறங்கும் இடத்திற்கு கொண்டு சென்றேன்," என்கிறார் மொமண்ட்

தாலிபன்கள்

எனது முடிவை குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அண்டை வீட்டார் முழுமையாக ஆதரித்தனர் என்கிறார் மொமண்ட்.

மொமண்ட் தனது செயல்களுக்காக வருத்தப்படவில்லை என்று கூறுகிறார். அவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற விரும்பிய போதும் தாய்நாட்டிலேயே தொடர்ந்து தங்க முடிவு செய்ததாக கூறினார்.

ஆப்கானிஸ்தான்

பட மூலாதாரம், Mohammad Edris Momand

படக்குறிப்பு, தனது தளபதியின் கட்டளைகளை மீறியதற்காக வருத்தப்படவில்லை என்கிறார் மொமண்ட்

"அமெரிக்க ஆலோசகர்கள் எனக்கு மூன்று முறை தகவல் அனுப்பினர். ஹெலிகாப்டரை கொண்டு வர முடியாவிட்டாலும் உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் சாலை வழியாக வந்து வெளியேறுங்கள் என்று கூறினர். ஆனால் நான் அந்த வாய்ப்பை ஏற்கவில்லை," என்கிறார் மொமண்ட்

ஆப்கானிஸ்தான் விமானப்படையின் பலம்

2021ஆம் ஆண்டு ஜூன் மாத இறுதியில், ஹெலிகாப்டர்கள், விமானங்கள் உட்பட 167 விமானங்களை ஆப்கானிஸ்தான் விமானப்படை இயக்கியது என்று அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வந்த ஆப்கானிஸ்தான் புனரமைப்புக்கான சிறப்பு இன்ஸ்பெக்டர் ஜெனரல் (சிகார்) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான்

இந்த விமானங்களில் சில மொமண்டின் சக படையினரால் நாட்டை விட்டு வெளியே கொண்டு செல்லப்பட்டன. ஆகஸ்ட் 16ஆம் தேதி உஸ்பெகிஸ்தானின் டெர்மேஸ் விமான நிலையத்தின் செயற்கைக்கோள் படங்களின் பகுப்பாய்வின்படி எம்ஐ-17, எம்ஐ-25, பிளாக் ஹாக்ஸ் மற்றும் பல ஏ-29 இலகு ரக தாக்குதல் ரக விமானங்கள் C-208 விமானங்கள் உட்பட இரண்டு டஜன் ஹெலிகாப்டர்கள் உஸ்பெக்கில் இருந்தன.

தாலிபன்கள்
தாலிபன்

சேதப்படுத்திய அமெரிக்க படையினர்

காபூலில் விடப்பட்ட பெரும்பாலான விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை இயங்க முடியாத அளவுக்கு அமெரிக்க துருப்புக்கள் சேதப்படுத்திச் சென்றனர்.

இன்று ஆப்கானிஸ்தானில் எத்தனை ஹெலிகாப்டர்கள், விமானங்கள் செயல்பாட்டில் உள்ளன என்பது தெளிவாகத் தெரியவில்லை.

"எங்களிடம் இப்போது பயன்படுத்தக்கூடிய ஏழு பிளாக் ஹாக் ஹெலிகாப்டர்கள் உள்ளன. குறைந்த வளங்களைக் கொண்ட ஆப்கானிய பொறியாளர்களால் அவற்றைப் பழுதுபார்க்க முடிந்தது. படிப்படியாக மற்ற பிளாக் ஹாக் ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்துவோம்," என்கிறார் மொமண்ட்.

நாட்டை விட்டு வெளியேறும் உத்தரவை கண்மூடித்தனமாக பின்பற்றியதன் மூலம் ஆப்கானிஸ்தானுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியதாக அவர் தனது சகாக்களைக் குற்றம் சாட்டினார்.

"உஸ்பெகிஸ்தானுக்கு தங்கள் ஹெலிகாப்டருடன் பறந்து சென்றவர்கள் உண்மையில் தாய்நாட்டுக்கு துரோகம் செய்துள்ளனர். ஹெலிகாப்டர்கள் எங்கள் நாட்டிற்கு சொந்தமானவை. அவை மிகவும் விலை உயர்ந்த ஹெலிகாப்டர்கள். அந்த ஹெலிகாப்டர்களை நாங்கள் திரும்பப் பெறுவோம் என்று நான் நினைக்கவில்லை," என்கிறார் மொமண்ட்.

தொடர்ந்து சேவை செய்வேன்

ஆப்கானிஸ்தான்

பட மூலாதாரம், Mohammad Edris Momand

படக்குறிப்பு, சாகும் நாள் வரை தனது நாட்டுக்கு சேவை செய்வேன் என்று மொமண்ட் கூறுகிறார்

ஹெலிகாப்டர் பைலட்டுக்கு பயிற்சி அளிக்க 6 மில்லியன் டாலர்கள் செலவாகும் என்று அமெரிக்காவில் பயிற்சியின் போது மொமண்டிடம் கூறப்பட்டது.

எனவே அந்த வாய்ப்பை மதிக்கிறார் அவர். அமெரிக்காவில் தனது முதல் ஹெலிகாப்டர் இயக்கத்தை இன்னும் அவர் நினைவுகூர்கிறார்.

"அந்த நாளில் நான் மிகவும் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருந்தேன். என் வாழ்க்கையில் இப்படி ஒரு நாள் வரும் என்று என்னால் நம்ப முடியவில்லை," என்கிறார் அவர்.

நான்கு வருட பயிற்சியின் போது ஆப்கானிஸ்தானில் உள்ள தனது குடும்பத்தை சந்திக்காமல் அமெரிக்காவிலேயே மொமண்ட் தங்கியிருந்தார்.

தாலிபன்களை எதிர்த்துப் போராட பயிற்சி பெற்ற மொமண்ட், இப்போது அதே தாலிபன்களால் கட்டுப்படுத்தப்படும் அரசாங்கத்திற்காக பிளாக் ஹாக் ஹெலிகாப்டரை இயக்குகிறார். இதில் அவர் எந்த முரண்பாட்டையும் பார்க்கவில்லை.

"அரசாங்கங்கள் எப்போதும் மாறுகின்றன. எங்களைப் போன்றவர்கள் தேசத்தை மதிப்பவர்கள். தேசத்திற்கு சேவை செய்கிறோம். ராணுவம் அரசியலில் ஈடுபடக்கூடாது. நாடு என்னைப் போன்றவர்களுக்காக நிறைய முதலீடு செய்துள்ளது," என்கிறார் அவர்.

தாலிபன்கள் ஒரு வருடமாக நாட்டை ஆண்டாலும், எந்த நாடும் அவர்களை முறையான ஆட்சியாளர்களாக அங்கீகரிக்கவில்லை. இருந்தபோதிலும், மொமண்ட் உறுதியாக இருக்கிறார்.

"என் வாழ்வின் கடைசி நாள் வரை எனது தேசத்திற்கு சேவை செய்வதற்காக எனது துறையில் தொடர்ந்து இருப்பேன்," என்கிறார் அவர்.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: