ஜான்சன் & ஜான்சன் டால்கம் பவுடர் விற்பனையை நிறுத்துவதாக அறிவிப்பு - முழு விவரம்

ஜான்சன் & ஜான்சன் நிறுவனம்

பட மூலாதாரம், Reuters

    • எழுதியவர், பீட்டர் ஹோஸ்கின்ஸ்
    • பதவி, வணிக செய்தியாளர்

அடுத்தாண்டு முதல் குழந்தைகளுக்கான டால்கம் பவுடர் தயாரிப்பு மற்றும் விற்பனையை உலகம் முழுவதும் நிறுத்திக்கொள்வதாக புகழ்பெற்ற ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் அறிவித்துள்ளது.

அந்நிறுவனத்தின் டால்கம் பவுடர் விற்பனை அமெரிக்காவில் நிறுத்தப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கும் மேலான நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

அந்நிறுவனத்தின் டால்கம் பவுடரில் ஆஸ்பெஸ்டாஸ் இருப்பதாகவும் இதனால் தங்களுக்கு கர்ப்பப்பை புற்றுநோய் ஏற்பட்டதாகவும் ஆயிரக்கணக்கான பெண்கள் குற்றம்சாட்டி தொடர்ந்த வழக்குகளை ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் எதிர்கொண்டு வருகிறது.

ஆனால், பல தசாப்தங்களாக மேற்கொள்ளப்பட்ட சுயாதீனமான ஆய்வுகள் தங்களின் விற்பனை பொருட்கள் பயன்படுத்துவதற்கு பாதுகாப்பானது என அந்நிறுவனம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

"உலகளாவிய மதிப்பீட்டின் ஒருபகுதியாக, குழந்தைகளுக்கான முற்றிலும் சோளமாவு அடிப்படையிலான பவுடருக்கு மாறுவதற்கான வணிக முடிவை நாங்கள் எடுத்துள்ளோம்," என அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்ன சொல்கிறது பவுடர் நிறுவனம்?

உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளில் சோளமாவு அடிப்படையிலான குழந்தைகள் பவுடர் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது.

அதேவேளையில் தங்கள் நிறுவனத்தின் குழந்தைகள் பவுடர் பயன்படுத்துவதற்கு பாதுகாப்பானது எனவும் ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. "எங்களின் அழகு சாதன டால்கம் பவுடரின் பாதுகாப்பு குறித்த நிலைப்பாடு மாறாமல் உள்ளது," என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

"உலகம் முழுவதிலும் உள்ள மருத்துவ நிபுணர்களால் தசாப்தங்களாக மேற்கொள்ளப்பட்ட சுயாதீனமான அறிவியல் ஆய்வுகள் எங்கள் நிறுவனத்தின் குழந்தைகள் டால்கம் பவுடர் பாதுகாப்பானது, அந்த பவுடரில் ஆஸ்பெஸ்டாஸ் இல்லை, எனவே அது புற்றுநோயை ஏற்படுத்தாது என உறுதிப்படுத்தியுள்ளது. இந்த நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக நிற்கிறோம்," என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜான்சன் & ஜான்சன் நிறுவனம்

பட மூலாதாரம், Justin Sullivan / Getty Images

கடந்த 2020ஆம் ஆண்டில் குழந்தைகள் டால்கம் பவுடர் விற்பனையை அமெரிக்கா மற்றும் கனடாவில் ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் நிறுத்தியது. அந்நிறுவனத்திற்கு எதிரான சட்ட வழக்குகளைத் தொடர்ந்து, தங்கள் விற்பனை பொருட்களின் பாதுகாப்பு குறித்த "தவறான தகவலால்" தங்கள் நிறுவன பொருட்களுக்கான தேவையின் அளவு குறைந்துவிட்டதாக அந்நிறுவனம் தெரிவித்திருந்தது.

அந்த சமயத்தில் குழந்தைகள் டால்கம் பவுடரை பிரிட்டன் மற்றும் மற்ற உலக நாடுகளில் தொடர்ந்து விற்பனை செய்வோம் என அந்நிறுவனம் தெரிவித்திருந்தது.

ஜான்சன் & ஜான்சன் டால்கம் பவுடரில் ஆஸ்பெஸ்டாஸ் இருப்பதாகவும் அதனால் தங்களுக்கு புற்றுநோய் ஏற்பட்டதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் தொடர்ந்த வழக்குகளை அந்நிறுவனம் எதிர்கொண்டு வருகிறது.

படவுர் தயாரிப்புக்கு பயன்படும் கனிமம்

பூமியிலிருந்து எடுக்கப்படும் டால்க் எனும் கனிமத்தால் டால்கம் பவுடர் தயாரிக்கப்படுகிறது. அதன் இயற்கையான வடிவில் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய ஆஸ்பெஸ்டாஸ் எனும் பொருள் உள்ளது.

தங்கள் நிறுவனத்தின் டால்கம் பவுடர்களில் ஆஸ்பெஸ்டாஸ் இருப்பதை பல தசாப்தங்களாகவே ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் அறிந்திருப்பதாக, 2018ஆம் ஆண்டில் ராய்ட்டர்ஸ் செய்தி முகமை நடத்திய விசாரணையில் கூறப்பட்டிருந்தது.

டால்கம் பவுடர்

பட மூலாதாரம், AFP Contributor / Getty Images

அந்நிறுவனத்தின் ஆவணங்கள், விசாரணை சாட்சியங்கள் மற்றும் மற்ற ஆதாரங்களின்படி, குறைந்தது 1971ஆம் ஆண்டு முதல் 2000களின் முற்பகுதி வரை, ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் டால்க் மூலப்பொருள் மற்றும் முற்றிலும் தயாரிக்கப்பட்ட பவுடர்களில் சில சமயங்களில் சிறிதளவு ஆஸ்பெஸ்டாஸ் இருந்தது உறுதி செய்யப்பட்டதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

ஆஸ்பெஸ்டாஸ் கலந்திருப்பது குறித்த ஆதாரங்களுக்கு எதிர்வினையாக நீதிமன்றங்கள், ஊடக அறிக்கைகள் மற்றும் அமெரிக்க வழக்குரைஞர்களுக்கு அந்நிறுவனம் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து மறுத்துவந்தது.

கோடிக்கணக்கில் இழப்பீடு

கடந்த அக்டோபர் மாதம் ஜான்சன் & ஜான்சன் நிறுவனம், எல்.டி.எல் என்ற துணை நிறுவனத்தை உருவாக்கி டால்க் பவுடர் உரிமை கோரல்களை அந்நிறுவனத்திற்கு ஒதுக்கியது. அந்நிறுவனம் பின்னர் திவாலானதால், நிலுவையில் உள்ள வழக்குகள் இடைநிறுத்தப்பட்டன.

திவால்நிலையை தாக்கல் செய்வதற்கு முன், அந்நிறுவனத்திற்கு எதிரான தீர்ப்புகள் மற்றும் இழப்பீடு செலுத்துதல் காரணமாக, 3.5 பில்லியன் டாலர்கள் வரையிலான செலவுகளை அந்நிறுவனம் எதிர்கொண்டது, இதில் ஒரு வழக்கில் 22 பெண்களுக்கு சுமார் 2 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமாக இழப்பீடுகளை வழங்க நேர்ந்தது.

ஏப்ரலில், டால்கம் பேபி பவுடரின் உலகளாவிய விற்பனையை நிறுத்தக் கோரி பங்குதாரர் ஒருவர் முன்மொழிந்தது தோல்வியடைந்தது.

சுமார் 130 ஆண்டுகளாக ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் குழந்தைகள் பவுடர் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. குடும்பங்களுக்கு ஏற்றது என்ற பிம்பத்தின் அடையாளமாக அந்நிறுவனம் மாறியது.

நாப்கின்களால் ஏற்படும் சொறிகளை தடுப்பதற்கும், உலர் ஷாம்பூவாக பயன்படுத்துதல் உள்ளிட்ட அழகு சாதன பயன்பாடுகளுக்காகவும் குழந்தை பவுடர் பயன்படுகிறது.

காணொளிக் குறிப்பு, லம்பி வைரஸ்: எப்படி பரவுகிறது? அறிகுறிகள் என்ன?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: