தனது சொத்து விவரங்களை தவறாக குறிப்பிட்டாரா டிரம்ப்? - அதிகாரிகள் விசாரணைக்கு பதிலளிக்க மறுப்பு

    • எழுதியவர், பெர்ன்ட் டெபுஸ்மன் ஜுனியர்
    • பதவி, வாஷிங்டனிலிருந்து

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், வரி சலுகை பெறுவதற்காக தனது சொத்து விவரங்களை தவறாக குறிப்பிட்டதாக எழுந்த புகாரின் பெயரில் நடந்த விசாரணையில் பதிலளிக்க மறுத்துவிட்டார்.

இதனை அவர் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான விசாரணைக்கு டொனால்ட் டிரம்ப் புதன்கிழமையன்று நியூயார்க் அட்டர்னி ஜெனரல் அலுவலகத்திற்கு வந்தார்.

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், நியூயார்க் மாகாண அரசு நடத்தும் விசாரணையின் ஒரு பகுதியாக தனது குடும்பத்தின் வணிக நடவடிக்கைகள் குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்துவிட்டார்.

முன்னதாக, நியூயார்க் மாகாண அட்டர்னி ஜெனரல் அலுவலகத்தில் புதன்கிழமையன்று நடந்த விசாரணையைத் தடுக்கும் நோக்கில் டிரம்ப் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

சாதகமான கடன்களையும், வரிச்சலுகைகளையும் பெறுவதற்காக டிரம்ப் தனது சொத்து மதிப்பு குறித்து தவறான தகவல்களை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ள டிரம்ப், இந்த விசாரணை, அரசியல் உள் நோக்கத்துடன் நடக்கிறது என்றார்.

மன்ஹாட்டன் நகரிலுள்ள அவர் அலுவலகத்தில் விசாரணை நடந்த ஒரு மணிநேரத்திற்கு பிறகு, இது தொடர்பாக டிரம்ப் ஓர் அறிக்கையை வெளியிட்டார். அதில் அவர் நியூயார்க் அட்டர்னி ஜெனரல் லெட்டிடியா ஜேம்ஸையும், இந்த விசாரணையையும் விமர்சித்துள்ளார்.

"இத்தகைய நாடகத்துக்கு பல வருட உழைப்பும், கோடிக்கணக்கான டாலர்களும் செலவழிக்கப்பட்டுள்ளது. இதனால் எந்த பயனும் இல்லை. அமெரிக்காவின் அரசியலமைப்பின் கீழ் ஒவ்வொரு குடிமகனுக்கும் வழங்கப்படும் உரிமைகள் மற்றும் சலுகைகளின் கீழ் இந்த கேள்விகளுக்கு பதிலளிக்க நான் மறுத்துவிட்டேன்," என்று டிரம்ப் கூறியுள்ளார்.

இந்த விசாரணை புதன்கிழமையன்று நடந்தது என்றும், 'தன் மீதான குற்றச்சாட்டிற்கு எதிரான ஐந்தாவது சட்ட திருத்தத்தை பயன்படுத்தினார்," என்றும் லெட்டிடியா ஜேம்ஸ் அலுவலகம் தெரிவித்தது.

"இந்த விவகாரத்தை எங்கு கொண்டு சென்றாலும், அட்டர்னி ஜெனரல் ஜேம்ஸ் அவர்கள் உண்மைகயையும் சட்டத்தையும் பின்பற்றுவார். எங்கள் விசாரணை தொடரும்," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

"அமெரிக்க உளவுத்துறை புளோரிடாவில் அமைத்துள்ள டிரம்ப்புக்கு சொந்தமான எஸ்டேட் மார்-அ-லாகோவில் (Mar-a-Lago) முன் அறிவிப்பு இல்லாமல் சோதனை நடத்திய சில நாட்களுக்குப் பிறகு, அவரது வணிக நடவடிக்கைகள் குறித்து இந்த தனி விசாரணை நடந்தது. அதில் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

மேலும், அட்டர்னி ஜெனரலின் விசாரணை ஒரு பொதுத்துறை விசாரணையாக இருந்தாலும், மன்ஹாட்டன் மாகாண அட்டர்னி அலுவலகத்தால் மற்றொரு விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. இந்த விசாரணை குற்றவியல் குற்றச்சாட்டுகளாக மாறலாம்.

டிரம்ப் புதன்கிழமையன்று கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்ததற்கு காரணம், அவரது பதில்கள் குற்றவியல் விசாரணையில் அவருக்கு எதிராக பயன் படுத்தப்படலாம் என்று சட்ட ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஐந்தாவது சட்ட திருத்தத்தை பயன்படுத்தினார். இந்த சட்ட திருத்தம் கிரிமினல் வழக்கில் தங்களுக்கு எதிராக சாட்சியாக தாமே இருக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்து மக்களைப் பாதுகாக்கிறது.

இந்த விசாரணை சுமார் நான்கு மணி நேரம் நீடித்தது என்றும், இதில் நீண்ட இடைவேளைகளும் இருந்தது எனவும் டிரம்ப் வழக்கறிஞர் ரொனால்ட் பிஷெட்டி அமெரிக்க ஊடகத்திடம் தெரிவித்தார்.

அட்டர்னி ஜெனரலையும் அவரது விசாரணையையும் கண்டித்தும், டிரம்ப் தனது ஐந்தாவது திருத்த உரிமைகளை வலியுறுத்தியும் அவரது அறிக்கையைப் படிக்கத் தொடங்கினார்.

இந்த விசாரணை முடிவடைந்தவுடன், டிரம்ப் அல்லது அவரது நிறுவனத்திற்கு எதிராக நிதி அபராதம் கோரி வழக்குத் தொடர நியூ யார்க் மாகாண அட்டர்னி ஜெனரல் முடிவு செய்யலாம்.

முன்னதாக, டிரம்ப் மற்றும் அவரது இரு குழந்தைகளான இவான்கா மற்றும் டொனால்ட் டிரம்ப் ஜூனியர் ஆகியோரின் வாக்குமூலத்தை ஜேம்ஸ் ஆறு மாதங்களுக்கும் மேலாக கோரி வந்தார். இதற்கு அவரது குடும்பத்தினர் நியூயார்க் நீதிமன்ற அமைப்பு மூலம் எதிர்ப்பு தெரிவித்தனர்.

முன்னாள் அதிபரையும், அவரது குழந்தைகளையும் விசாரிப்பதைத் தடுக்கும் முயற்சியில் ஜேம்ஸ் மீது வழக்குத் தொடர டிரம்ப் வழக்கறிஞர்கள் முயன்றனர்.

ஆனால் பிப்ரவரி மாதம், நியூயார்க் உச்ச நீதிமன்ற நீதிபதி மூவரும் வாக்குமூலம் அளிக்கவேண்டும் என்று தீர்ப்பளித்தார். இவாங்கா மற்றும் டொனால்ட் டிரம்ப் ஜூனியர் ஆகியோர் இந்த மாத தொடக்கத்தில் விசாரிக்கப்பட்டனர்.

இந்த விசாரணையில்,'நிதி மோசடிக்கான சாத்தியமான ஆதாரங்கள்' கிடைத்துள்ளதாகவும், முன்னாள் அதிபரையும், அவரது இரண்டு குழந்தைகளையும் கேள்வி கேட்க, அட்டர்னி ஜெனரலுக்கு உரிமை வழங்குவதாக நீதிபதி கூறினார்.

நீதிபதியின் முடிவை ஜேம்ஸ் தனக்கான வெற்றி என்று பாராட்டினார்.

இந்த விசாரணை 2019ஆம் ஆண்டு முதன்முறையாக தொடங்கியது. டிரம்பும் அவரது நிறுவனமும் சாதகமான கடன்களையும், வரிச் சலுகைகளையும் பெறுவதற்காக சொத்து மதிப்பை தவறாகக் குறிப்பிட்டுள்ளனர் என்பதை இந்த விசாரணை நிரூபிக்க முயற்சி செய்கிறது. இந்த மோசடி டிரம்ப் பதவியேற்பதற்கு முன்பே நடந்ததாகக் கூறப்படுகிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: