தாலிபன்களின் கட்டுப்பாடுகளால் தவிக்கும் ஆப்கன் பெண்கள்: “இங்கு பெண்ணாக வாழ்வதே குற்றமா?"

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், லாரா ஓவென்
- பதவி, பிபிசி 100 பெண்கள்
"தெருவில் இருந்தவர்கள் என்னிடம் வந்து, என் முகத்தை மறைக்குமாறு கூறியது வேதனையாக இருந்தது. நான் சென்ற தையல்காரரும் கூட நான் பேசுவதற்கு முன்பு என் முகத்தை மறைக்குமாறு கூறினார்," என்கிறார் சோர்ச்யா.
காபூலில் ஒரு சிறு தொழில் செய்து வருகிறார் சோரயா. இந்த வாரம் மேற்கு காபூலில் உள்ள கடைகளுக்கு அவர் வழக்கமாகச் செல்வதைப் போல் சென்றபோது, சில விஷயங்கள் மாறியிருந்தன. தாலிபன் பிரதிநிதிகள் பெண்களுக்கான துணிக்கடைகளுக்குள் இருந்தபடி, கடை உதவியாளர்கள் என்ன விற்பனை செய்கிறார்கள் என்றும் தையல்காரர்களால் தயாரிக்கப்படும் ஆடைகளின் நீளம் பொருத்தமானதாகக் கருதப்படுகிறதா என்பதைக் கண்காணிக்கின்றனர்.
அது தனக்கு அச்ச உணர்வை ஏற்படுத்தியதாக சோரயா கூறுகிறார்.
ஆகஸ்ட் 2021-இல் தாலிபன்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்ததில் இருந்து, பெண்களின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் பல்வேறு கட்டளைகளை அவர்கள் பிறப்பித்துள்ளனர். அரசு வேலைகள், இடைநிலைக் கல்வி மற்றும் மஹ்ரம் அல்லது ஆண் பாதுகாவலர் இல்லாமல் 72 கிமீட்டர்களுக்கு பயணம் செய்வது ஆகியவற்றுக்குத் தடை விதித்தனர்.
ஆப்கனில் உள்ள சில பெண்கள், முகத்திரையைப் பயன்படுத்துவது குறித்த அரசாணை அவர்களுடைய மனித உரிமைகள் மீதான அடுத்த தாக்குதல் எனக் கூறுகிறார்கள்.
"ஆப்கானிஸ்தானில் ஒரு பெண்ணாக இருப்பதே குற்றம் போல இருக்கிறது. எனக்கு ஆடை விஷயத்தில் அவர்கள் என்ன தேர்வு செய்கிறார்கள் என்பது முக்கியமில்லை. நான் எப்படியும் என் வீட்டை விட்டு வெளியேறும் நிலை இல்லை. நிலைமை மிகவும் நம்பிக்கையற்று இருக்கிறது," என்று தாலிபன் கையப்படுத்தியதால் வேலையை இழந்து பொருளாதார ரீதியாகச் சிரமப்படும் சனா கூறுகிறார்.
ஆண் பாதுகாவலர் பொறுப்பு
பெரும்பாலான ஆப்கன் பெண்கள் ஏற்கெனவே தலை மற்றும் கழுத்தை மறைக்கும் ஹிஜாப் அணிந்துள்ளனர். ஆனால், புதிய கட்டுப்பாடுகளின்படி பெண்கள் முழு நிகாப் (கண்கள் பகுதியில் மெல்லிய இடைவெளி கொண்ட முகத்திரை) அணியவேண்டும்.
இது அவர்களின் மஹ்ரம் அல்லது ஆண் பாதுகாவலர், பொதுவாக நெருங்கிய ஆண் உறவினராக இருப்பார். அவர்கள் வீட்டுப் பெண்களின் ஆடையைக் கண்காணிக்க வேண்டும். இல்லையெனில் அவர்கள் தண்டனையை எதிர்கொள்ள நேரிடும். அமைச்சக அதிகாரிகளைச் சந்திக்க அனுப்பப்படலாம், நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்டு, மூன்று நாட்கள் சிறையில் அடைக்கப்படலாம்.
புதிய கட்டுப்பாடுகளின் தாக்கத்தை உணர்ந்த சில பெண்கள் தங்கள் பாதுகாப்பைப் பணயம் வைத்துக் குரல் கொடுக்கின்றனர்.

பட மூலாதாரம், Getty Images
காபூலில் ஒரு குழு இந்த வாரம் மரபு ஆப்கானிய ஆடைகளை அணிந்து ஆடை குறித்த அரசாணையை எதிர்த்துப் போராட்டம் நடத்தியது.
"கடந்த 8 மாதங்களில் தாலிபன்கள் எங்களின் ஆடைகளை கண்காணிப்பதைத் தவிர எங்களுக்கு எதுவும் செய்யவில்லை. அரசியல் மற்றும் பொருளாதார நிலையின்மை நிலவுகிறது. தாலிபன்கள் இந்த பிரச்னைகளுக்கு முன்னுரிமை கொடுத்து தீர்க்கவில்லை," என்று எதிர்ப்பாளர் மரியம் கூறுகிறார்.
சில எதிர்ப்பாளர்கள் பிபிசியிடம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றபோது தாலிபன் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டதாகக் கூறினர்.
"அவர்கள் என்னை இரண்டு மணிநேரம் அதே இடத்தில் நிற்க வைத்தார்கள். என் கைபேசியை எடுத்துக்கொண்டு, என்னை காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்வதாக மிரட்டினார்கள்," என்று ஹாஜிரா கூறினார்.
பிபிசி ஆப்கானிஸ்தான் சேவை இந்த சம்பவம் குறித்த தாலிபன்களின் கருத்தைத் தெரிந்துகொள்ள தொடர்புகொண்டது. ஆனால், பதில் கிடைக்கவில்லை.
தெருக்களில் எதிர்ப்பு
காபூலில் உள்ள பெண்ணுரிமை ஆர்வலர் அனோஷா, தானும் ஒரு நிலைப்பாட்டை எடுக்க முடிவு செய்ததாகக் கூறினார். "அரசாணை வெளியிடப்பட்ட முதல் நாள், நான் எனது 12 வயது மகனுடன் வேண்டுமென்றே எனது சாதாரண உடையை அணிந்துகொண்டு, என் முகத்தை மறைக்காமல் நகரப் பகுதிகளுக்குச் சென்றேன். தாலிபன் உறுப்பினரை எதிர்நோக்கி சவால் விட வேண்டும் என நினைத்தேன்," என்கிறார்.
தனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்று கூறும் ஷேக்பா, அதிகாரிகளுடனான அவருடைய சண்டைக்குப் பிறகும் கூட, தான் ஆடை அணியும் விதத்தை மாற்றுவதற்கான எந்த அழுத்தத்தையும் எதிர்த்துப் போராடுவேன் எனச் சபதம் செய்கிறார். பல்கலைக்கழகத்திற்குச் செல்லும் வழியில், சரியான உடை எனக் கூறப்பட்டதை அணியாததற்காக ஒரு தாலிபன் அதிகாரி அவரைத் தடுத்து நிறுத்தினார்.

"அந்த ஆடையை அணிந்தால் மிகவும் வெப்பமாக இருப்பது குறித்து அவரிடம் நியாயப்படுத்த முயன்றேன். ஆனால், அவர் வற்புறுத்தியபோது நான் என் முகத்தை மறைக்க வேண்டியிருந்தது," என்று அவர் கூறுகிறார்.
ஷேக்பா பேசியபோது, ஆப்கன் சமூகத்தில் தனது ஆடை விஷயத்தில், தனது குடும்பத்தின் ஆண் உறுப்பினர்கள் உட்பட அனைவரிடம் இருந்தும் எப்போதும் அழுத்தத்தை உணர்ந்ததாகக் கூறினார்.
"வித்தியாசம் என்னவென்றால், நான் இப்போது என் குடும்பத்தோடு மட்டுமின்றி தாலிபன் அதிகாரிகளுடனும் இருமுனைகளில் சண்டையிடுகிறேன். எனக்கு பயமாக உள்ளது. இருப்பினும், அதை எதிர்த்துப் போராடுவதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை," என்று அவர் கூறுகிறார்.
பயணக் கட்டுப்பாடுகள்
இது மட்டுமே அவர் எதிர்கொள்ளும் தடையல்ல. ஷேக்பா ஈரானில் கல்வி உதவித்தொகையுடன் படிப்பதற்காக முயன்றபோது, விமானத்தில் ஏறவிடாமல் நிறுத்தப்பட்டார்.
மார்ச் மாதத்தில், மஹ்ரம் இல்லாமல் பெண்கள் உள்நாட்டு அல்லது சர்வதேச விமானங்களில் ஏறுவதைத் தடுக்க தாலிபன் கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தியது. மேலும், சாலை மார்க்கமாக நீண்ட தூரம் பயணம் செய்ய விரும்பும் பெண்களுக்கு, ஆண் உறவினர் இருந்தால் மட்டுமே போக்குவரத்து வசதி செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

பட மூலாதாரம், RUKHSHANA MEDIA
"என்னுடன் யாரையும் ஈரானுக்கு அழைத்துச் செல்ல முடியாது என்று தாலிபன்களிடம் விளக்க முயன்றேன். அவர்கள் அதைக் கேட்கவில்லை," என்கிறார் ஷேக்பா.
ஷேக்பாவை போலவே, ஃபெரெஷ்தாவும் தனது எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படுகிறார். அவர் ஒரு வயதாக இருந்தபோது அவருடைய தந்தை இறந்துவிட்டார். அவருடைய வீட்டில் ஆண் யாரும் இல்லாதது, அவருடைய செயல்பாடுகளை பெரியளவில் கட்டுப்படுத்துகிறது.
வீட்டிற்கு வெளியே சென்று வேலை செய்யும் உரிமைக்காக, அவர் தனது குடும்பத்திடம் நீண்டகாலமாகப் போராடினார். அவர் ஒரு சமூக சேவகியாக வேலை செய்தார். தனது சகோதரியுடன் மாநாடுகளுக்குப் பயணம் செய்தார்.
"பல்கலைக்கழக படிப்பை முடித்ததும் வெளிநாட்டில் கல்வியைத் தொடரலாம், முதுகலை பட்டம் மேற்கொள்ளலாம் என்று எதிர்பார்த்தேன். ஆனால், இப்போது அந்த நம்பிக்கை இல்லை." என்கிறார்.
யூனியில் இருந்து ஒரு குறிப்பு
இந்த வாரம் ஃபெரெஷ்தா தனது பேராசிரியர்களிடம் இருந்து ஓர் அறிவிப்பைப் பெற்றார். அவரும் அவரது பெண் வகுப்புத் தோழிகளும் ஆடை கட்டுப்பாடு தொடர்பான தாலிபனின் புதிய விதிகளுக்குக் கீழ்படிய வேண்டும் என்று பேராசிரியர் வலியுறுத்தியுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
ஆனால், அவருடைய வகுப்புத் தோழிகள் சிலருக்கு கதை வேறு மாதிரியானது. "அவர்கள் முழுவதுமாக முகத்தை மறைத்துக் கொள்வதாக அவர்கள் என்னிடம் கூறினார்கள். ஏனெனில், அவர்களின் தந்தைகள் பின்விளைவுகளைப் பற்றி எச்சரித்துள்ளனர்," என்கிறார் ஃபெரெஷ்தா.
ஹெராத் பல்கலைக்கழக பட்டதாரி நஜ்மா, பெண்ணுரிமைகள் விஷயத்தில் சர்வதேச சமூகம் தாலிபன்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டிய நேரம் இது எனக் கருதுகிறார்.
"இந்த முட்டாள்தனமான விதிகளுக்குக் கீழ்படிவதைத் தவிர வேறு வழியில்லை என்று உணர்கிறேன். இது என்னை நோகடிக்கிறது. நான் மிகவும் பலவீனமாக உணர்கிறேன்," என்று அவர் கூறுகிறார்.
"இந்த நிலைமை எவ்வளவு மோசமானது என்பதை என்னால் விவரிக்க முடியவில்லை. பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு அழுத்தம் கொடுத்து எங்களைக் கூண்டில் அடைக்கிறார்கள்." என்கிறார்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













