You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கென்யாவில் விடுதலையான பின்னும் சிறையில் இருந்து வெளியேற மறுக்கும் முஸ்லிம் மதகுரு
- எழுதியவர், எம்மானுவேல் இகுன்சா
- பதவி, பிபிசி நியூஸ், நைரோபி
தம்மைத் தீவிரவாதக் குற்றச்சாட்டுகளில் இருந்து நீதிமன்றம் முழுமையாக விட்டுவித்துள்ள போதிலும் சிறையில் இருந்து விடுதலை செய்ய வேண்டாம் என்று கென்யாவில் உள்ள ஒரு முஸ்லிம் மதகுரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தீவிரவாத குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி, சிறையில் இருந்து விடுதலையானவர்கள் அரசின் ஆட்களால் கடத்தப்பட்டு கொல்லப்பட்டதாகக் கூறும் மதகுரு ஷேக் கயோ கார்சோ புரூ, தமக்கும் அதுபோலவே நடக்கலாம் என்று அச்சம் தெரிவித்துள்ளார்.
2018ஆம் ஆண்டு இவர் கைது செய்யப்பட்டார்; அப்பொழுது தீவிரவாத குழுக்கள் தொடர்புடைய ஆவணங்களை வைத்திருந்ததாகவும் சோமாலியாவில் இருந்து இயங்கும் அல்-ஷபாப் தீவிரவாதக் குழுவுடன் சேர்ந்து இயங்கியதாகவும் இவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
இவரது வேண்டுகோளை அடுத்து தற்போது அவரை மேலும் 30 நாட்கள் சிறையிலேயே இருக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
மதகுரு சேக் புரூவுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை நிரூபிக்க அரசு தரப்பு தவறிவிட்டதாக நைரோபியில் உள்ள 'மிலிமானி' சட்ட நீதிமன்றம் முன்னதாகக் கூறியிருந்தது.
சேக் புரூ விடுதலை செய்யப்பட்டால் அவருக்கு அரசு பாதுகாப்பு அளிக்கும் என்ற உத்தரவாதத்தை வழங்க வேண்டும் என்றும் அவரது வழக்கறிஞர் உயர் நீதிமன்றத்தில் கோரியிருந்தார்.
மதகுரு சேக் புரூ சிறையிலேயே தொடர்ந்து இருக்க அனுமதிக்கப்பட்டாலும் 'கமிட்டி மேக்சிமம் ப்ரிசன்' எனும் அந்த சிறைச்சாலையில் அவர் தங்குவதற்கு பணம் செலுத்த வேண்டும் என்று நீதிபதி வெண்டி மிசேனி உத்தரவிட்டுள்ளார்.
கமிட்டி சிறை அங்கு நடக்கும் குற்றச் செயல்களுக்காகப் பெரிதும் அறியப்பட்டது. அந்த சிறைச்சாலையிலேயே தாம் தொடர்ந்து தங்கியிருக்க வேண்டும் என்று மதகுரு விரும்புகிறார் என்றால் அவர் எந்த அளவுக்கு தமது உயிர் குறித்த அச்சம் கொள்கிறார் என்பதை உணர முடிகிறது.
சோமாலியாவில் இருந்து இயங்கும் இஸ்லாமிய அமைப்பான அல்-ஷபாப் குழுவுடன் தொடர்புடையவர்களாக சந்தேகிக்கப்பட்ட இஸ்லாமிய மதகுருக்கள் கடந்த காலங்களில் கொல்லப்பட்டுள்ளனர்.
ஆனால் அந்தக் கொலையில் தங்களுக்கு எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று அதிகாரிகள் மறுத்து வருகின்றனர்.
''தீவிரவாத குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான பின்பு விடுதலையானவர்கள் பின்பு இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டனர்; தாமும் அவ்வாறு கொல்லப்படலாம் என்று அவரது அச்சம் நியாயமானதே,'' என்று மதகுருவின் வழக்குரைஞர் ஜான் கமின்வா பிபிசியிடம் தெரிவித்தார்.
ஏப்ரல் 2014ல் 'மக்காபுரி' என்று அறியப்பட்ட அபூபக்கர் ஷரீப் அகமது மொம்பாசாவில் உள்ள நீதிமன்ற அறையில் இருந்து வெளிவரும் போது சுட்டுக் கொல்லப்பட்டார். அதன் பின்பு இந்தக் கடற்கரை நகரத்தில் மேலும் இரு இமாம்கள் கொல்லப்பட்டனர்.
இந்தக் கொலைக்கு நான்கு மாதங்களுக்கு முன்னர், ''கென்யாவில் உள்ள நீதிமன்ற அமைப்புகள் காவல்துறைக்கு ஆதரவாகச் செயல்படுவதில்லை; எனவே நாங்கள் அவர்களைக் கொல்ல முடிவு எடுக்கிறோம்,'' என்று அல்-ஷபாப் உடன் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் நபர்கள் குறித்து கென்யாவைச் சேர்ந்த தீவிரவாத தடுப்பு காவல்துறை அலுவலர் ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
1973ஆம் ஆண்டு முதல் வழக்குரைஞராகப் பணியாற்றும் ஒருவர் தொடர்ந்து சிறையிலேயே இருக்க விரும்புவதைக் கண்டதில்லை என்று ஜான் கமின்வா கூறுகிறார்.
மதகுரு ஷேக் கயோ கார்சோ புரூ கைது செய்யப்பட்ட பின்பு மார்சாபிட் நகரத்தில் போராட்டங்கள் நடைபெற்றதாகக் கூறும் ஜான் கமின்வா, அவரை ஒரு நல்ல மனிதராகவும் ஆசிரியராகவுமே உள்ளூர் மக்கள் அறிவார்கள்; அவருக்கு எதிரான தீவிரவாத குற்றச்சாட்டுகளை மக்கள் நம்பவில்லை என்று கூறினார்.
அம்னேஸ்டி இன்டர்நேஷனல் மற்றும் பிற மனித உரிமை அமைப்புகள் கென்ய நாட்டு காவல்துறையினர் சட்டத்திற்குப் புறம்பாக கடத்தல்களிலும் கொலைகளிலும் ஈடுபடுவதாகக் குற்றம் சாட்டுகின்றனர்.
கடந்த ஆண்டு மட்டும் 33 பேர் வலுக்கட்டாயமாகக் காணாமல் ஆக்கப்பட்டதாக அம்னெஸ்டி கூறுகிறது. ஆனால் இந்தக் குற்றச்சாட்டுகளை கென்ய காவல்துறை மறுக்கிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்