You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
யுக்ரேன் மீது ரஷ்யா படையெடுப்பை தொடங்கிய முந்தைய நாள் சீனா சைபர் தாக்குதலில் ஈடுபட்டதா?
- எழுதியவர், கோர்டன் கொரெரா
- பதவி, பாதுகாப்புத் துறை செய்தியாளர், பிபிசி நியூஸ்
யுக்ரேன் மீது ரஷ்யாவின் படையெடுப்பு தொடர்ந்து வரும் நிலையில், சீனாவின் சைபர் நடவடிக்கை குறித்த குற்றச்சாட்டுகள் வர தொடங்கியுள்ளன.
அதன் விவரங்கள் மிகவும் தீவிரமாக உள்ளன. ஆனால், இது வேவுபார்க்கும் வேலையே என்று மேற்கத்திய உளவுத்துறை அதிகாரி ஒருவர் நம்புகிறார். இந்த சைபர் தாக்குதல்கள் நாம் நினைப்பதைவிட பரவலாக இருக்கலாம்.
இந்த ஹேக்கர்கள் பிப்ரவரி 23 ஆம் தேதியன்று, அதாவது யுக்ரேன் மீது ரஷ்யா படையெடுப்பு தொடங்குவதற்கு ஒரு நாளைக்கு முன், யுக்ரேனிய வலைதளங்களை குறிவைத்தாக முதலில், 'தி டைம்ஸ் ' என்ற ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டது. அவர்கள் சீனாவை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று குற்றச்சாட்டப்படுகிறது.
இது ரஷ்ய அரசின் திட்டங்களை பற்றி அவர்களுக்கு (சீனாவுக்கு) முன்னதாக தெரிவிக்கப்பட்டதா என்ற கேள்விகளை எழுப்பியுள்ளன.
மேலும், அவர்களின் நோக்கம் ரஷ்யாவை ஆதரிப்பதாக இருந்ததா என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
யுக்ரேனிய அரசு மற்றும் வணிக நிறுவனங்கள் பரவலாக குறிவைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதில் அணுசக்தியுடன் தொடர்புடைய நிறுவனங்களும் அடங்கும்.
இந்த நடவடிக்கைகள் எவ்வளவு தூரம் பாதிப்புகளை ஏற்படுத்தியது என்றும், எவ்வளவு இணையதளங்கள் ஹேக் செய்யப்பட்டன என்ற விவரங்களும் தெளிவாக இல்லை.
ஆனால், வேவு பார்ப்பதே இதன் நோக்கமாக தெரிகிறது. ரஷ்ய படையெடுப்புக்கு முன்பும், பின்னும் ரஷ்யா நடத்தியதாக கூறப்படும் கொடூரமான நடவடிக்கைகளை காட்டிலும், ரகசியங்களை திருடுவதே அதன் நோக்கமாக இருந்ததாக தெரிகிறது.
உளவுத்துறை ஆவணங்களை தி டைம்ஸ் மேற்கொள்ளிட்டு காட்டியுள்ளது. ஆனால் இந்த குழப்பத்தை மேலும் வலுப்படுத்தும் விதமாக, தாங்கள் எந்த விவரங்களையும் அளிக்க வில்லை என்று யுக்ரேனிய பாதுகாப்பு சேவை கூறியுள்ளது. இந்த விவகாரத்தை அச்சேவை மட்டுப்படுத்துவதாக தெரிந்தது.
சீன அரசை பகைத்துக்கொள்வது குறித்து அவர்கள் கவலைப்படுகின்றார்களா என்று சில ஆய்வாளர்கள் சந்தேகங்களை எழுப்பினர்.
திங்கள்கிழமையன்று, பிரிட்டனில் உள்ள சீன தூதரகம் இந்த கூற்றை நிராகரித்துள்ளது. தி டைம்ஸ் செய்தி அறிக்கை முற்றிலும் பொறுப்பற்ற பேச்சு என்றும், ஆதாரங்களற்றது எனவும் கூறியுள்ளது.
குறிவைக்கப்பட்ட ரஷ்யா
ஆனால், இந்த விவகாரம் மேலும் சிக்கலானதாக இருக்கும் என்று சில மேற்கத்திய அதிகாரிகள் நம்புகின்றனர். ரஷ்யா, பெலாரூஸ் மற்றும் போலாந்து ஆகிய நாடுகளில் உள்ள அமைப்புகளை சீன ஹேக்கர்கள் குறிவைத்தாக அவர் கூறுகின்றனர்.
"பிப்ரவரி மாத இறுதியில் இருந்து, யுக்ரைன், ரஷ்யா மற்றும் பெலாரூஸ் ஆகிய நாடுகளில் உள்ள அரசு மற்றும் ராணுவ நெட்வொர்க்குகளுக்கு எதிராக சீன சைபர் ஹேக்கர்கள் சைபர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்" என்று மேற்கத்திய உளவுத்துறை அதிகாரி ஒருவர் கூறுகிறார்.
"சமீபத்திய சீன சைபர் செயல்பாட்டின் குறிப்பிடத்தக்க இலக்காக ரஷ்யா காணப்பட்டது," என்று அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
இந்த கூற்றை சுயாதீனமாக சரிபார்க்க முடியாது. இருப்பினும் பல ஆராய்ச்சியாளர்கள் மற்றும் சைபர்-பாதுகாப்பு நிறுவனங்கள் தாங்கள் சில சீன நடவடிக்கைகளை பார்த்ததாகவும், விசாரணை செய்து வருவதாகவும் கூறுகின்றனர்.
இதில் பிற வினோதமான விஷயங்களும் உள்ளன. தாக்குதல்கள் இயல்பை விட அதிக மேம்போக்காகவும், சற்றே வெளிப்படையாகவும் இருந்தது. இது ஹேக்கர்கள் கண்டுபிடிக்கப்படுவதைப் பற்றி பெரியதாக கவலைப்படாதது போல தெரிந்தது.
மேலும் குற்றச்சாட்டப்படும் சீன ஹேக்கர்கள், சாதாரண போக்கில் இருந்து மாறி, மேற்கத்திய உள்கட்டமைப்பில் இருந்து தங்கள் செயல்பாட்டை ஆரம்பித்ததாக கூறப்படுகிறது.
பொதுவாக, அவர்கள் உலகம் முழுவதும் உள்ள சேவையகங்களையும், அமைப்புகளையும் பயன்படுத்தி தங்கள் இலக்கை அணுகுவார்கள். ஆனால் இந்த விஷயத்தில் அவர்கள் மேற்கத்திய அமைப்புகளில் இருந்து மட்டுமே பயன்படுத்தியுள்ளனர்.
"செயல்பாட்டின் அளவு, நேரம் மற்றும் இலக்குகள் குறிப்பிடத்தக்க விடைபெறுத்தலை குறிக்கின்றன", என்று மேற்கத்திய உளவுத்துறை அதிகாரி கூறினார்.
மேற்கத்திய நாடுகள் மீது பழி சுமத்தும் செயலா?
தங்கள் நாடு சைபர் உளவுப் பணியில் ஈடுபட்டுள்ளது என்ற குற்றச்சாட்டை சீனா எப்போதும் நிராகரித்து வருகிறது. மேலும் சமீபத்தில் மேற்கத்திய அரசுகள், குறிப்பாக அமெரிக்கா, அதன் நெட்வொர்க்குகளை ஹேக்கிங் செய்வதை சீனா சுட்டிக்காட்டியுள்ளது.
"யுக்ரேன் மற்றும் ரஷ்யாவை குறிவைத்தது மறைமுகமாக நடத்தப்பட்டது. இதற்கு ஒரு சாத்தியமான காரணம் மற்ற நாடுகள் மீது பழி சுமத்த முயற்சிப்பது" என்று உளவுத்துறை அதிகாரி விளக்கினார்.
யுக்ரேன் மட்டுமின்றி ரஷ்யா, பெலாரூஸ் மற்றும் பிற நாடுகளிலும் நடக்கும் போர் சூழலை, சீனா உளவு பார்ப்பதற்கான சமயமாக பயன்படுத்திக் கொண்டது . ஆனால் ஒரு போலி தோற்றத்தை பயன்படுத்தி அவ்வாறு செய்ய முயற்சித்திருக்கலாம். அதனால் மேற்கத்திய அரசுகள் மீது சீனா பழிசுமத்த முயற்சி செய்திருக்கலாம்.
இது ஒரு சாத்தியம். ஆனால் சீன அரசு மறுக்க வாய்ப்பு உள்ளது. இந்த விவகாரத்தில் உண்மையில் என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்வது எளிதானது அல்ல.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்