பாகிஸ்தான் அரசியல் நெருக்கடி: இம்ரான்கான் அரசு நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தப்புமா? - என்ன நடக்கிறது?

பட மூலாதாரம், ANI
- எழுதியவர், ஷூமைலா ஜாஃபரி
- பதவி, பிபிசி நியூஸ், இஸ்லாமாபாத்
ரஷ்யா - யுக்ரேன் போர் மீது உலகின் கவனம் குவிந்துள்ள நிலையில், பாகிஸ்தானில் ஒரு அரசியல் நாடகம் அரங்கேறிவருகிறது. பிரதமர் இம்ரான் கானின் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முக்கிய எதிர்க்கட்சிகள் தீர்மானம் ஒன்றை சமர்ப்பித்துள்ளன. இந்த நடவடிக்கையை எதிர்கொள்ளவும், தனது அரசு மீதான "தவறான நிர்வாகம் மற்றும் திறமையின்மை" குறித்து வளர்ந்து வரும் விமர்சனங்களை அடக்கவும் இம்ரான் கான், சமீபத்தில் பெட்ரோல் மற்றும் மின்சார கட்டணங்களை குறைத்தார். ஆனால், தனது அரசை அவரால் காப்பாற்ற முடியுமா?
தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஓரளவு குறைவான வருமானம் பெறும் மக்கள் வாழும் ஒரு பகுதியின் சாலையோரத்தில் ஷாஜாத் கான் தனது வண்டியில் பழங்களை அடுக்கிக்கொண்டிருந்தார். வாடிக்கையாளர்களின் வருகைக்காக அவர் காத்திருக்கத்தொடங்கி மணிக்கணக்காகி விட்டது. ஆனால் இதுவரை யாரும் வரவில்லை.
"வியாபாரம் இவ்வளவு மோசமாக இருந்ததில்லை. மக்கள் நாள் முழுவதும் நடைபாதைக்கு அருகில் தங்கள் கார்களை நிறுத்தி பழங்களை வாங்குவார்கள். ஆனால், இப்போது பழங்களின் விலை மிக அதிகமாகிவிட்டதால், பலராலும் அவற்றை வாங்க முடியவில்லை," என்று அவர் கூறினார்.
ஷாஜத் கான் ஒரு தீவிர இம்ரான் கான் ஆதரவாளர் மற்றும் வாக்காளர். ஆனால், இப்போது தான் ஏமாற்றமடைந்ததாக அவர் கூறுகிறார்.
"நான் பிடிஐ பாகிஸ்தான் தெஹரீக் இ இன்சாஃப்)க்கு வாக்களித்தேன். இம்ரான் கானிடம் எனக்கு பல எதிர்பார்ப்புகள் இருந்தன, ஆனால், நிலைமையைப் பாருங்கள், வாழ்க்கை மிகவும் கடினமாகிவிட்டது. அவர் எங்களை ஏமாற்றிவிட்டார். ஆட்சிக்கு வருவதற்கு முன் ஏழைகளுடன் இருப்பதாக கூறினார். ஆனால், எங்களுக்கு எதுவும் செய்யவில்லை," என்று அவர் குற்றம் சாட்டினார்.
நம்பிக்கையில்லா தீர்மானம்
பணவீக்கம் உயர்ந்து, இம்ரான் கானின் புகழ் ஊசலாடிக்கொண்டிருக்கும் நேரத்தில் எதிர்க்கட்சிகள் இம்ரான் கானை பிரதமர் பதவியில் இருந்து நீக்க நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதாக அறிவித்துள்ளன.
இந்த நடவடிக்கையின் முன்னணியில் பாகிஸ்தான் ஜனநாயக இயக்கம் (PDM) என்ற கூட்டணி உள்ளது. ஒரு சில வாரங்களுக்கு முன்பு லாகூரில் நடந்த கூட்டத்திற்குப் பிறகு, PDM இன் தலைவர் மௌலானா ஃபஸ்ல்-உர்-ரஹ்மான், "இந்த முறைகேடான ஆட்சியாளருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர PDM-ல் உள்ள எல்லா கட்சிகளும் ஒப்புக்கொண்டுள்ளன" என்று அறிவித்தார்.
"மேலும் இந்த நோக்கத்திற்காக, நாங்கள் அரசுக்கு ஆதரவளிக்கும் கூட்டணி கட்சிகளை தொடர்புகொள்வோம். மேலும், இந்த நாட்டு மக்கள் மீது கருணை காட்டுமாறும், அரசுக்கு ஆதரவளிப்பதை நிறுத்துமாறும் அவர்களிடம் கேட்டுக்கொள்வோம்," என்றார் அவர்.

பட மூலாதாரம், Getty Images
அறிவிப்புக்குப் பிறகு, எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் குழுக்களிடையே நடத்தப்பட்ட பல்வேறு சந்திப்புகளைத் தொடர்ந்து, தீர்மானத்தை வெற்றியடையச் செய்ய எதிர்க்கட்சிகளுக்கு போதுமான வாக்குகள் இல்லாததால், பிடிஐயின் கூட்டணிக் கட்சிகளுடன் தொடர்புகள் ஏற்படுத்தப்பட்டன.
பாகிஸ்தானின் அரசியலமைப்புச் சட்டத்தின்படி, நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு தனிப்பெரும்பான்மை மட்டுமே தேவை. நாடாளுமன்றத்தில் 342 உறுப்பினர்கள் உள்ளனர், அதாவது 172 உறுப்பினர்கள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தால், இம்ரான் கான் பதவி விலக வேண்டும்.
ஆளும் பிடிஐக்கு, 155 இடங்கள் உள்ளன. மேலும், அது தன் கூட்டணிக் கட்சிகளின் உதவியுடன் அரசை நடத்துகிறது. அவர்களில் பெரும்பாலானவர்கள் நாட்டின் பாதுகாப்பு அமைப்புக்கு நெருக்கமானவர்கள் என்ற ஒரு கருத்தும் நிலவுகிறது.
அணிவகுப்புகள் மற்றும் கூட்டங்கள்
பாகிஸ்தான் முஸ்லிம் லீக் குவாய்த்-இ-ஆஸாம் (பிஎம்எல்-கியூ) மற்றும் முத்தஹிதா குவாமி இயக்கம் (எம்க்யூஎம்) ஆகியவை அரசின் முக்கிய கூட்டாளிகளாக உள்ளன. அரசில், வாக்குறுதியளிக்கப்பட்ட பங்கும் உரிய முக்கியத்துவமும் கிடைக்கப்பெறவில்லை என கடந்த காலங்களில் பகிரங்கமாக தமது குறைகளை இக்கட்சிகள் வெளிப்படுத்தியுள்ளன.
தீர்மானத்தை வெற்றியடையச் செய்ய, பிடிஐ தலைமையிலான அரசுடனான கூட்டணியை முறித்து, அவர்களை தங்கள் பக்கம் கொண்டு வருவதைத்தவிர எதிர்க்கட்சிகளுக்கு வேறு வழியில்லை என்று தோன்றுகிறது. தற்போதைய அரசியல் சூழ்நிலையில் கூட்டணி கட்சிகள் கிங் மேக்கர்களாக மாறிவிட்டனர்.
PML-N இன் தலைவர் ஷாபாஸ் ஷெரீப் பதினான்கு ஆண்டுகளுக்குப் பிறகு லாகூரில் PML-Q தலைமையைச் சந்தித்து தீர்மானத்திற்கு ஆதரவை கோரினார். ஆனால், அரசின் கூட்டாளிகளிடமிருந்து வரும் செய்தி தெளிவற்றதாக உள்ளது. ஒருபுறம், அவர்கள் இம்ரான் கானை சமாதானப்படுத்துகிறார்கள், ஆனால் அதே நேரத்தில் எதிர்க்கட்சிகளுக்கு சாதகமான சமிக்ஞைகளையும் அளிக்கிறார்கள். கடந்த ஆண்டு PDMல் இருந்து நீக்கப்பட்ட பாகிஸ்தான் மக்கள் கட்சியும், இம்ரான் கானுக்கு எதிராக ஐக்கிய முன்னணியை உருவாக்க கூட்டு சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
பிலாவல் புட்டோ சர்தாரி தலைமையில் இம்ரான் கானின் அரசை அகற்றுவதற்கான அணிவகுப்பு நடைபெற்றது. "மக்கள் அணிவகுப்பு" 27 ஆம் தேதி கராச்சியில் இருந்து புறப்பட்டு பத்து நாட்களுக்குப் பிறகு இஸ்லாமாபாத்தை வந்தடைந்தது. அணிவகுப்பின் போது ஆற்றிய உரைகளில், பிலாவல் புட்டோ சர்தாரி, இம்ரான் கானை பதவியை விட்டு வெளியேறுமாறு பலமுறை எச்சரித்தார். இல்லையெனில் 'மக்கள் அணிவகுப்பு' அவரை அகற்றும் என்றும் அவர் கூறினார்.
அரசை பதவி விலகச்செய்ய நெருக்குதல் அளிக்கும் பொருட்டு PDM, மார்ச் 23 ஆம் தேதி "விலையேற்றத்திற்கு எதிரான அணிவகுப்பு" ஒன்றையும் அறிவித்துள்ளது.
அரசு பதறவில்லையா?
எதிர்க்கட்சிகளின் அறிவிப்புகளைப் பற்றி உண்மையில் கவலைப்படவில்லை என்று அரசு கூறுகிறது. தகவல்துறை அமைச்சர் ஃபவாத் செளத்ரி பிபிசியிடம் பேசுகையில், இம்ரான் கானின் அரசை அகற்ற எதிர்க்கட்சிகள் முயற்சிப்பது இது பதின்மூன்றாவது தடவை என்றும், அவர்களின் அச்சுறுத்தல்கள் தங்களை கவலைக்குள்ளாக்கவில்லை என்றும் தெரிவித்தார்.
"இது வேறுவழி இல்லாமல் செய்யப்படும் ஒரு நடவடிக்கை, இப்போதும் இம்ரான் கானை பதவி நீக்கம் செய்ய முடியவில்லை என்றால், அவர் அடுத்த முறை மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு ஏதுவாக போதுமான பணிகளைச்செய்துவிடுவார் என்று அவை அஞ்சுகின்றன," என்றார் அவர்.
"அவர்களிடம் பிரதமர் பதவிக்கு ஒரு கூட்டு வேட்பாளர் இல்லை. அவர்களுக்கு ஒருமித்த கருத்து அல்லது கூட்டு உத்தி இல்லை. அவர்கள் மக்களை முட்டாளாக்குகிறார்கள்" என்று ஃபவாத் கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
இருப்பினும், இந்த அறிவிப்பு வெளியானதில் இருந்து, பிரதமர் இம்ரான் கான் உட்பட பிடிஐ தலைமை, ஆதரவைத் தக்கவைக்க தங்கள் கூட்டணிக் கட்சிகளை அணுகி வருகிறது. இம்ரான் கான் PML-Q தலைமையை சந்தத்தார். MQM மற்றும் பிற கூட்டணி கட்சிகளுடன் தொடர்பில் உள்ளார். கட்சிக்குள் இருந்து விலகிய உறுப்பினர்களை மீண்டும் இணைக்கவும் முயற்சி செய்து வருகிறார்.
விண்ணை முட்டும் பணவீக்கத்தால் உயிர்வாழ சிரமப்பட்டுக்கொண்டுருக்கும் குடிமக்களுக்கு நிவாரண திட்டத்தையும் பிரதமர் அறிவித்தார். எரிபொருள் மற்றும் மின்சார விலைகளை குறைத்தார், கூடவே முன்னோடி சமூக நலத்திட்டமான "எஹஸாஸ்"ன் கீழ் மேலும் மானியங்களுக்கு உறுதியளித்தார்.
வளர்ந்து வரும் அரசியல் அழுத்தத்தை சாமாளிப்பதற்கான நடவடிக்கை இது என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். நாட்டு மக்களிடையே சமீபத்தில் உரையாற்றிய இம்ரான் கான், மக்களின் கஷ்டங்களை ஒப்புக்கொண்டதோடு கூடவே பிரச்சாரத்தின் போது அளித்த வாக்குறுதிகளை தனது அரசால் ஏன் நிறைவேற்றமுடியவில்லை என்பதையும் விளக்கினார்.
அரசு கண்டிப்பாக திணறிக்கொண்டிருக்கிறது என்று 'டான்' நாளேட்டின் கட்டுரையாளர் அரிஃபா நூர், தெரிவித்தார். "எதிர்க்கட்சிகள் கருத்துப் போரில் வெற்றி பெறுவதற்கு ஒரு எளிய காரணம் இருக்கிறது. அரசின் முன்னுக்குப்பின் முரணான அறிக்கைகள், எதிர்க்கட்சிகள் வெறுமனே பேசவில்லை, அவர்களின் வெற்றி எட்டும் தூரத்தில் உள்ளது என்ற உணர்வுக்கு நம்பகத்தன்மை சேர்க்கிறது," என்று அவர் குறிப்பிட்டார்.
கட்சி தாவலில் ஈடுபடுவோரின் வருங்காலம் மற்றும் நாடாளுமன்ற கூட்டம்
அரசியலமைப்பின் 63-ஏ பிரிவு தொடர்பான நான்கு அடிப்படைக் கேள்விகளுக்கு உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலைக் கோரி அரசு, அதிபரின் குறிப்பை சமர்ப்பித்துள்ளது.

"தங்கள் கட்சிக்கு துரோகம் இழைக்கும் உறுப்பினர்களை நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளில் இருந்து நீக்குவதுதான் ஒரே தண்டனயா?, கட்சி தாவலில் ஈடுபட்டவர்கள் அடுத்த தேர்தலில் போட்டியிட தகுதி பெற்றவர்களா இல்லையா?, சட்டப்பிரிவு 63-A-ன் கீழ் கட்சியிலிருந்து விலகுபவர் வாழ்நாள் முழுவதும் தகுதி நீக்கம் செய்யப்படுவார்களா?, கட்சியின் கொள்கைக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அளித்த வாக்கு, வாக்கெடுப்பில் எண்ணப்படுமா இல்லையா?
பிரதமர் இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை முன்வைக்கும் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையின் பேரில் நாடாளுமன்ற சபாநாயகர் மார்ச் 25 அன்று நாடாளுமன்ற கூட்டத்தைக் கூட்டியுள்ளார். இதற்கென நிர்ணயிக்கப்பட்ட 14 நாட்கள் உச்சவரம்பை தாண்டி இந்த நாள் வருவதால், இந்த முடிவு அரசியலமைப்புக்கு முரணானது என்று எதிர்க்கட்சிகள் கூறின. இந்த விவகாரத்தை எதிர்கட்சியினர் நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.
"போட்டி நோக்கங்கள்"
ராணுவத்திற்கும் இம்ரான் கானுக்கும் இடையிலான உறவு அவ்வளவு சிறப்பாக இல்லை என்று சில வர்ணனையாளர்கள் கூறுகின்றனர். குறிப்பாக, ராணுவத்தால் பரிந்துரைக்கப்பட்ட பிறகும், ஐஎஸ்ஐ-யின் டிஜியாக லெப்டினன்ட் ஜெனரல் நதீம் அஞ்சூமின் நியமனம் குறித்த அறிவிப்பை இம்ரான் கான் தாமதப்படுத்திய விவகாரத்தை தொடர்ந்து உறவுகள் மோசமடைந்துள்ளன.

பட மூலாதாரம், Reuters
இம்ரான் கானின் செல்வாக்கு மக்களிடையே ஊசலாடும் இந்தச் சூழ்நிலையில், அவர் ஆட்சிக்கு வருவதற்கு உதவியதாக அடிக்கடி குற்றம் சாட்டப்படும் நாட்டின் சக்திவாய்ந்த ராணுவ அமைப்புடனான அவரது உறவு சுமுகமாக இல்லாத நிலையில், அவரை பதவியில் இருந்து நீக்க இதுதான் சரியான நேரம் என்று எதிர்கட்சிகள் கருதுகின்றன. ஆனால், எதிர்க்கட்சி கூட்டணிக்கு உள்ளே இருக்கும் கட்சிகள் தங்கள் நிகழ்ச்சி நிரலிலோ அல்லது செயல் உத்திகளிலோ ஒன்றுபடவில்லை, மாறாக அவை வேறுபட்ட மற்றும் போட்டி நோக்கங்களை கொண்டுள்ளன என்று அரசியல் விஞ்ஞானி சல்மான் கான் நம்புகிறார்.
"நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பாக நிறைய விவாதங்கள் மற்றும் சந்திப்புகள் நடக்கின்றன. ஆனால், இந்த நடவடிக்கை வெறும் பார்வைக்காக மற்றும் பொதுமக்களின் நுகர்வுக்கானது மட்டுமே என்று நான் கருதுகிறேன். ஊடக சலசலப்பை ஏற்படுத்தினாலும், இது எதிர்க்கட்சிகளின் உண்மையான முயற்சியாகத் தெரியவில்லை," என்று அவர் குறிப்பிட்டார்.
ஆயினும் இந்த சலசலப்பு பெரிய அளவில் இருப்பதை அரிஃபா நூர் ஒப்புக்கொள்கிறார். "சில குழப்பமான கிசுகிசுப்புகள் இப்போதும் உள்ளன. நம்பிக்கையில்லா வாக்கெடுப்புக்கு இலக்காகப் போவது யார், வாக்கெடுப்பை ஆதரிப்பது யார், பிறகு என்ன நடக்கும் என்பதுபோன்ற பல கேள்விகள் கேட்கப்படாத வரை மட்டுமே உற்சாகம் நீடிக்கும். தெளிவாகத் தெரியாத பல விஷயங்கள் உள்ளன. இது உற்சாகத்தை சிதறடிக்கிறது," என்கிறார் அவர்.
ஆனால், தொற்றுநோய் கிருமிகளின் திரிபுகளைக்காட்டிலும் பாகிஸ்தான் அரசியல் மிகவும் நிச்சயமற்றதாக இருப்பதால், இறுதியில் என்ன நடக்கும் என்பதை உறுதியாகக் கூறுவது கடினம் என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












