You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அமெரிக்காவில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன சிறுமி, படிக்கட்டுக்கு கீழே உயிருடன் கண்டுபிடிப்பு
2019-ஆம் ஆண்டு காணாமல் போன இளம்பெண் ஒருவர் படிக்கட்டுக்கு அடியிலிருந்த ரகசிய அறையில் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டதாக அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்தில் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இப்போது 6 வயதாகும் பைஸ்லி ஷுல்டிஸ், திங்கள்கிழமையன்று நடந்த தேடுதலுக்குப் பிறகு சாகெடீஸ் நகரிலுள்ள ஒரு வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டார்.
அவர் நல்ல ஆரோக்கியத்தோடு இருப்பதாகவும் இப்போது அவருடைய சட்டப்பூர்வ பாதுகாவலர் மற்றும் மூத்த சகோதரியுடன் மீண்டும் இணைந்துள்ளார் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.
அவருக்கு சட்டப்பூர்வ பாதுகாவலராக இல்லாத பெற்றோர் அவருடைய காவலில் குறுக்கீடு செய்ததாகவும் குழந்தையின் நலனுக்கு ஆபத்து ஏற்படுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
2019-ஆம் ஆண்டு ஜூலை மாதம் நியூயார்க்கில் உள்ள தியோகா என்ற மாவட்டத்தில் இருந்து பைஸ்லீ காணாமல் போனதாக காவல்துறை அறிக்கை தெரிவிக்கிறது. அப்போது அவருக்கு நான்கு வயது.
அவருடைய பெற்றோரான, 33 வயதான கிம்பர்லி கூப்பர் மற்றும் 32 வயதான கெர்க் ஷுல்டிஸ் ஜூனியர் ஆகியோரால் அவர் கடத்தப்பட்டதாக அந்த நேரத்தில் அதிகாரிகள் நம்பினர்.
உல்ஸ்டர் மாவட்டத்தில் உள்ள சாகெர்டீஸ் நகரில் ஒரு மறைவான இடத்தில் பைஸ்லி வைக்கப்பட்டுள்ளதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், காவல்துறையினர் வீட்டைச் சோதனையிட வாரன்ட் பெற்று, சோதனை நடத்தப்பட்டது.
காவல்துறை நடத்திய சோதனையின்போது, வீட்டின் உரிமையாளரான 57 வயது நிரம்பிய கெர்க் ஷுல்டிஸ் சீனியர் அங்கிருந்தார். மேலும் பைஸ்லீ எங்கிருக்கிறார் என்பது குறித்துத் தனக்குத் தெரியாது என்று அவர் காவல்துறையிடம் கூறினார்.
ஆனால், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடந்த தேடுதலில், துப்பறியும் நபர்களில் ஒருவர் வீட்டின் அடித்தளத்திற்குச் செல்லும் படிக்கட்டுகள் விசித்திரமாகக் கட்டப்பட்டிருப்பதைக் கவனித்தார்.
பல பலகைகளை அகற்றிய பிறகு, "சிறிய, குளிர் மற்றும் ஈரமான" அடைப்பு என்று காவல்துறை விவரித்த இடத்தில் பைஸ்லீ மற்றும் திருமதி கூப்பார் மறைந்திருந்ததை காவல்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
பைஸ்லியை மருத்துவ உதவியாளர்கள் பரிசோதித்து அவர் நலமுடன் இருப்பதாகத் தெரிவித்தனர்.
பைஸ்லீயின் உயிரியல் பெற்றோர், அவர் மீதும் அவருடைய மூத்த சகோதரி மீதுமான சட்டப்பூர்வ காவலை இழந்துள்ளனர். அதுவே பைஸ்லீயை கடத்தியதன் பின்னணியில் இருப்பதாக காவல்துறையினர் நம்புகின்றனர்.
"நாங்கள் நம்புகிறோம்... அந்த நேரத்தில் மூத்த குழந்தை சட்டப்பூர்வ பாதுகாவலர் மற்றும் மாவட்ட அதிகாரிகளால அழைத்துச் செல்லப்பட்டதாக யாரோ பெற்றோருக்குத் தெரிவித்தனர். இதனால் பெற்றோர் பைஸ்லீயை அழைத்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர்," என்று சாகெர்டீஸ் காவல்துறைத் தலைவர் ஜோசஃப் சினாக்ரா WNYT செய்தி சேனலிடம் கூறினார்.
கூப்பர், ஷுல்டிஸ் ஜூனியர் மற்றும் ஷுல்டிஸ் சீனியர் அனைவரும் கைது செய்யப்பட்டு, பைஸ்லீயின் காணாமல் போனதாகக் குற்றம் சாட்டப்பட்டனர். பிறகு, தந்தை, மகன் இருவரும் விடுவிக்கப்பட்டனர். வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது.
கூப்பருக்கு ஏற்கெனவே ஒரு பிடிவாரன்ட் இருந்ததால், உல்ஸ்டர் மாவட்ட சிறையில் இருக்கிறார்.
இதுகுறித்த விசாரணை நடந்து வருவதாகவும், மேலும் பலர் கைது செய்யப்பட உள்ளதாகவும் காவல்துறை அறிக்கை கூறுகிறது.
அமெரிக்காவில் காணாமல் போனதாகக் கூறப்படும் பெரும்பாலான குழந்தைகள் ஒப்பீட்டளவில் குறுகிய காலத்தில் பாதுகாப்பாகக் கண்டுபிடிக்கப்படுகிறார்கள் என்று காணாமல் போன குழந்தைகளுக்கான தேசிய மையம் கூறுகிறது.
ஆனால், குடும்ப உறுப்பினர்கள் நிகழ்த்தும் குழந்தை கடத்தல் சம்பவங்களில் சராசரியாக 10 மாதங்களுக்கும் மேலாக அதிக காலத்திற்கு காணாமல் போவதாகவும் அந்த அமைப்பு கூறுகிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்