You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஜிஹாதிகளுக்கு ஆதரவாக மதப் பிரசங்கம் செய்ததாக பிரான்ஸில் மூடப்பட்ட மசூதி
பிரான்ஸ் நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள போவே நகரத்தில் ஒரு மசூதியின் இமாம் (மசூதியின் வழிபாட்டை தலைமை தாங்கி நடத்துபவர்) செய்த மதப் பிரசங்கம் ஜிஹாதை ஆதரித்ததாகக் கூறப்படுகிறது. எனவே அம்மசூதியை பிரான்ஸ் அதிகாரிகள் மூடியுள்ளனர்.
இம்மசூதி அடுத்த ஆறு மாதங்களுக்கு மூடப்பட்டிருக்கும் என உள்ளூர் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மசூதியில் நடந்த மதப் பிரசங்கத்தில் ஜிஹாதிகள் போராளிகள் என்றும், நாயகர்கள் என்று கூறியதாகவும், வெறுப்பையும் வன்முறையையும் தூண்டியதாகவும் போவே நகரின் ஒய்ஸ் பகுதியைச் சேர்ந்த ப்ரிஃபெக்ட் கூறினார்.
இஸ்லாமிய வழிபாட்டுத் தளங்களில் கடும்போக்குவாதத்தோடு தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழும் இடங்களை பிரான்ஸ் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
போவே நகரத்தில் உள்ள பெரிய மசூதியை மூடுவதற்கான செயல்பாட்டைத் தொடங்க உள்ளதாக இரு வாரங்களுக்கு முன்புதான் பிரான்ஸின் உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டார்மனின் கூறினார். அம்மசூதியில் உள்ள இமாம் கிறிஸ்தவர்களையும், ஒருபாலுறவுக்காரர்களையும், யூதர்களை தன் பிரசங்கத்தில் தவறாகப் பேசுவதாகவும் கூறினார்.
இந்த பிரச்னை குறித்து முறையான விளக்கம் கொடுக்க அதிகாரிகள் 10 நாட்கள் கால அவகாசம் கொடுத்துள்ளனர்.
அம்மசூதியின் இமாம் சமீபத்தில்தான் இஸ்லாத்துக்கு மதம் மாறியதாக ஏ.எ.பி செய்தி முகமை 'கூரியர் பிகார்ட்' என்கிற செய்தித் தாளை மேற்கோள் காட்டி கூறியுள்ளது.
இமாம் கூறியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுவிட்டது என, மசூதி தரப்பு வழக்குரைஞர் கூறினார். மேலும் 'தன்னார்வாளராக வந்து மசூதியில் மதப் பிரசங்கம் செய்யும்' அந்த இமாம் அனைத்து பணிகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டுவிட்டார் என்றும் கூறினார்.
அவ்வப்போது வந்து பேசுபவராகக் கூறப்படும் நபர்தான், அம்மசூதியில் அன்றாடப் பணிகளைச் செய்யும் இமாமாகச் செயல்பட்டு வருகிறார். தீவிரமாக இஸ்லாத்தை கடைபிடிப்பது, நாட்டின் குடியரசுச் சட்டங்களை விட உயர்ந்தது என வாதிட்டுள்ளார் என பிரான்சின் உள்துறை அமைச்சர் கூறினார்.
கடந்த ஆண்டு பிரான்ஸ் நாட்டின் பல மசூதிகளில், கடும்போக்குவாதத்தோடு தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன. பிரிவினைவாதத்தை ஊக்குவிப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டால் சில மசூதிகள் மூடப்படும் என்றும் கூறினார் ஜெரால்ட் டார்மனின்.
ஆசிரியர் சாமுவேல் பேட்டியின் தலை துண்டிக்கப்பட்டது மற்றும் அக்டோபர் 2020 காலகட்டத்தில் நைஸ் பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றில் மூன்று பேர் கொடூரமாக குத்திக் கொல்லப்பட்டதற்கு இஸ்லாமியவாத கடும்போக்குவாதம் மீது குற்றம்சாட்டப்பட்டது. அதன் விளைவாக மேற்கூறிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
பிரான்ஸ் நாட்டில் உள்ள 2,620க்கும் மேற்பட்ட மசூதி மற்றும் வழிபாட்டு தளங்களில், கடும்போக்குவாதம் தொடர்பாக சமீபத்திய மாதங்களில் கிட்டத்தட்ட 100 மசூதிகள் மற்றும் பிரார்த்தனை கூடங்களில் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக பிரான்ஸ் நாட்டின் உள்துறை அமைச்சர் கூறினார்.
பிற செய்திகள்:
- 'விண்வெளியில் மோத வந்த செயற்கைக்கோள்' - ஈலோன் மஸ்க் நிறுவனம் மீது ஐ.நா-வில் சீனா புகார்
- மத்திய கிழக்கை 2021இல் உலுக்கிய இஸ்ரேல் - ஹமாஸ் மோதல்கள்
- 'விமானங்களில் இந்திய இசை' - விமானப் போக்குவரத்து அமைச்சர் கடிதம்
- புத்தாண்டு 2022: 2021இல் பெரும் பொருளாதார அழிவை ஏற்படுத்திய அசாதாரண வானிலை நிகழ்வுகள்
- 2021இல் ஒட்டுமொத்த உலகின் கவனத்தை ஈர்த்த மிகச் சிறந்த படங்கள் எவை?
- கொரோனா: எச்சில் துப்புவதற்கு எதிரான இந்தியாவின் 'வெல்ல முடியாத போர்' எந்த நிலையில் உள்ளது?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்