இலங்கை 'ஒரே நாடு ஒரே சட்டம்' ஜனாதிபதி செயலணியில் தமிழர்களை இணைப்பது தீர்வாகுமா?

    • எழுதியவர், ரஞ்சன் அருண்பிரசாத்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியில் தமிழர்கள் இடம்பிடிக்காமை குறித்து எழுந்த பாரிய சர்ச்சைக்கு மத்தியில், குறித்த செயலணிக்கு தமிழர்களை இணைத்துக்கொள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளதாக பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் நேற்றைய தினம் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, இந்த இணக்கம் தெரிவிக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களுடனான விசேட சந்திப்பொன்று நேற்றைய தினம் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது.

இந்த சந்திப்பின் போது, பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் இந்த விடயம் குறித்து, பிரதமர் மற்றும் ஜனாதிபதிக்கு எடுத்துரைத்துள்ளனர்.

இந்த நிலையில், விடயங்களை ஆராய்ந்த ஜனாதிபதி, ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியில் தமிழர்களை இணைத்துக்கொள்ள இணக்கம் தெரிவித்ததாக பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் கூறினார்.

ஒரே நாடு ஒரே சட்டம் கொள்கை வரைவை தயாரிப்பதற்காக, பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாhளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தலைமையில் 13 பேரை கொண்ட ஜனாதிபதி செயலணியொன்றை ஜனாதிபதி உருவாக்கியிருந்தார்.

இந்த செயலணியில் 9 சிங்களவர்களும், 4 இஸ்லாமியர்களும் இடம்பிடித்திருந்தனர்.

ஒரே நாடு ஒரே சட்டம் என்ற விடயத்தில் தமிழர்கள் உள்வாங்கப்படாமை குறித்து, தமிழர்கள் மத்தியில் பாரிய கவலை எழுந்திருந்தது.

அத்துடன், நீதிமன்றத்தினால் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டு, சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் ஜனாதிபதி பொதுமன்னிப்பு பெற்ற கலகொடஅத்தே ஞானசார தேரர், ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் தலைவராக நியமிக்கப்பட்டமையும் பாரிய சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.

தமிழர்கள் மாத்திரமன்றி, பெரும்பான்மை சமூகத்தினரும் இதற்கு தமது எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.

ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட செயலணியில் தமிழர்கள் முழுமையாக புறக்கணிக்கப்பட்டுள்ளதாக செந்தில் தொண்டமான், நேற்றைய தினம் ஜனாதிபதிக்கு எடுத்துரைத்த நிலையில், தமிழர்களை இணைத்துக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும், தனக்கும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கியதாக செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.

ஒரே நாடு ஒரே சட்டம் செயலணி மீது நம்பிக்கை இல்லை

கலகொடஅத்தே ஞானசார தேரரின் குழுவில் தமிழர்கள் இல்லை என்பதை சுட்டிக்காட்டியது, அந்த குழுவில் தமிழர்களை நியமிப்பதற்காக அல்லவென தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவிக்கின்றார்.

ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட செயலணி மீது தமக்கு நம்பிக்கை இல்லை என அவர் கூறியுள்ளார்.

ஒரு நாடு என சொல்லும் அரசாங்கம், அதிலும் தமிழர்களுக்கு இடம்கொடுக்க அக்கறை கொள்ளவில்லை என அவர் குறிப்பிடுகின்றார்.

ஞானசார தேரர் தலைமையிலான செயலணி என்றால், பையை திறக்காமலேயே, பைக்குள் என்ன இருக்கின்றது என புரிகின்றது என மனோ கணேசன் கூறுகிறார்.

ஐக்கிய மக்கள் சக்தி எதிர்ப்பு

ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியானது, கேலிக்கூத்தான செயலணி என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவிக்கின்றது.

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்ஜித் மத்துமபண்டார இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த செயலணியின் தலைவராக கலகொடஅத்தே ஞானசார தேரரை நியமித்தமையின் ஊடாக, ஆணைக்குழுவின் நோக்கங்களை கேலிக்கூத்தாக்கும் செயல் என அவர் கூறுகின்றார்.

சட்டத்தின் ஆட்சியை அமல்படுத்துவதற்கும் சட்டத்தின் பாதுகாப்பு நியாயமானதாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் நியமிக்கப்பட்ட செயலணிக்கு கலகொடஅத்தே ஞானசார தேரரை நியமித்திருப்பது நாட்டின் அதியுயர் சட்டமான அரசியலமைப்பை அவமதிக்கும் செயலாகும்.

இவ்வாறானதொரு செயலணிக்கு நாட்டின் இரண்டாவது பெரிய சனத்தொகையான தமிழ் மக்கள் மற்றும் பெண்களின் பிரதிநிதித்துவம் இல்லாமை என்பது பாரிய பிரச்சினையாகும் என ரஞ்ஜித் மத்துமபண்டார தெரிவிக்கின்றார்.

ஒரே நாடு ஒரே சட்டம் என்றால் என்னவென்றே தெரியாது?

ஒரே நாடு ஒரே சட்டம் என்பதற்கான விளக்கத்தை அரசாங்கம் இதுவரை வெளியிடவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஷாரப் தெரிவிக்கின்றார்.

ஒரே நாடு ஒரே சட்டம் என்ற விடயத்திலேயே பல்வேறு கருத்து வேறுபாடுகள் காணப்படுவதாகவும் அவர் கூறுகின்றார்.

நாட்டிலுள்ள சட்ட வல்லுநர்களுக்கு கூட, இதற்கான அர்த்தத்தை புரிந்துக்கொள்ள முடியவில்லை என அவர் குறிப்பிடுகின்றார்.

அத்துடன், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட ஒருவர் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படும் ஒருவர் இந்த குழுவை வழிநடத்துகின்றமையை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் தெரிவிக்கின்றார்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால், கலகொடஅத்தே ஞானசார தேரரின் பொதுபல சேனா அமைப்பு தடை செய்யப்பட வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டுள்ள நிலையில், அவ்வாறான ஒருவரை சட்ட திருத்தத்திற்காக நியமிக்கின்றமையும் பிரச்சினைக்குரியது என அவர் கூறுகின்றார்.

முஸ்லிம்களை இலக்கு வைக்கும் நோக்குடனேயே ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியில் முஸ்லிம்கள் உள்வாங்கப்பட்டுள்ளதாகவும், தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

இந்த செயலணி முழுமையாகவே சர்ச்சைக்குரிய செயலணி என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஷாரப் தெரிவிக்கின்றார்.

இதேவேளை, ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணி தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகளுக்கு எதிர்வரும் முதலாம் தேதி, குறித்த செயலணி பதிலளிக்கும் என ஜனாதிபதி ஊடகப் பேச்சாளர் கிங்ஸிலி ரத்நாயக்க, பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

எனினும், இந்த நியமனத்தில் நிலவிய தமிழர்கள் புறக்கணிப்பு, அரசாங்கத்திற்குள் அங்கம் வகிக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் ஆகியோரின் தலையீட்டில் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :