You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
டிக்டாக்: ஹேர்பின்னை வைத்து வீடு வாங்கிய டிக்டாக் பிரபலம் - எப்படி நடந்தது?
ஒரு வீட்டை சொந்தமாக்கிக் கொள்ள ஒரேயொரு ஹேர்பின் மட்டும் இருந்தால் போதும் என்றால் எப்படி இருக்கும் என யோசித்துப் பாருங்கள். அதைத் தான் டெமி ஸ்கிப்பர் என்கிற டிக்டாக் சமூக வலைதள பிரபலம் செய்திருக்கிறார். டிக்டாக்கைப் பயன்படுத்தி பொருட்களை பரிமாற்றம் செய்து கடைசியில் ஒரு வீட்டைச் சொந்தமாக்கியுள்ளார்.
கடந்த மே 2020இல் 'டிரேட் மீ' திட்டத்தைத் தொடங்கினார் டெமி ஸ்கிப்பர். போகிற போக்கில் பல பொருட்களை பண்டமாற்றம் செய்துள்ளார். இதில் ஒரு ஜோடி காதணி, ஒரு ஆப்பிள் ஐஃபோன், மூன்று டிராக்டர்கள் என பல சுவாரசிய பொருட்கள் அடக்கம்.
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தின் சான் பிரான்சிஸ்கோ நகரத்தைச் சேர்ந்த இந்த 30 வயதான டிக்டாக் பிரபலம், தற்போது டென்னசி மாகாணத்தின் நாஷ்வில்லே என்கிற நகரத்தில் உள்ள ஒரு வீட்டின் உரிமையாளர்.
2006ஆம் ஆண்டு கைல் மெக்டொனால்ட் என்பவர் இணையத்தில் ஒரு சிவப்பு நிற காகித க்ளிப்புக்கு பதிலாக பல பொருட்களை பரிமாற்றம் செய்து கடைசியில் ஒரு வீட்டைப் பெற்றார். அந்த செயலால் ஈர்க்கப்பட்டு, 'டிரேட் மீ' திட்டத்தைத் தொடங்கினார் டெமி. முதலில் ஹேர்பின் கொடுத்து ஒரு விலை மலிவான ஒரு ஜோடி காதணியைப் பெற்றார்.
அதை நான்கு மார்கரிட்டா பானத்தை அருந்தும் கண்ணாடிக் கோப்பைகளாக மாற்றினார், பிறகு வேக்கம் க்ளீனர் என பொருட்களை மாற்றினார். ஈ-பே, ஃபேஸ்புக் மார்கெட் பிளேஸ், க்ரெக்லிஸ்ட் என சரியான பொருட்களை மாற்றிக் கொள்ள பல தளங்களைப் பயன்படுத்தினார் டெமி.
முதலில் சில பொருட்கள் பரிமாற்றங்கள் சான் பிரான்சிஸ்கோ நகரத்தைச் சுற்றி நேரில் சென்று மேற்கொண்டார். அடுத்தடுத்த பரிமாற்றங்களை அமெரிக்கா முழுக்க பரவலாக மேற்கொண்ட சாலை பயணங்களின்போது அவர் மேற்கொண்டார்.
அவர் பயணத்தை மேற்கொண்டே வரும் போது, மறுபக்கம் பொருள் பரிமாற்றம் குறித்து டிக்டாக் மற்றும் இன்ஸ்டாகிராமில் காணொளிகளைப் பதிவிட்டு வந்தார். மேலும், தனக்கு எப்படி ஒரு வீட்டைப் பெறுவது தன் உச்ச இலக்காக இருக்கிறது என்றும் விளக்கினார்.
வேக்கம் க்ளீனரைக் கொடுத்து பனிச்சறுக்கு போர்டாகவும், பிறகு அதை ஹெட்ஃபோனாகவும், லேப்டாப்பாகவும், கேமராவாகவும் மாற்றினார்.
ஆப்பிள் ஐஃபோனைப் பெறுவதற்கு முன் பல ஜோடி நைக் பயிற்சி காலணிகளை பொருள் பரிமாற்றம் செய்தார். பிறகு 2008ஆம் ஆண்டு வாங்கப்பட்ட டாட்ஜ் கேரவனைப் பெற்றார்.
டெமி ஸ்கிப்பரிடம் வாகனத்தை பரிமாற்றம் செய்து கொண்ட அந்த வாகனத்தின் உரிமையாளர், கேரவன் வாகனத்தை மினிசோட்டா நகரத்திலிருந்து சான் பிரான்சிஸ்கோ நகரம் வரை ஓட்டி வந்தார். இதற்கிடையில் டெமி ஸ்கிப்பரின் டிரேட் மீ திட்டம் பிரபலமடைய, அவரைப் பின் தொடர்வோர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது.
அந்த வாகனத்தை வைத்து மினி கூப்பர் (கன்வெர்டிபிள்) வாகனத்தைப் பெற்றார். இரு வாரங்கள் கழித்து அக்காரைக் கொண்டு ஒரு நெக்ளஸ் ஆபரனத்தைப் பெற்றார். அதன் மதிப்பு $20,000 எனக் கருதினார், ஆனால் எதார்த்தத்தில் அது $2,000 டாலருக்கும் குறைவான மதிப்புடையதாக இருந்தது.
இலவச உணவு
விரக்தியுடன் இரு வார கால தேடுதலுக்குப் பிறகு, டெமி ஸ்கிப்பர் அந்த ஆபரணத்தை ஒரு பெலொடோன் சைக்கிள் பயிற்சி வாகனத்துக்கு பரிமாற்றம் செய்து கொண்டார். அதன் மதிப்பு 1,800 அமெரிக்க டாலர்.
கடந்த டிசம்பர் மாதம், பெலொடோன் சைக்கிளைக் கொடுத்து மஸ்டங் வாகனம் ஒன்றைப் பெற்றார் டெமி. பிறகு அதைக் கொடுத்து ஒரு சிறிய மரத்தினாலான கேபின் வீட்டைப் பெற்றார்.
அதைக் கொடுத்து ஒரு ஹோண்டா சி.ஆர்.வி வாகனத்தைப் பெற்றார், அது மூன்று டிராக்டர்களாகவும், பின் சிபொட்லே பிரமுகர் அட்டையாகவும் மாறியது. அந்த அட்டை ஓராண்டு காலத்துக்கான இலவச உணவு மற்றும் ஒரு பார்ட்டிக்கு உரியது.
அந்த அட்டையை வைத்து 50,000 அமெரிக்க டாலர் மதிப்பிலான இழுவை வாகனம் மற்றும் டெஸ்லா நிறுவனத்தின் பவர் வால் எனப்படும் பிரமாண்ட பேட்டரியைப் பெற்றார்.
கடைசியாக அதை வைத்து டென்னஸி மாகாணத்தில் நாஷ்வில்லேவில் உள்ள வீட்டைப் பெற்றார். இந்த வீட்டின் மதிப்பு ஒரு லட்சம் அமெரிக்க டாலராக இருக்கலாம் என 7நியூஸ், நியூஸ்.காம், சிட்னி நியூஸ் டுடே போன்ற பல்வேறு செய்தி வலைதளங்கள் குறிப்பிட்டுள்ளன.
டெமி ஸ்கிப்பர் தன் வீட்டை முதல்முறையாகப் பார்த்த தருணத்தை ஒரு காணொளியாக பதிவேற்றியுள்ளார். கிட்டத்தட்ட ஐம்பது லட்சத்துக்கும் மேற்பட்டோர் அவர் மேற்கொண்ட பயணத்தைப் பின்தொடர்ந்தனர்.
தங்கள் புதிய வீட்டை புனரமைக்க, டெமி ஸ்கிப்பரும் அவரது கணவரும் கலிஃபோர்னியாவில் இருந்து, டென்னஸிக்கு நகர கடந்த ஜனவரியில் திட்டமிட்டனர்.
பிற செய்திகள்:
- பிரபஞ்ச இருளில் உயிரின் ரகசியங்களைத் தேடப்போகும் ரூ.70 ஆயிரம் கோடி எந்திரம்
- தமிழ் டெக் யூடியூபர்: '10 பேர் பார்த்தால் போதுமென நினைத்தேன். இன்று 30 லட்சம் பேர் பார்க்கிறார்கள்'
- அமிர்தசரஸ் பொற்கோயிலில் அத்துமீறி நுழைந்த இளைஞர் உயிரிழப்பு - நடந்தது என்ன?
- “கொரோனாவின் ஒமிக்ரான் திரிபு மின்னல் வேகத்தில் பரவி வருகிறது”: பிரான்ஸ் பிரதமர்
- தரமற்ற உணவால் ஊழியர்கள் இறந்ததாக பரவிய தகவல்: பெண் தொழிலாளர்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது
- பெண்களின் திருமண வயதை 21 ஆக மாற்ற அமைச்சரவை ஒப்புதல்: எதிர்ப்புக் குரல்கள் எழுவது ஏன்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்