You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சாரா கில்பெர்ட்: கொரோனாவை விட அடுத்த பெருந்தொற்று கொடியதாக இருக்கலாம் - தடுப்பூசி விஞ்ஞானியின் எச்சரிக்கை
தற்போது ஏற்பட்டுள்ள கோவிட் நெருக்கடியைவிட வருங்காலத்தில் ஏற்படும் பெருந்தொற்றுகள் மிகக் கொடியதாக இருக்கலாம் என, ஆக்ஸ்ஃபோர்டு - ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசியை உருவாக்கியவர்களில் ஒருவரான பேராசிரியர் டேம் சாரா கில்பெர்ட் எச்சரித்துள்ளார்.
44-வது ரிச்சர்ட் டிம்பிள்பி உரையில் பேசிய அவர், பெருந்தொற்றால் ஏற்படும் இழப்புகளைத் தடுக்க, அதிக நிதி தேவைப்படும் என தெரிவித்தார்.
கல்வி, கலை, தொழில் மற்றும் அரச குடும்பத்தைச் சேர்ந்த செல்வாக்கு மிக்க பேச்சாளர்கள் வழங்கும் இந்த உரை, மறைந்த ஊடகவியலாளர் மற்றும் நிகழ்ச்சித் தயாரிப்பாளர் ரிச்சர்ட் டிம்பிள்பி பெயரில் வழங்கப்படுகிறது.
இதில் பேசிய டேம் சாரா, ஒமிக்ரான் கொரோனா திரிபுக்கு எதிராக தடுப்பூசிகள் குறைந்த செயல்திறன் கொண்டதாகவே இருக்கும் என எச்சரித்துள்ளார்.
ஒமிக்ரான் குறித்து அதிக தகவல்கள் வெளியாகும் வரை, மக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், "ஒரு வைரஸ் நம் உயிரையும் வாழ்வாதாரத்தையும் அச்சுறுத்துவது இது கடைசியாக இருக்காது. உண்மை என்னவென்றால், அடுத்து வருவது இன்னும் மோசமானதாக இருக்கக்கூடும். அது அதிகம் பரவக்கூடியதாகவோ அல்லது கொடியதாகவோ அல்லது இரண்டுமாகவோ இருக்கக்கூடும்.
"நாம் அனைத்தையும் கடந்துவிட்ட நிலையை அனுமதிக்க முடியாது. மேலும், நாம் அடைந்திருக்கும் பொருளாதார இழப்புகள், தொற்றைத் தடுப்பதற்கான நிதி இல்லை என்பதை உணர்த்துகிறது" என தெரிவித்தார்.
"நாம் செய்த முன் தயாரிப்புகள், பெற்ற அறிவு ஆகியவற்றை நாம் இழக்கக்கூடாது."
ஒமிக்ரான் திரிபு குறித்துப் பேசிய அவர், அதன் ஸ்பைக் புரதத்தில் வைரஸ் பரவலை அதிகரிக்க அறியப்பட்ட பிறழ்வுகள் இருப்பதாக கூறினார்.
"ஆனால், தடுப்பூசிகளால் தூண்டப்படும் ஆன்டிபாடிகள், ஒமிக்ரான் தொற்று ஏற்படுவதைத் தடுப்பதில் குறைவான செயல்திறன் கொண்டதாக இருக்கும் வகையிலான கூடுதல் மாற்றங்கள் உள்ளன.
"இதுகுறித்து மேலும் அறிந்துகொள்ளும் வரை நாம் கவனமாக இருக்க வேண்டும். இந்த புதிய ஒமிக்ரான் திரிபு பரவுவதை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்."
இருப்பினும், தொற்று மற்றும் லேசான நோய்க்கு எதிரான பாதுகாப்பைக் குறைக்கும் அதேசமயத்தில், கடுமையான நோய் மற்றும் இறப்புக்கு எதிரான பாதுகாப்பைக் குறைக்க வேண்டிய அவசியமில்லை என்று டேம் சாரா கூறினார்.
தொற்றுநோய்களின் போது தடுப்பூசிகள் மற்றும் மருந்துகளை வழங்குவதில் காணப்படும் விரைவான முன்னேற்றம், விதிமுறையாக மாற வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.
தொற்றுக்கு எதிரான அச்சுறுத்தலைத் துடைக்க, உலகளாவிய தடுப்பூசி உருவாக்கப்பட முடியாததற்கு எந்த காரணமும் இல்லை, என்று அவர் கூறினார்.
ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்த பிரிட்டனுக்கு வரும் பயணிகள் பயணத்துக்கு முன்னதாகவே கொரோனா பரிசோதனை மேற்கொண்டிருக்க வேண்டும் என, பிரிட்டன் அரசாங்கம் கடந்த சனிக்கிழமை உத்தரவிட்டது.
நாளை காலை (செவ்வாய்க்கிழமை) 9.30 மணிமுதல், பிரிட்டனுக்கு வரும் 12 வயது மற்றும் அதற்கும் மேற்பட்ட வயதுடைய பயணிகள் கொரோனா பிசிஆர் பரிசோதனையில் நெகட்டிவ் என்றோ அல்லது பயணத்திற்கு 48 மணிநேரத்துக்கு முன்னதாக லேட்ரல் ஃப்ளோ பரிசோதனை செய்ததற்கான சான்று வைத்திருக்க வேண்டும் என பிரிட்டன் அரசு உத்தரவிட்டுள்ளது.
ஒமிக்ரான் கொரோனா திரிபு அதிகமாக பரவிவருவதால், பயணம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நாடுகளில் நைஜீரியாவும் சேர்க்கப்பட்டுள்ளது.
பிரிட்டனில் ஒமிக்ரான் திரிபால் ஏற்பட சாத்தியம் உள்ள புதிய தொற்று அலையை நிறுத்த விதிக்கப்படும் பயணக் கட்டுப்பாடுகள் மிக தாமதமானவை என, அரசுக்கு ஆலோசனை கூறும் விஞ்ஞானி பேராசிரியர் மார்க் உல்ஃப் தெரிவித்துள்ளார்.
இந்த பயணக் கட்டுப்படுகள், மாற்றத்தை ஏற்படுத்தாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பிபிசியின் ஆண்ட்ரூ மார்ஷோ-விடம் பேசிய அவர், பிரிட்டனில் ஒமிக்ரான் மிக வேகமாக பரவுகிறது எனவும், இதே நிலை பிரிட்டன் மற்றும் தென்னாப்பிரிக்காவில் தொடர்ந்தால், வரும் வாரங்களில் உலகளவில் டெல்டா வைரஸின் இடத்தில் ஒமிக்ரான் திரிபு இருக்கும் என தெரிவித்துள்ளார்.
பிரிட்டனில் ஞாயிற்றுக்கிழமை 86 பேருக்கு ஒமிக்ரான் திரிபு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், ஒமிக்ரான் திரிபால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 246 ஆக உயர்ந்துள்ளது. மொத்தமாக, இதுவரை கடந்த 28 நாட்களில் 43,992 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 54 பேர் உயிரிழந்துள்ளனர்.
டேம் சாரா - சீனாவில் கொரோனா பரவல் ஆரம்பமான நிலையில், 2020-ன் தொடக்கத்திலேயே கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசியை உருவாக்க தொடங்கியதற்காக, இங்கிலாந்து ராணியின் பிறந்த தினத்தை முன்னிட்டு வழங்கப்படும் கௌரவப் பட்டத்தைப் பெற்றதன் மூலம் புகழ்பெற்றவர்.
உலகளவில் அதிகமாக பயன்படுத்தப்படும் தடுப்பூசியாக ஆக்ஸ்ஃபோர்டு - ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி திகழ்கிறது. இந்த தடுப்பூசிகள் 170-க்கும் அதிகமான நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: