You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பாகிஸ்தானில் எரித்துக் கொல்லப்பட்ட இலங்கையரின் உடல் இன்று உறவினர்களிடம் ஒப்படைப்பு
பாகிஸ்தான் சியால்கோட் பகுதியில் அடித்து துன்புறுத்தப்பட்டு, எரியூட்டிக் கொலை செய்யப்பட்ட இலங்கை பிரஜையான பிரியந்த குமார தியவடனவின் உடல் எச்சங்கள் இன்று நாட்டிற்கு கொண்டு வரப்பட்டது
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று மாலை 5 மணிக்கு பிரியந்தவின் உடல் எச்சங்கள் கொண்டு வரப்பட்டது.
ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யூ.எல். 186 விமானத்தின் மூலம் பாகிஸ்தானின் லாகூர் விமான நிலையத்திலிருந்து கொண்டு வரப்பட்டது.
இந்த விமானம் பாகிஸ்தான் நேரப்படி இன்று மதியம் 12.30 மணியளவில் இலங்கை நோக்கி பயணிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் இன்று காலை தெரிவித்திருந்தது.
நாட்டிற்கு கொண்டு வரப்படும் பிரியந்த குமார தியவடனவின் உடல், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்தில் இன்று மாலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இவ்வாறு உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர், பிரியந்தவின் சொந்தமான ஊரான கனேமுல்ல பகுதிக்கு உடலை கொண்டு செல்ல ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. பிரியந்தவின் இறுதி கிரியைகளை 8ம் தேதி நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.
பிரியந்தவின் உடல் அவரது வீட்டில் உடல், இறுதி அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.
இதேவேளை, பிரியந்த குமார தியவடனவின் உடலை குறுகிய காலத்திற்குள் தம்மிடம் கையளிக்க நடவடிக்கை எடுத்த பாகிஸ்தான் அரசாங்கம் மற்றும் பஞ்சாப் மாநில அரசாங்கம் ஆகியவற்றுக்கு பாகிஸ்தானுக்கான இலங்கை உயர் ஆணையம் தமது பாராட்டுகளை தெரிவித்துள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள்
பாகிஸ்தானில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட பிரியந்த குமார தியவடனவிற்கு நியாயம் கோரி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடத்தப்பட்டிருந்தன.
பிரியந்த குமார தியவடனவின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்குவது குறித்த பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதன்படி, பாகிஸ்தான் அரச அதிகாரிகள் மற்றும் பாகிஸ்தானில் பிரியந்தவின் தொழில் வழங்குநர் ஆகியோருடன், இலங்கை உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளனர்.
பிரியந்த குமார தியவடனவின் குடும்பத்திற்கு விரைவில் பாகிஸ்தானிடமிருந்து இழப்பீட்டு தொகையை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
பிற செய்திகள்:
- கட்டாய தடுப்பூசி: வேண்டும், வேண்டாம் என்பதற்கு உலகளவில் எழும் 3 வாதங்கள்
- குழந்தைகளை விற்கும் தாய்கள்: தமிழ்நாட்டில் குழந்தை விற்பனை எப்படி நடக்கிறது?
- நாகாலாந்தில் பாதுகாப்புப் படையினரால் பொதுமக்கள் சுட்டுக்கொலை: விசாரணைக்கு உத்தரவு
- 'மனிதாபிமானமற்ற, இழிவான நிலையில் வாழும் மலையகத் தமிழர்கள்' - ஐ.நா அலுவலர் கவலை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: