You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'இந்தோனீசியாவின் செமுரு எரிமலை வெடிப்பால் 50,000 அடிக்கு புகை பரவலாம்' - விமானங்களுக்கு எச்சரிக்கை
இந்தோனீசியாவின் ஜாவா தீவில் உள்ள செமுரு எரிமலை வெடித்ததில் குறைந்தது 13 பேர் பலியாகிவிட்டதாகவும், பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
சனிக்கிழமை (டிசம்பர் 4ஆம் தேதி) உள்ளூர் நேரப்படி மதியம் 2.30 மணிக்கு செமுரு எரிமலை வெடித்தது. அப்பகுதியில் வசித்து வந்த மக்கள் தப்பியோடும் போது, வெடிப்பினால் ஏற்பட்ட வானுயர எரிமலைப் புகையைப் படம் பிடித்தனர்.
எரிமலையைச் சுற்றி 5 கிலோமீட்டர் பரப்பை தடை செய்யப்பட்ட பகுதியாக உள்ளூர் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இந்த எரிமலை வெடிப்பினால் ஏற்பட்ட புகை, 15,000 மீட்டர் ( சுமார் 50,000 அடி) உயரம் வரை பரவலாம் என விமான சேவை நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அப்புகை மண்டலம், அருகிலுள்ள கிராமத்தை சூழ்ந்து கொண்டதாகவும், சூரிய ஒளியையே மறைக்கும் அளவுக்கு அப்புகை மண்டலம் அடர்த்தியாக இருந்ததாகவும், எரிமலைக் கழிவுகளால் கிராமம் நிரம்பியுள்ளதாகவும் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் விவரித்தனர்.
லுமஜாங் மாவட்டத்தின் இணைத் தலைவர் இண்டா மஸ்தர் எரிமலை வெடிப்பினால் 57 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டிருப்பதாகக் கூறினார். குறைந்தபட்சம் 10 பேர் கட்டடங்களில் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்க ஹெலிகாப்டர் வாகனங்களை உதவிக்கு அழைத்துள்ளார்.
"நாங்கள் மிகப்பெரிய அழுத்தத்தில் இருக்கிறோம்" என்றார் அவர். "இங்கிருக்கும் சூழல் மிகவும் அச்சுறுத்தக் கூடியதாக உள்ளது, அவர்களின் குடும்பத்தினர் அனைவரும் அழுது கொண்டிருக்கின்றனர்" என்றார்.
35 பேர் உள்ளூர் மருத்துவ மையங்களில் சிகிச்சை பெற்று வருவதாக இந்தோனீசிய பேரழிவு மீட்பு முகமை கூறியுள்ளது. அதீத புகை, மின்சார இணைப்புகள் துண்டிப்பு, மழையால் எரிமலை கழிவுகள் சகதியானது என பல்வேறு காரணங்களால் மீட்புப் பணிகள் தடைபட்டுள்ளது.
எரிமலை வெடிப்பு நடந்த பகுதிக்கும், மலங் நகரத்துக்கும் இடையிலான சாலை மற்றும் பாலம் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக உள்ளூர் அதிகாரி தோரிகுல் ஹக் ராய்Indonesia volcanoட்டர்ஸ் முகமையிடம் கூறினார்.
நூற்றுக் கணக்கான மக்கள் வேறு இடத்துக்கு மாறியுள்ளனர் அல்லது பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர் என உள்ளூர் தொலைக்காட்சி சேனலான டிவி ஒன் அந்த உள்ளூர் அதிகாரி கூறியதாக மேற்கோள் காட்டியுள்ளது.
இப்புகை தென் மேற்கு திசையில் நகர்வதாக, ஆஸ்திரேலியாவின் டார்வின் நகரத்தில் உள்ள 'தி வால்கெனிக் ஆஷ் அட்வைசரி சென்டர்' கூறியுள்ளது. இந்த நிறுவனம்தான் விமான சேவை நிறுவனங்களுக்கு எரிமலை புகையின் நகர்வு குறித்து அவ்வப்போது ஆலோசனைகளை வழங்கி வருகிறது.
பெரும்பாலான விமானங்கள் 15,000 மீட்டர் உயரத்துக்குள் தான் பறக்கும் என்பதால், பல்வேறு விமானங்கள் எரிமலை புகையில் சிக்காமல் இருக்க, தங்களின் வழித்தடத்தை மாற்ற வேண்டியிருக்கும் என 'தி வால்கெனிக் ஆஷ் அட்வைசரி சென்டர்' அமைப்பைச் சேர்ந்த வானிலை ஆய்வாளர் கேம்பெல் பிக்ஸ் பிபிசியிடம் கூறினார்.
எரிமலை புகை, விமான இன்ஜினின் குளிர்ச்சியான பகுதிகளில் பட்டு இறுகிவிடும், அது இன்ஜினின் காற்றுப் போக்கை பாதித்து விமானம் செயலிழக்க வழிவகுக்கலாம். மேலும் விமானிகள் வழித்தடத்தைப் பார்த்து விமானம் செலுத்துவது பாதிக்கப்படலாம், விமானத்தில் காற்றின் தரம் பாதிக்கப்பட்டு பயணிகள் ஆக்சிஜன் முகக்கவசம் அணிந்து கொள்வது அவசியமாகலாம்.
கடல்மட்டத்திலிருந்து 3,676 மீட்டர் உயரம் வரை உள்ள செமுரு எரிமலை கடைசியாக கடந்த டிசம்பர் 2020-ல் வெடித்தது. இந்தோனீசியாவில் செயல்பாட்டில் உள்ள 130 எரிமலைகளில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்:
- இந்தியாவின் முதல் கடல் போர்ப்படை - குஞ்ஞாலி மரைக்காயர்கள் வரலாறு என்ன?
- 'யாரை ஏமாற்ற சசிகலா இப்படிச் செய்கிறார்?' - அறிக்கையை விமர்சிக்கும் அதிமுக
- தேசிய அளவில் காங்கிரசுக்கு மாற்றான சக்தியாக உருவெடுக்கிறாரா மமதா பானர்ஜி?
- உலகிலேயே முதல் முறையாக இனப்பெருக்கம் செய்யும் ரோபோட் உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை
- அணைப் பாதுகாப்பு சட்டம் - அணைகள் மீதான உரிமையை தமிழ்நாடு அரசு இழக்கிறதா?
- அமெரிக்கா, சீனா, இந்தியா குவாண்டம் கம்ப்யூட்டர் போட்டியில் இருப்பது ஏன்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்