You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பருவநிலை மாநாடு: காடழிப்பு ஒப்பந்தம் நியாயமற்றது என விமர்சித்த இந்தோனீசிய அமைச்சர் - கையெழுத்திட்ட அதிபர் விடோடோ
2030ம் ஆண்டுக்குள் காடழிப்பை நிறுத்துவது தொடர்பான ஒப்பந்தத்தில் உள்ள சட்ட திட்டங்களை இந்தோனீசியா விமர்சித்துள்ளது. மேலும் அச்சட்ட திட்டங்களை கடைபிடிக்க முடியாமல் போகலாம் எனவும் இந்தோனீசியா கூறியுள்ளது.
"எங்களால் செய்ய முடியாததை அதிகாரிகளால் உறுதியளிக்க முடியாது" என இந்தோனீசியாவின் சுற்றுச்சூழல் அமைச்சர் சிடி நுர்பயா பாகர் (Siti Nurbaya Bakar) கூறினார்.
2030ம் ஆண்டுக்குள் காடழிப்பை முழுமையாக கைவிட இந்தோனீசியாவை கட்டாயப்படுத்துவது முற்றிலும் நியாயமற்றது என்று அவர் கூறினார்.
காடழிப்பு ஒப்பந்தத்தில் இந்தோனீசிய அதிபர் ஜோகோ விடோடோ கையெழுத்திட்டர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தோனீசியாவுக்கு வளர்ச்சி தான் பிரதானமாக இருந்து வந்துள்ளது என்று கூறினார் அமைச்சர் சிடி நுர்பயா.
காடழிப்பு ஒப்பந்தத்துக்கு 100-க்கும் மேற்பட்ட உலக தலைவர்கள் ஒப்புதலளித்தனர், இந்த ஒப்பந்தம் கடந்த திங்கட்கிழமை ஐநாவின் சிஓபி 26 பருவநிலை மாநாட்டில் அறிவிக்கப்பட்ட முதல் பெரிய அறிவிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
காடழிப்பு ஒப்பந்தம் 2030ம் ஆண்டுக்குள் காடழிப்பு நடவடிக்கையை நிறுத்தவும், காடுகளை மீட்கவும் உறுதியளிக்கிறது.
நாட்டின் பரந்துபட்ட இயற்கை வளம், நாட்டு மக்களின் நலனுக்காக பயன்படுத்தப்பட வேண்டும் என அமைச்சர் சிடி நுர்பயா ஒரு ஃபேஸ்புக் பதிவில் இந்தோனீசிய மொழியில் பதிவிட்டுள்ளார்.
புதிய சாலைகளைக் கட்டமைக்க, காடுகளை அழிக்க வேண்டும் என காரணம் கூறியுள்ளார் அமைச்சர் சிடி.
"அதிபர் ஜோகோவியின் மாபெரும் வளர்ச்சி யுகம்,கார்பன் உமிழ்வு அல்லது காடழிப்பு போன்ற காரணங்களால் நிறுத்தப்படக் கூடாது" என்றும் கூறினார். ஜோகோவி என்பது இந்தோனீசிய அதிபர் ஜோகோ விடோடோவின் செல்லப் பெயர்.
"காடுகள் உட்பட இந்தோனீசியாவின் இயற்கை வளங்கள், நியாயமாக இருப்பதைத் தாண்டி அதன் நிலைத்தன்மை கொள்கைகளுக்கு உட்பட்டு பயன்பாடுகள் நிர்வகிக்கப்பட வேண்டும்" என்று கூறினார்.
நிபுணர்கள் காடழிப்பு ஒப்பந்தத்தை வரவேற்கின்றனர், ஆனால் கடந்த 2014ம் ஆண்டு காடழிப்பு நடவடிக்கைகளின் வேகத்தைக் குறைக்க செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் தோல்வி அடைந்ததையும் குறிப்பிட்டு எச்சரிக்கின்றனர். வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும் எனவும் கூறினர்.
புவியை வெப்பமயமாக்கும் கார்பன் வாயுவை மரங்கள் உள்வாங்கிக் கொள்கின்றன. எனவே மரங்களை வெட்டுவது பருவநிலை மாற்றத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
இதற்கிடையில் காடழிப்பு ஒப்பந்தத்தை, பூஜ்ஜிய காடழிப்பு உறுதிமொழி என்று கூறுவது தவறானது மற்றும் திசைதிருப்பல் என இந்தோனீசியாவின் துணை வெளியுறவுத் துறை அமைச்சர் மஹேந்திர சிரெகர் கூறினார்.
கடந்த சில ஆண்டுகளில் காடழிப்பு நடவடிக்கைகள் குறைந்தாலும், இந்தோனீசியாவில் பரந்துபட்ட காடுகள் தொடர்ந்து சுருங்கிக் கொண்டே வருகின்றன.
2001ம் ஆண்டு இந்தோனீசியாவில் முதன்மைக் காடுகள் 9.4 கோடி (94 மில்லியன்) ஹெக்டேர் பரப்பளவில் இருந்தது என குளோபல் ஃபாரஸ்ட் வாட்ச் என்கிற காடுகளின் நிலபரப்பை கண்காணிக்கும் வலைதளம் கூறுகிறது. 2020ம் ஆண்டில் இந்தோனீசிய காடுகளில் நிலப்பகுதி குறைந்தபட்சம் 10 சதவீதமாவது குறைந்துள்ளது.
பிற செய்திகள்:
- மீண்டும் கொரோனா வைரசின் மையமாகும் ஐரோப்பா: எச்சரிக்கும் WHO, நான்காவது அலையா இது?
- மலையை மீட்பதற்கு கரம் கோர்த்துப் போராடும் பாமக, விசிக
- நியூட்ரினோ ஆய்வில் கிடைத்த முடிவு: இயற்பியலில் புதிய அத்தியாயம் தொடக்கம்
- வாயில் ரத்தம் வடிய விழுந்து இறந்த 10 நெருப்புக் கோழிகள்: என்ன நடக்கிறது வண்டலூரில்?
- 'முப்பாட்டன் காலத்துலகூட இவ்வளவு கிடைக்கல' - ஸ்டாலின் உதவியால் நெகிழும் நரிக்குறவர் பெண் அஸ்வினி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்