You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஸ்டாலின் உதவியால் நெகிழும் நரிக்குறவர் பெண் அஸ்வினி - 'முப்பாட்டன் காலத்துலகூட இவ்வளவு கிடைக்கல'
- எழுதியவர், ஆ விஜயானந்த்
- பதவி, பிபிசி தமிழ்
தீபாவளி தினத்தன்று மாமல்லபுரத்தில் உள்ள நரிக்குறவர்கள் மற்றும் இருளர் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கியுள்ளார். "முப்பாட்டன் காலத்தில் கிடைக்காத உதவி எல்லாம் இப்ப கிடைச்சிருக்கு" எனக் கண்கலங்குகிறார், நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த பெண்மணி அஸ்வினி.
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தை அடுத்துள்ள பூஞ்சேரியில் நரிக்குறவர்கள், இருளர் சமூக மக்கள் என சுமார் 81 குடும்பங்கள் வசித்து வருகின்றன. மாமல்லபுரத்துக்கு சுற்றுலா வரும் பயணிகளிடம் ஊசி, பாசிமணி விற்பதுதான் இவர்களின் முழுநேர வேலை. இந்நிலையில், கடந்த அக்டோபர் 24ஆம் தேதி அங்குள்ள ஸ்ரீதலசயன பெருமாள் கோவிலில் நரிக்குறவர் சாதியைச் சேர்ந்தவர்கள் அன்னதானம் சாப்பிடச் சென்றபோது விரட்டியடிக்கப்பட்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
"அரசாங்கம்தானே அன்னதானம் போடுது, உங்க வீட்டுக் கல்யாண சாப்பாடு போடற மாதிரி அடிச்சு விரட்டறீங்க" என நரிக்குறவ பெண்மணி அஸ்வினி கேள்வி எழுப்பிய காணொளி வைரலானது.
மேலும், "நாங்க எல்லாம் ஊசி, பாசிமணி விற்கிறோம். எங்களுக்கு சாப்பாடு பிரச்னையில்ல. எங்க குழந்தைக படிக்கனும். எம்.பி.சி பட்டியல்ல இருக்கற எங்களை எஸ்.டி பட்டியலுக்கு மாத்தனும்" எனப் பல்வேறு கோரிக்கைகளையும் அஸ்வினி முன்வைத்தார்.
இதனைக் கவனித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, ஸ்ரீதலசயன பெருமாள் கோவிலுக்கு நேரடியாக வருகை புரிந்தார். அங்கு நடந்த அன்னதானத்தில் அஸ்வினியுடன் இணைந்து அவர் உணவருந்தினார். இந்தக் காட்சிகளும் சமூக ஊடகங்களில் வைரலானது. அப்போது அமைச்சருடன் பேசிய அஸ்வினி, இந்தப் பகுதியில் 25 வருடங்களாக தங்கள் சமூகத்தினர் மேய்க்கால் புறம்போக்கு நிலத்தில் வசித்து வருவதாகவும் பட்டா உள்பட எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாமல் இருப்பதாகவும் தெரிவித்தார்.
இதனை முதலமைச்சரின் கவனத்துக்கு சேகர்பாபு கொண்டு சென்றுள்ளார். இதையடுத்து, ''அந்தப் பகுதியில் ஒரு வாரத்தில் அனைத்து வசதிகளையும் செய்து முடிக்க வேண்டும்'' என முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதனை உள்வாங்கிக் கொண்ட அதிகாரிகள் மின் கம்பம் அமைத்தல், குடிநீர் குழாய் பொருத்துதல், புதிய சாலைகள் அமைத்தல் என பூஞ்சேரி கிராமத்தின் தோற்றத்தையே மாற்றிவிட்டனர்.
இதையடுத்து, இன்று காலை 10 மணியளவில் பூஞ்சேரி கிராமத்துக்குச் சென்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நரிக்குறவர் மற்றும் இருளர் மக்களுக்கு 4.53 கோடி மதிப்பில் 283 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். முதல்வர் மேடையிலேயே அவருக்கு நன்றி தெரிவித்து அஸ்வினி பேசினார். தொடர்ந்து, புதிதாகத் தயாரித்த ஊசி, பாசிமணி மாலையை முதல்வருக்கு அணிவித்தார். அவரது பேச்சை ஆர்வத்துடன் கவனித்த ஸ்டாலின், அஸ்வினியின் வீட்டுக்குச் சென்று சில நிமிடங்கள் அமர்ந்துவிட்டுக் கிளம்பினார்.
``பூஞ்சேரிக்கு முதலமைச்சர் வந்ததை எப்படிப் பார்க்கறீங்க?" என அஸ்வினியிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` அவர் எங்க பகுதிக்கு வந்துட்டுப் போனதை வாழ்க்கையில என்னைக்குமே மறக்க முடியாது. முதலமைச்சர் வரப் போறாருன்னு அமைச்சரும் அதிகாரிகளும் முன்னாடியே சொல்லிட்டாங்க. எங்களுக்கு கை, கால் எல்லாம் நடுக்கம் வந்திருச்சு. நம்ம ஊர் தேடி அவர் வர்றாருன்னா, போன ஜென்மத்துல என்ன கொடுப்பினை பண்ணினோம்னு நினைச்சு பெருமைப்பட்டோம். எந்த ஆதரவும் இல்லாம எங்க மக்கள் இருந்தாங்க. இப்ப பட்டா, வாக்காளர் அடையாள அட்டை, ரேசன் அட்டை, ஆதார் அட்டைன்னு எல்லாத்தையும் கொண்டு வந்து கொடுக்கறாங்க. தண்ணீர் வசதி பண்ணிக் கொடுத்திருக்காங்க. ரோடு போட்டுக் கொடுத்திருக்காங்க," என்றார்.
``ஸ்ரீதலசயனப் பெருமாள் கோவில் அன்னதானத்துல உங்களை அனுமதிக்காததுதான் பிரச்னையாகப் பேசப்பட்டது. இப்ப எப்படிப் பார்க்கறாங்க?"
`` எல்லாமே மாறிப் போயிருச்சு. இதை நான் நினைச்சுகூட பார்க்கல. எங்களுக்கு இப்படியெல்லாம் உதவி கிடைக்கும்னு நான் எதிர்பார்க்கல. புதுசா கல்யாணம் ஆன ஜோடிகளுக்கு வீடு கட்டித் தர்றோம்னு சொல்லியிருக்காங்க. தண்ணி குழாய் போட்டுக் கொடுத்ததே பெரிய விஷயம். இந்த அரசாங்கம், யார்க்கும் எந்த குறையும் வைக்கலை. பக்கத்துக்கு ஊருக்கும் சேர்த்து செஞ்சு கொடுத்திருக்காங்க. எங்க தாத்தா, பாட்டன் காலத்துல ஒன்னுமே இல்லாத வாழ்ந்துட்டுப் போயிட்டாங்க. ஆனா, இந்தக் காலத்துல எங்களுக்கு இவ்வளவு வசதிகள் கிடைச்சிருக்கு. அதனாலதான், முதலமைச்சருக்கு அதே மேடையில நன்றி சொல்லி, ஊசி, பாசிமணி மாலை செஞ்சு போட்டோம்."
''நீங்க பேசியதால்தான் இவ்வளவு உதவிகளும் வந்து சேர்ந்திருக்கு. உங்கள ஊர் மக்கள் எப்படிப் பார்க்கறாங்க?"
''நீ கடவுள் மாதிரின்னு எங்க மக்கள் சொல்றாங்க. அப்படியெல்லாம் இல்லை. எனக்குத் தெரிஞ்சு தலசயனப் பெருமாளும் முதலமைச்சரும்தான் கடவுள். அவங்க மூலமாத்தான் உதவி கிடைச்சது. எங்க மக்களும், `உனக்காக கேட்காம, எங்களுக்காகவும் நீ வாங்கிக் கொடுத்திருக்க'ன்னு சொல்லி எனக்கும் மாலை போட்டாங்க."
``உங்க கணவர் எதாவது சொன்னாரா?"
``அவரோடு நான் இல்லை. 'எங்க குடும்பத்துக்கு சொந்தமா வீடு இல்லை, நகை இல்லை'ன்னு சொல்லி வரதட்சணைக்காக என்னை கைவிட்டுட்டுப் போயிட்டாங்க. `உன்னைக் கல்யாணம் பண்ணி என்ன பிரயோஜனம்'னு என் மாமியார் சொன்னாங்க. அவங்க எல்லாம் இப்ப மெட்ராஸ்ல இருக்காங்க. அவரைக் கட்டாயப்படுத்தித்தான் கூட்டிட்டுப் போயிட்டாங்க. என்னை விட்டுப் போகறதை அவர் விரும்பல. இப்ப அவரையும் என்னோடு சேர்த்து வைக்க உதவி பண்றோம்னு சொல்லியிருக்காங்க. நடக்கறதை எல்லாம் பார்க்கும்போது ரொம்ப அதிசயமா இருக்குங்க," என்று மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் கலந்து முடித்தார் அஸ்வினி.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்