You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பொன்விழா: செல்வச் செழிப்பில் மிளிரும் பாலைவன நாட்டின் கதை
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டின் 50வது தேசிய தினம் இன்று கொண்டாடப்படுகிறது. 1971ஆம் ஆண்டு, பிரிட்டிஷ் அரசிடமிருந்து விடுதலை பெற்ற ஆறு அரபு நாடுகள் ஒன்றிணைந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆன நாளே அங்கு தேசிய நாள்.
அபு தாபி, அஜ்மன், துபாய், ஃபுஜய்ரா, ஷார்ஜா, அம் அல் குவெய்ன் ஆகிய ஆறு நாடுகளை உள்ளடக்கிய ஐக்கிய அரபு எமிரேட்சுடன் 1972ல் ராஸ் அல் காய்மா இணைந்தது.
எமிரேட்ஸின் வளர்ச்சி
அபு தாபியைத் தலைநகரமாகக் கொண்டிருக்கும் இந்த நாடு, 1950களில் பெரிதும் பாலைவன பூமியாகவே இருந்தது. அப்பிரதேசத்தின் எண்ணெய் வளங்கள் கண்டறியப்பட்டு, 1962ல் எண்ணெய் ஏற்றுமதி துவங்கியபின், அதன் பொருளாதாரம் வெகு துரிதமாய் வளர்ந்து, இன்று உலகிலேயே மிகவும் செல்வச் செழிப்புமிக்க நாடுகளில் ஒன்றாக இருக்கிறது.
பழமைவாதம் சார்ந்த சர்வாதிகார ஆட்சியே நடைமுறையில் இருந்தாலும், தொழில் வளர்ச்சிக்கும் வர்த்தகத்திற்கும் ஏற்ற இடமாகத் தன்னை உருவாக்கிக்கொண்டுள்ளது ஐக்கிய அரபு எமிரேட்ஸ்.
முன்னணியில் துபாய்
குறைந்துவரும் எண்ணெய் வளங்களை ஈடு செய்யும் பொருட்டு, தன்னை உலகின் முக்கியமான ஒரு சுற்றுலா பிரதேசமாக மறு உருவாக்கம் செய்துகொண்டுள்ளது இந்நாடு. இதில் முதன்மையாகத் திகழ்வது துபாய்.
1960களில் வெறும் 40,000 மக்கள் மட்டுமே வாழ்ந்துவந்த பாலைவனப் பிரதேசமான துபாயில், இப்போது 33 லட்சம் மக்கள் வாழ்கிறார்கள். இதில் 31 லட்சம் மக்கள் பிற நாடுகளைச் சேர்ந்தவர்கள்.
துபாயின் வளர்ச்சியில் அரசர் ஷேக் மொஹமதின் பங்கு
எண்ணெய் ஏற்றுமதியை மட்டுமே சார்ந்திருப்பதிலிருந்து, துபாயை உலகளாவிய தொழில்-வர்த்தகப் பிரதேசமாகவும் சுற்றுலா பிரதேசமாகவும் உருமாற்றி விரிவாக்கியதில், அதன் இப்போதைய அரசர் ஷேக் மொஹமத் பின் ரஷீத் அல் மக்தூம் ஆற்றிய பங்கு முக்கியமானது.
2006ல், தனது சகோதரர் ஷேக் மக்தூம் அல் மக்தூமின் மரணத்திற்குப் பிறகு, அவரது இடத்தில் ஷேக் மொஹமத் துபாயின் அரசரானார்.
இவரது ஆட்சிக் காலத்தில்தான், இன்று துபாயின் அடையாளமாகத் திகழும் உலகின் மிக உயரமான கட்டடமான புர்ஜ் கலீஃபா (2010), உலகின் மிகப்பெரிய வணிக வளாகமான துபாய் மால் (2008), மற்றும் துபாயின் மெட்ரோ ரயில் சேவை (2009) போன்றவை துவங்கப்பட்டன.
குற்றச்சாட்டும் மறுப்பும்
2009ம் ஆண்டு, சர்வதேசப் பொருளாதார நெருக்கடியின்போது துபாயின் கட்டுமானத் துறை பெரும் வீழ்ச்சி கண்டது. இதிலிருந்து மீண்டுவரத் தேவையான நிதியை அபு தாபி தந்து உதவியது.
வானளாவிய கட்டடங்களை எழுப்பி, துரித வளர்ச்சி கண்ட துபாயின் கட்டுமானத் தொழிலில், மிகக் குறந்த சம்பளத்திற்கு அமர்த்தப்படும் பிற நாடுகளைச் சேர்ந்த பணியாளர்கள் மோசமாக நடத்தப்படுவதாகவும், அவர்களின் உழைப்பு சுரண்டப் படுவதாகவும் குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன.
இக்குற்றச்சட்டுகளை மறுக்கும் துபாய் அரசு, தம் சட்டங்கள் அனைத்து குடிமக்களையும், துபாயில் வசிக்கும் மற்ற நாட்டைச் சேர்ந்தவர்களையும் நல்ல முறையில் நடத்துவதற்கான அடிப்படையை வழங்குகிறது என்று கூறியிருக்கிறது.
பொன்விழா ஆண்டில் உலகக் கண்காட்சி
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பொன்விழா ஆண்டிற்கு முத்தாய்ப்பாக இந்த ஆண்டு அக்டோபர் 1ல் இருந்து, மார்ச் 31, 2022 வரை துபாயில் 'எக்ஸ்போ 2020' நிகழ்கிறது. 2020ல் நடந்திருக்க வேண்டிய இந்த சர்வதேசக் கண்காட்சி, கொரோனா பெருந்தொற்றின் காரணமாக இந்த ஆண்டு நடத்தப்படுகிறது. இதல் 192 உலக நாடுகள் பங்கேற்கின்றன.
நிலையான வளர்ச்சி, வாகனத் தொழில்நுட்பம், வாய்ப்புகள் (sustainability, mobility, opportunity) ஆகிய முக்கிய தலைப்புகளின் கீழ் இந்தக் கண்காட்சி நடக்கிறது. சர்வதேச சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வண்ணம், கலை நிகழ்ச்சிகள், உணவுத் திருவிழாக்கள், விளையாட்டுப் போட்டிகள் போன்றவையும் நிகழ்கின்றன.
7 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 5,24,000 கோடி ரூபாய்) செலவில் நடத்தப்படும் இந்நிகழ்வில், 2.5 கோடி பார்வையாளர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்