You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சீன பாலைவனத்தில் அமெரிக்க போர் கப்பல் மாதிரிகள்: செயற்கைக்கோள் படங்கள்
அமெரிக்கப் போர்க் கப்பல்களின் மாதிரியை சீனாவின் வட மேற்கு பகுதியில் உள்ள ஷின்ஜியாங் பிராந்தியத்தில் இருக்கும் பாலைவனத்தில் உருவாக்கி வைக்கப்பட்டுள்ளது போல செயற்கைக் கோள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் காட்டுகின்றன.
அமெரிக்காவைச் சேர்ந்த விண் தொழில்நுட்ப நிறுவனமான 'மேக்சர்' (maxar) எடுத்த புகைப்படம் ஒன்றில் விமானம் தாங்கி போர்க்கப்பல் ஒன்று ரயில் தண்டவாளங்கள் மீது நிறுத்தப்பட்டு இருப்பதைப் பார்க்க முடிகிறது.
யுஎஸ்என்ஐ நியூஸ் எனும் அமெரிக்க கடற்படை குறித்த செய்திகளை வெளியிடும் இணையதளத்தில், சீன ராணுவத்தின் தாக்குதல் இலக்குகளாகப் பயன்படுத்தும் நோக்கில் இந்த போர்க்கப்பல் மாதிரிகள் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்லாண்டு காலமாக போர்க் கப்பல்களைத் தாக்கும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை தயாரிக்கும் சீனா அவற்றை சோதனை செய்து வருகிறது.
தென் சீன கடல் பகுதியில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் சீனா தனது ராணுவ வல்லமைகளையும், அணு ஆயுத வல்லமைகளையும் சமீப மாதங்களாக அதிகரித்து வருகிறது என்று அமெரிக்கா எச்சரிக்கிறது.
சீனாவின் தாக்லமக்கான் பாலைவனத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ஆயுதங்கள் மற்றும் பிற உள் கட்டமைப்புகள் எதுவுமில்லாத அமெரிக்க போர்க்கப்பல்கள் மாதிரிகளை உள்ளடக்கியவையாக இருக்கின்றன என்று ஞாயிற்றுக்கிழமை யுஎஸ்என்ஐ நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஒரு விமானம் தாங்கிக் கப்பல் மற்றும் இரண்டு கடற்படை பாதுகாப்புக் கப்பல்களின் மாதிரிகள் ஆகியவற்றை சீன பாலைவனத்தில் எடுக்கப்பட்ட படங்கள் காட்டுகின்றன என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்மூலம் போர்க் கப்பல்களைத் தாக்கும் வசதிகளை, குறிப்பாக அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான போர்க் கப்பல்களைத் தாக்குவதற்கான வசதிகளை, சீனா மேம்படுத்தி வருவதை அறிய முடிகிறது என அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகில் மிகவும் சர்ச்சைக்குரிய கடல் பகுதிகளில் ஒன்றான தென் சீன கடல் பகுதியில் அமெரிக்க கடற்படை தொடர்ந்து பயிற்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
அந்தக் கடல் பரப்பில் பெரும்பகுதி தங்களுக்குத்தான் சொந்தம் என்று சீனா கூறுகிறது. எனினும் தென்சீனக் கடலை சுற்றியுள்ள நாடுகள் சீனாவின் கூற்றை மறுக்கின்றன. சீனாவின் கூற்றை அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளும் எதிர்க்கின்றன.
தென்சீனக் கடல் பகுதி வழியாக உலகின் பெருமளவிலான வர்த்தகம் நிகழ்கிறது. இப்பகுதி வழியாக மட்டும் ஆண்டுக்கு 3 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான சரக்குகள் கொண்டு செல்லப்படுகின்றன.
பிலிப்பைன்ஸ், மலேசியா, தைவான், வியட்நாம் உள்ளிட்ட நாடுகள் சீனா தென் சீனக் கடல் பகுதிக்கு சொந்தம் கொண்டாடுவதை பல பத்தாண்டுகளாகவே எதிர்த்து வருகின்றன. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக சீனா அங்கு தமது ஆதிக்கத்தை வலுப்படுத்த விரும்புவதால் பதற்றநிலை அதிகரித்துவருகிறது.
சீனாவை எதிர்க்க மேற்கண்ட நாடுகளுக்கு அமெரிக்கா ஆதரவளித்து வருகிறது.
பிற செய்திகள்:
- சென்னை: நிரம்பி வழியும் ஏரிகள் - 12ஆம் தேதி வரை கன மழைக்கு வாய்ப்பு
- ஒருபாலுறவுக்காரர் பெயரை கப்பலுக்குச் சூட்டிய அமெரிக்க கடற்படை
- 6 வயது சிறுவன் கழுத்தறுத்து கொலை - ஏன் நடந்தது இந்த சம்பவம்?
- மலேசிய இளைஞருக்கு அறிவிக்கப்பட்ட தூக்கு தண்டனை திடீர் நிறுத்தம் - முழு விவரம்
- தமிழக மாவட்டங்களுக்கு 'சிவப்பு' எச்சரிக்கை: இந்த வண்ணங்கள் எப்படி வேலை செய்யும்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்