You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பருவநிலை மாநாடு: மாபெரும் அணியை அனுப்பியுள்ள புதைபடிம எரிபொருள் துறை - தடை செய்யக்கோரும் பிரசாரகர்கள்
- எழுதியவர், மேட் மெக்ராத்
- பதவி, சுற்றுச்சூழல் செய்தியாளர்
கிளாஸ்கோவில் நடந்து வரும் காலநிலை மாநாட்டில், எந்த ஒரு நாட்டையும் விட, அதிக எண்ணிக்கையில் புதைபடிம எரிபொருள் தொழிற்துறையுடன் தொடர்புடைய பிரதிநிதிகள் இருப்பதாக தெரிய வந்துள்ள பகுப்பாய்வு பிபிசியுடன் பகிரப்பட்டுள்ளது.
காலநிலை மாற்றம் மற்றும் புவி வெப்ப அதிகரிப்பு ஆகியவற்றுக்கு நிலக்கரி, பெட்ரோலியம் உள்ளிட்ட புதைபடிம எரிபொருள்களின் பயன்பாடு முதன்மையான காரணமாக உள்ளது.
காலநிலை மாநாடு தொடங்கப்படுவதற்கு முன், அதில் கலந்து கொள்பவர்களின் விவரங்களை ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டது. அதை குளோபல் விட்னஸ் குழுவைச் சேர்ந்த பிரசாரகர்கள் பட்டியலை மதிப்பீடு செய்தனர்.
புதைபடிம எரிபொருள் துறையுடன் தொடர்புடைய 503 பேர், காலநிலை மாநாட்டில் அதிகாரபூர்வமாக கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பதை கண்டறிந்தனர்.
அவர்கள் எண்ணெய் மற்றும் எரிவாயு தொழிற்துறையினருக்கு சாதகமாக கொள்கைகள் வகுக்கப்படும் விதத்தில் வாதங்களை முன்வைப்பதாக கூறப்படுகிறது. அவர்களை மாநாட்டில் கலந்து கொள்வதில் இருந்து தடை செய்யப்பட வேண்டும் என பிரசாரகர்கள் கூறுகிறார்கள்.
"புதைபடிம எரிபொருள் துறை பருவநிலை நெருக்கடியை மறுக்கவும், அது தொடர்பாக முன்னெடுக்கப்பட வேண்டிய பல நடவடிக்கைகளை தாமதப்படுத்தவும் கடந்த பல தசாப்த காலத்தை செலவழித்துள்ளது. ஆகையால்தான் இது பெரிய பிரச்னையாக உள்ளது" என்கிறார் குளோபல் விட்னஸ் குழுவைச் சேர்ந்த மர்ரி வொர்தி.
"கடந்த 25 ஆண்டுகளாக ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை தொடர்பான பேச்சுவார்த்தைகள் உலக அளவில் உமிழ்வுகளின் அளவு குறைக்கப்படாமலிருக்க வழிவகுத்ததில் அவர்களின் ஆதிக்கம் அல்லது செல்வாக்குக்கு மிக முக்கிய பங்குண்டு."
கிளாஸ்கோ காலநிலை மாநாட்டில் சுமார் 40,000 பேர் கலந்து கொள்கின்றனர். ஐக்கிய நாடுகள் சபை தரவுகளின்படி 479 பிரதிநிதிகளுடன், பிரேசில் மிகப்பெரிய அதிகாரப்பூர்வ பிரதிநிதிகள் குழுவைக் கொண்டுள்ளது.
கிளாஸ்கோ மாநாட்டை நடத்தும் பிரிட்டன் சார்பிலான குழுவில் கூட 230 பேர்தான் பதிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்டுள்ளது.
புதைபடிம எரிபொருள் பரப்புரையாளர் என்பவர் யார்?
ஒரு வர்த்தக சங்கத்தின் பிரதிநிதிகள் குழுவில் உள்ளவர் அல்லது எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு, அதை பிரதிநிதித்துவப்படுத்தும் குழுவில் உறுப்பினராக இருப்பவர் புதைபடிம எரிபொருள் பரப்புரையாளர் (லாபியிஸ்ட்) என குளோபல் விட்னஸ், கார்ப்பரேட் அக்கவுன்டபிளிட்டி போன்ற குழுக்கள் உட்பட இந்த பகுப்பாய்வை மேற்கொண்டோர் வரையறுக்கின்றனர்.
ஒட்டுமொத்தமாக, கிளாஸ்கோ மாநாட்டில் புதைபடிம எரிபொருள் துறையின் நலன்களை கருத்தில் கொண்டு செயல்படும் விதத்தில் 503 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர் அல்லது அவர்களோடு தொடர்புடையவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும், புதைபடிம எரிபொருள் பரப்புரையாளர்கள் கனடா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாட்டு பிரதிநிதிகள் குழுவில் உறுப்பினர்களாக உள்ளனர்.
COP26 மாநாட்டில், கடந்த 20 ஆண்டுகளில் காலநிலை மாற்றத்தால் மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளின் எட்டு பிரதிநிதிகள் குழுவை விட, புதைபடிம எரிபொருள் துறைக்கு சாதகமான பரப்புரையாளர்களின் எண்ணிக்கை அதிகம்.
100க்கும் மேற்பட்ட புதைபடிம எரிபொருள் நிறுவனங்கள் இந்த பருவநிலை மாநாட்டில் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகின்றன, மேலும் 30 வர்த்தக சங்கங்கள் மற்றும் உறுப்பினர் அமைப்புகளும் கலந்து கொள்கின்றன.
எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனமான BP என்கிற பிரிட்டன் நிறுவனத்தைச் சேர்ந்த மூன்று பேர் உட்பட, 103 பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் இன்டர்நேஷனல் எமிஷன் டிரேடிங் அசோசியேஷன் (IETA) என்கிற சங்கம் அவர்கள் அடையாளம் கண்ட மிகப்பெரிய குழுக்களில் ஒன்றாகும்.
குளோபல் விட்னஸின் கூற்றுப்படி, ஐ.இ.டி.ஏ சங்கம் பல பெரிய மற்றும் முக்கிய எண்ணெய் நிறுவனங்களால் ஆதரிக்கப்படுகிறது. இச்சங்கம் சரிகட்டுதல் (Offsetting) மற்றும் கார்பன் வர்த்தகம் (Carbon Trading) போன்ற முறைகளை ஊக்குவித்து, மறுபக்கம் எண்ணெய் மற்றும் எரிவாயுவை தொடர்ந்து உறிஞ்சி எடுப்பதை அனுமதிக்கும் ஒரு வழியாகப் பார்க்கிறது.
"இச்சங்கத்தில் ஏராளமான புதைபடிம எரிபொருள் நிறுவனங்கள் உறுப்பினர்களாக உள்ளனர். புதைபடிம எரிபொருள் நிறுவனங்களால், அவர்களின் நலன்களுக்காக அந்த சங்கம் இயக்கப்படுகிறது." என வொர்த்தி கூறினார்.
"பருவநிலை மாற்றம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படுவது போலத் தோன்றும் விதத்தில், தவறான தீர்வுகள் முன்வைக்கப்பட்டு, தற்போதைய நிலையை அப்படியே பாதுகாக்கும், பருவநிலை மாற்றத்துக்கு உண்மையான தீர்வென நாமறிந்த, புதைபடிம எரிபொருளை நிலத்துக்குள்ளேயே விட்டுவைக்க வேண்டும் என்கிற சரியான மற்றும் எளிமையான முடிவுகளை எடுக்க விடாமல் தடுக்கும் சூழலை நாம் காண்கிறோம்"
கார்பன் உமிழ்வைக் குறைப்பதற்கான மிகச் சிறந்த சந்தை அடிப்படையிலான வழிகளைக் கண்டறிய இச்சங்கம் இருப்பதாக ஐ.இ.டி.ஏ கூறுகிறது. இச்சங்கத்தில் புதைபடிம எரிபொருள் நிறுவனங்கள் மட்டுமின்றி பிற வணிக நிறுவனங்களும் உள்ளன.
"எங்கள் சங்கத்தில் சட்ட நிறுவனங்கள் உள்ளன, திட்ட மேம்பாட்டாளர்கள் உள்ளனர், நச்சு வாயுக்களை உமிழாத தொழில்நுட்பத்தை உலகெங்கிலும் நிறுவுபவர்களும் எங்கள் சங்கத்தின் உறுப்பினர்களாக உள்ளனர்" என ஐ.இ.டி.ஏ சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் அலெஸாண்ட்ரோ விட்டெல்லி கூறுகிறார்.
"மாற்றத்திற்கான ஒரு செயல்முறை நடந்து கொண்டிருக்கிறது, கார்பன் சந்தைகள் மாற்றம் நடைபெறுவதை உறுதிசெய்ய சிறந்த வழியாகும்," என்றும் கூறினார்.
உலக சுகாதார அமைப்பு கூட்டங்களிலிருந்து புகையிலைக்கு ஆதரவான அனைத்து பரப்புரையாளர்களும் தடை செய்யப்படும் வரை, அவ்வமைப்பு புகையிலையைத் தடை செய்வதில் தீவிரம் காட்டவில்லை என பிரசார குழுக்கள் வாதிடுகின்றன. அதே போல காலநிலை மாநாட்டில் எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்கள் தடை செய்யப்பட வேண்டும் என விரும்புகிறார்கள்.
"ஷெல் மற்றும் பிபி (BP) போன்ற நிறுவனங்கள், தங்கள் புதைபடிம எரிபொருள் உற்பத்தியை அதிகரிக்கவிருப்பதாக வெளிப்படையாக கூறிவிட்டு, காலநிலை மாநாடு பேச்சு வார்த்தைகளில் பங்கெடுத்துக் கொண்டிருக்கின்றன," என்று பகுப்பாய்வில் பங்கெடுத்த கார்ப்பரேட் யூரோப் அப்சர்வேட்டரியைச் சேர்ந்த பாஸ்கோ சபிடோ கூறினார்.
"நாம் காலநிலை தொடர்பான இலக்கை உயர்த்துவதில் தீவிரமாக இருந்தால், புதைபடிம எரிபொருள் பரப்புரையாளர்களை பேச்சுவார்த்தையிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும்," என்கிறார் அவர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்