சிங்கப்பூரில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மட்டும் தொடரும் கடும் கொரோனா கட்டுப்பாடுகள்

சிங்கப்பூரில் வாழும் புலம்பெயர் தொழிலாளர்கள் - கோப்புப் படம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சிங்கப்பூரில் வாழும் புலம்பெயர் தொழிலாளர்கள் - கோப்புப் படம்
    • எழுதியவர், நிக் மார்ஷ்
    • பதவி, சிங்கப்பூர்

2020 ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் வசிக்கும் விடுதிகள் தொடர்ச்சியாக கொரோனா வைரஸ் தொற்றுகளால் பாதிக்கப்பட்டன.

இப்போது தொற்று எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துவிட்டது, ஆனாலும் பெரும்பாலான ஆண்கள் வேலைக்காக செல்வது தவிர வேறு எங்கும் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. உலகில் இதுவரை எவரும் எதிர்கொள்ளாத அளவிற்கு நீண்டகால கட்டுப்பாடுகள் இங்கு நிலவுகின்றன.

"இது சிறை வாழ்க்கை... இது அடைத்து வைக்கப்பட்ட வாழ்க்கை"

வங்கதேசத்தில் ஷெரீஃப் நடத்திவந்த புத்தகக் கடை மூடப்பட்டதை அடுத்து அவர், 2008 இல் சிங்கப்பூர் வந்தார். அந்த நேரத்தில் அவரது மனைவி கர்ப்பமாக இருந்தார். கடந்த 13 ஆண்டுகளில் அவர் தனக்காக இங்கே ஒரு வாழ்க்கையை உருவாக்கிக்கொண்டுள்ளார். ஆனால் 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து அவருக்குத் தெரிந்ததெல்லாம் அவருடைய தங்குவிடுதியின் நான்கு சுவர்கள் மற்றும் அவர் வேலை செய்யும் கட்டுமானத் தளம் மட்டுமே.

அவரைப்போன்ற சுமார் 3 லட்சம் பேர், பொது மக்களுடன் ஒன்றுகலக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒரு சில தொழிலாளர்களை "சோதனை திட்டத்தின்" கீழ் வெளியே செல்ல அனுமதிக்கப்போவதாக கடந்த வாரம் சிங்கப்பூர் அரசு கூறியது.

மகிழ்ச்சியாக வாழ்ந்த நாட்களில் ஷெரீஃப்

பட மூலாதாரம், MD SHARIF

படக்குறிப்பு, மகிழ்ச்சியாக வாழ்ந்த நாட்களில் ஷெரீஃப்

"நான் இந்தப் பரிசோதனையை பாராட்டுகிறேன்," என்று அவர் கூறுகிறார். "ஆனால் இந்த செய்தியால் நான் அதிக மகிழ்ச்சியை அடைந்தேன் என்று கூறமுடியாது. தொழிலாளர்கள் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்."

இந்தத் திட்டத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் ஷெரீப் இல்லை. அவரை வேலைக்கு அழைத்துச் செல்லும் லாரியின் பின்புறத்தில் அமர்ந்திருக்கும் அவர், இந்தக்கட்டுப்பாடுகளுக்கு உட்படாத நகரத்தையும், அதன் மக்களையும் அடிக்கடி பார்க்கிறார்.

" எல்லோரும் வெளியே மகிழ்ச்சியாக இருப்பதை பார்க்கும்போது, எனக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது," என்று வீடியோ அழைப்பு மூலமாக பிபிசியிடம் பேசிய அவர் தெரிவித்தார்.

"அவர்கள் வெளியே சாப்பிடுகிறார்கள், ஷாப்பிங் செல்கிறார்கள், தங்கள் நண்பர்களைச் சந்திக்கிறார்கள். என்னால் ஏன் இது முடியவில்லை? நானா இந்த கொரோனா வைரஸை உருவாக்கினேன்?" என்று அவர் கேள்வி எழுப்புகிறார்.

ஓய்வு நேரங்களில் பெரும்பாலும் அவர் தனது மேல் அடுக்கு படுக்கையில் படுத்துக் கொண்டு, தனது குடும்பத்தினருடன் பேசுவார். அல்லது ஆங்கிலம் மற்றும் வங்காள மொழியில் உரைநடை மற்றும் கவிதைகளை எழுதுவார்.

இரவுநேரம் தான் மிகவும் கடினமாக இருக்கும் என்று அவர் கூறுகிறார். பலர் அடிக்கடி வராந்தாவில் நடந்துகொண்டே இருப்பார்கள் அல்லது வெளியில் தரையில் படுத்து தூங்க முயற்சி செய்வார்கள்.

"நான் என் படுக்கையில் படுத்து தூங்க முயற்சி செய்வேன். ஆனால் தூக்கம் வராது. நான் எப்படி தூங்க முடியும்? எனக்கு வெளி உலக வெளிச்சம் தேவை, சுத்தமான வெளிக்காற்று தேவை," என்கிறார் அவர்.

'நாங்கள் விலங்குகளா?'

சிங்கப்பூரில் உள்ள லிட்டில் இந்தியா மாவட்டம் பல புலம்பெயர் தொழிலாளர்கள் வாழும் இடமாக உள்ளது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சிங்கப்பூரில் உள்ள லிட்டில் இந்தியா மாவட்டம் பல புலம்பெயர் தொழிலாளர்கள் வாழும் இடமாக உள்ளது.

சோதனைத் திட்டத்தின் முதல் நாளில், சிங்கப்பூரின் லிட்டில் இண்டியா பகுதிக்கு பிபிசி அழைக்கப்பட்டது. ஐம்பது தொழிலாளர்கள் மேற்பார்வை இல்லாமல் தங்கள் விடுதிகளில் இருந்து வெளியே நான்கு மணி நேரம் செலவிட அனுமதிக்கப்பட்டனர்.

மனித ஆற்றல் அமைச்சகத்தின் (MOM) செய்தித் தொடர்பாளர் இதை "மைல்கல்" என்று விவரித்தார். சிங்கப்பூரின் முக்கிய இந்து கோவில் ஒன்றில் இரண்டு ஆண்கள், பத்திரிகையாளர்கள் முன்னால் அழைத்துவரப்பட்டனர்.

அவர்களில் ஒருவரான, இந்தியாவைச் சேர்ந்த பக்கிரிசாமி முருகானந்தம் அங்கு கூடியிருந்தவர்களிடம், " வெளியில் வர அனுமதிக்கப்பட்டதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். எங்களை கவனித்துக்கொள்ளும் சிங்கப்பூர் அரசுக்கும் மனித ஆற்றல் அமைச்சகத்திற்கும் மிகவும் நன்றி" என்று கூறினார்.

தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து சிங்கப்பூர், 57 லட்சம் மக்கள்தொகையில் 58 இறப்புகளை பதிவு செய்துள்ளது.

வைரஸை கட்டுப்படுத்துவதில் அந்த நாடு கண்ட வெற்றியானது, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சிங்கப்பூர் மக்களுக்கு சுதந்திரத்தை வழங்கியுள்ளது.

ஆனால் கட்டுப்பாடுகள் மிகக் கடுமையாக இருந்த நேரத்திலும், நாடு பொதுமுடக்கத்தின் கீழ் இருந்தபோதிலும்கூட, சிங்கப்பூரில் எந்த ஆரோக்கியமான நபரும் தங்கள் வீட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்படவில்லை.

சமூக இடைவெளி ஊக்குவிக்கப்பட்டது. ஆனால் தங்குவிடுதிகளில் உள்ள தொழிலாளர்களுக்கு இது பொருந்தாது.

"தங்குவிடுதிகளில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்களின் வாழ்க்கை மற்றும் வேலை நிலைமைகள் அவர்களுக்கு தொற்றுநோய் ஏற்பட்டு, அது அதிகமாகப்பரவும் ஆபத்தை ஏற்படுத்துகின்றன," என்று சிங்கப்பூர் மனித ஆற்றல் அமைச்சர் டான் சீ லெங் பிப்ரவரியில் கூறினார்.

டான், பிபிசியின் நேர்காணல் வேண்டுகோளை நிராகரித்தார். ஆனால் "தொழிலாளர்களை தங்கும் விடுதிகளுக்கு உள்ளேயே வைத்திருக்கும் கொள்கையானது நமது புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்கும், நோய் பரவல் அபாயத்தைக் குறைப்பதற்குமானது," என்று தான் வெளியிட்ட அறிக்கையில் மனித ஆற்றல் அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

தான் பாதுகாக்கப்படுவதை விட தண்டிக்கப்படுவது போல உணர்வதாக ஷெரீஃப் கூறுகிறார்.

"சமூகத்தில் உள்ள அனைவரும் வெளியே செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவரும் சமூக இடைவெளி விதிகளைப் பின்பற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் எங்களால் இதை செய்ய முடியாது என்று அவர்கள் நினைக்கிறார்கள்," என்று அவர் மேலும் கூறுகிறார்.

"புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான தனிச் சட்டத்தை பார்க்கும்போது, 'நாங்கள் மனிதர்களா அல்லது விலங்குகளா? எங்களுக்கு எதுவும் புரியாதா? நாங்கள் அவ்வளவு படிக்காதவர்களா?'என்று தோன்றுகிறது," என ஷெரீஃப் குறிப்பிடுகிறார்.

ஓர் எச்சரிக்கை

பத்திரிகையாளர்களிடம் பேசும் பக்கிரிசாமி
படக்குறிப்பு, பத்திரிகையாளர்களிடம் பேசும் பக்கிரிசாமி

தங்கும் விடுதிகளில் உள்ள ஆண்கள் - பெரும்பாலும் தெற்காசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள். இங்கே அவர்கள் முக்கியமாக உடலுழைப்பு வேலைகளைச் செய்கிறார்கள்.

அவர்கள் நாட்டின் சாலைகள், பாலங்கள் மற்றும் குடியிருப்புகளை உருவாக்குகிறார்கள். பதிலுக்கு, அவர்கள் தங்கள் குடும்பங்களுக்கு நிறைய பணத்தை அனுப்ப முடிகிறது.

வங்கதேசத்தைச் சேர்ந்த தஸ் ரீஃப், 2017 இல் சிங்கப்பூர் வந்தார். அவருக்கு வயது 25. மாதம் 750 டாலருக்கும் குறைவாக சம்பாதிக்கிறார். ஏர் கண்டிஷனிங் யூனிட்களை அவர் பராமரிக்கிறார்.

அவர் சிங்கப்பூர் வருவதற்கு ஏஜென்சி கட்டணமாக சுமார் 7,500 டாலர் செலவிட்டார்.

"நாங்கள் நாட்டுக்காக அயராது உழைக்கிறோம்," என்று அவர் கூறுகிறார். "நாங்கள் எல்லாவற்றையும் செய்கிறோம், உங்களுக்காக எல்லாவற்றையும் செய்கிறோம்." என்கிறார் அவர்.

"நாங்களும் உங்களைப் போன்ற மனிதர்கள்தான். சமூகத்தில் உள்ள அனைவரையும் போலவே. எங்கள் கெளரவத்தை திரும்பப் பெற நாங்கள் விரும்புகிறோம்."

ஆனால் தங்குவிடுதியில் வாழ்க்கை என்பது பொதுவாக 30 பேர் வரை ஒரு அறையைப் பகிர்ந்துகொள்வது கூடவே குளியலறை, சமையல் மற்றும் பொழுதுபோக்கு இடத்தை இன்னும் நூற்றுக் கணக்கானவர்களுடன் சேர்ந்து பயன்படுத்துவதாகும்.

இந்த வாழ்க்கை நிலைமைகள் காரணமாக 2020 மார்ச் மாதத்தில் தங்குவிடுதிகளில் கொரோனா தொற்று வேகமாகப் பரவியது. வைரஸால் கிட்டத்தட்ட தீண்டப்படாத நிலையில் இருந்த சிங்கப்பூர், இதன்காரணமாக இரண்டு மாதங்கள் நாடு தழுவிய பொதுமுடக்கத்தை அறிவித்தது.

ஐநாவுக்கான முன்னாள் சிங்கப்பூர் தூதர் டாமி கோ, சமீபத்தில் அரசை கண்டித்தார்..

"நாம் இதை ஒரு எச்சரிக்கையாக கருத வேண்டும்" என்று கோ கூறினார். "நமது இன்றியமையாத வெளிநாட்டுத் தொழிலாளர்களை, ஒரு வளர்ந்த நாடு எப்படி நடத்தவேண்டுமோ அப்படி நடத்தவேண்டும். அவர்கள் இப்போது நடத்தப்படும் அவமானகரமான வழியில் அல்ல."என்று அவர் கூறினார்.

ஆனால் தங்குவிடுதியில் குடியிருப்பாளர்களை நாட்டில் உள்ள மற்றவர்களிடமிருந்து பிரித்துவைப்பது பற்றி சிங்கப்பூர் அரசு எப்போதும் வெளிப்படையாகவே உள்ளது.

அவர்கள் வேறு விசா வைத்திருக்கிறார்கள், வேறு தொழிலாளர் சட்டங்களின் கீழ் வேலை செய்கிறார்கள். நகரத்தில் அலுவலகப் பணிகளை செய்யும் மற்ற வெளிநாட்டவர்களைப் போலவே இவர்களுக்கும் உரிமைகள் இருப்பதாக அதிகாரிகள் பாசாங்கு செய்வதில்லை.

கோவிட் -19ன் அதிகாரப்பூர்வ தினசரி தொற்று எண்ணிக்கை கூட மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன: "இறக்குமதி", "தங்கும் விடுதி குடியிருப்பாளர்கள்" மற்றும் "சமூகம்".

"சமூகம்" என்பது தங்குவிடுதிகளில் வசிப்பவர்களைத் தவிர மற்ற அனைவரையும் குறிக்கிறது.

புள்ளிவிவரங்கள் உண்மையை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. செப்டம்பர் 16 நிலவரப்படி, பதிவு செய்யப்பட்ட தொற்றுகளில், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 74% ஆக உள்ளனர். சிங்கப்பூரின் மொத்த மக்கள் தொகையில் தொழிலாளர்கள் வெறும் 5% மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

தஸ் ரீஃப்

பட மூலாதாரம், TASRIF

படக்குறிப்பு, தஸ் ரீஃப்

கடந்த ஆண்டு தங்கும் விடுதிகளில் தற்கொலை மற்றும் தற்கொலை முயற்சிகள் பற்றி பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

தற்போதைய நிலைமை குறித்து பிபிசி கேட்டபோது, எந்த விவரங்களையும் கொடுக்க மனித ஆற்றல் அமைச்சகம் மறுத்துவிட்டது.

அதற்கு பதிலாக " புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் மன நலத்தை சிறப்பாக பராமரிக்க வேண்டியதன் அவசியத்தை புரிந்துகொண்டு, எப்போதும் கவனமாகவும் விழிப்புடனும் இருப்பதாகவும், அவர்களுக்கு ஆலோசனை சேவைகள் மற்றும் தேவைப்படுபவர்களுக்கு ஒரு உதவி எண் வழங்குவதாகவும்," அது தெரிவித்தது.

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் சா ஸ்வீ ஹாக் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த்-ன் உலகளாவிய சுகாதார இயக்குநர் பேராசிரியர் ஜெர்மி லிம், தொழிலாளர்களின் சுதந்திரத்தை மறுப்பது , மிகவும் குறைவான பொது சுகாதார நன்மைகளையே அளிக்கிறது என்று கூறுகிறார்.

"கோவிட் -19 கவலைகள் தேவைக்கு அதிகமாக பெரிதுபடுத்தப்படுவதாக," அவர் குறிப்பிட்டார்.

"அவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. பாதுகாப்பான சமூக இடைவெளி பற்றி அவர்களுக்குத் தெரியும்.அவர்கள் முககவசம் அணிகிறார்கள். இதைவிட நாம் இன்னும் என்ன செய்ய முடியும்?,"என்று அவர் வினவுகிறார்.

"ஒரு பொது சுகாதார நிபுணராக பேசும்போது, இதில் வரம்புகள் இருப்பதை நாம் உணர வேண்டும். இந்த தொழிலாளர்களின் மன ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது. ஏனென்றால் அவர்கள் உண்மையில் மிக அதிகமாகவே போராடி வருகின்றனர்," என்று அவர் குறிப்பிட்டார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :