அமெரிக்காவின் மீட்பு விமானத்தில் குழந்தை பெற்ற ஆப்கானிஸ்தான் பெண்

Afghan mother and family

பட மூலாதாரம், @AirMobilityCmd

ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள வெளிநாட்டவர்கள் மற்றும் வெளிநாட்டு முகமைகளுக்காகப் பணியாற்றிய ஆப்கானியர்களை மீட்பதற்கான விமானம் ஒன்றினுள் குழந்தையைப் பிரசவித்துள்ளார் ஆப்கன் பெண் ஒருவர்.

நேற்று (ஆகஸ்டு 21) ஆப்கானிஸ்தானிலிருந்து ஜெர்மனியில் உள்ள ராம்ஸ்டைன் விமானப்படை தளத்துக்கு அந்த விமானம் சென்றடைந்த பொழுது இந்த ஆப்கானிய பெண் குழந்தையைப் பிரசவித்தார் என்று அமெரிக்க விமானப் படையின் ஏர் மொபிலிட்டி கமாண்ட் தமது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

அந்த விமானம் தரை இறங்கிய பின்பு அதற்குள் சென்ற மருத்துவ ஊழியர்கள் விமானத்தின் சரக்கு வைக்கும் பகுதிக்குள் வைத்து அப்பெண்ணுக்கு பிரசவம் பார்த்தனர்.

அந்த விமானத் தளத்திற்கு அருகே இருக்கும் மருத்துவமனை ஒன்றில் தாயும் சேயும் நலமுடன் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது அப்பெண்ணுக்கு பிரச்னை ஏற்பட்டது. எனவே விமானத்தின் உள்பகுதியில் காற்றழுத்தத்தை அதிகரிப்பதற்காக, விமானி அந்த விமானம் பறந்து கொண்டிருந்த உயரத்தை குறைந்ததாகவும் அது காற்றழுத்தத்தைச் சீராக்கி, தாயின் உயிரைக் காப்பாற்ற உதவியது என்றும் ஏர் மொபிலிட்டி கமாண்ட் ட்விட்டரில் தெரிவித்துள்ளது.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

'நாடு முழுவதும் அமைதி; காபூலில் குழப்பம்'

தாலிபன்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ள நிலையில் அந்நாட்டிலிருந்து விமானம் மூலம் வெளியேறி வேறு நாட்டுக்கு செல்வதற்கு ஆயிரக்கணக்கான ஆப்கானியர்கள் காபூல் விமான நிலையத்திற்கு வெளியே கடுமையான வெயிலில் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

தற்போது காபூலில் உள்ள ஹமீத் கர்சாய் சர்வதேச விமான நிலையம் அமெரிக்கப் படைகளின் கட்டுப்பாட்டில் உள்ளது.

சனிக்கிழமை நிலவரப்படி அமெரிக்க ராணுவத்தால் சுமார் 17 ஆயிரம் பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் 31ஆம் தேதி அமெரிக்க படைகள் அனைத்தும் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறுவதற்கான கடைசி நாளாக இலக்கு வைக்கப்பட்டுள்ளது என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

Kabul airlift
படக்குறிப்பு, ஆயிரக்கணக்கான ஆப்கானியர்கள் ஹமீத் கர்சாய் சர்வதேச விமான நிலையத்துக்கு வெளியே கடுமையான வெயிலில் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

எனினும் ஆப்கானிஸ்தானில் உள்ள மேற்கத்திய நாடுகளின் பணியாற்றிய பலரையும் பாதுகாப்பாக வெளியேற்ற கடைசி தேதியை மேலும் நீட்டிக்க வேண்டும் என்று பல நாடுகளும் கோரிவருகின்றன.

தங்கள் நாட்டவர்கள் ஆப்கானிஸ்தானிலேயே தங்கினால் அவர்கள் தாலிபனின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகக்கூடும் என்று அந்த நாடுகள் கருதுகின்றன.

தற்போதிலிருந்து இந்த மாத இறுதிக்குள் 60 ஆயிரம் பேரை ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்று அவர்கள் கூறுகிறார்கள். இது நடைமுறை சாத்தியமற்றது என்று ஐரோப்பிய ஒன்றிய வெளிவிவகாரக் கொள்கை தலைவர் ஜோசஃப் போரல் ஏ.எஃப்.பி செய்தி முகமையிடம் சனிக்கிழமையன்று தெரிவித்துள்ளார்.

காபூல் விமான நிலையத்தில் உருவாகியுள்ள நெருக்கடிக்கு அமெரிக்க படைகளே காரணமென்று தாலிபன்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

"தங்களிடம் இருக்கும் வல்லமை மற்றும் வசதி அனைத்தையும் கொண்டு காபூல் விமான நிலையத்தில் ஒழுங்கைக் கொண்டுவருவதில் அமெரிக்கா தோற்றுவிட்டது. ஆப்கனிஸ்தான் முழுவதும் அமைதி நிலவுகிறது காபூல் விமான நிலையத்தில்தான் இத்தனை குழப்பமான சூழல் நிலவுகிறது," என்று தாலிபன் மூத்த தலைவர்களில் ஒருவரான அமீர் கான் முத்தாக்கி கூறியுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :