You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வுஹான் நகரை போன்று மற்றொரு கொரோனா பரவல்? - சீன தடுப்பு மருந்து மீது எழும் கேள்வி
சீனாவில் நான்ஜிங் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்று தற்போது ஐந்து மாகாணங்களுக்கும் தலைநகர் பெய்ஜிங் நகருக்கும் பரவ தொடங்கியுள்ளது. வுஹானுக்கு அடுத்தபடியாக அதிக இடங்களில் தொற்று பரவுகிறது என அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
முதன்முதலில் நகரின் கூட்ட நெரிசல் மிகுந்த விமான நிலையத்தில் ஜூலை 20ஆம் தேதியன்று கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அப்போதிலிருந்து இதுவரை 200 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நான்ஜிங் நகரிலிருந்து வரும் விமானங்கள் அனைத்தும் ஆகஸ்டு 11ஆம் தேதி வரை நிறுத்தப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கடும் விமர்சனங்களுக்கு மத்தியில் நகர் முழுவதும் கொரோனா தொற்று பரிசோதனையை மேற்கொள்ளும் முயற்சியை அதிகாரிகள் துரிதப்படுத்தியுள்ளனர்.
அந்நகரில் வசிக்கும் சுமார் 90 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும் என அரசால் நிர்வகிக்கப்படும் ஷின்ஷுவா செய்தித் தளம் தெரிவிக்கிறது.
மக்கள் நீண்ட வரிசையில் நிற்பது போன்றும், அதிகாரிகள் மக்களை முகக்கவசம் அணிய வலுயுறுத்துவது போன்ற புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
மேலும் ஒருவருக்கு ஒருவர் ஒரு மீட்டர் தூர இடைவெளி விட்டு நிற்க அறிவுறுத்தப்படுவதாகவும், வரிசையில் பேசாமல் நிற்க வேண்டும் என அறிவுறுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த தொற்றுக்கு காரணம், தீவிர பரவல் தன்மை கொண்ட டெல்டா திரிபுதான் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும் விமான நிலையம் எப்போதும் ஆட்கள் வந்து செல்லும் இடம் என்பதால் தொற்று பரவியதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
தொற்று எங்கிருந்து உருவானது?
ரஷ்யாவிலிருந்து நான்ஜிங் நகருக்கு ஜூலை 10ஆம் தேதியன்று வந்த விமானத்தில் பணிபுரிந்த துப்பறவு பணியாளருக்கு தொற்று முதன்முதலில் கண்டறியப்பட்டதாக அதிகாரிகள் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.
அந்த துப்பறவு பணியாளர் தூய்மை வழிமுறைகளை கடைபிடிக்கவில்லை என்று ஷின்ஷுவா நியூஸ் தெரிவிக்கிறது.
இதுகுறித்து விமான நிலைய நிர்வாகத்தை கண்டித்துள்ளது கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த ஒழுங்கு நடவடிக்கை குழு. விமான நிலையம், தொற்று பரவலை தடுப்பதில் சரியாக கவனம் செலுத்தவில்லை என்றும் தொழில்முறையற்ற நிர்வாகத்தை மேற்கொள்வதாகவும் தெரிவித்துள்ளது ஒழுங்கு நடவடிக்கை குழு.
டெல்டா திரிபுக்கு எதிராக வேலை செய்கிறதா தடுப்பூசி?
சீன தலைநகர் பெய்ஜிங் உட்பட வைரஸ் தொற்று பரவல் 13 நகரங்களுக்கு பரவியுள்ளதாக பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன.
இருப்பினும் க்ளோபல் டைம்ஸ் பத்திரிகையிடம் பேசிய நிபுணர்கள், இந்த தொற்று பரவல் இன்னும் ஆரம்ப கட்டத்தில்தான் உள்ளது என்றும் கட்டுப்படுத்தக் கூடியதுதான் என்றும் தெரிவித்துள்ளனர்.
தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 7 பேரின் நிலை மோசமாக உள்ளதாக நான்ஜிங்கில் உள்ள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
தற்போது மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால் டெல்டா திரிபுக்கு எதிராக தடுப்பு மருந்து வேலை செய்கிறதா என சில சீன சமூக ஊடகங்களில் கேள்வி எழுப்பியும் வருகின்றனர்.
சீன தடுப்பு மருந்தை நம்பியிருந்த சில தென் கிழக்கு ஆசிய நாடுகள் தாங்கள் பிற தடுப்பு மருந்துகளை பயன்படுத்தி கொள்ளப்போவதாக தெரிவித்துள்ளன.
கடுமையான நடவடிக்கைகள் மூலமாகவும், எல்லைகளை மூடியது மூலமாகவும் சீனா வைரஸ் தொற்று பரவலை கடுமையான கட்டுக்குள் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்:
- இலங்கை முன்னாள் அமைச்சர் வீட்டில் இறந்த சிறுமியின் உடல் தோண்டி எடுப்பு
- 'கடைசி நிமிடத்தில் ஆடையை மாற்றச் சொன்னார்கள்' - நியாயம் கேட்கும் மேரி கோம்
- உ.பி-யில் பிராமண பெண்ணை மணந்த தலித் இளைஞர் பட்டப் பகலில் கொலை
- சர்வதேச விண்வெளி நிலையத்தில் திடீர் தீ: உள்ளே இருந்தவர்கள் நிலை என்ன?
- பெகாசஸ் குறித்த விசாரணையை நடத்த மமதா பானர்ஜிக்கு அதிகாரம் உள்ளதா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்