You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகளைப் பெற்றெடுத்த பெண் -தென்னாப்பிரிக்காவில் ஓர் உலக சாதனை
தென்னாப்பிரிக்காவில் ஒரு பெண் ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகளைப் பெற்றெடுத்திருப்பதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உறுதிசெய்யப்பட்டால் குழந்தைப் பிறப்பில் இது ஓர் உலக சாதனையாக இருக்கும்.
கோசியாமி தமரா சித்தோல் என்பது அவரது பெயர். ஸ்கேன் செய்து பார்த்தபோது 8 குழந்தைகள் இருப்பது தெரிந்ததாகவும் ஆனால் பிரசவத்தின்போது 10 குழந்தைகள் பிறந்தது தங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திவிட்டதாகவும் அவரது கணவர் டெபோஹோ சோட்டேட்சி கூறுகிறார்.
"பிறந்தவற்றில் 7 ஆண் குழந்தைகள், 3 பெண்குழந்தைகள். நான் மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறேன். உணர்ச்சிவயப்பட்டிருக்கிறேன். என்னால் அதிகம் பேச முடியாது " என்றார் சோட்டேட்சி.
10 குழந்தைகள் பிறந்திருப்பதை தென்னாப்பிரிக்க அதிகாரி ஒருவர் உறுதி செய்திருக்கிறார்.
10 குழந்தைகளில் 5 குழந்தைகள் இயற்கையான முறையிலும் 5 குழந்தைகள் சிசேரியன் மூலமாகவும் பிறந்திருப்பதாகவும் பெயர்கூற விரும்பாத உறவினர் ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
இது தொடர்பாக ஆய்வு செய்து வருவதாக கின்னஸ் உலக சாதனை அமைப்பு தெரிவித்துள்ளது.
2009-ஆம் ஆண்டு அமெரிக்காவில் ஒரு பெண் 8 குழந்தைகளை உயிருடன் பெற்றெடுத்ததே இதுவரை கின்னஸ் உலக சாதனையாக இருந்து வருகிறது.
கடந்த மாதம் மாலி நாட்டைச் சேர்ந்த 25 வயதான ஹலிமா சிஸே 9 குழந்தைகளைப் பெற்றெடுத்தார். குழந்தைகள் அனைவரும் நலமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
அதிக எண்ணிக்கையான குழந்தைகள் பிறக்கும்போது பெரும்பாலும் அது குறைப் பிரவசமாக இருக்கும் என ஆப்பிரிக்காவின் சுகாதாரப் பிரிவு செய்தியாளர் ரோடோ ஒடியாம்போ கூறுகிறார்.
ஒரே பிரசவத்தில் மூன்றுக்கும் அதிகமான குழந்தைகள் பிறப்பது மிகவும் அரிது. கருத்தரிக்கும் சிகிச்சைகள் மூலமாகவே அது சாத்தியமாகிறது. ஆனால் 10 குழந்தைகள் பிறந்திருக்கும் சம்பவத்தில் அவை இயற்கைக் கருத்தரிப்பு முறையிலே நடந்திருப்பதாக அந்தத் தம்பதியினர் கூறுகின்றனர்.
பிரார்த்தனைகளும் தூக்கமில்லா இரவுகளும்
37 வயதான சித்தோல் ஏற்கெனவே இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்திருக்கிறார். அவர்களுக்கு 6 வயதாகிறது.
பிரிட்டோரியா நகரில் திங்கள்கிழமை நடந்த பிரசவத்துக்குப் பிறகு அவர் மிகவும் நலமுடன் இருப்பதாகவும் செய்திகள் கூறுகின்றன.
ஒரு மாதத்துக்கு முன்பாக பிரிட்டோரியா நியூஸ் நாளிதழிடம் தனது பேறுகாலம் குறித்துப் பேசிய சித்தோல், "தொடக்கத்தில் மிகவும் கடினமாக இருந்தது" எனக் குறிப்பிட்டார்.
குழந்தைகள் நலமுடன் பிறக்க வேண்டும் என்ற கவலையில் பல இரவுகள் தூக்கமின்றிக் கழிந்ததாகவும் எப்போதும் பிரார்த்தனை செய்து கொண்டிருந்ததாகவும் அவர் கூறினார்.
"10 குழந்தைகளுக்கும் வயிற்றுக்குள் எப்படி இடமிருக்கும்?" என மருத்துவர்களிடம் அவர் கேட்டிருக்கிறார். கருப்பை தானாக விரிந்து கொண்டிருப்பதாக மருத்துவர்கள் அப்போது உறுதியளித்திருக்கிறார்கள்.
வயிற்றில் எட்டு குழந்தைகள் இருப்பதாக ஸ்கேனில் தெரியவந்தபோது, கால் வலியால் சித்தோல் அவதிப்பட்டிருக்கிறார். 2 குழந்தைகள் தவறாக கருக்குழாயில் இருப்பதாகவும் மருத்துவர்கள் கண்டுபிடித்தார்கள்.
"அந்தப் பிரச்னைகள் சரிசெய்யப்பட்டன. அதன் பிறகு நான் நலமாக இருந்தேன். குழந்தைகளைப் பார்ப்பதற்காக என்னால் காத்திருக்க முடியவில்லை" என்று பிரிட்டோரியா நியூஸிடம் சித்தோல் அப்போது கூறியிருந்தார்.
பெருமகிழ்ச்சியில் திளைப்பதாகக் கூறியிருக்கும் சித்தோலின் கணவர், "கடவுளால் தேர்தெடுக்கப்பட்ட ஒரு குழந்தையைப் போல் உணர்கிறேன். இது ஓர் அதியம்" என்கிறார்.
பிற செய்திகள்:
- கோயில் நிலங்களில் 47 ஆயிரம் ஏக்கர் மாயமா? - அறநிலையத்துறை சொல்வது என்ன?
- காதலுக்காக 10 ஆண்டு பூட்டிய அறையில் யாருக்கும் தெரியாமல் வாழ்ந்த பெண்
- சூரிய கிரகணம் 2021: உலகின் பல இடங்களில் இருந்து அரிய படங்கள்
- நரேந்திர மோதியின் அறிவிப்பு ஏழைகளின் பசியைத் தீர்க்கிறதா?
- LGBTQ: பாலின மாற்று சிகிச்சை என்றால் என்ன? ஓரின சேர்க்கைக்கு இது தீர்வாகுமா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்