நரேந்திர மோதியின் ஏழைகளுக்கான உணவு வழங்கும் அறிவிப்பு எப்படிச் செயல்படுகிறது - விரிவான கள ஆய்வு

திங்களன்று நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோதி, ஏழைகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் இலவச உணவு தானியங்கள் தீபாவளி வரை கிடைக்கும் என அறிவித்தார்.

கடந்த ஆண்டு பொதுமுடக்கத்தின் போதும் இதே போன்ற அறிவிப்பு செய்யப்பட்டது. பின்னர் அது 2020 தீபாவளி வரை நீட்டிக்கப்பட்டது. அதன் பிறகு பீகார் தேர்தலைக் கருத்தில் கொண்டு 'சட்' பண்டிகை வரை இது அளிக்கப்பட்டது.

நாட்டின் பல்வேறு கிராமப்புறங்களில் வாழும் ஏழை மக்கள் இதன்கீழ் எந்த உணவு தானியங்களை பெறுகிறார்கள், அவர்களுக்கு எவ்வளவு கிடைக்கிறது, அவர்களுக்கான உணவு தானியங்கள் எளிதாக கிடைக்கின்றனவா அல்லது கிடைப்பதில் சிரமங்கள் இருக்கின்றதா என தெரிந்துகொள்ள பிபிசி முற்பட்டது.

'பொதுமுடக்கத்தின் போது இதன்மூலம் கிடைத்த நிவாரணம்'

சமீராத்மஜ் மிஷ்ரா, உத்தரபிரதேசத்திலிருந்து...

"மே மாதத்திலிருந்து எங்களுக்கு ரேஷன் கிடைத்து வருகிறது. பிரதமரின் இந்த திட்டத்தின் கீழ் பொது முடக்கத்தின்போது எங்களுக்கு நிறைய உதவி கிடைத்துள்ளது. இப்போது நவம்பர் வரை கிடைத்தால், எங்களுக்கு மேலும் நிம்மதி கிடைக்கும்."என தெரிவித்தார் ஆக்ராவின் ராம்பாக் பகுதியில் வசிக்கும் 35 வயதான லதா.

"ஒரு நபருக்கு மூன்று கிலோ கோதுமை மற்றும் இரண்டு கிலோ அரிசி கிடைக்கிறது. என் வீட்டில் ஐந்து பேர் உள்ளனர், எனவே இதன் படி எங்களுக்கு பதினைந்து கிலோ கோதுமை மற்றும் பத்து கிலோ அரிசி கிடைக்கிறது. இந்த உணவு தானியங்களால் எங்கள் தேவை ஓரளவு பூர்த்தியாகிறது. ஆனால், சில பொருட்களை வாங்க வேண்டியுள்ளது," என அவர் குறிப்பிடுகிறார்.

அரசின் இந்த நடவடிக்கை மிகவும் சிறப்பானது என்று ஆக்ராவைச் சேர்ந்த 59 வயதான ஆனந்த் கூறுகிறார்.

"மே மற்றும் ஜூன் மாதங்களில் பிரதமரின் திட்டத்தின் கீழ் இலவச ரேஷன் கிடைத்தது. இப்போது அது நவம்பர் வரை அதாவது தீபாவளி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது ஒரு நல்ல நடவடிக்கை. ஏழைகளுக்கு இதனால் நிம்மதி கிடைத்துள்ளது. பொதுமுடக்கம் காரணமாக மக்களின் வேலைவாய்ப்பு பறி போய்விட்டது, பட்டினி கிடக்கும் நிலைமை வந்துவிட்டது. இதுபோன்ற சூழ்நிலையில், அரசு மூலம் வழங்கப்படும் இலவச உணவு தானியங்கள், ஏழை எளிய மக்களுக்கு கைகொடுப்பதாக உள்ளது," என பிபிசியிடம் அவர் தெரிவித்தார்.

அரசின் அறிவிப்பால் மகிழ்ச்சியடைந்துள்ள மக்கள்

சீது திவாரி, பீகாரிலிருந்து...

பாட்னாவின் ஆர் பிளாக் குடிசைப்பகுதியில் வசிக்கும் ஆர்த்தி தேவி, பைகளை தைத்து வாழ்க்கை நடத்தி வருகிறார். அவரது குடும்பத்தில் எட்டு உறுப்பினர்கள் உள்ளனர்.

ரேஷன் அட்டை வைத்திருக்கும் ஆர்த்தி தேவி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார். இது அரசின் ஒரு நல்ல நடவடிக்கை என அவர் கூறுகிறார்.

கடந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்று நேரத்தில் ஆறு மாதங்களுக்கு அவருக்கு ரேஷன் கிடைத்தது. 2021 ஆம் ஆண்டில் மே மாதத்திலும் அவருக்கு ரேஷன் பொருட்கள் கிடைத்தன. இருப்பினும், தனக்குக் கிடைக்கும் தானியங்களின் எடை மற்றும் தரம் குறித்து அவருக்கு மாற்றுக் கருத்து உள்ளது.

"சில நேரங்களில் தொட்டாலே உடைந்து போகக்கூடிய நிலையில் உள்ள அரிசி வழங்கப்படுகிறது. தானியங்கள் எப்போதுமே சரியாக எடை போடப்படுவதில்லை. 25 கிலோ அரிசி கிடைக்கவேண்டுமானால், கண்டிப்பாக 23 கிலோதான் இருக்கும்," என்கிறார் அவர்.

ரோஹ்தாஸின் தினாரா பகுதியின் பருணா கிராமத்தைச் சேர்ந்த நாராயண் கிரியின் குடும்பத்தில் ஆறு உறுப்பினர்கள் உள்ளனர். பிரதான் மந்திரி கரீப் கல்யாண் யோஜனாவின் (பிரதம மந்திரி ஏழைகள் நலத்திட்டம்) கீழ் தீபாவளி வரை உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்படும் உத்தரவை அவர் வரவேற்கிறார்.

"கொரோனா நேரத்தில் மக்கள் வீட்டிலேயே இருக்கின்றனர். வேலை நடக்கவில்லை, அதைப் பார்க்கும்போது இது அரசின் நல்ல உத்தரவு. கடந்த முறையும் சட் பூஜை வரை ரேஷன் கிடைத்தது. இந்த முறையும் மே மாதத்தில் அதிக ரேஷன் கிடைத்தது,"என அவர் குறிப்பிட்டார்.

"ரேஷன் பொருட்களின் தரம் இங்கே நன்றாக இருக்கிறது. அது குறித்து பொதுவாக எந்த பிரச்சனையும் வருவதில்லை," என்றார் அவர்.

ரேஷன் கிடைக்காவிட்டால் வீட்டை எப்படி நடத்துவது?

ஷுரை நியாஸி, மத்தியபிரதேசத்திலிருந்து

கொரோனா தொடங்கியபிறகு அரிசி, கோதுமை மற்றும் கம்பு போன்ற உணவுதானியங்கள் தனக்கு தொடர்ந்து கிடைப்பதாக தலைநகர் போபாலில் வசிக்கும் பிரதாப் சலிதே தெரிவிக்கிறார். இருப்பினும், இப்போது இந்த பொருட்கள் வேறொரு ரேஷன் கடையிலிருந்து கிடைக்கும் என அவர்களிடம் கூறப்பட்டுள்ளது.

தீபாவளி வரை அரசு தொடர்ந்து இலவச உணவு தானியங்களை வழங்கும் என பிரதமர் நரேந்திர மோதி அறிவித்திருப்பது பற்றி அவரிடம் கேட்டபோது, "எங்களுக்கு எவ்வளவு காலம் அது கிடைக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்" என்றார்.

மறுபுறம், கொரோனா தொடங்கியதிலிருந்து தனக்கு கோதுமை, கம்பு மற்றும் அரிசி கிடைத்து வருவதாக, போபாலில் வசிக்கும் 65 வயதான அனார் பாயி கூறுகிறார். இந்த உணவு தானியங்கள் அனைத்தையும் கடைக்காரர்கள் தனக்கு அளித்து வருகின்றனர் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த மாதத்தில் இதுவரை தனக்கு கோதுமை மட்டுமே கிடைத்துள்ளது, அரிசி மற்றும் தினை ஒதுக்கீடு வந்துவிட்டது, சில நாட்களில் அதுவும் கிடைக்கக்கூடும் என்று அவர் கூறினார்.

தீபாவளி வரை இலவச உணவு தானியங்கள் வழங்கப்படும் என்ற பிரதமரின் அறிவிப்பு பற்றிப்பேசிய அவர்​​ "இது எங்களைப் போன்ற ஏழைகளுக்கு நல்லது. எங்களுக்கு இது கிடைத்துக் கொண்டே இருக்க வேண்டும், இல்லையென்றால் நாங்கள் எப்படி எங்கள் வீட்டை நடத்துவோம். இந்த நடவடிக்கை நல்லது. அதை மேலும் தொடர வேண்டும்," என குறிப்பிட்டார்.

'வருமானத்துக்கு வழி இல்லை, ரேஷன் உதவுகிறது'

மோஹர் சிங் மீனா, ராஜஸ்தானிலிருந்து...

ஷிகர் மாவட்டத்தின் நீம்காதானா துணைக்கோட்டத்தில் உள்ள பராலா கிராமத்தைச் சேர்ந்த 45 வயதான சாந்தி தேவி, நவம்பர் மாதம் வரை இலவச ரேஷன் வழங்கும் பிரதமர் மோதியின் அறிவிப்பு ஒரு நல்ல நடவடிக்கை என கருதுகிறார்.

"நேற்று தொலைபேசியில் எனக்கு தகவல் வந்தபோது, ​​தீபாவளி வரை ரேஷன் கிடைக்கும் என்று எனக்குத் தெரிய வந்தது. ரேஷன் இப்போதும் கிடைக்கிறது. மஹாவா கிராம பஞ்சாயத்தில் உள்ள ரேஷன் டீலரிடம் உணவு தானியங்கள் தீர்ந்துவிட்டால் அருகிலிருக்கும் காவ்டி பஞ்சாயத்திலிருந்து அதை கொண்டுவருவார்கள்," என அவர் குறிப்பிட்டார்.

"கணவருக்கு உடம்பு சரியில்லை.எனவே வருமானத்துற்கு எந்த வழியும் இல்லை. இரண்டு குழந்தைகள் உட்பட நான்கு உறுப்பினர்கள் எங்கள் வீட்டில் இருப்பதால் 20 கிலோ கோதுமை கிடைக்கும்." என்கிறார் அவர்.

தலைநகர் ஜெய்ப்பூரிலிருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள டோங்க் மாவட்டத்தின் மால்பூரா கோட்டத்தில் உள்ள சீதாராம்பூர் கிராமத்தைச் சேர்ந்த 48 வயதான நாது லால் மீனாவுக்கு நாற்பது கிலோ கோதுமை கிடைக்கிறது.

"மாநில அரசு திட்டத்தின் கீழ் ஒரு உறுப்பினருக்கு ஐந்து கிலோ கோதுமை கிடைக்கிறது. இப்போது பிரதான் மந்திரி கரிப் கல்யாண் யோஜனாவின் கீழும், ஒரு உறுப்பினருக்கு ஐந்து கிலோ என்ற விகிதத்தில் கோதுமை கிடைக்கிறது."என அவர் கூறினார்.

வீட்டில் இரண்டு குழந்தைகள் மற்றும் மனைவி இருப்பதாக அவர் கூறுகிறார். அதாவது நான்கு உறுப்பினர்களுக்கு நாற்பது கிலோ கோதுமை கிடைக்கும். பொதுமுடக்க காலத்தில் பெரும்பாலான குடும்பங்கள் நிதி நெருக்கடிக்கு ஆளாகியுள்ளன. எனவே மத்திய அரசின் இந்த முடிவு நல்லது என அவர் குறிப்பிடுகிறார்.

இந்த முடிவு அவரது குடும்பத்திற்கும், லட்சக்கணக்கான குடும்பங்களுக்கும் நன்மை பயக்கும் என அவர் நம்புகிறார். ஆனால், நவம்பர் வரை சரியான நேரத்தில் கோதுமை கிடைத்தால் மட்டுமே அது பயனளிக்கும் என்கிறார் அவர்.

' அரிசி கிடைக்கிறது, பருப்பு வகைகள் கிடைப்பதில்லை'

திலீப் குமார் ஷர்மா, அசாமில் இருந்து...

ஜோர்ஹட் மாவட்டத்தைச் சேர்ந்த மரியானியில் வசிக்கும் 43 வயதான மினோத்தி தாஸ், ஒரு தனியார் பள்ளியில் உதவியாளராக பணிபுரிகிறார். கொரோனா தொற்று காரணமாக பள்ளிக்கூடம் மூடப்பட்டிருப்பதால் அவருக்கு வாழ்க்கை நடத்துவதே கடினமாகிவிட்டது.

தனது கஷ்டங்கள் மற்றும் பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன திட்டத்தின் கீழ் கிடைக்கும் இலவச உணவு தானியங்கள் குறித்துப்பேசிய மினோத்தி,"என்னிடம் ரேஷன் அட்டை உள்ளது, ஆனால் ஒரு நபருக்கு ஒரு மாதத்தில் ஐந்து கிலோ அரிசி மட்டுமே இலவசமாக கிடைக்கிறது. எங்கள் குடும்பத்தில் நான்கு பேர் உள்ளனர். எனவே எங்களுக்கு 20 கிலோ அரிசி கிடைத்தது.

கடந்த ஆண்டு எங்களுக்கு மூன்று முறை இலவச அரிசி கிடைத்தது, ஆனால் பின்னர் அது நிறுத்தப்பட்டது. இப்போது மே மாதத்திலிருந்து எங்களுக்கு மீண்டும் கிடைக்கிறது. ரேஷன் என்ற பெயரில் அரிசி மட்டுமே கிடைக்கிறது. வேறு எதுவும் கொடுக்கப்படுவதில்லை. வாழ்க்கை நடத்துவதே கடினமாகி வருகிறது. வேறு வருமானம் இல்லை," என தெரிவித்தார்.

இலவச ரேஷன் வழங்கும் பிரதமர் நரேந்திர மோதியின் முடிவைப் பற்றி கருத்துத்தெரிவித்த மினோத்தி, "பிரதமர் கொடுக்கும் உணவு தானியங்களால் வீட்டை நடத்த முடியவில்லை. நாங்கள் நான்கு பேர் மாதம் 20 கிலோ அரிசியை மட்டுமே வைத்துக்கொண்டு எப்படி காலந்தள்ள முடியும். பருப்பு வகைகள் போன்ற பிற பொருட்கள் கொடுக்கப்படுவதில்லை. உணவுப் பொருட்களின் விலையும் மிக அதிகம். ஒரு லிட்டர் கடுகு எண்ணெயின் விலை 200 ரூபாய். இந்த நிலையில் என்னால் வீட்டை நடத்த முடியவில்லை," என்கிறார்.

"அரசிடமிருந்து கிடைக்கும் இலவச ரேஷனை வைத்துக்கொண்டு எங்களால் சமாளிக்க முடியவில்லை. என் கணவர் காலமாகிவிட்டார். நான் இரண்டு மகள்களுடன் போராடிக் கொண்டிருக்கிறேன். நாங்கள் குடும்பத்தில் மூன்று பேர் இருக்கிறோம். 15 கிலோ அரிசி கிடைக்கிறது. அதிலும் 300 கிராம் அரிசி குறைவாக உள்ளது. அரிசியை மட்டும் வைத்துக் கொண்டு என்ன செய்வது? இதனுடன் பருப்புகள், எண்ணெய், எல்லாமே வேண்டும், "என்று மரியானியில் வசிக்கும் 42 வயதான கீதா டே குறிப்பிட்டார்.

"பிரதமர் இலவச ரேஷன் கொடுக்கிறார். ஆனால் எனக்கு வேலை கிடைத்திருந்தால் அது இன்னும் நன்றாக இருந்திருக்கும். ஏனென்றால் எனது வேலையும் நின்று போய்விட்டது. அதனால் எனக்கு பணமும் கிடைப்பதில்லை. நான் தனியார் துறையில் வேலை செய்கிறேன். ஆகவே வேலை இருந்தால், பணம் கிடைக்கும். விலைவாசி அதிகமாக உள்ளது. நான் மட்டும் இதை வெளிப்படையாகக் கூறுவதால் என்ன நடக்கும். எல்லோரும் ஒன்றாக குரல் எழுப்பினால் மட்டுமே ஏதாவது நடக்கும்." என கீதா டே கூறுகிறார்.

பிரதான் மந்திரி கரீப் கல்யாண் யோஜனாவின் கீழ், ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஐந்து கிலோ உணவு தானியங்கள் (கோதுமை / அரிசி) மற்றும் ஒரு கிலோ பருப்பு வகை மத்திய அரசால் வழங்கப்படுகிறது. ஆனால் இங்குஅரிசி மட்டுமே கிடைக்கிறது.

'ரேஷன் கிடைக்கவில்லை என்றால், உணவு கிடைப்பது சிரமமே'

பிரபாகர் மணி திவாரி, மேற்கு வங்கத்திலிருந்து...

ரேஷன் கிடைத்தது, ஆனால் குறைவாக தாமதமாக கிடைத்தது என வடக்கு 24 பர்கானா மாவட்டத்தின் பாதுடியாவில் வசிக்கும் 44 வயதான சுஜீத் ஜானா கூறுகிறார்.

"கடந்த ஆண்டு பொதுமுடக்கத்திற்குப் பின்னர், பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனாவின் கீழ் எங்களுக்கு உணவு தானியங்கள் கிடைத்தது. முதலமைச்சர் மமதா பானர்ஜியும் இலவச ரேஷனுக்கு ஏற்பாடு செய்திருந்தார். ஆனால் கொரோனாவின் இரண்டாவது அலையில் மே மாதத்தில் மத்திய அரசின் திட்டம் மூலம் எங்களுக்கு ரேஷன் கிடைக்கவில்லை. இலவச ரேஷனுக்கான கால அளவை மத்திய அரசு நீட்டித்துள்ளது. இது ஒரு நல்ல விஷயம். ஆனால் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ள எங்களைப் போன்ற ஏழைகளுக்கு நிவாரணம் கிடைக்கும் வகையில் அதன் சரியான விநியோகம் விரைவில் உறுதி செய்யப்படவேண்டும்," என பிபிசியிடம் பேசிய அவர் தெரிவித்தார்.

"கடந்த ஆண்டு மத்திய அரசு திட்டத்தின் கீழ் ரேஷன் தாமதமாக கிடைத்தது. ஒரு மாதத்தில் குறைவாக கிடைத்தது. மேலும் ஒரு மாதத்தில் எங்களுக்கு கிடைத்த அரிசி மிகவும் தரமற்றதாக இருந்தது. இப்போது பிரதமர் இந்த ஆண்டு அதை நீட்டித்துள்ளார். எனவே நல்ல தரமான அரிசி கிடைக்கும் என நம்புகிறோம். கொரோனாவின் காரணமாக மகனின் வேலை பறி போய்விட்டது. மத்திய மற்றும் மாநில அரசின் இலவச உணவுதானியங்கள் காரணமாக உணவுப் பிரச்சனை பெருமளவில் தீர்ந்துவிடும்," என அவர் தெரிவித்தார்.

தற்போது தனக்கு மாநில அரசின் ரேஷன் மட்டுமே கிடைக்கிறது என பாங்குரா மாவட்டத்தில் காத்ராவில் வசிக்கும் 36 வயதான ரமன் தாஸ் தெரிவிக்கிறார்.

"மே மாதத்தில் எங்களுக்கு மாநில அரசின் ரேஷன் மட்டுமே கிடைத்தது. சப்ளை வந்தபிறகு, இரண்டு மாதங்களின் ரேஷன் ஒருசேர வழங்கப்படும் என இப்போது ரேஷன் விநியோகஸ்தர்கள் கூறுகிறார்கள். இந்த மாதம் என்ன நடக்கிறது என்று பார்ப்போம் ," என பிபிசியுடனான உரையாடலின்போது அவர் கூறினார்.

"கடந்த ஆண்டிலிருந்து மாநில அரசின் ரேஷன் சரியான நேரத்தில் கிடைக்கிறது. இது இல்லாவிட்டால் ஜூன் மாதம் எங்கள் குடும்பம் உணவிற்கு திண்டாடியிருக்கும். கடந்த ஆண்டு, சில மாதங்களுக்கு இரண்டு ரேஷன்களும் கிடைத்தன அதாவது மத்திய அரசிடமிருந்தும், மாநில அரசிடமிருந்தும் கிடைத்தது. ஆனால் ஒரு மாதம் முழுப் பொருளும் கிடைக்கவில்லை. மேலும் ஒரு மாதத்தில் எங்கள் விநியோகஸ்தர் கொடுத்த அரிசி சாப்பிட முடியாததாக இருந்தது. அவர் அரிசியை மாற்றிவிட்டார் என நான் நினைக்கிறேன். ஆனால், தன்னிடம் இந்த அரிசிதான் வந்ததாக அவர் கூறினார்," என ரமன் தாஸ் குறிப்பிட்டார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :