You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இரான் கடற்படைக் கப்பல் ஓமன் வளைகுடாவில் தீப்பிடித்து மூழ்கியது
இரான் கடற்படையின் மிகப்பெரிய கப்பல் ஒன்று புதன்கிழமை ஓமன் வளைகுடாவில் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. அதில் இருந்த ஊழியர்கள் மீட்கப்பட்டனர். இப்போது அந்தக் கப்பல் தீயில் எரிந்து நீரில் மூழ்கியது என்று அரசு செய்தி நிறுவனங்கள் கூறுகின்றன.
ஓமன் வளைகுடாவில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது இரானின் ஜாஸ்க் துறைமுகம் அருகே இந்த சம்பவம் நேரிட்டதாக அந்த நிறுவனங்கள் கூறுகின்றன.
கடற்படைக் கப்பல்களுக்கு கடலில் நடுவழியில் எண்ணெய் நிரப்பும் இந்தக் கப்பலின் பெயர் ஐரிஸ் கார்க் என்று பெயர்.
இந்தக் கப்பலைக் காப்பாற்றுவதற்காக தீயணைப்புப் படையினர் 20 மணி நேரம் போராடியதாகவும், ஆனால், அது எரிந்து கடலில் மூழ்கிவிட்டதாகவும் இரான் கடற்படையின் அறிக்கை ஒன்று கூறுகிறது.
இந்த விபத்தில் எவரும் உயிரிழக்கவில்லை. கப்பலில் தீப்பற்றியதற்கான காரணமும் உடனடியாகத் தெரியவில்லை. கப்பலின் சிஸ்டம் ஒன்றில் முதலில் தீப்பிடித்ததாக கடற்படை அறிக்கை கூறுகிறது. ஆனால், மேற்கொண்டு வேறு தகவல் ஏதும் அந்த அறிக்கையில் இல்லை.
இந்தக் கப்பல் சில நாள்களுக்கு முன்பு பயிற்சிக்காக சர்வதேசக் கடற்பரப்புக்கு சென்றதாக தஸ்னிம் செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது. கப்பல் தீப்பிடித்து எரியும் காட்சியை இரான் அரசுத் தொலைக்காட்சி ஒளிபரப்பியது.
ஐக்கிய ராஜ்ஜியத்தில் கட்டப்பட்ட இந்தக் கப்பல் 1977ல் பணியில் ஈடுபடுத்தப்பட்டது. எத்தனை டன் சுமந்து செல்ல முடியும் என்ற கணக்கின் அடிப்படையில் இரானின் மிகப்பெரிய கடற்படைக் கப்பல் இது என்று கடற்படை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இரான் கடற்படையின் பயிற்சி நடவடிக்கைகளுக்கு இந்தக் கப்பல் கடந்த 40 ஆண்டுகளாக உதவி வருகிறது என்று அதிகாரபூர்வ செய்தி முகமையான இர்னா கூறுகிறது.
புவிசார் அரசியல் பதற்றங்கள் தகித்துக்கொண்டிருக்கிற, பதற்றம் நிறைந்த கடற்தடங்கள் உள்ள இரானுக்கு அருகே கடலில் நிகழ்ந்துவரும் சம்பவங்களில் இது ஒரு சமீபத்திய நிகழ்வு.
இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கிற ஓமன் வளைகுடா ஹோர்முஸ் நீரிணையுடன் சேர்கிறது. குறுகலான இந்த ஹோர்முஸ் நீரிணை என்ற கால்வாய் உடகில் கப்பல் போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த கால்வாய்களில் ஒன்று.
இரானுக்கும் பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுக்கும் இடையில் பகைமை தோன்றுவதற்கான காரணங்களில் ஒன்றாக இருக்கிறது ஹோர்முஸ் நீரிணை.
கடற்பரப்பில் தங்கள் கப்பல்கள் குறிவைக்கப்படுவதாக கடந்த சில மாதங்களில் இரானும், இஸ்ரேலும் ஒன்றை ஒன்று பரஸ்பரம் குற்றம்சாட்டுகின்றன. செங்கடலில் தமது சாவிஸ் என்ற கப்பல் குறிவைக்கப்பட்டதாக இரான் குற்றம்சாட்டியது.
கடந்த பிப்ரவரி மாதம் முதல் தங்கள் சரக்குக் கப்பல்கள் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாவதாக இஸ்ரேலும், இரானும் ஒன்றை ஒன்று குற்றம்சாட்டி வந்துள்ளன.
பிற செய்திகள்:
- உ.பி அரசியல்: மோதி - அமித் ஷாவுக்கு நேரடி சவால் விடுக்கத் துணிந்தாரா யோகி ஆதித்யநாத்?
- சீனா உதவியுடன் பாகிஸ்தான் தயாரித்த கொரோனா தடுப்பூசி - என்ன காரணம்?
- மோதி அரசுக்கு எதிர்பாராத நல்ல சேதியைச் சொல்கிறதா ஜிடிபி புள்ளிவிவரம்?
- "பாஜக வளர்ச்சிக்கு திமுக உதவுகிறது" - பாஜகவின் புதிய தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம்
- கொரோனா வார்டுகளில் நெஞ்சை பதற வைத்த உண்மை கதைகள்
- கடுகு உற்பத்தியில் மிகுதி - ஆனாலும் எண்ணெய் விலை உயர்வது ஏன்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்