You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இஸ்ரேல், காசாவின் கூகுள் படங்கள் ஏன் மங்கலாக தெரிகின்றன?
- எழுதியவர், கிறிஸ்டோபர் கில்ஸ் மற்றும் ஜேக் குட்மேன்
- பதவி, உண்மை பரிசோதிக்கும் குழு
மக்கள் அதிகமாக உள்ள காசா, கூகுள் வரைப்படத்தில் மங்கலாக தெரிவது ஏன்?
இதை, பொதுவெளியில் கிடைக்கப்பெறும் தகவல்களை கொண்டு (open source), வரைபட தகவல் உட்பட, ஆராய்ச்சி மேற்கொள்ளும் ஆய்வாளர்கள் தெரியப்படுத்துகின்றனர்.
இம்மாதிரியாக படங்கள் மங்கலாக தெரிவதனால் தாக்குதல்கள் மற்றும் சேதங்களை கணக்கிடுவது கடினமாக உள்ளது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
"இஸ்ரேல் மற்றும் பாலத்தீனத்திலிருந்து அதிக ரிசல்யூஷன் கொண்ட செயற்கைக்கோள் புகைப்படங்கள் கிடைக்காதது எங்களுக்கு பெரும் பின்னடைவாக உள்ளது." என ஆராய்ச்சியாளர் சமீர் தெரிவித்துள்ளார்.
செயற்கைக்கோள் நிறுவனங்களிடம் அதிக தரம் கொண்ட படங்கள் இருந்தாலும், இஸ்ரேல் மற்றும் பாலத்தீனத்தின் பெரும்பாலான பகுதிகள் `கூகுள் எர்த்`-ல் குறைந்த ரிசல்யூஷன் கொண்ட செயற்கைக்கோள் புகைப்படங்களாகவே தெரிகிறது.
காசா நகர தெருக்களில் ஓடும் கார்களை உங்களால் காண முடியாது.
இதை வட கொரியாவின் தலைநகரான பியாங்யாங்குடன் ஒப்பிட்டு பார்த்தால் அங்கு கார்கள் தெளிவாகத் தெரிகின்றன. அதில் தனி மனிதர்களைக் கூட அடையாளம் காண முடிவது போல உள்ளது.
செயற்கைக்கோள் புகைப்படங்கள் ஏன் முக்கியமானவை?
போர் அல்லது சண்டை நடக்கும் சமயத்தில் அது குறித்த செய்திகளை வழங்க செயற்கைக்கோள் புகைப்படங்கள் மிக அவசியம். ஆனால் இதில் ராணுவ பாதுகாப்பும் அடங்கியுள்ளது.
சமீபத்திய இஸ்ரேல் காசா மோதலில் செயற்கைக்கோள் புகைப்படங்களை பயன்படுத்தி ஏவுகணை தாக்குதல்கள், காசா மற்றும் இஸ்ரேலில் இலக்கு வைக்கப்பட்ட கட்டடங்கள் குறித்த தகவல்களை உறுதிப்படுத்த ஆராய்ச்சியாளர்கள் முயற்சிக்கின்றனர்.
ஆனால் இம்மாதிரியான புகைப்படங்களுக்காக பயன்படுத்தப்படும் கூகுள் எர்த்தில், காசா குறித்த சமீபத்திய புகைப்படம் மங்கலாகவும், குறைந்த ரிசல்யூஷன் புகைப்படமாகவும் உள்ளது.
"கூகுள் எர்த்தில் சமீபமாக 2016ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படம் உள்ளது. அதுவும் மோசமாக உள்ளது. நான் சிரியாவின் கிராமப்புறம் ஒன்றை சூம் செய்து பார்த்தபோது 20க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் தெரிந்தன. அது அதிக ரிசல்யூஷன் கொண்ட புகைப்படங்கள்." என பிரிட்டனின் உண்மை பரிசோதிக்கும் செய்தி தளமான பெலிங்கேட்டின் செய்தியாளர் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
அதிக நெரிசல் கொண்ட இடத்தை போதிய இடைவெளியில் புதுப்பிப்பதே கூகுள் எர்த்தின் இலக்கு என்கிறது. ஆனால் காசா விஷயத்தில் அது அவ்வாறு இல்லை.
தெளிவான புகைப்படங்கள் உள்ளன?
கடந்த வருடம் வரை, வர்த்தக நோக்கத்தில் அமெரிக்கா விற்பனை செய்யலாம் என்ற இஸ்ரேல் மற்றும் பாலத்தீனத்தின் செயற்கைக்கோள் புகைப்படங்களின் தரத்தில் சில கட்டுப்பாடுகள் இருந்தன. 1997ஆம் ஆண்டு அமெரிக்காவில் kyl - பிங்கமன் திருத்தச் சட்டம் இஸ்ரேலின் பாதுகாப்பு கருதி கொண்டுவரப்பட்டது.
"நாங்கள் எப்போதும் குறைந்த ரிசல்யூஷன் புகைப்படங்களையே கோருவோம். அவை மங்கலாக இருப்பதே நல்லது," என கடந்த வருடம் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகத்தின் விண்வெளி திட்டத்தின் தலைவர் அம்னோன் ஹராரி தெரிவித்துள்ளார் என ராயட்டர் செய்தி ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த கேபிஏ சட்டத்தின் கீழ், அமெரிக்க செயற்கைக்கோள் புகைப்பட விற்பனையாளர்கள் 2மீ குறைந்த ரெசில்யூஷன் கொண்ட புகைப்படங்களையே விற்க முடியும்.
எனவே ராணுவ தளம் போன்ற இடங்கள் மங்கலாக இருப்பது சகஜம்தான். கேபிஏ சட்டம் இஸ்ரேலுக்கு மட்டும்தான் பொருந்தும் ஆனால் அது பாலத்தீன பகுதிக்கும் கடைப்பிடிக்கப்படுகிறது. ஒருமுறை பிரான்ஸ் நாட்டை சேர்ந்த நிறுவனமான ஏர்பஸ் நிறுவனம், அதிக ரிசல்யூஷனில் புகைப்படங்களை வழங்கியபோது அமெரிக்கா தனது கட்டுப்பாடுகளை தளர்த்தும் நிலைக்கு ஆளானது.
2020ஆம் ஆண்டு ஜூலை மாதம் கேபிஏ சட்டம் கைவிடப்பட்டது எனவே தற்போது அமெரிக்க நிறுவனம் அதிக ரிசல்யூஷன் கொண்ட புகைப்படங்களை வழங்கலாம்.
இருப்பினும் காசாவின் புகைப்படங்கள் மங்கலாக இருப்பது ஏன்?
இதுகுறித்து கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களிடம் பிபிசி பேசியது.
ஆப்பிள் நிறுவனம் தனது வரைப்பட வசதியை 40செமீ அதிக ரிசல்யூஷன் வரை மேம்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளது.
கூகுள் தனது புகைப்படங்கள் பலரிடமிருந்து வருவதாகவும், மேலும் தனது செயற்கைக்கோள் புகைப்படங்களை அதிக ரிசல்யூஷன் படங்களாக மாற்ற முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும், "தற்போது அதுகுறித்து பகிர்ந்து கொள்ளும் திட்டம் இல்லை" எனவும் தெரிவித்துள்ளது.
தற்போதுள்ள மோதல் சூழ்நிலையிலும் இதுகுறித்து கிடைக்கப்படும் புகைப்படங்கள் ஏன் வேண்டுமென்றே குறைந்த ரிசல்யூஷனில் உள்ளது என தெரியவில்லை என பெலிங்கேட் நிறுவனத்தின் ஓபன் சோர்ஸ் ஆராய்ச்சியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த புகைப்படங்களை யார் எடுக்கிறார்கள்?
கூகுள் எர்த் மற்றும் ஆப்பிள் மேப்ஸ் போன்ற வரைப்படங்கள் சேவையை வழங்கும் தளங்கள் புகைப்படங்களை எடுப்பதற்கான செயற்கைக்கோள்களை கொண்ட நிறுவனங்களை சார்ந்துள்ளது.
மேக்சர் மற்றும் பிளானட் லேப்ஸ் என்ற இரு பெரிய நிறுவனங்கள் இஸ்ரேல் மற்றும் காசாவின் அதிக ரிசல்யூஷன் கொண்ட புகைப்படங்களை தருகின்றன.
அமெரிக்காவில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளில் மாற்றங்களை கொண்டுவந்த பிறகு, இஸ்ரேல் மற்றும் காசாவின் புகைப்படங்கள் 40செமீட்டர் ரிசல்யூஷனில் வழங்கப்படுகிறது என மேக்சார் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பிளானட் லேப்ஸ் நிறுவனம் 50செமீட்டர் ரிசல்யூஷனில் வழங்குகிறது.
இருப்பினும் ஆய்வாளர்கள் இலவசமாக கிடைக்கும் பொதுத் தளங்களையே நம்பியுள்ளனர். அவர்களால் நேரடியாக இந்த அதிக ரிசல்யூஷன் படங்களை பெற முடியவில்லை.
அதிக ரிசல்யூஷன் படங்கள் மூலம் வேறு என்ன பார்க்கலாம்?
செயற்கைக்கோள் படங்கள் காடு அழிப்பு, காட்டுத்தீ போன்ற சம்பவங்களை கண்காணிக்கவும், மனித உரிமை மீறல்கள் நடைபெறும் இடங்களை கண்டுகொள்ளவும் பயன்படுகிறது.
2017ஆம் ஆண்டு மியான்மரில் ரோஹிஞ்சா கிராமம் ஒன்றில் நடைபெற்ற அழிவை உலகிற்கு காட்ட இம்மாதிரியான செயற்கைக்கோள் புகைப்படங்களை வழங்கும் ப்ளேனெட் லேப்ஸ் நிறுவனத்துடன் சேர்ந்து பணியாற்றினர் ஆராய்ச்சியாளர்கள்.
இதனால் 200 கிராமங்களில் நடந்த சேதங்களை கணக்கிட உதவியது.
மியான்மரிலிருந்து வங்கதேசத்துக்கு தப்பிச் சென்ற ரோஹிஞ்சா மக்கள் தங்களின் வீடுகள் ராணுவத்தினரால் இலக்கு வைக்கப்பட்டு தாக்கப்படுவதாக தெரிவித்த கூற்றுக்கான ஆதாரங்களை சேகரிக்க இந்த புகைப்படங்கள் உதவின.
அதேபோல சீனாவின் ஷின் ஜியாங் மாகாணத்தில் உய்கர் முஸ்லிம்களுக்கான "கல்வி மையத்தை" தொடங்கியபோது இந்த புகைப்படங்களை கொண்டு அதுகுறித்த தகவல்களை சேகரிக்க முடிந்தது.
அதேபோன்று அதிக ரிசல்யூஷன் கொண்ட படங்கள் அந்த மையத்தின் சில அம்சங்களையும், அளவையும் கணக்கிட உதவியது.
பிற செய்திகள்:
- "நான் ஏன் தமிழ் மொழியில் பதவியேற்றேன்?" - கேரள எம்.எல்.ஏ. ராஜா சிறப்புப் பேட்டி
- கமல்ஹாசன்: "உயிருள்ள வரை அரசியலில் இருப்பேன்"
- கேரள சட்டப்பேரவையில் ஒலித்த தமிழ்க் குரல் - யார் இந்த ஏ. ராஜா?
- Super Blood Moon: இந்தியாவில் இருந்து பார்க்க முடியுமா?
- மியூகோர்மைகோசிஸ் காற்றில் பரவுமா? கருப்பு பூஞ்சை குறித்து மருத்துவர்கள் கூறுவது என்ன?
- 'கங்கையில் பிணங்கள் மிதந்ததற்கு மத்திய அரசே காரணம்' - ராகுல் காந்தி
- அலோபதி மருத்துவத்தை தவறாக பேசிய பாபா ராம்தேவ் மன்னிப்பு கோரவேண்டும்: மருத்துவ சங்கம் நோட்டீஸ்
- "இஸ்ரேல்-பாலத்தீன மோதலைத் தீர்க்க இந்தியா மத்தியஸ்தம் செய்ய வேண்டும்"
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :