You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மலேசிய தமிழர்களின் எதிர்பார்ப்பு என்ன?
- எழுதியவர், சதீஷ் பார்த்திபன்
- பதவி, பிபிசி தமிழுக்காக, மலேசியாவிலிருந்து
தமிழக சட்டமன்ற தேர்தலில் மலேசிய வாழ் தமிழர்களால் வாக்களிக்க முடியாது. எனினும் பலர் இந்தியா வம்சாவளியினர் என்ற வகையில், தமிழ்நாட்டு அரசியல் களத்தின் ஒவ்வொரு நகர்வையும் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள் மலேசியத் தமிழர்கள்.
எதிர்வரும் 6ஆம் தேதி நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலின் முடிவுகளை அறிந்து கொள்ள ஆவலுடன் காத்திருக்கும் கோடிக்கணக்கான உலகத் தமிழர்களில் மலேசியத் தமிழர்களும் அடங்குவர்.
பணி நிமித்தம் மலேசியாவில் வசிக்கும் ஆயிரக்கணக்கான தமிழக தமிழர்களும் தேர்தல் முடிவுகளை எதிர்நோக்கி உள்ளனர்.
மலேசியாவில் வெளியாகும் மூன்று முக்கிய தமிழ் நாளேடுகள், தினந்தோறும் தமிழக அரசியல் கள செய்திகளை குறைந்தபட்சம் இரண்டு பக்கங்களில் வெளியிடுகின்றன.
மேலும் தமிழகத்தைப் போலவே மலேசிய தமிழர்களும் தங்கள் அபிமான தலைவர்களுக்காகவும் அரசியல் கட்சிகளுக்காகவும் சமூக வலைத்தளங்களில் பிரசாரம் செய்து வருகின்றனர். சாதி சங்கங்களும் இங்கு இயங்குவதால் அவற்றின் உறுப்பினர்களும் தாங்கள் ஆதரவளிக்கும் கட்சிகளுக்காக மின்னிலக்க (digital) பிரசாரங்களில் ஈடுபடுகின்றனர்.
மலேசியாவில் பணியாற்றும் பெரும்பாலான தமிழகத் தொழிலாளர்கள் சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்களாக உள்ளனர்.
எனவே, அந்தப் பகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் மீது தனிக்கவனம் செலுத்தப்படுகிறது.
தேர்தலில் யாருக்கு, எந்த காரணத்தை முன்வைத்து ஆதரவளிக்கப் போகிறீர்கள் என்ற கேள்விக்கு, இம்முறை விரிவாக பதிலளிக்கக் கூடியவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகத் தெரிகிறது.
ஒருசிலர் விவசாயிகளின் போராட்டம் தொடங்கி மது ஒழிப்பு போராட்டம், பொள்ளாச்சி பாலியல் சம்பவம், சாத்தான்குளம் இரட்டைக் கொலை வரையிலான சம்பவங்களை பட்டியலிட்டும் கொரோனா காலகட்டத்தில் அரசு செயல்பட்ட விதம் குறித்து அலசியும் கருத்துகளை முன்வைக்கிறார்கள்.
"அனைத்து இஸ்லாமிய கட்சிகளையும் திமுக அரவணைத்திருக்க வேண்டும்"
பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள போதிலும், அக்கட்சியின் தாமரை சின்னத்தைக் கூட அதிமுகவினர் பயன்படுத்துவதில்லை. இப்படிப்பட்ட சங்கடங்களுடன் எதற்காக கூட்டணி அமைக்க வேண்டும் என்று கேள்வி எழுப்புகிறார் பஷீர் அகமத்.
அதிமுகவின் கொள்கை அறிக்கை சரியாக இல்லை என்றும் கூறும் இவர், திமுக அறிக்கையிலும் சில குளறுபடிகள் இருந்ததாகச் சொல்கிறார்.
"அதிமுக அறிக்கையில் மாடுகள் குறித்தும் குடியுரிமைச் சட்டம் குறித்தும் குறிப்பிட்டுள்ளனரே தவிர, மக்களின் நலனுக்கான, வாழ்வாதாரத்துக்கான திட்டங்களைப் பற்றி பேசவில்லை.
"திமுகவும் இஸ்லாமிய சமுதாயம் சார்ந்த விஷயங்களை முதலில் குறிப்பிடாமல், அதிருப்தி எழுந்த பிறகே சில அம்சங்களை தேர்தல் அறிக்கையில் சேர்த்துள்ளனர். எனவே அவர்களைப் பற்றிய நம்பகத்தன்மை பாதிக்கப்பட்டுள்ளது.
"திமுக கூட்டணியில் இரண்டு இஸ்லாமிய கட்சிகள் இணைந்துள்ளன. ஆனால் எஸ்டிபிஐ இணையவில்லை. இதனால் இஸ்லாமியர்கள் வாக்குகள் பிரியாதா? திமுக ஒன்றிரண்டு தொகுதிகளை கூடுதலாக ஒதுக்கி அனைத்து இஸ்லாமியக் கட்சிகளையும் அரவணைத்திருக்கலாம். அவ்வாறு நடக்கவில்லை. அல்லது இஸ்லாமிய கட்சிகளேனும் விட்டுக்கொடுத்திருக்கலாம். எனினும் சனாதானத்தை எதிர்ப்பதாலும் சமத்துவத்தை ஏற்படுத்த நினைப்பதாலும் திமுக முன்னணியில் இருப்பதாக கருதுகிறேன்," என்கிறார் பஷீர் அகமத்.
"மக்கள் நிறைய துன்பங்களை அனுபவித்துவிட்டனர்"
தமிழக கட்சிகள் அனைத்துமே சரியான தலைமைத்துவமும் வழிகாட்டுதலும் இல்லாமல்தான் இந்தத் தேர்தலை எதிர்கொண்டுள்ளன என்கிறார் A.M.Z. ஹாரூன்.
கோலாலம்பூரில் மளிகைக்கடை நடத்திவரும் இவர், ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதற்காக ஏராளமான பொய் வாக்குறுதிகளை அளித்து மக்களை முட்டாள்களாக்கும் செயல் தொடர்ந்து நீடித்து வருவதாக அரசியல் கட்சிகளைச் சாடுகிறார்.
"தமிழகத்தைப் பொறுத்தவரை மனிதநேயத்தைப் போற்றக்கூடிய மண். அங்கு அதிமுக ஆட்சிக் காலத்தில் மக்கள் நிறைய துன்பங்களை அனுபவித்துவிட்டனர். பொள்ளாச்சி, தூத்துக்குடி, சாத்தான்குளத்தில் நிகழ்ந்த சம்பவங்களை மறந்துவிட இயலாது. இவையெல்லாம் மனித குலம் மறக்க முடியாத நிகழ்வுகள்.
"மு.க.ஸ்டாலினை பொறுத்தவரை ஏற்கெனவே துணை முதல்வராக அனுபவம் பெற்றிருந்தாலும் முதல்வராகப் பணியாற்ற ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும். சிறுபான்மையினர் தங்களுக்கு ஆதரவான அமைப்பாக திமுகவை காலங்காலமாக கருதி வருகிறார்கள்.
"நாம் தமிழர் சீமான் புரட்சிகரமான கருத்துக்களை முன்வைத்தாலும் அவராலும், கமல் மற்றும் தினகரனாலும் தனித்துவமான சக்தியாக உருவெடுக்க இயலாது என நினைக்கிறேன்," என்கிறார் ஹாரூன்.
"கமல்ஹாசன், சீமான், தினகரன் ஆகிய மூவரும் தைரியசாலிகள்"
இம்முறை சட்டமன்ற தேர்தலில் அமமுக குறித்து அதிகம் பேசப்படும் என தாம் நம்புவதாகவும், அதிமுக அல்லது திமுக மிக எளிதில் வெற்றி பெற இயலாது என்றும் கணிக்கிறார் கோலாலம்பூரைச் சேர்ந்த இல்லத்தரசி விக்னேஸ்வரி.
இந்தத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றால் எடப்பாடி பழனிசாமி சிறந்த ஆளுமை என்று அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள் என்றும், தற்போதைய நிலையில் திமுக, அதிமுகவுக்கு ஆதரவாக எந்த அலையும் வீசப்போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
"என்னைப் பொறுத்தவரை கமல்ஹாசன், சீமான், தினகரன் ஆகிய மூவரையும் தைரியசாலிகள் என்பேன். தங்களால் இயன்ற சிறிய கூட்டணிகளை அமைத்து களம் காண்கிறார்கள். மூவருக்குமே குறிப்பிட்ட அளவில் வாக்குகள் கிடைக்கும் என நம்புகிறேன்.
"அதிமுகவில் டிடிவி.தினகரன் தரப்பை இணைத்துக்கொள்ளாததைக் கூட எடப்பாடியார் செய்த தவறாக கருதவில்லை. ஆனால் சசிகலா குறித்து அதிகம் பேசியது பாதிப்பை ஏற்படுத்தலாம். எனவே இந்தத் தேர்தலை அதிமுக வென்றாலும் தோற்றாலும் அதற்கு முதல்வர் எடப்பாடியார்தான் காரணம். ஆனால் அமமுக நிச்சயம் பேசப்படும்," என்கிறார் திருமதி.விக்னேஸ்வரி.
"எடப்பாடியார் செல்வாக்கு அதிகரித்துள்ளது"
இம்முறை அதிமுகவுக்கு சாதகமான சூழ்நிலை நிலவுவதாகச் சொல்கிறார் அரசியல் விமர்சகர் தேசம் குணாளன்.
எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு அதிமுக இரண்டாகப் பிளவுபட்டது என்றும், அதன் பிறகு ஜெயலலிதா தலைமையில் அனைவரும் ஒருங்கிணைந்தனர் என்றும் குறிப்பிடும் இவர், ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுகவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி கட்டுக்கோப்பாக வைத்திருப்பதாகச் சொல்கிறார்.
"அதிருப்தியால் விலகிச்சென்ற ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அனைவரையும் அரவணைத்தது நான்காண்டு காலம் ஆட்சி நடத்தியதுடன், தாமே முதல்வர் வேட்பாளர் என்பதை அனைவரையும் ஏற்க வைத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. இதனால் அவரது செல்வாக்கு அதிகரித்திருப்பதாக கருதுகிறேன்.
"நாம் தமிழர் சீமானின் அணுகுமுறை, பிரசார களத்தில் அவர் முன்வைக்கும் கருத்துகள் ஆகியவற்றை நானும் வரவேற்கிறேன். அவருக்கு ஓரளவு செல்வாக்கு இருப்பதாகவும் தோன்றுகிறது. ஆனால் அது எந்தளவு வாக்குகளாக மாறும் எனத் தெரியவில்லை.
"நடிகர் கமல்ஹாசனைப் பொறுத்தவரை திடீரென அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ளார். நடிகன் என்ற போர்வைக்குப் பின்னால் இருக்கும் அவருக்கு மக்கள் ஆதரவு கிடைக்குமா என்பது சந்தேகம்தான். ஏனெனில் மக்கள் நடிகர்களைப் பொருட்படுத்துவதில்லை. அதற்குப் பின்னே மக்கள் சேவையில் ஈடுபட்டுள்ளனரா என்பதைத்தான் கவனிக்கிறார்கள்," என்கிறார் தேசம் குணாளன்.
"மாற்றத்தை எதிர்பார்க்கும் இளைஞர்கள்"
கலைஞர் கருணாநிதியும் ஜெயலலிதாவும் மறைந்த பின்னர் தமிழகத்தில் சிறந்த ஆளுமைகளுக்கான வெற்றிடம் ஏற்பட்டிருப்பதாக தொடர்ந்து பேசப்பட்டு வந்தது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மு.க.ஸ்டாலினும், எடப்பாடி பழனிசாமியும் உருவெடுத்துள்ளதாகச் சொல்கிறார் சமூக ஆர்வலரான சலீம் பாவா.
"இன்றைய தேர்தல் களத்தில் அதிமுக, திமுக ஆகியவற்றுக்கு மாற்றாக ஏதும் உள்ளதா என மக்கள் தேடுகிறார்கள். குறிப்பாக இளைஞர்கள் மாற்றம் வேண்டும் என்பதில் குறியாக உள்ளனர். எத்தகைய மாற்றம் ஏற்படும் என்பது மே 2ஆம் தேதிதான் தெரியவரும்," என்கிறார் சலீம் பாவா.
"நாம் தமிழர், அமமுக, மநீம பெறக்கூடிய வாக்குகளே தீர்மானிக்கும் சக்தி"
திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளின் செயல்பாடுகள், வெற்றி வாய்ப்புகள் குறித்து மட்டுமே பெரும்பாலானோர் பேசும் நிலையில், தமது கவனம் மற்ற கூட்டணிகளின் மீதுதான் பதிந்திருப்பதாகச் சொல்கிறார் அரசியல் பார்வையாளர் இரா.முத்தரசன்.
டிடிவி.தினகரனின் அமமுக, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், சீமானின் நாம் தமிழர் ஆகிய மூன்று தரப்பும் பெறக்கூடிய வாக்குகளைப் பொறுத்தே இம்முறை தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது யார் என்பது தெரிய வரும் என்றும் இவர் கணிக்கிறார்.
"இந்த மூன்று தரப்பினரும் ஒவ்வொரு மாவட்டத்திலும், முக்கியமான தொகுதிகளிலும் எத்தனை விழுக்காடு வாக்குகளைப் பெறுவர் என்பதை இப்போதே என்னால் கணிக்க முடியவில்லை. ஆயினும் அந்த வாக்கு விகிதத்தைப் பொறுத்தே திமுக, அதிமுகவின் வெற்றி ஒவ்வொரு தொகுதியிலும் தீர்மானிக்கப்படும்.
"அது மட்டுமல்லாமல், அடுத்த இரண்டாண்டுகளுக்குப் பிறகு வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலின்போது எத்தகைய கூட்டணி அமையும் என்பதும்கூட எதிர்வரும் சட்டமன்ற தேர்தல் முடிவுகளின் மூலம்தான் தீர்மானமாகும் எனக் கருதுகிறேன்," என்கிறார் முத்தரசன்.
"விவசாயிகள் பலனடைய மு.க.ஸ்டாலின் முதல்வராக வேண்டும்"
ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தமிழக மக்களுக்கு திமுகவினர் பல்வேறு உதவிகளைச் செய்து வருவதை தம்மால் கவனிக்க முடிந்தது என்கிறார் மலேசிய செய்தியாளர் கோபி.
இந்தத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றால் தமிழக மக்களுக்கு அதிக நன்மை விளையும் என தாம் கருதுவதாகச் சொல்கிறார்.
"திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர்கள், அக்கட்சியின் தொண்டர்கள், தலைவர்கள் என அனைவருமே மக்களுக்கு பல உதவிகளைச் செய்கின்றனர்.
"நான் மலேசியாவில் பிறந்து வளர்ந்தவன் என்பதால் இங்குள்ள தோட்டப்புறங்களில் தமிழர்கள் எவ்வாறெல்லாம் சிரமப்பட்டனர், பாட்டாளிகளாக உழைத்தனர் என்பது தெரியும். அவர்களின் முன்னேற்றத்துக்காக மலேசிய அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டது.
"தமிழகத்தில் விவசாயிகளின் வாழ்க்கை நிலை மேம்பட திமுக பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தும் என நம்புகிறேன்," என்கிறார் கோபி.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: