You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வருமான வரி சோதனை: "நாங்கள் பனங்காட்டு நரிகள், சலசலப்புக்கு அஞ்ச மாட்டோம்" - கொந்தளிக்கும் ஸ்டாலின்
தி.மு.க தலைவர் ஸ்டாலின் மருமகன் சபரீசன், அண்ணா நகர் எம்.எல்.ஏ மோகன் மகன் கார்த்திக் உள்பட தி.மு.க தலைமைக்கு வேண்டியவர்களின் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது. என்ன காரணம்?
சென்னை நீலாங்கரையில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் மகள் செந்தாமரையின் வீடு இருக்கிறது. இன்று காலை செந்தாமரையின் வீட்டுக்குள் நுழைந்த வருமான வரித்துறை அதிகாரிகள், கணக்கு விவரங்களை சோதனை செய்து வருகின்றனர். அதேபோல், சபரீசனின் நட்பு வளையத்தில் இருக்கும் கார்த்திக், `ஜீ ஸ்கொயர்' பாலா ஆகியோரும் வருமான வரித்துறையின் வளையத்தில் சிக்கியுள்ளனர்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு மூன்று நாள்களே உள்ள நிலையில், வருமான வரித்துறையின் தொடர் நடவடிக்கைகள் அரசியல் கட்சிகள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. அண்மையில், திருவண்ணாமலை மாவட்ட தி.மு.க செயலாளர் எ.வ.வேலுவின் வீடு, அலுவலகம், மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொருளாளர் வீடு ஆகியவற்றில் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். குறிப்பாக, தி.மு.க தலைமையின் கணக்கு விவரங்களைக் கவனித்து வருபவராக அறியப்படும் எ.வ.வேலுவை குறிவைத்து நடந்த இந்தச் சோதனை, திமுகவினர் வட்டாரத்தில் விவாதப் பொருளாக மாறியது. தொடர்ந்து, தி.மு.க தலைவரின் மருமகன் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே, வருமான வரித்துறை சோதனை தொடர்பாக அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தேர்தல் கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், "ஒன்றை மட்டும் மோதிக்கு சொல்லிக்கொள்கிறேன். நாங்கள் திமுகவினர். இந்த அதிமுக அரசை மோதி அரசுதான் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது. இதே மோதி அரசு, முதல்வர் வீட்டிலும் அமைச்சர்கள் வீட்டிலும், தமிழக தலைமைச் செயலாளர் வீட்டிலும் ரெய்டு நடத்தியுள்ளது. நான் கருணாநிதியின் மகன். இந்த சலசலப்புக்கு எல்லாம் அஞ்ச மாட்டேன். மிசா, எமர்ஜென்சி கால நெருக்கடியையே நான் பார்த்தவன். தேர்தலுக்கு இன்னும் மூன்று நாட்கள் உள்ளன. ரெய்டு நடத்தினால் திமுககாரன் முடங்கி விடுவான் என நினைக்கிறார்கள். அது அதிமுவினரிடம் நடக்கும். ஆனால், நாங்கள் பனங்காட்டு நரிகள். இந்த சலசலப்புக்கு எல்லாம் அஞ்ச மாட்டோம். இதற்கெல்லாம் பதில் ஏப்ரல் 6ஆம் தேதி தரப்படும் என்பதை மறந்து விடக்கூடாது," என்றார்.
சபரீசன் குறிவைக்கப்பட என்ன காரணம்?
`` சட்டமன்றத் தேர்தலுக்கு 3 நாள்களே இருப்பதால், கட்சி நிர்வாகிகளின் செலவுக்கான தொகையை அனுப்பும் வேலைகள் நடந்து வருகின்றன. ஒவ்வொரு தொகுதிக்கும் தேவையான பணம் அனுப்பப்பட்டு வருகிறது. கடந்த 2 நாள்களாக இந்தப் பணிகள் நடந்து வருகின்றன. நேற்று பிற்பகல் அறிவாலயத்தில் பணம் அனுப்புவது தொடர்பாக சற்று பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது. மற்ற மாவட்டங்களில் செலவுக்கான ஏற்பாடுகள் முடிந்துவிட்டாலும், சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு இந்தத் தொகை அனுப்பப்பட்டு வந்தது. இதுகுறித்த தகவலின்பேரில் வருமான வரித்துறை உள்ளே வந்திருக்கலாம் என நினைக்கிறோம்" என்கிறார் தி.மு.க முன்னணி நிர்வாகி ஒருவர்.
பெயர் குறிப்பிட விரும்பாமல் பிபிசி தமிழிடம் பேசிய அவர், `` தி.மு.கவுக்குள் எந்தப் பொறுப்பிலும் இல்லாவிட்டாலும் அனைத்து நடவடிக்கைகளும் சபரீசன் மூலமாகத்தான் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது கட்சி நிர்வாகிகள் அனைவருக்கும் தெரியும். கணிப்பொறியியல் தொடர்பான வர்த்தகத்தில் அவர் ஈடுபட்டு வருகிறார். அண்ணாநகர் எம்.எல்.ஏ மோகனின் மகன் கார்த்திக், பாலா ஆகியோரும் சபரீசனின் நட்பு வளையத்தில் உள்ளனர். இவர்கள் அனைவரும் தொழில்ரீதியாகவும் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.
ஸ்டாலின் குடும்பத்தின் பதற்றம்
தி.மு.கவுக்கு தேர்தல் தொடர்பான பணிகளை மேற்கொண்டு வரும் ஐபேக் நிறுவனத்துக்குத் தேவையான வசதிகளையும் சபரீசன் செய்து கொடுக்கிறார். வேட்பாளர் தேர்வு, அவர்களது செலவுகள் போன்றவற்றிலும் சபரீசனின் தலையீடு இருந்ததாகக் கூறப்பட்டது. எ.வ.வேலுவை வருமான வரித்துறை குறிவைத்ததுமே அடுத்ததாக தி.மு.க தலைவருக்கு வேண்டியவர்களின் வீட்டுக்கு வருவார்கள் என நினைத்தோம். அதன்படியே நடந்துவிட்டது. இன்று காலை நீலாங்கரை வீட்டில் ரெய்டு தொடங்கியதும் முக்கிய நிர்வாகிகளைத் தொடர்பு கொண்ட ஸ்டாலின் குடும்பத்தினர், `உடனே செந்தாமரை வீட்டுக்குச் செல்லுங்கள்' எனப் பதற்றத்தோடு கூறியுள்ளனர். இதையடுத்து, அவர்களும் தங்களது ஆதரவாளர்களைக் கூட்டிக் கொண்டு சம்பவ இடத்துக்கு விரைந்தனர்" என்கிறார்.
`அரசியல் உள்நோக்கத்துடன் ஐ.டி ரெய்டு நடத்தப்படுகிறது' என சி.பி.ஐ கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், வி.சி.க தலைவர் திருமாவளவன் உள்பட தி.மு.கவின் கூட்டணிக் கட்சி தலைவர்கள் பலரும், சோதனையைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டு வருகின்றனர். அதேநேரம், தேர்தலுக்கு சில நாள்களே இருப்பதால், `தி.மு.க தரப்பில் எந்த உதவியும் களத்துக்குச் சென்றுவிடக் கூடாது' என்ற முனைப்பில் பணப் பரிமாற்றத்தை முடக்கும் வேலைகள் நடப்பதாகவும் திமுகவினர் குமுறுகின்றனர்.
சபரீசனுக்கு என்ன சம்பந்தம்?!
``ரெய்டு நடவடிக்கையை எப்படிப் பார்க்கிறீர்கள்?" என தி.மு.கவின் தலைமைக் கழக வழக்கறிஞர் சூர்யா வெற்றிகொண்டானிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` வருமான வரித்துறை, தேர்தல் ஆணையம் உள்பட தன்னாட்சி அமைப்புகளை எல்லாம் தி.மு.கவுக்கு எதிராகப் பயன்படுத்தி வருகின்றனர். ரெய்டு தொடர்பான புகார்கள் எதுவும் வருமான வரித்துறைக்குச் செல்லவில்லை. இதுதொடர்பாக ஏற்கெனவே பட்டியலை கையில் வைத்துக் கொண்டு வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது. இந்தத் தேர்தலில் தி.மு.கவை எந்த இடத்திலும் நகரவிடக் கூடாது. அ.தி.மு.கவினர் பண விநியோகத்தை நடத்தி முடிப்பதற்கு பல வகைகளில் உதவியாக இருப்பது என்ற நோக்கில் அதிகாரிகள் செயல்படுகின்றனர். வாக்குக்குப் பணம் கொடுப்பதை தேர்தல் ஆணையம் தடுக்கிறதோ இல்லையோ, தி.மு.க தொடர்ந்து தடுத்து வருகிறது. இதன் காரணமாக, தி.மு.கவின் அஸ்திவாரத்தில் கைவைக்க நினைக்கின்றனர்" என்கிறார்.
தொடர்ந்து பேசுகையில், `` இன்று மதுரையில் பிரதமர் பிரசாரம் செய்ய உள்ளார். வருமான வரித்துறை மூலம் ரெய்டு நடத்தி பிரதமரை குளிர்விக்கும் வேலைகளைச் சிலர் செய்து வருகின்றனர். சொல்லப்போனால், அரசியலுக்கும் சபரீசனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கட்சி நிர்வாகத்திலும் அவர் தலையிடுவதில்லை. அவர் ஒரு நேர்மையான தொழிலதிபராக இருக்கிறார்.
அவருடைய பிறந்தநாளுக்குக்கூட யாரும் சென்று சால்வை அணிவித்தது கிடையாது. கலைஞரின் மனசாட்சியாக எப்படி முரசொலி மாறன் இருந்தாரோ, அதேபோல் தி.மு.க தலைவருக்கு சபரீசன் இருக்கிறார். மற்றபடி, இந்த சோதனைகள் எல்லாம் அரசியல் உள்நோக்கம் கொண்டவை" என்கிறார் கொதிப்புடன்.
``அமைச்சர் எம்.சி.சம்பத் உள்பட ஆளும்கட்சிக்கு வேண்டிய பலரது இல்லங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகி உள்பட ஏராளமானோர் இந்தச் சோதனையில் சிக்கினர். தி.மு.கவை மட்டுமே குறிவைத்து சோதனை நடப்பதாகச் சொல்வது அர்த்தமற்றது" என்கின்றனர் பா.ஜ.க தரப்பில்.
`இந்த ரெய்டில் உள்நோக்கம் இருப்பதாகச் சொல்கிறார்களே?' என ஓய்வுபெற்ற வருமான வரித்துறை அலுவலர் பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தியிடம் பிபிசி தமிழ் சார்பில் கேட்டோம். `` இது நார்மலான ரெய்டுதான். தேர்தல் நேரத்தில் அவ்வப்போது யாராவது போன் செய்து, பணம் இருக்கும் தகவலைச் சொல்வார்கள். இதுதொடர்பாக தகவல் சொல்பவர், உண்மையைத்தான் சொல்கிறாரோ என்பதை ஆராய்வதற்காக சோதனை மேற்கொள்வது வழக்கம்.
அங்கு ஒருவேளை பணம் இருந்தால் அதனைப் பறிமுதல் செய்து கணக்கு கேட்பார்கள். இதற்காக பெரிய அளவில் இருந்து உத்தரவு எதுவும் வராது. இதனை சீரியஸாகப் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. மேலும், இந்த விவகாரத்தில் அரசியல் அழுத்தம் இருக்கவும் வாய்ப்பில்லை. என்னைப் பொறுத்தவரையில், இதுபோன்ற சோதனைகளை ஆராய்ந்து மேற்கொள்வது நல்லது" என்கிறார்.
பிற செய்திகள்:
- தனி நாடு, கூட்டாட்சி என்றெல்லாம் பேசப்போவதில்லை: சீமான்
- "ரெய்டில் பிடிபட்ட மொத்த பணமே 5 சதவிகிதம்தான்" - அதிர வைக்கும் தகவல்கள்
- "கருத்துக் கணிப்புகள் பொய், மக்கள் ஏமாற மாட்டார்கள்" - அண்ணாமலை பேட்டி
- நந்திகிராமில் மல்லுகட்டிய மமதா பானர்ஜி - வாக்குச்சாவடியில் பதற்றம்
- திமுக வேட்பாளர் மீது சொம்பு திருட்டு வழக்கா? உண்மை என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: