You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
"ஜோர்ஜா புதிய தேர்தல் சட்டம் கருப்பின மக்கள் வாக்குகளை அதிகம் தடுக்கும்": ஜோ பைடன் கடும் எதிர்ப்பு
அமெரிக்காவின் ஜோர்ஜா மாநிலத்தில் ஆளும் குடியரசுக் கட்சி கொண்டுவந்துள்ள புதிய வாக்களிப்புச் சட்டம் கடும் கட்டுப்பாடுகளை விதித்து கருப்பின மக்கள் வாக்களிப்பதை அதிகம் தடுக்கக் கூடியதாக உள்ளது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
இந்த புதிய சட்டம் 20-ம் நூற்றாண்டில், அமெரிக்காவின் தென்பகுதியில் நடைமுறையில் இனப் பாகுபாட்டுக் கொள்கைகளை ஒத்திருப்பதாக கூறிய பைடன் இது 'கொடுமை' என்றும் தெரிவித்தார்.
இந்த சட்டம் அறிமுகப்படுத்தும் கட்டுப்பாடுகள் வெள்ளையர்களைவிட கருப்பர்களை அதிகம் பாதிக்கும் வகையில் இலக்குவைத்து கொண்டுவரப்பட்டது என்று கூறியுள்ளார் அவர்.
வாக்களிக்கும் முறையை ஒழுங்குபடுத்தி தேர்தல் அமைப்பின் மீதான நம்பிக்கையை மீட்டெடுக்க முயல்வதாக குடியரசுக் கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
இந்த சட்டம் அமெரிக்காவின் அரசமைப்புச் சட்டத்தின் மீதான கண்மூடித்தனமான தாக்குதல் என்றும் 21ம் நூற்றாண்டின் "ஜிம் குரோ" என்றும் குறிப்பிட்டார் பைடன், ஜிம் குரோ என்ற சொல், அமெரிக்க நாட்டின் தென் பகுதியில் 20-ம் நூற்றாண்டில் இன ஒதுக்கலை நடைமுறைப்படுத்திய சட்டங்களைக் குறிப்பதாகும்.
கடந்த ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் ஜோர்ஜா மாநிலத்தில் ஜோ பைடன் வெற்றி பெற்றார். 1992க்குப் பிறகு ஜோர்ஜாவில் வென்ற ஜனநாயகக் கட்சி வேட்பாளர் இவரே. அந்த மாநிலத்தில் உள்ள கருப்பின வாக்காளர்கள் அதிக அளவில் வாக்களித்ததே ஜோர்ஜாவில் பைடன் வெற்றிபெறக் காரணம் என்று நம்பப்படுகிறது.
அதிபர் ஜோ பைடன் என்ன சொன்னார்?
இந்தப் பிரச்னை தொடர்பாக ஜோ பைடன் வெள்ளிக்கிழமை ஒரு அறிக்கை வெளியிட்டார்.
அதில் "மீண்டும் மீண்டும் மறு வாக்கு எண்ணிக்கை நடத்தி, மீண்டும் மீண்டும் வழக்குத் தொடுத்து கடைசியில் வெளியான முடிவு சுதந்திரமான, நியாயமான தேர்தல் முறையின் மீதான, பாதுகாப்பான ஜனநாயக நடைமுறை மீதான நம்பிக்கையை வெளிப்படுத்தியது.
ஜோர்ஜியர்களின் வாக்களிக்கும் உரிமையை, தங்கள் கருத்துகளின் வலிமையால் அவர்கள் தங்கள் இயக்கங்களை வெற்றி பெற வைப்பதை கொண்டாடுவதற்குப் பதிலாக அமெரிக்க இயல்புக்கு மாறான ஒரு சட்டத்தை அவசரமாக கொண்டுவந்து மக்களின் வாக்களிக்கும் உரிமையை மறுக்கும் வகையில் ஒரு சட்டத்தை குடியரசுக் கட்சியினர் கொண்டுவந்துள்ளனர்" என்று தெரிவித்துள்ளார் ஜோ பைடன்.
இது குறித்து மேலும் கூறிய அவர், பல மாநிலங்களில் ஆட்சியில் இருக்கும் குடியரசுக் கட்சியினரால் கொண்டுவரப்படும் இத்தகைய சட்டங்கள் அரசமைப்புச் சட்டத்தின் மீதும் நல்ல மனசாட்சியின் மீதும் நடத்தப்படும் தாக்குதல் என்று தெரிவித்தார்.
அத்துடன் இந்த சட்டங்கள் குறித்து நாட்டின் சட்டத்துறை ஆராய்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
புதிய சட்டம் சொல்வது என்ன?
குடியரசுக் கட்சி பெரும்பான்மை உள்ள ஜோர்ஜா மாநில சட்டமன்றத்தின் இரு அவைகளிலும் தேர்தல் நம்பிக்கை சட்டம் 2021 (The Election Integrity Act of 2021) நிறைவேற்றப்பட்டது. 2020ம் ஆண்டின் அதிபர் தேர்தலுக்குப் பிறகு தபால் வாக்குகளைப் பெறுவதில் கட்டுப்பாடுகளை விதிக்கும் இரண்டாவது மாநிலமாகியுள்ளது ஜோர்ஜா.
சட்டத்தின் முக்கிய அம்சங்கள்:
- தபால் வாக்குச் சீட்டு பெறுவதற்கு தற்போது கையெழுத்துப் போட்டால் போதுமானது. ஆனால், புதிய சட்டப்படி அடையா ஆவணங்களை சமர்ப்பித்தே வாக்குச்சீட்டு பெற முடியும்.
- வாக்களிப்பதற்கு வரிசையில் நிற்கும் வாக்காளர்களுக்கு தண்ணீர், உணவு விநியோகம் செய்வதை எல்லா வாக்குச்சாவடிகளிலும் தடை செய்வது.
- பிரச்சனை ஏற்பட்டால், வாக்களிப்பைக் கட்டுப்படுத்தும் விவகாரத்தில் மாநில சட்டமன்றங்களுக்கு கூடுதல் அதிகாரம்.
- தபால் வாக்குகளை செலுத்துவதற்கான பெட்டிகளின் எண்ணிக்கையைக் குறைப்பது. (இதன் மூலம் வாக்காளர்கள் தங்கள் வாக்குகளைச் செலுத்த நீண்ட தூரம் செல்லவேண்டிய நிலை ஏற்படும்).
- போதிய வாக்கு வித்தியாசம் இல்லாதபோது நடத்தப்படும் இரண்டாம் கட்ட வாக்குப் பதிவுக்கு முன்கூட்டியே வாக்கு செலுத்துவதற்கான கால அளவை குறைப்பது போன்றவை புதிய சட்டத்தின் சில அம்சங்கள்.
இதில் ஏன் இரு தரப்புக்கும் மோதல்?
அமெரிக்காவில் உள்ள 50 மாநிலங்களில் 40க்கும் மேற்பட்ட மாநிலங்களில் வாக்களிக்கும் நடைமுறையை கடுமையாக்குவதற்காக புதிய சட்டங்களைக் கொண்டுவர முயற்சி மேற்கொண்டுள்ளனர். முக்கியமாக அவர்கள் குறிவைப்பது முன்கூட்டி அளிக்கும் வாக்குகளும், தபால் வாக்குகளும்தான்.
நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் பரவலாக முறைகேடுகள் நடந்ததாக கூறுவதற்கு ஆதாரம் ஏதும் இல்லை என்றாலும், முறைகேடு நடந்துவிட்டதாக கூறிவந்த முன்னாள் அதிபர் டிரம்பின் கூற்றுக்கு ஏராளமான குடியரசுக் கட்சியினர் ஆதரவு தெரிவித்தனர். கடந்த மாதம் எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பில் 67 சதவீத குடியரசுக் கட்சியினர் நடந்து முடிந்த அதிபர் தேர்தல் முடிவுகள் முறையற்றவை என்று நம்புவதாக குறிப்பிட்டனர்.
குடியரசுக் கட்சியினர் வாக்களிப்பதை முறைப்படுத்துவதாக கூறுகின்றனர். ஆனால், தங்களுக்கு வாக்களிக்கும் சமூக, இனக் குழுக்களை இலக்குவைத்து எடுக்கப்படும் நடவடிக்கை இது என்கிறார்கள் ஜனநாயக கட்சியினர். கடந்த தேர்தலில் இந்தக் குழுவினர் அதிகம் வாக்களித்தனர்.
வாக்குச் சீட்டு பெறுவதற்கு அடையாள ஆவணம் வேண்டும் என்பதை விதியாக்கினால், பல உழைக்கும் மக்களுக்கு அடையாள ஆவணம் இருக்காது. அவர்களால் வாக்குச் சீட்டு பெறமுடியாத நிலை ஏற்படும்.
வரிசையில் நிற்கும் வாக்காளர்களுக்கு உணவும், தண்ணீரும் தருவது அவர்களைக் கவரும் செயல் என்கிறார்கள் குடியரசுக் கட்சியினர். கருப்பின மக்கள் பெரும்பான்மையாக உள்ள மாநிலங்களில் வாக்களிப்பதற்குப் பல மணி நேரம் நிற்கவேண்டிய சூழ்நிலை இருக்கும் என்பது இதன் இன்னொரு பக்கம்.
மீள் தேர்தல் நடக்கும் இடங்களில் முன்கூட்டியே வாக்களிப்பதற்கான காலத்தை குறைப்பது வாக்குகளைக் குறைப்பதற்கான நடவடிக்கை என்கிறார்கள் ஜனநாயக கட்சியினர். அவர்களது வாக்கு வங்கி கணிசமாக உயர்ந்ததன் காரணமாகவே ஜார்ஜியா மாநிலத்தில் அதிபர் தேர்தலில் வென்றது மட்டுமில்லாமல், அந்த மாநிலத்தில் இருந்து ஜனநாயக கட்சியால் இரண்டு செனட்டர் பதவிகளையும் வெல்ல முடிந்தது. நாடாளுமன்ற மேலவையான செனட்டை ஜனநாயக கட்சி கட்டுப்படுத்துவதற்கு இதன் மூலம் வழியேற்பட்டது.
"இது போன்ற சட்டத்தை முன்கூட்டியே நிறைவேற்றாதது பெரும் தவறு. 2020 அதிபர் தேர்தலில் நடந்த தவறு புரிந்துகொள்ளப்பட்டது. இது போன்ற தவறு மீண்டும் நிகழ்வதை அனுமதிக்கமுடியாது" என்கிறார் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப்.
மற்ற மாநிலங்களில் என்ன நிலைமை?
முன்னரே ஐயோவா மாநிலத்தில் இது போன்ற சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்னும் பல மாநிலங்களில் இதுபோன்ற சட்டங்கள் நிறைவேற்றப்படலாம்.
43 மாநிலங்களில் இது போன்ற 253 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்கிறது ப்ரென்னன் நீதி மையம் என்ற சிந்தனைக் குழாம்.
ஏனென்றால், அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஜனநாயக கட்சிக்கு மெல்லிய பெரும்பான்மையே இருக்கிறது. பல மாநில சட்டமன்றங்களில் குடியரசுக் கட்சியினர் ஆதிக்கம் செலுத்துகின்றனர்.
30 மாநிலங்களின் சட்டமன்றங்களில் ஜனநாயக கட்சியினர் பெரும்பான்மை வகிக்கின்றனர். அவற்றில் 23 மாநிலங்களில் ஆளுநர் பதவியும் (முதல்வர் போல) குடியரசுக் கட்சியினரிடமே இருக்கிறது. இப்படி சட்டமன்ற அவைகளில் பெரும்பான்மை பெற்று, ஆளுநர் பதவியும் குடியரசுக் கட்சியினரிடம் இருக்கும் இடங்களில் இரு அவைகளிலும் மசோதாவை நிறைவேற்றி, உடனடியாக ஆளுநர் ஒப்புதல் அளித்து சட்டமாக்கிவிடமுடியும்.
பிற செய்திகள்:
- அதிமுக வேட்பாளர்கள், பிரசாரத்தில் வீட்டுப் பெண்களை ஈடுபடுத்தும் புதிய காட்சி
- மகாதீரை குத்திக் கொல்ல திட்டம்: மலேசியாவில் 'ஐ.எஸ் ஆதரவாளர்கள்' 3 பேர் கைது
- இந்தியாவில் 'இரட்டை பிறழ்வுடைய' கொரோனா திரிபு: நீங்கள் கவலைப்பட வேண்டுமா?
- சூயஸ் கால்வாயின் குறுக்கே நிற்கும் கப்பலால் செங்கடலில் 'டிராஃபிக் ஜாம்'
- நரேந்திர மோதி வருகையை எதிர்த்து போராட்டம்: வங்கதேசத்தில் 5 பேர் பலி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: