You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சூயஸ் கால்வாயில் தரைதட்டி குறுக்கே நிற்கும் எம்.வி.எவர் கிவன் கப்பலால் செங்கடலில் 'டிராஃபிக் ஜாம்' - விரைவில் மீட்கப்படும்
சூயஸ் கால்வாயில் செல்லும்போது காற்றால் திசை திரும்பி குறுக்கு வாட்டத்தில் சென்று தரைதட்டி நிற்கும் கொள்கலன் கப்பல் எவர்கிவன் சனிக்கிழமையே மீட்கப்படலாம் என்று அதன் ஜப்பானிய உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஷோயி கிசென் நிறுவனத்தின் தலைவரான யுகிடோ ஹிகாகி ஒரு செய்தியாளர் சந்திப்பில் இந்த தகவலைத் தெரிவித்தார்.
கப்பலின் அடியிலும், கால்வாயின் கரையிலும் தூர்வாரும் பணியில் 10 இழுவைப்படகுகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அமெரிக்காவும் கடற்படை வல்லுநர்களை அனுப்புவது உள்ளிட்ட உதவிகளை அளிப்பதாக உறுதி கூறியுள்ளது.
செங்கடலில் டிராஃபிக் ஜாம்
இதனிடையே, தரைதட்டி நிற்கும் எம்.வி. எவர் கிவன் சரக்குக் கப்பலால் செங்கடலில் மிகப்பெரிய 'டிராஃபிக் ஜாம்' உண்டாகியுள்ளதாக, அந்தக் கப்பலுக்கு பின்னால் காத்திருக்கும் இன்னொரு சரக்குக் கப்பலில் பொறியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
சூயஸ் கால்வாயின் தெற்கு முனையில் காத்திருக்கும் கப்பல்களின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்து வருவதாக மேயர்ஸ்க் ஒஹாயோ எனும் சரக்குக் கப்பலின் தலைமைப் பொறியாளர் ஜோ ரெனால்ட்ஸ் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
இந்த ஒரு கப்பல் சூயஸ் கால்வாயில் தரைதட்டி நிற்பதால், உலகெங்கும் உள்ள கப்பல்களின் போக்குவரத்து அட்டவணையில் தாக்கம் உண்டாகும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
இன்னும் அதிக அளவு வேலைகள் செய்ய வேண்டியுள்ளது என்று தெரிவித்துள்ள அவர் தம்மாலோ, தமது குழுவினராலோ அருகில் இருக்கும் கப்பல்களின் குழுவினருடன் தொடர்புகொள்ள இயலவில்லை என்று தெரிவித்துள்ளார்.
தங்களுக்கு நேர்ந்துள்ள இக்கட்டுகளையும் மீறி எம்.வி. எவர் கிவன் கப்பலில் சிக்கியுள்ள இந்தியாவைச் சேர்ந்த 25 ஊழியர்களின் மன நிலையை நினைத்து கவலைப்பட்டார்.
"கடலோடிகளாக நாங்கள் எண்ணற்ற விவகாரங்கள் குறித்து புகார் கூறுவோம். ஆனால், கடலோடிகள் சிலர் சிக்கி இருக்கும்போது, வேறு சில கடலோடிகள் நிலையை சரி செய்ய இரவு பகலாக முயற்சிக்கிறார்கள். நாங்கள் பலரும் அந்த நிலையை அனுபவித்துள்ளோம், " என்று அவர் கூறினார்.
எவர் கிவன் கப்பல் ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2,20,000 டன் எவர் கிவன் கப்பல் - மீட்பு பணிகள் எப்படி?
கடும் கற்றால் திசை திரும்பி, தரை தட்டிய இந்தக் கப்பலின் எடை சுமார் 2,20,000 டன் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதை மீண்டும் நீரில் மிதக்க வைக்கும் முயற்சியில் 10 இழுவைப் படகுகளும், இரண்டு அகழ்வு இயந்திரங்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
ஞாயிறு முதல் மேலும் இரு இழுவைப் படகுகள் கப்பலை மிதக்க வைக்கும் முயற்சியில் ஈடுபடுத்தப்படவுள்ளன.
வெள்ளிக்கிழமை அந்தக் கப்பலை மீண்டும் மிதக்க வைக்கும் முயற்சி தோல்வி அடைந்ததாகவும், கப்பலின் இடது பக்கத்தில் இருக்கும் மணல் மற்றும் சகதியை நீக்கம் முயற்சிகளில் தற்போது கவனம் செலுத்தப்பட்டு வருகிறது என்றும் எவர் கிவன் கப்பலுக்கு தொழில்நுட்ப மேலாண்மை செய்யும் பெர்னார்டு ஷூல்ட் ஷிப் மேனேஜ்மென்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஒரு மணி நேரத்துக்கு 2,000 கியூபிக் மீட்டர் சகதியை உறிஞ்சி எடுக்கும் அகழ்வு இயந்திரம் வியாழன் முதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தரைதட்டிய கப்பல் மீண்டும் நகரும் வரை போக்குவரத்தைத் திசைதிருப்ப, கால்வாயின் பழைய தடத்தை எகிப்து, மீண்டும் திறந்துள்ளது.
இந்தத் தடையால் சர்வதேச சந்தைகளில் எண்ணெய் விலைகள் ஏற்றம் அடைந்து வருகின்றன.
உலகளாவிய வர்த்தக சரக்குகளின் சுமார் 12% சூயஸ் கால்வாய் வழியாகவே செல்கிறது, இது மத்தியதரைக் கடலைச் செங்கடலுடன் இணைக்கிறது மற்றும் ஆசியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான குறுகிய தூரமுள்ள கடல் வழியாகவும் உள்ளது.
சூயஸ் கால்வாய்க்கு மாற்று வழியாக ஆசியா - ஐரோப்பா இடையே பயணிக்க வேண்டுமானால் ஆப்ரிக்க கண்டத்தின் தெற்கு முனையான நன்னம்பிக்கை முனையைச் சுற்றித்தான் செல்ல வேண்டும்.
ஆனால் அதற்கு சுமார் இரண்டு வார காலம் கூடுதல் நேரம் தேவைப்படும். அதற்கேற்ப எரிபொருள், உணவுக் கையிருப்பு ஆகியவையும் அதிகமாகும்.
பனாமாவில் பதிவுசெய்யப்பட்ட மற்றும் எவர்கிரீன் என்ற கப்பல் நிறுவனத்தால் இயக்கப்படும் எவர் கிவன் என்ற கப்பல், சீனாவிலிருந்து நெதர்லாந்தில் உள்ள துறைமுக நகரமான ரோட்டர்டாமிற்குப் புறப்பட்டு, மத்தியதரைக் கடலுக்குச் செல்லும் வழியில் கால்வாய் வழியாக வடக்கு நோக்கிச் சென்று கொண்டிருந்தது.
சூயஸ் வழியாக 2020இல் 19,000 கப்பல்கள்
இந்தக் கப்பல், 2018ஆம் ஆண்டில் கட்டப்பட்டு, தைவானிய போக்குவரத்து நிறுவனமான எவர் க்ரீன் மரைனால் இயக்கப்படுகிறது. செவ்வாய்க்கிழமை உள்ளூர் நேரப்படி (05:40 GMT) சுமார் 07:40 மணிக்கு நீர்வழியின் குறுக்கே மாட்டிக்கொண்டது.
20,000 கொள்கலன்களைக் கொண்டு செல்லும் திறன் இந்த கப்பலுக்கு உள்ளது என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
2020ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 19,000 கப்பல்கள் இக்கால்வாய் வழியாக சென்றன. அதாவது சராசரியாக ஒரு நாளைக்கு 51.5 கப்பல்கள் என்று சூயஸ் கால்வாய் ஆணையம் குறிப்பிடுகிறது.
2017ஆம் ஆண்டில், ஜப்பானிய கொள்கலன் கப்பல் இயந்திரக் கோளாறு காரணமாக இக்கால்வாயில் சிக்கியது. எகிப்திய அதிகாரிகள் இழுபறிப் படகுகளின் உதவியோடு சில மணி நேரங்களுக்குள் மீண்டும் அதை மிதக்க வைத்தனர்.
சூயஸ் கால்வாய் மத்திய தரைக்கடல் மற்றும் செங்கடலுக்கு இடையிலான ஒரு பகுதியான சூயஸ் இஸ்த்மஸை எகிப்தில் கடக்கிறது. இந்தக் கால்வாய் 193 கி.மீ (120 மைல்) நீளம் கொண்டது மற்றும் மூன்று இயற்கை ஏரிகளை உள்ளடக்கியது.
2015ஆம் ஆண்டில், எகிப்து அரசாங்கம் கால்வாயை விரிவாக்கம் செய்தது. இது பிரதான நீர்வழிப்பாதையை ஆழப்படுத்தியதுடன், அதற்கு இணையாக 35 கி.மீ (22 மைல்) தடத்தையும் கப்பல்களுக்கு வழங்கியது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: