You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
உலகிலேயே மிகவும் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியல்: ஃபின்லாந்து தொடர்ந்து முதலிடம், இந்தியா 139-ஆவது இடம்
ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவுடன் தயாரிக்கப்பட்ட ஆண்டறிக்கை ஒன்றில் தொடர்ந்து நான்காவது ஆண்டாக உலகிலேயே மிகவும் மகிழ்ச்சியான நாடாக ஃபின்லாந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
சனியன்று வெளியாகியுள்ள உலக மகிழ்ச்சி அறிக்கையில் இரண்டாம் இடத்தில் டென்மார்க்கும் மூன்றாம் இடத்தில் சுவிட்சர்லாந்தும் உள்ளன.
நான்கு மற்றும் ஐந்தாவது இடங்களை முறையே ஐஸ்லாந்து மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் பெற்றுள்ளன.
உலகிலேயே மகிழ்ச்சியாக இருக்கும் முதல் பத்து நாடுகளின் பட்டியலில் ஒன்பது நாடுகள் ஐரோப்பிய நாடுகள் ஆகும்.
ஐரோப்பிய கண்டத்தில் இல்லாமல் முதல் 10 இடங்களுக்குள் வந்துள்ள ஒரே ஒரு நாடாக நியூசிலாந்து உள்ளது. இந்த ஆண்டு ஒன்பதாம் இடத்தில் உள்ள நியூசிலாந்து சென்ற ஆண்டு 8ஆம் இடத்தில் இருந்தது.
கடந்த ஆண்டு 13வது இடத்தில் இருந்த பிரிட்டன் இந்த ஆண்டு 17 வது இடத்திற்கு சரிந்துள்ளது.
அமெரிக்கா 19-வது இடத்தில் உள்ள இந்த பட்டியலில் இலங்கை 129-ஆவது இடத்திலும், இந்தியா 139-ஆவது இடத்திலும் உள்ளன. மலேசியா இந்தப் பட்டியலில் 81-ஆவது இடத்தில் உள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த தரவுகள் பகுப்பாய்வு நிறுவனமானது 'கேலப்' 149 நாடுகளில் நாடுகளைச் சேர்ந்தவர்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பது குறித்த தரவுகளை அந்த நாடுகளை சேர்ந்தவர்களிடமிருந்து சேகரித்தது.
தனிமனித சுதந்திரம், ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி, குறைவான ஊழல், அரசிடம் இருந்து கிடைக்கும் சமூக நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் மக்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பது குறித்த அறிக்கை தயாரிக்கப்பட்டது.
உலகிலேயே மிகவும் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் கடைசி இடத்தில் ஆஃப்கானிஸ்தான் உள்ளது.
ஆஃப்கானிஸ்தான் உடன் லெசோத்தோ, போட்ஸ்வானா, ருவாண்டா மற்றும் ஜிம்பாப்வே ஆகிய நாடுகள் மகிழ்ச்சி குறைவான நாடுகளாக இந்தப் பட்டியலில் கடைசி ஐந்து இடங்களில் உள்ளன.
தரவுகள் சேகரிக்கப்பட்ட 149 நாடுகளில் மூன்றில் ஒரு பங்கு நாடுகளுக்கும் சற்று அதிகமான நாடுகளில் குறிப்பிடத்தகுந்த அளவுக்கு அதிகமான எதிர்மறை உணர்வுகள் இருப்பதை காண முடித்ததாக இந்த அறிக்கையை இயற்றியவர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவல் உண்டாக்கிய தாக்கத்தை சுட்டிக்காட்டும் வகையில் இது அமைந்துள்ளது.
எனினும் 22 நாடுகள் தங்கள் முந்தைய நிலையை விட தற்போது மகிழ்ச்சியாக இருப்பதாக இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இருந்த இடத்தை விட பல ஆசிய நாடுகள் தற்போது முன்னேறியுள்ளன.
கடந்த ஆண்டு 94வது இடத்தில் இருந்த சீனா இந்த ஆண்டு 84-ஆவது இடத்தை பிடித்துள்ளது.
ஃபின்லாந்தின் மகிழ்ச்சிக்கு என்ன காரணம்?
ஃபின்லாந்தில் ஒருவர் மீது ஒருவருக்கு பரஸ்பர நம்பிக்கை அதிகமாக இருப்பதாகவும் அது கொரோனா பெருந்தொற்று காலத்தில் உயிர்களையும் வாழ்வாதாரங்களையும் காக்க உதவியதாகவும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 55 லட்சம் மக்கள் தொகை கொண்ட இந்த ஐரோப்பிய நாடு கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதில் பிற ஐரோப்பிய நாடுகளை விட மிகச் சிறப்பாக செயல்பட்டது.
அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத் தரவுகளின்படி ஃபின்லாந்தில் கோவிட்-19 தொற்றின் காரணமாக 70 ஆயிரம் பேருக்கும் சற்று அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 805 பேர் உயிரிழந்தனர்.
முதல் 10 இடங்களில் உள்ள நாடுகள் எவை?
- ஃபின்லாந்து
- டென்மார்க்
- சுவிட்சர்லாந்து
- ஐஸ்லாந்து
- நெதர்லாந்து
- நோர்வே
- சுவீடன்
- லக்ஸம்பர்க்
- நியூசிலாந்து
- ஆஸ்திரியா
கடைசி 10 இடங்களில் உள்ள நாடுகள் எவை?
149. ஆஃப்கானிஸ்தான்
148. ஜிம்பாப்வே
147. ருவாண்டா
146. போட்ஸ்வானா
145. லெசோத்தோ
144. மலாவி
143. ஹைட்டி
142. தான்சானியா
141. ஏமன்
140. புரூண்டி
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: